துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.8.12

’பேசாத பேச்சு...’



’’கண்ணகியைப் பேச கண்ணகியே எழுந்திருந்தால்
மதுரைக்குப் போய் மன்னன் முன் சிலம்பை உடைத்து தெய்வமாகி இருக்க மாட்டாள்
புகாரிலேயே கோவலனின் மண்டையை உடைத்து மனுஷியாகியிருப்பாள்...’’என்கிறது அறிவுமதியின் கவிதை ஒன்று...


சிலப்பதிகாரக் காப்பியச்சித்திரிப்பின் அடிப்படையில்  கண்ணகியின் மீது வைக்கப்படும் பொதுப்படையான இந்தக் குற்றச்சாட்டை ஒற்றைப்பரிமாணத்தில் மட்டுமே  பார்க்காமல் இலக்கிய அழகியல்,உளவியல்,சமூகவியல் தருக்கங்களின் அடிப்படையில் அணுகுகையில் இன்னும் கூட வேறான பார்வைகளுக்கும் முடிவுகளுக்கும் செல்வது சாத்தியமோ என்று தோன்றுகிறது.
புகார்க்காண்டத்தில் கண்ணகியின் பேச்சு மிக மிகக் குறைவானதுதான்; 

ஒற்றைத் தொடர்களால்...ஒரு சில சொற்களால் ஆனதுதான்.
காப்பியத்தின்படி கண்ணகியின் முதல் பேச்சு கோவலனிடம் கூட  இல்லை. திருமணமானதும் ‘’மாசறுபொன்னே..’’எனத் தொடங்கி அவன் அடுக்கிச் செல்லும் காதல் மொழிகளுக்கு இனிமையான மௌனம் ஒன்றே அவளது மறுமொழியாக அமைந்திருக்கிறது.அந்த இடத்தில்-குறிப்பாக அந்தக் காலச் சூழலில் அதை விடவும் பொருத்தமான ஓர் எதிர்வினையை எந்த ஒரு கவிஞனாலும் அமைத்து விட முடியாது.அதன் பிறகு கோவலனோடு அவள் உரையாடுவதாக எந்த ஒரு கட்டமும் இடம் பெறவில்லை,அதற்கான தேவை காப்பியத்தில் இல்லை என்பதுதான் அதற்குக் காரணமாக இருக்க இயலுமே தவிர..அதை வைத்துக் கணவன் மனைவிக்குள் உரையாடலே நிகழ்ந்திருக்கவில்லை என்ற முடிவுக்கு வருவதைப்போன்ற அபத்தம் வேறு எதுவுமில்லை. கணவனே எனினும் ஆடவரிடம் அதிகம் பேசாத சூழல்,கண்ணகி வளர்ந்த காலச் சூழல். வீடே உலகமென வாழ்ந்து பழகிய கண்ணகியால் பரந்து விரிந்த கலையுலகின் பரிமாணங்களை ரசனையோடு காணவும் பருகவும் துடிக்கும் கோவலனின் அலைவரிசையில் உரையாடுவது கடினமாக இருந்திருக்குமென்பதால் அவர்களுக்கு இடையிலான சாதாரணமான உரையாடல் கட்டங்களை விவரித்துக் கதையின் சுவாரசியத்தைக் குறைக்காத வகையில் இளங்கோ அவற்றைத் தவிர்த்திருக்கலாம்.காப்பியத்தை அடுத்தடுத்த திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்திச் செல்லும் பொறுப்பு காவியப்புலவனுக்கு இருந்து கொண்டிருப்பதை மறந்து விட முடியாது. இருவருக்கும் மணமாகித் தனிக் குடித்தனம் வைக்கப்பட்ட அடுத்த சில வரிகளுக்குள்ளேயே ’’யாண்டு சில கழிந்தன..’’என்ற தொடரின் வழி ஒரு மிகப்பெரிய கால இடைவெளி காப்பியத்தில் எளிதாகத் தாண்டப்பட்டு விடுகிறது. 

கோவலன் மாதவியிடம் பிரிந்து சென்ற பின், தான் கண்ட கனவைத் தன் நெருங்கிய தோழி தேவந்தியிடம்  கண்ணகி உரைக்கும் ’கனாத்திறம் உரைத்த காதை’யே  காப்பியத்தில் முதன்முறையாகக் கண்ணகி சற்று மிகுதியாகப் பேசும்  கட்டம். அதிலும் கூடக் கண்டகனவை ஆர்வத்தோடும் கவலையோடும் சொல்லும் விவரணைத் தன்மையே மேலோங்கியிருக்கிறதே தவிர விமரிசனமாக அதில் ஏதுமில்லை; ஏதோ தீமை நடந்து விடுமோ என்னும் பதட்டம் மட்டுமே அத் தொனியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.முன்பின் பழக்கமில்லாத ஒரு புதிய ஊருக்குக் கணவனின் கை பற்றித் தான் செல்வதாக...,அங்கே அவன் மீது தவறான பழி ஒன்று விழுந்து விட்டதாக...,தான் சென்று மன்னன் முன் வழக்குரைத்ததாக.....அந்த ஊருக்கே கேடு நேர்ந்ததாக...,பின்பு கணவனும் தானும் நற்பேறு பெற்றதாக...இவ்வாறு தான் கண்ட தொடர்பற்ற கனவுத் துணுக்குகள் அவளுக்கே அதிர்ச்சியூட்ட அது தோழியின் நகைப்புக்கிடமாகி விடுமோ என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே அதை அவள் பகிர்கிறாள். அதைக் கேட்ட தேவந்தி, கோயில் குளம் சுற்றி நோன்பு நோற்க வேண்டுமென்ற தன் வழக்கமான தீர்வை முன்வைக்க...,மிக அழுத்தமான தொனியில்’’பீடன்று’’என்ற ஒரே சொல்லில் அதை மறுத்து விடுகிறாள் கண்ணகி. கணவனை மீளக் கொண்டு வரும் திறன் தன் அன்புக்கு இல்லாதபோது அதை நாடித் தெய்வங்களிடம் காவடி எடுக்க அவளுக்கு மனமில்லை; அவள் வெறும் சார்புநிலைப்பெண் மட்டுமில்லை என்பதையும் தனித்துவமானதொரு ஆளுமைப் பண்பு அவளுக்குள் ஒளிந்து கொண்டிருப்பதையும் இளங்கோ அழுத்தமாகப் பதிவு செய்யும் கட்டம் அது. அந்தக் கால கட்டத்துப் பெண்கள் வாழ நேர்ந்த மரபுச் சட்டகங்களுக்குள் கண்ணகியும் வாழ நேர்ந்தபோதும் அவர்கள் கைக்கொண்ட மதிப்பீடுகளிலிருந்து அவள் சற்றே விலகத் தொடங்கியிருப்பதன் தொடக்கப் படிநிலை இது. இதன் முழுமையான வளர்ச்சியே பாண்டியன் அவையில் அவள் பொழியும் நீண்ட பேச்சு..! பேச்சுத் திறன்  அவளுக்குள் வற்றிவிட்டிருக்கவில்லை...தருணம் பார்த்து வெளிப்பட மட்டுமே அது அவளுக்குள் உறைந்து கிடக்கிறது.இதை அடுத்தடுத்த கட்டங்களிலும் தொடர்ந்து காண முடியும்.

 கண்ணகியின் அடுத்த பேச்சும் ‘சிலம்புள கொண்ம்’என்னும் ஒரே வரி மட்டும்தான். மாதவியுடன் கானல்வரி பாடி விட்டுக் கடற்கரையிலிருந்து  கசந்து போய் வீடு திரும்பும் கணவனிடம் கண்ணகி பேசும் சொற்கள் இவை. மாதவியை வஞ்சகி என்னும் பொருள்பட அவன் பழித்தாலும், வளமான தன் குடும்பச்சொத்து முழுவதையும்  அவளுக்குக் கொடுத்ததாலேயே தொலைத்தேன் என்று அவன் கழிவிரக்கம் கொண்டாலும் அவனது உள் மனம் இன்னதென்பதை - அவன் முழுமையாகத் தன்னிடம் மீண்டு விட்டானா இல்லையா என்பதைக் கண்ணகியால் இன்னும் உள்வாங்க முடியவில்லை. அவன் வீடு வந்த திகைப்பிலிருந்தே அவள் இன்னும் மீளவில்லை என்பதால் அதைச் சார்ந்தோ மறுத்தோ ஒரு வரியும் பேசாமல் ’’சிலம்பிருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள்’’என்று மட்டுமே சொல்கிறாள் அவள்.

பொதுப்புத்தியில் கண்ணகியின் பத்தினித் தன்மைக்குச் சான்றாக இப்பகுதி மூளைச்சலவைக்குள்ளாக்கப்பட்டிருந்தபோதும் கணவனின் நடத்தையால் இறுகிப் போன  அவளுக்குள் நேர்ந்த விரக்தியின் வெளிப்பாடாகவும் இந்தச் சொற்களைக் கொள்ள வழியிருக்கிறது. தேர்ந்த நிர்வாகிக்குரிய கவனத்துடன் சொற்களை இங்கே ஆள்கிறாள் கண்ணகி.கணவன் திரும்ப மாதவியிடம் போவதாக இருந்தாலும் சிலம்பை எடுத்துக் கொண்டு செல்லலாம்,மனம் மாறி வந்திருந்தாலும் அதை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்ற இரு வாய்ப்புக்களையும் தன் வார்த்தை வழி இங்கே திறந்து வைக்கிறாள் கண்ணகி.கணவனைத் தட்டிக் கேட்க முடியாத சமூக அமைப்பில் வளர்க்கப்பட்ட குறைபாடு என்று இதைக் காண்பது ஒரு கோணமென்றால்- தானாகவே மனம் மாறித் தன்னிடம் வராதவரையில் அவன் வர வேண்டுமென யாசிப்பதையோ அதற்காக அவனிடம் போர் தொடுப்பதையோ கூடத் தனது தன்முனைப்புக்கு[ego]இழுக்காகவே நினைக்கிறாள் கண்ணகி. கணவன் மீள வேண்டும் எனக் கடவுளிடம் வேண்டிக்கொள்வதைக் கூடத் தன் சுயமதிப்புக்கு இழுக்கென நினைத்தவள் அவள் என்பது இந்த வாதத்தைக் கூடுதலாகவே உறுதிப்படுத்துகிறது.

புகார்க்காண்டத்தில் பேசாத பேச்செல்லாம் கண்ணகியிடம் மதுரைக் காண்டத்தில் மடை திறந்து கொள்கின்றன.

மண்ணில் நடந்தறியாத அவள் கால்கள் கோடையின் வெம்மையில்...பாலையின் கொடுமையில் பட்டுத் தேய்ந்தாலும் கணவன் இனி தன்னுடன்தான் இருப்பான் என்னும் உறுதி அவளது உள்ளத்தில் நிலைப்பட குடும்பத்திலுள்ள வேறு எவருக்கும் சொல்லாது அவர்கள் இருவரும் மேற்கொள்ளும் நீண்ட மதுரைப்பயணம்  வாய்ப்பளிக்கிறது. கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவியின் துணையுடன் ஆயப்பெண்ணான மாதரி வீட்டில் இருவரும் அடைக்கலம் புகுந்த பின்பே அவனுடனான அவளது மறுவாழ்வு தொடங்குகிறது.
அங்கே அவனுடனான தனிமையில் 
‘’இரு முதுக் குரவர் ஏவலும் பிழைத்தேன்
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என் செய்தனை’’
எனப் பாவமன்னிப்புக் கேட்கும் தொனியில் பேசும்போதுதான்  கோவலனின் உள்நெஞ்சு உண்மையாகவே திறந்து கொள்வதை அவள் உணர்ந்து கொள்கிறாள்.

‘பெற்றோருக்கும் மனைவிக்கும்  செய்தாக வேண்டிய கடமைகளைத் துறந்து-அவை தவறெனக் கூடத் தோன்றாத ‘தன்மறதியிலும் மயக்கத்திலும்’மூழ்கிக் கிடந்த தன் குற்றத்தைக் குற்றமாகக் கூடக் கருதாமல் தான் சொன்னதும் மதுரை கிளம்பிய அவளது கற்புத் திறத்தை வழக்கமான தன் உணர்ச்சிவசப்பட்ட பாணியில் 
‘’என்னொடு போந்திங்கென் துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங்கோதாய்
நாணின் பாவாய் நீணில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி’’
என்று அடுக்கிக் கொண்டு போகிறான் கோவலன்.

’பத்தினி’ என்ற பட்டம் பெற விரும்பும் அல்லது அந்தப் பட்டத்தைத் தாங்கியிருக்கும் எந்த ஒரு பெண்ணும் நெகிழ்ந்து உருகிப் போகக்கூடிய அந்தக் கட்டத்தில்-அந்தப் புகழ்ச்சிக்கு ஆட்படாமல்,அந்தச் சொற்களில் கரைந்து போய்விடாமல்-  திடமும்,உரமும் வாய்க்கப் பெற்றவளாய் - இதுநாள்வரை மௌனியாகத் தான் பொறுத்து வந்த துயரங்களையும்,தாங்கி வந்த அவலங்களையும் அவனிடம் 
’’அறவோர்க்களித்தலும் அந்தணரோம்பலும்
துறவோர்க்கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர்கோடலும் இழந்த என்னை...’’
எனத் துணிவாகப் பட்டியலிடுகிறாள் கண்ணகி. 

கணவன் வேற்றவளிடம் செல்லும்போது அவனது உடனிருப்பையும் அன்பையும் மட்டும் மனைவி இழப்பதில்லை.அவனுடன் கூடியிருந்து அறவோர்க்கும் துறவோர்க்கும் செய்யும் விருந்தோம்பல் வாய்ப்புக்களையும் அவள் இழக்கிறாள்...மகனின் பொறுப்பற்ற போக்கைக் கண்டு மாமனும் மாமியும் வருந்தியிருக்கையில் தானும் அவர்களிடம் தன் குறைகளைச் சொல்லிப் புலம்பாமல் வறட்சியான புன்னகை ஒன்றை உதட்டில் தவழவிட்டபடி அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பும் அவளுக்கு உரியதாகி விடுகிறது....
இத்தனையும் செய்து முடிக்க அவள் எந்த ஒரு சிறு சபலத்துக்கோ சலனத்துக்கோ ஆட்படாத -‘’மாற்றா உள்ள வாழ்க்கை’’யளாக இருந்தாக வேண்டும்... 
அப்படிப்பட்டவளாகத் தான் இருந்ததைப்
 ‘’போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்
ஏற்றெழுந்தனன் யான்..’’
என்று பெருமிதத்தோடு பிரகடனப்படுத்துகிறாள் கண்ணகி.

தலைவன் பரத்தையிடம் பிரிவதென்பது, சங்க காலத்தில் ஒரு வாழ்க்கை முறையாக..அன்றாட நடப்பாகவே ஏற்கப்பட்டு வந்த ஒன்று. அதற்கு மாற்றாக..ஒரு சில குறிப்புப் பொருள் தரும் சொற்களைப் பேசுவது தவிரத் தலைவி அதிகம் பேசுவதில்லை.அதை உடன்பட்டு ஏற்க வேண்டுமென்பதே அவளுக்கு வகுக்கப்பட்டிருந்த நியதி. சங்கத்தின் தொடர்ச்சியாக எழுந்த சிலம்பிலும் அதிக மாற்றங்கள் நேர்ந்து விடவில்லை என்றபோதும் காப்பியத்தின் இறுதிக் கட்டத்திலாவது தன் உள்ள உரத்தின் மேன்மையைக் கம்பீரத்தோடு கண்ணகி முன் வைப்பதென்பது அந்தக் காலகட்டத்துக்குப் புதுமையானதுதான். தவறான ஒழுக்கத்தை  ஆண்  எத்தனை இயல்பாகக் கைக்கொண்டு விடுகிறான் என்பதையும் அதையே ஒரு பெண் கைக் கொள்ள நேர்ந்தால் சமூக நியதி என்னவாகும் என்பதையும் ஆண் மூளையில் அழுத்தமாகப் பதிய வைக்க   ஒரு சிறு பரிசோதனை முயற்சியாகவே கண்ணகியை இந்தக் கட்டத்தில் இளங்கோ பேசவிட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

தானே மனம் திருந்தி மன்னிப்புக் கேட்க முன் வரும் ஒருவனிடம் இவ்வாறான சொற்களைப் பேசுவதென்பது பொதுவான உலக நடப்பில் சற்று ரசக் குறைவாகப் பட்டுக் கண்ணகியின் பத்தினித் தன்மைக்கு அதனால் பழுது நேர்ந்து விடுமோ என்றெல்லாம் அஞ்சிக் கொண்டிருக்காமல் அவளது உணர்வுகளுக்கு ஒரு வடிகாலளிக்க இளங்கோ துணிந்து முன் வந்திருப்பது இந்தக் காட்சியின் சிறப்பு. கதை ஓட்டத்தில் அவன் அடுத்துக் கொலையாகும்போது ’இறக்கப்போகிறவனிடம் போய் இப்படியெல்லாம் பேச விட்டிருக்கிறாரே’என்று மரபார்ந்த உள்ளங்கள் அங்கலாய்க்கலாம்.இதையும் கூடத் தவிர்த்திருந்தால் பத்தினிப்பட்டம் மிகக் கச்சிதமாகக் கண்ணகிக்குக் கிடைக்கக் கூடும் என்றும் கூட மதிப்பிடலாம்.ஆனால் அதுவே சரியான தருணம் என்பதையும் அதை விட்டு விட்டால் பின்பு கண்ணகிக்குப் பேச வாய்ப்பே கிடைக்கப் போவதில்லை என்பதையும் படைப்பாளியே நன்கு அறிவான் . கண்ணகி மாபெரும் பத்தினி என்பது அவன் குறைகளைத் தாங்கியதால் மட்டுமில்லை என்பதையும் சற்றும் நெறி பிறழாத அவள் நெஞ்சே அந்தத் தகுதிக்கு அவளை ஆளாக்கியது என்றும் தன்முனைப்புடன் கூடிய விம்மிதத்தோடும் கற்புச் செருக்கோடும் கவிஞன் அவளைப் பேச வைத்த தருணம் அது.

கோவலன் கொலைப்பட்டபின் வாழ்க்கை பறிபோன ஆவேசத்தில் வஞ்சின மாலை,துன்பமாலை,ஊர்சூழ்வரி,வழக்குரைகாதை எனப்பல கட்டங்களில் கண்ணகியின் பேச்சு தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தாலும் கோவலனிடம் அவள் பேசும் இறுதிச் சொற்கள் பெண்ணியப் புரட்சிக்காரியாக இல்லாவிட்டாலும் கூடத் தனித்துவமுள்ள ஓர் ஆளுமையாகக் கண்ணகியை முன்னிறுத்தி விடுகின்றன..
’’செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
  செய்யாமையானும் கெடும்..’’
என்கிறது வள்ளுவம்.
எப்போது மௌனிப்பது என்பதையும் எப்போது எதை எங்கே பேசுவது என்பதையும் நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் ஒரு பாத்திரமாகவே இளங்கோவின் படைப்பில் உருவாகியிருக்கிறாள் கண்ணகி.

நன்றி;
கட்டுரையை வெளியிட்ட ‘வடக்கு வாசல்’இதழுக்கு[ஆகஸ்ட்’12]
தொடர்புள்ள பதிவு;
கண்ணகி என்ற கலாச்சார அடையாளமும்,மங்கலதேவி வழிபாடும்-1,
கண்ணகி என்ற கலாச்சார அடையாளமும்,மங்கலதேவி வழிபாடும்-2

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....