துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

20.8.12

இவன்தான் மனிதன்...

சென்ற ஆண்டின் ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு  நடிப்புக்கான[ஆடுகளத்தில் நடித்த தனுஷுடன் பகிர்வு]தேசிய விருதை,
சலீம் குமாருக்குப் பெற்றுத்தந்த மலையாளத் திரைப்படம் ஆதாமிண்ட மகன் அபு’.58வது தேசியத் திரைப்படவிழாவில் நான்கு தேசிய விருதுகளை,சிறந்த திரைப்படம்சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய துறைகளில் பெற்றுள்ளஇப் படம்,கேரள மாநில திரைப்பட விருதுகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய விருதுகளைப் பெற்றது. இந்தியாவின் சார்பில் 2011ஆம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கான போட்டியிலும் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[நன்றி;விக்கிபீடியா]


தமிழைப்பொறுத்தவரை 
எத்தனைஅறிவுஜீவிகள் படமெடுத்தாலும் இசுலாமிய சமூகத்தினரைக் கடத்தல்காரர்களாகவும்பயங்கரமான தீவிரவாதிகளாகவும் மட்டுமே சித்தரிப்பதென்பது 
தமிழ்த் திரையுலகின் ஒரு தொடர்ந்த போக்காக இருந்து வரும் வேளையில்,இந்தப்படத்தின் வழி ஒரு நல்ல இஸ்லாமியனை மட்டுமல்லாமல், ஒரு மிகச்சிறந்த மனிதனை இஸ்லாமியப்பின்னணியில் மனம் கசிந்துருகும்படி காட்டியிருக்கிறது மலையாளத்திரையுலகம்.விரிவானநிலக்காட்சிகள்இல்லை,
அயல்நாட்டுப்படப்பிடிப்புக்களில்லைகாதல்என்றகருப்பொருளில்லை;
அதனால்டூயட்பாடல்களும்,நடனங்களும் இல்லை. 

கதைத் தலைவனும் தலைவியும் கூட இளமையானவர்கள் இல்லை
ஆனாலும் கூட,இந்தப்படம் சாதித்துக் காட்டியிருக்கிறது....
எளிமையான ஆழமான கதையால்,நுட்பமான மிகையற்ற நடிப்பால்.

ஹஜ் பயணம் செய்தாக வேண்டும் என்ற தீராத தவிப்புடன் வாழும் ஒரு முதிய தம்பதியரும் அவர்களின் கனவு நிராசையாவதும் என ஒற்றை வரிக்குள் படத்தின்கதையை அடக்கி விட முடியுமென்றாலும்.... 
அந்த ஒரு வரிக்கு மிகுந்த ஆழத்தையும் அர்த்தத்தையும் தந்திருக்கிறது படம்.

தீவிர மத நம்பிக்கையுடன் வாழும் ஒவ்வொருமுஸ்லிமும் வளர்த்துக் கொள்ளும்கனவு,தன்வாழ்நாளில்,ஹஜ்புனிதப்பயணத்தைஒரு முறையாவது..மேற்கொள்வது.அத்தர்விற்கும்சில்லறைவியாபாரியான அபு என்னும் முதியவருக்கும் அது மட்டுமே வாழ்வின் இலக்காக இருக்கிறது;அவரின் மனைவியின் இலட்சியமும் அதுதான்.

மனைவி மக்களோடு துபாயில் இருக்கும் அவர்களது ஒரே மகனும் அவர்களைப் புறக்கணித்து விட்ட பிறகு, வாழ்வின் பிடிப்பு அந்த ஒற்றை இலக்கில் மட்டுமே அவர்களுக்குக்குவிந்திருக்கிறது.

சிறுகச்சிறுகப்பணம் சேர்த்துத் தன்கட்டிலின் அடியில் உள்ள இரும்புப் பெட்டியில்,வெல்வெட்துணி போர்த்தப்பட்டிருக்கும் உண்டியலில் சேமித்து வைக்கிறார் அபு.மாடுகன்றுகளைப் பராமரித்துப் பால்விற்கும் காசை அவரது மனைவியும் அவ்வாறே சேமிக்கிறாள்.

மிக எளிமையான அவர்களது வாழ்வில்,பிறதேவைகளுக்கோ,தேடல்களுக்கோ இடமில்லைகந்தையான நோட்டுக்களையே மிகுதியாகக் கொண்ட அந்த உண்டியல் பணத்தையெல்லாம் திரட்டி எடுத்துக் கொண்டு போய் ஹஜ் யாத்திரைக்குரிய முன்பணமாக ‘அக்பர் ட்ராவெல்ஸில் சற்றுக் கூச்சத்துடன் தருகிறார் அபுசிறுகச்சிறுகச் சேர்த்தபணம் அப்படிச் சில்லறையாகத்தான்  இருக்கிறது என்று அவர் சொல்ல ‘எந்த வடிவில் இருந்தாலும் பணம் பணம்தானேஎன்கிறார் பயணக்கம்பெனி உரிமையாளர்.வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வாங்கவேண்டுமென்று கூடத் தெரியாத அந்த அப்பாவி தம்பதிக்கு அந்தவகையிலும் உதவி செய்கிறார் அவர்

பயணத்துக்கு,மேலதிகமாகத்தேவைப்படும் பணத்துக்காக வீட்டிலுள்ள மாடு கன்றுகள் மன வலியோடு விற்கப்படுகின்றன;முன்பு கொடுக்க மறுத்தவீட்டு முற்றத்தில் நிற்கும் பலாமரத்தைக்கூட மரக்கடைக்காரரிடம் 60,000க்கு விற்று தந்து முன்பணமாகப் பத்தாயிரம் பெறுகிறார் அபு.மீதம் 50,000த்தைப் பயணத்தின்இறுதிக்கட்டத்தில் பெற்றுக்கொள்ள எண்ணியிருக்கிறார் அவர்.

பயண நாள் நெருங்கி வருகிறது.தன்னிடம் நெருங்கிப் பழகிய ஒவ்வொருவரிடமும் சென்று பயண விடை பெறுகிறார் அபுஒரு புனித யாத்திரையை எவர் மனதையும் புண்படுத்தி விட்டுத் தொடங்கக்கூடாது என்பதால் பழகிய அனைவரிடமும் தான் தெரிந்தோ தெரியாமலோ செய்த குற்றங்களை மன்னிக்க வேண்டுகிறார் அபு. பல ஆண்டுகளுக்கு முன்பு தன் வீட்டை ஒட்டிய பகுதியில் தன்னோடு எல்லைத் தகராறு செய்து வலுச் சண்டைக்கு வந்த சுலைமான் மனதிலும் கூடத் தன்னைப் பற்றிய தவறான குரோதமான சுவடுகள் இருக்க வேண்டாமென எண்ணும் அவர்  தற்போது எங்கோ தொலைவில் வசிக்கும் அவனை,நேந்திரம் பழமும்,பிஸ்கட்டும் வாங்கிக் கொண்டு,தன் மனைவியோடு தேடிச் சென்று பார்க்கிறார்.ஒரு விபத்தில் அகப்பட்டு மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் அவனை அவரது பெருந்தன்மை நெகிழ வைக்கிறது.


கணவனும் மனைவியுமாய்ச் சிறு குழந்தைகளின் குதூகலத்தோடு,பயண ஆயத்த வகுப்புக்குச் சென்று வந்து அங்கு சொன்னபடி குறைந்த எடையில்பயணப்பை,மற்றும் உடைகள் ஆகியவற்றைவாங்கியபடி,பயணத்துக்கான இறுதி ஆயத்தங்களைச் செய்கிறார்கள்.

இனி,எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான்.அது,பயணக்கம்பெனியின் இறுதித் தவணையைக் கட்டிவிடுவதுமட்டுமே.

மரக்கடைக்காரரிடமிருந்து தான் பெற வேண்டிய மீதப்பணத்தைப் பெற வேண்டி அவரை நாடிச் செல்கிறார் அபு.மரக்கடைக்காரர் ஒன்றும் பேசாமல் 50,000த்தை மேசையில்  எடுத்து வைத்து விட்டு  ‘அந்த மரத்தைப் பார்த்தீர்களா..’என்று மட்டும் கேட்கிறார்.தன் பயணப் பரபரப்பில் அபு அதைப் பார்க்கத் தவறி விட்டிருக்கிறார்.

அந்த மரம் உள்ளீடு அற்றதாக வெறும்விறகாகப்பயன்படக்கூடியதாகமட்டுமேஇருக்கிறது என்பதைக் கடைக்காரர் வழி அறிந்ததும் அபுவின் முகம் சாம்பிப் போகிறது.அந்தப் பணத்தைப்பெறுவது தவறு என்று அவரது மனச்சாட்சி இடித்துரைக்க,அதை  எடுத்துக் கொள்ளாமல் அப்படியே திருப்பித் தந்து விடுகிறார் அபு.

‘’வியாபாரம் என்பதே லாபமும் நஷ்டமும் சேர்ந்ததுதான்..அதற்காக உங்கள் பயணம் முடங்க வேண்டாம்’’
என்று பதறுகிறார்,மரக்கடைக்காரர்[கலாபவன் மணி].
ஒருவரை ஏமாற்றிக் கிடைத்த பணத்தில் என் பயணம் தொடங்க வேண்டாம் என்று சொல்லியபடி தன் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் அபு அதை நிராகரித்து விட்டு வெளியேறுகிறார்.

பயணக்கம்பெனியில் சென்று தாங்கள் ஹஜ் பயணத்திலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவிக்கிறார் அபு.அந்தப்பயணக்கம்பெனி அதிபரும்[முகேஷ்] கூட 50,000என்பது ஒன்றும் தனக்குப் பெரும் தொகையில்லை என்றும் அபு திரும்ப வந்து கூட அதைத் தரலாம் என்றும் கேட்டுக் கொள்ள,

கடன் வைத்து விட்டு யாத்திரை கிளம்புவதையும் அபு உறுதியாக மறுத்து விடுகிறார்.

பயணம் தடைப்பட்ட செய்தி அந்தச் சிற்றூரில் பரவுகிறது.அபு மீது அன்பு கொண்டிருப்பவர்கள் அதற்காக ஆத்மார்த்தமாக வருந்துகிறார்கள்.அந்த ஊர்ப்பள்ளி ஆசிரியரான இந்து நண்பர் ஒருவர்[நெடுமுடி வேணு]தன் சேமிப்புப் பணத்தைத் தர முன் வருகிறார்;தன்னை ஒரு சகோதரனாகக் கருதி அதை அவர் ஏற்றே ஆக வேண்டுமென மன்றாடுகிறார்.அவரது மனதைப் புண்படுத்த விரும்பவில்லைஎன்றாலும்,அவர் பணத்தில் செல்வதென்பது தனது ஹஜ் ஆகாது என திடமாக அதையும் மறுத்து விடுகிறார் அபு.

இறுதியாக எஞ்சியிருக்கும் அந்த வீட்டை விற்றால் பயணம் சென்றுவிட முடியும்;அந்த எண்ணம் கணவன்,மனைவி இருவருள்ளுமே எழுந்தாலும் திரும்பி வரும்போது தங்க ஒரு நிழல் வேண்டுமே என்ற யதார்த்தம் அவர்களை அதைச் செய்ய விடாமல் தடுத்து விடுகிறது.தன்னை மட்டும் சென்று வருமாறு மனைவி சொல்லும் யோசனையும் அபுவுக்கு உகப்பாக இல்லை;இத்தனை நாள் தன் காரியம் யாவினும் கைகொடுத்த அவளை விட்டு விட்டுத் தான் மட்டும் ஹஜ் செல்வதைப் பாதகமென நினைக்கிறார் அவர்.

இறுதிக்காட்சி.பள்ளிவாசலின் பாங்கோசை கேட்கிறது.
கணவனும் மனைவியும் உறக்கமின்றிப்படுத்துக் கிடக்கிறார்கள்.
‘’உலகின் பல பாகத்திலுள்ள மக்களும் இப்போது ஹஜ் தொழுகையில் ஒரே மனதுடன் இணைந்திருப்பார்கள்...எல்லா உதடுகளும் ஒரே சொல்லை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருக்கும்’’
என்று அவர்கள் கற்பனை விரிகிறது.

அபு எழுந்து சென்று தன் வீட்டு முற்றத்தில் இன்னொரு பலாச்செடியை நட்டு வைத்து நீரூற்றுகிறார்....தன் நம்பிக்கை இன்னும் மட்கிப் போய்விடவில்லை என்பதை உணர்த்துவதைப்போல்....பாஸ்போர்ட் விசாரணைக்காக போலீஸார் வீட்டுக்கு வர அதன் காரணம் புரியாமல் இருவரும் கலங்கிப் போய் ஸ்கூல் மாஸ்டரைத் துணைக்கழைத்துக் கொண்டு காவல் நிலையம் செல்வதும்,பாஸ்போர்ட் வந்து விட்டது எனத் தெரிந்ததும் காலை விடிந்தது முதல் கள்ளிப்பெட்டிகளால் அடுக்கப்பட்ட கதவுகளை உடைய அந்தச் சிற்றூரின் அஞ்சலகத்தில் காத்துக் கிடப்பதும்
'எனக்குரியதை நான் பெற்றுக்கொள்ள ஏன் இந்த அவதி’என அபு கோபம் கொள்கையில் ஒரு குழந்தையின் கோபம் கண்டு தாய் கொள்ளும் செல்லப்பெருமையுடன் மனைவி அவரை சமாதானம் செய்வதும், எவருமற்ற இரவின் தனிமையில் பாஸ்போர்ட்டிலுள்ள தங்கள் புகைப்படங்களை அவர்கள் மாறி மாறி ரசித்துக் கொள்வதுமான காட்சிகள்,


அவர்களது எளிய வாழ்வில் அரிதான சில கணங்கள்.

நெடுமுடி வேணு,கலாபவன் மணி,முகேஷ் முதலிய மிகப்பெரிய நடிகர்களும் கூட,மிகச் சிறிதுநேரமே வந்து போகும் துணைப்பாத்திரங்களாக நடித்திருக்க அபு மட்டுமே படத்தில் முழுமையாக வியாபித்து நிற்கிறார்.இயக்குநர் வழங்கிய பொறுப்பைச் சரியாகச் சுமந்து இறுக்கம்,நெகிழ்வு,மன உரம் என அனைத்தையும் மிகை கொஞ்சமுமற்ற உடல்மொழியாலும்,மிக நுட்பமாக மாறும் முக பாவனைகளாலும் மட்டுமே வெளிப்படுத்தியிருக்கும்
சலீம்குமார்,தேசிய விருதுக்குத் தான் தகுதியானவர் என்பதை ஆட்ட பாட்டங்களின்றியே மெய்ப்பித்து விடுகிறார்.

அபுவின் மனைவியாக வரும்
சரீனா வகாபும் ஆரவாரமற்ற அமைதியான நடிப்பால் கணவர் மீது கொண்டிருக்கும் கரைகடந்த அன்பு,இறை விசுவாசம் இவற்றை  மட்டுமன்றித் தான் வளர்த்த வாயில்லாத ஜீவன்களைப் பிரிய நேரும் வருத்தத்தையும் மாடுகளை விற்க நேரும் தருணத்தில் அனாயாசமாக வெளிப்படுத்தி விடுகிறார்.

வில்லன் என்று சொல்லக்கூடிய எதிர்நிலைப்பாத்திரம் எதுவுமே இல்லாமல் அபு எதிர்ப்படும் அத்தனை மனிதர்களுமே நல்லவர்களாக அன்மைந்தும் இந்து[ஸ்கூல்மாஸ்டர்],கிறித்தவர்[மரக்கடைக்காரர்],இஸ்லாமியர்[பயணநிறுவனர்]என மூன்று மதத்தினருமே அலட்டிக் கொள்ளாமல் உதவ முன் வந்தும்,அபுவின் ஆசை நிறைவேறாமல் போவதே படத்தின் அங்கதம்.

கேரளத்தின் மண்வாசனை மழை வாசனை ,கண்ணுக்கு இதம் தரும் பச்சைப்பசேலென்ற குளுமை இவற்றையெல்லாம் படம் பிடித்திருக்கும் மதுஅம்பாட்டின் அற்புதமான காமரா, செயற்கையான நாடக பாணித் திருப்பங்கள் இல்லாமல் சாமானியர்களின் கதையை,யதார்த்தமாகச் சொல்லிக் கொண்டு போவது ,முதிர்ச்சியான நடிப்பு,முதல் படம் என்று சற்றும் நம்ப முடியாதபடி நேர்த்தியோடு இதை எழுதி இயக்கியிருக்கும் சலீம் அகமதுவின் தேர்ச்சி என்று பல சிறப்புக்களைக் கொண்டிருந்தாலும் கூட- படம் முடியும் தருவாயில் இவற்றையெல்லாம் மீறிக் கொண்டு நம் மனதில் விசுவரூபமெடுத்து நிற்பது ஆதாமின் மகன் அபு கொண்டிருக்கும் குன்றாத கொள்கைப்பிடிப்பு மாத்திரமே...
அதுவே இதன் உயிர்ச்சாரம்...
‘’ஆதாமுடைய மகன் அபு..’’என்பது,பாஸ்போர்ட் விசாரணையில் சம்பிரதாயமாக இடம் பெறும் ஒரு சாதாரண வசனம்.தன் தந்தை ஆதாமுக்குப் பெருமை சேர்த்துக் கொள்கை என்னும் குன்றேறி நிற்கும் உயர் மானுடன்..அபுவைப்பற்றிய கதைக்கு அந்தத் தலைப்பு பொருத்தமானதாகவே இருக்கிறது..


2 கருத்துகள் :

hariharan சொன்னது…

உங்கள் விம்்சனம் கண்டபின்பு தான் அந்த திரைப்படத்தைக் கண்டேன்.

அருமையான திரைப்படம் ,ஒன்றை மட்டும் சொல்ல மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன், இந்த் அபயணம் தடைப்ட்டதன் காரணம் ஒரு வெளை பலா மரம் என்பது ஓர் உயிர் அதை வெட்டுவதை இறைவன் அனுமதிக்கவில்லை என்பதை பாத்திரம் உணர்ந்து மீண்டும் ஒரு பலா மரத்தை நடுகிறது.

வாழ்த்துக்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சுசீலா - இவன் தான் மனிதன் பட விமர்சனம் - நன்று நன்று - நீண்டதொரு விமர்சனம் - நல்வாழ்த்துகள் சுசீலா - நட்புடன் சீனா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....