துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.7.11

புதிய பிரவேசங்கள்: 1


அன்று...இலங்கைப் பட்டினத்தில் அக்கினிப் பிரவேசம் அரங்கேறும் நாள் ! அன்றைய நிகழ்வுக்குத் தானும் ஒரு மௌன சாட்சியாய் இருக்கப் போவதை நினைந்ததாலோ என்னவோ..,கீழ்த்திசைக் கடலிலிருந்து முகம் காட்டத் தொடங்கியிருந்த ஆதவனின் செவ்வொளியிலும் கூடச் சில கருமையின் கீறல்கள் !

கடற்கரை ஓரமாய்க் கைகட்டி, விழிகளைத் தொலை தூரத்திலும், நெஞ்சினை அயோத்தியிலும் பதித்தபடிநின்றிருக்கும் இராமனின் முகம்,வழக்கமான அருளின்றி,இறுக்கம் கண்டிருக்கிறது. பகைவனுக்கும் அருள் சுரக்கும் அந்தப்பண்பாளனின் உள்ளம்,தன் பத்தினியைச் சொல் ஈட்டிகளால் வதைப்பதற்கு வார்த்தை தேடி,உள் மறுகி உலைந்து கொண்டிருக்கிறது.

‘இதை நான் செய்துதான் ஆக வேண்டுமா..? ஆம்..வேறு வழியில்லை ! மக்கள் நலனுக்காக...,சீதையின் நலனுக்காகவும் கூட! அரச நீதிகள் காருண்யம் பார்ப்பதில்லை!’

‘’ஐயனே ! தேவியை இட்டுவர யாரை அனுப்புவது’’
-கேள்வி பிறந்தாகி விட்டது.இனியும் தாமதிப்பதில் பொருளில்லை.
சூத்திரக் காய்கள் விதிப்படி நகர்த்தப்பட்டாக வேண்டும் என்பது நியதி! அங்கே இரக்கத்துக்கு இடமில்லை.

‘’விபீஷணனே சென்று வரட்டும்!’’
-ஆணை பிறக்கிறது.

‘’அண்ணல் கண்டபிறகுதான் என் தவக் கோலத்தைக் கலைப்பதென்ற சங்கல்பத்தோடு இருக்கிறேன்.தயவு செய்து அதை மாற்ற முயலாதே திரிசடை..’’

‘’நான் மாற்றவில்லை தாயே! தங்கள் நாயகனே அவ்வாறு கூறி அனுப்பியிருக்கிறார்.அதற்காகவே தங்களை ஒப்பனை செய்யத் தேவ கன்னியர்களை அழைத்து வந்திருக்கிறார் என் தந்தை. வான்மழை வந்த பிறகும் பயிர்கள் வாடி வதங்க வேண்டியதுதானா தேவி?’’

‘’என் தலைவரின் விருப்பம் அதுவானால் அதை மீற எனக்கு மனமில்லை திரிசடை!’’

வானரக் குலங்கள் அணிவகுத்து நிற்க, இறந்தது போக எஞ்சி நிற்கும் இலங்கை இராக்கதர்கள் , வியப்பால் விழிகளை விரித்திருக்க...,மேகத்தைக் கிழித்துவரும் மின்னலென அந்தக் கூட்டத்தின் நடுவே மென்னடை பயின்று வருகிறாள் சீதை. பல நாள் இடைவெளியில் இராமனும்,சீதையும் ஒருவருக்கொருவர் சந்திக்கப் போகும் அந்த முகூர்த்த நேரத்தில்..,இருவரையும் ஒருசேரத் தரிசிக்கவென்றே பல திசைகளிலிருந்தும் வந்து குவிந்திருக்கும் மக்களும்,முனிவரும் ,விண்ணின் தேவ புருஷர்களும் அன்னையை ஆரவாரத்தோடு எதிர்கொள்கிறார்கள்.

தலை கவிழ்ந்து தடம்பார்த்து நடந்துவரும் தன் துணைவியின் மலர்ப்பாதங்கள், இராமனின் கண்களில் முதலில் படுகின்றன. அதனால்,தன்னையும் அறியாமல் தன்னுள் விளைந்துவிடும் மனச் சிலிர்ப்பைச் சிரமத்தோடு போக்கிக் கொள்ள முயல்கிறான் அவன்.

‘இந்த இப் பிறவியில்,இது நம் இரண்டாவது சந்திப்பு! மிதிலையின் காட்சி,நம்மைக் கூட்டி வைத்தது...இதுவோ..மீளாத துன்பக் குழியில் நம் இருவரையுமே ஆழ்த்திவிடப் போகிறது. இது, உன் மீட்சி என்று இதோ இங்குள்ள எல்லோருமே கெக்கலி கொட்டிக் கொண்டிருக்கிறார்களே..அது, உண்மைதானா? வரங்களே சாபங்களாகிவிடப் போகும் இந்தப் பாவ நிலைக்குப் பரிகாரம்தான் ஏது?

புகை படிந்த ஓவியமாய்த் தூசு படிந்த சிற்பமாய் மாற்றான் மனையிலே சிறையிருந்த சீதை,இப்போது துலக்கித் துடைத்த குத்துவிளக்காய்ச் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறாள்.துணைவனின் அருகே வந்ததும் மெள்ளத் தலை நிமிர்த்தி இதழ்க்கடையில் அவள் அரும்ப விடும் புன்னகை,அவனிடத்தில் ஆயிரம் செய்திகளை அஞ்சல் செய்கிறது.

‘மணநாளை விடவும் எனக்கு மகிழ்வூட்டும் நாள் இன்று !
சிவ தனுசு முறியும்,சேர்வோமென்ற நம்பிக்கை,மிதிலையில் இருந்தது. இலங்கையோ..அறத்தின் வெற்றியிலேயே ஐயப்பாட்டை ஏற்படுத்தி என்னைக் கூட ஒரு கணம் மனம் தளரச் செய்து விட்டது.இதுதான் என் தவம் பலிக்கும் நேரம்! என் தலைவனின் கரங்களால் மீட்சி வரம் கிடைக்கப் போகும் அற்புதமான கணம்!’’

சீதையின் பொருள் பொதிந்த புன்னகையை..,அந்தரங்க மன ஓட்டத்தைத் தனக்கு மட்டுமே அறிவித்துக் காட்டுகிற அவளது நயனமொழியை விளங்கிக் கொண்ட அண்ணலின் பூமனம்,குற்றக் கம்பளிகளின் குறுகுறுப்பால் நெளிகிறது.

‘அரக்கனாலேயும் கூட அழிக்கப்பட முடியாத உன் மானத்தைச் சிதைப்பதற்கு உன் உயிர்க் காவலனே ஆயத்தமாய் இதோ காத்திருக்கிறேனடி பேதைப் பெண்ணே...! உன் அனுமதியின்றி உன்னைத் தொடுவதற்குக் கூட அந்த இராவணன் பயந்தான். நானோ..,ஊரே கூடியிருக்க,என் மனைவியின் முந்தானையைச் சரேலெனக் கிழிக்கும் மாபாதகத்தைச் செய்யப் போகிறேன்!இங்கே உண்மையில் இராவணன் யார்?’

பளிங்கு போல் தெளிந்த மனதுடன் அவள், அவன் பாதங்களைப் பற்றக் குனிகிறாள்.

‘’வைதேகி..விலகி நில்! என்னைத் தீண்டாதே!’’
-தனக்குத்தானே அந்நியமாகவும்,அபசுரமாகவும் ஒலிக்கும் இராமனின் வார்த்தைகள் அந்தக் கூட்டத்தாரிடமிருந்து அமானுஷ்யமானதொரு மௌனத்தை எதிரொலியாய்க் கொணருகின்றன.

திடுக்கிட்டுத் தலை நிமிர்த்தும் சீதை,அதிர்ந்து போனவளாய்ச் சுற்றுமுற்றும் பார்க்கிறாள்.
யாருடைய குரல் இது?
இந்தக் கோர வார்த்தைகளின் ஜனிப்பு எந்த உள்ளத்திலிருந்து நேர்ந்திருக்கிறது?
இராவண வதம் இன்னும் நிகழ்ந்தாகவில்லையா என்ன?
அந்த அசுர மாயை..இன்னும் கூடவா எஞ்சியிருக்கிறது?
இது..என் கணவன்தானா..அல்லது மாயா ஜனகனைச் சிருஷ்டித்த அரக்கன், தன் சூழ்ச்சியால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் மாயாராமனோ இவன்...?

‘’ஜானகி ! எந்த முகத்தோடு ..எந்த மீட்சியை நாடி என்னைக்காணப் புறப்பட்டு வந்திருக்கிறாய்?அதற்கான அருகதையை நீ இழந்து விட்டது,இன்னுமா உனக்கு விளங்கவில்லை?’’

-இல்லை..! இது மாயையில்லை!இது வேஷமில்லை! தன்னைச் சூழ்ந்திருக்கும் மக்கள் கூட்டமும்,சுட்டெரித்துக் கொண்டிருக்கும் கணவனின் பேச்சும் பொய்யில்லை! இதுதான் நிஜம்!சுடுகிற நிஜம்! சீதைக்கு இவ்வுண்மை அர்த்தமாகத் தொடங்கியபோது இன்னும் கடுமையோடு இராமனின் சொற்கள் தொடர்கின்றன...


1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

கனவு கண்டு விழித்தது போல் இருக்கிறது மனம். இதை படிக்க படிக்க அந்த ராமாயண காலத்தில் அந்த கூட்டத்தில் ஒருத்தியாய் நானும் வேதனையில் நின்று இந்த காட்சியை பார்ப்பது போல் ஒரு உணர்வு. மிகவும் அருமையாய் எழுதி இருக்கிறீர்கள். இதை படிக்கும் வாய்ப்பை நான் பெற்றதே நன்றென்று எண்ணி மனம் மகிழ்கிறேன்.

இதை படித்த போது 'ஊருக்காக வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்' என்ற கண்ணதாசன் வரிகள்தான் நினைவில் வருகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....