துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.7.11

வடக்கு வாசலும், நானும்....

’’மொழி சார்ந்து எழுப்பப்படும் வெற்றுக் கோஷங்களை விட இவ்வாறான தனி மனிதத் தியாகங்களும் - முனைப்பான செயல்பாடுகளுமே தமிழைத் தூக்கி நிறுத்த இன்று தேவையானவை.’’


என் கல்லூரிப் பணி நிறைவு பெற்றதும் புது தில்லிக்குத்தான் வர வேண்டியிருக்கும் என்பது முடிவான அந்த மார்ச் 2006 இல்...எனக்கு முதன்முதலாக ‘வடக்கு வாசல்’ இலக்கிய -மாத இதழின் பெயரை அறிமுகம் செய்து வைத்தவர் என் மதிப்பிற்குரிய நண்பர்,பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள்(மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பேராசிரியராகப் பணியாற்றியவர்)......
திரு கி.பென்னேஸ்வரன்
அபாரமான வாசிப்பு ஞானமும்,தமிழ் சார்ந்த தகவல் கலைக்களஞ்சியம் என்று சொல்லக்கூடியவருமான பரமசிவன் அவர்கள்,நான் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் முதுகலை பயின்றபோது என்னைத் தொடர்ந்து அதே கல்லூரியில் தமிழ் கற்றவர்.

நான் பணியாற்றிய பாத்திமா கல்லூரிப் பாடத் திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அவர்,நான் தில்லி செல்லவிருப்பதைத் தற்செயலாக அறிந்தவுடன் வடக்கு வாசலின் பெயரை ஓர் இலக்கியப்புகலாக என்னிடம் பரிந்துரைத்தார்.அப்போதைக்கு அவர் சொன்ன அந்தக் குறிப்பை என் நெஞ்சின் மூலையிலும்,குறிப்பேட்டிலும் பதிந்து கொண்டேன்..

தில்லி வந்து இந்தச் சூழலும் ஓரளவு பழகிப் போகத் தொடங்கிய பிறகே எனது அறிமுகம் வடக்கு வாசலுடனும் அதன் ஆசிரியர் கி.பென்னேஸ்வரன் (ராகவன் தம்பி)அவர்களுடனும் நேர்ந்தது.

கணினி பழகாத அந்தக் காலகட்டத்தில் வழக்கமான ஒரு கடித உறையில் என்னைப் பற்றிய அறிமுகத்தோடு நான் ஒரு கடிதம் அனுப்பி வைக்க,அவர் அதைக் கொஞ்சமும் அலட்சியம் செய்து விடாமல் உடன் மறு அஞ்சலில் பதிலளித்ததோடு தனது இதழில் நூல் மதிப்புரை முதலிய ஆக்கங்களை அளித்துப் பங்களிப்புச் செய்யுமாறு அழைப்பும் விடுத்திருந்தார்.
என் இலக்கிய வாழ்க்கையின் அடுத்த கட்டம் ’வடக்கு வாசலுடன்’தொடங்கியது அப்படித்தான்!

முதலில் ஒரு நூல் மதிப்புரையுடன் அந்த இதழில் அறிமுகமான நான்...பிறகு
தற்காலத் தமிழ் இலக்கிய முனைவர் பட்ட ஆய்வேடுகள் தொடர்பாக மிகக் காரசாரமான கட்டுரை ஒன்றை அதற்கு அனுப்பி வைத்தேன்.பிரபலமான இதழ்கள் மற்றும் பல இலக்கிய-சிற்றிதழ்கள் கூட வெளியிடத் தயங்கிய அந்தக் கட்டுரையைத் துணிவாக வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தினார் வடக்கு வாசலின் ஆசிரியர்.
நடுநிலைக் கல்வியாளர்கள் பலரின் உற்சாகமான ஊக்க மொழிகளை அக் கட்டுரை எனக்குப் பெற்றுத் தந்தது.(மெல்லத் தமிழினி நீர்க்கு(ம்)மோ?)

தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக வடக்கு வாசலுடனான என் நட்பும்,உறவும் -
நூல் மதிப்புரைகளாக,கல்வி மற்றும் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளாக,சிறுகதைகளாக,சிறு அஞ்சலிக் குறிப்புக்களாகத் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றால்...சரியான-நேர்மையான எதையும் எழுதலாம் என அதன் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் எனக்குத் தந்திருக்கும் சுதந்திரமும், மேன்மேலும் பலவற்றை எழுத அவர் அளிக்கும் தூண்டுதலுமே அதற்கான காரணங்கள்.
நான் சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் எனது நேர்காணல் ஒன்றையும் வடக்கு வாசல் இதழ் வெளியிட்டிருக்கிறது.

இலக்கியம் சார்ந்த சிற்றிதழ்கள் நடத்துவதென்பது - அதிலும் அதில் ஏற்படும் பொருளாதாரச் சுமை,சரியான அங்கீகாரமின்மையால் விளையும் மனச் சோர்வு என இவற்றையெல்லாம் எதிர்கொண்டு- எதிர்நீந்திக் கரையேற முயல்வதென்பது, இலக்கியத்தின் மீதும் மொழியின் மீதும் மாளாக் காதல் கொண்டவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடியது. முதலில் ஆர்வத்தோடு தொடங்கி விட்டு இடையிலேயே அம் முயற்சியைக் கைவிட்டுப் போன பல இலக்கிய ஜாம்பவான்களைத் தமிழ் இலக்கிய உலகம் சந்தித்திருக்கிறது.

ஒரு சிற்றிதழ்-அதிலும் இலக்கிய இதழ் நடத்தும்போது அதனால் உலகியல் சார்ந்த எந்தப் பயனும் விளையாது என்பதோடு எதிர்மறை விளைவுகளையே எதிர்ப்பட நேரும் என அறிந்தும் அதில் உறுதியாகக் கால் பதித்தபடி - சற்றும்
பின் வாங்காமல் அவர் உறுதியாக நிற்பதற்கான காரணம்,அவரது இலக்கியப் பிடிப்பு ஒன்று மட்டுமே.
அதை நடத்தும்போது நேரும் பண..மன உளைச்சல்களைத் தாங்கிக் கொண்டு இவ்விதழையும்,அதன் இணையப் பதிப்பையும் ஒவ்வொரு மாதமும் அவர் தவறாமல் வெளியிட்டு வருவதனால்தான், ‘இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு’இன்னும் ஓர் தரமான இலக்கிய இதழைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

மொழி சார்ந்து எழுப்பப்படும் வெற்றுக் கோஷங்களை விட இவ்வாறான தனி மனிதத் தியாகங்களும் - முனைப்பான செயல்பாடுகளுமே தமிழைத் தூக்கி நிறுத்த இன்று தேவையானவை.

வடக்கு வாசலுடனான என் தொடர்பு மேலும் விரிவு பெற்று அதன் வெளியீடாக வரப் போகும் நூல்களில் என் சிறுகதைத் தொகுப்பான ‘தேவந்தி’யும் வெளிவர இருப்பதை நான் அவ்விதழ் எனக்களிக்கும் மிகப் பெரும் கௌரவமாகக் கருதுகிறேன்.
வடக்கு வாசல் இதழுக்கும் அதன் ஆசிரியருக்கும் இந்த எளிய வலைப்பூ வழி என் மனம் நெகிழ்ந்த நன்றியைச் செலுத்த விழைகிறேன்...
(இந்த வலைப்பூவை நான் எழுதத் தொடங்கியபோதும் முதல் வாழ்த்து எனக்கு அவரிடமிருந்துதான்...!)

(29,30,31 ஆகிய மூன்று நாட்களும் வடக்கு வாசல் நடத்தவிருக்கும் இசை விழா..மற்றும் நூல் வெளியீடுகள் குறித்த அழைப்பிதழ் இங்கே....)

தில்லி வாழ் தமிழ் ஆர்வலர்கள், நண்பர்கள் அனைவரும் மூன்று நாள் விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென வடக்கு வாசலுடன் இணைந்து நானும் அன்போடு அழைப்பு விடுக்கிறேன்...
வடக்கு வாசலின் தமிழ்ப் பணி -இலக்கியப் பணி மேன்மேலும் சிறந்தோங்க இணைய வாசகர்கள் தங்கள் அன்பான வாழ்த்துக்களையும்,நல்லாதரவையும் அளிக்குமாறும் வேண்டுகிறேன்...


இணையத்தில்....

வடக்கு வாசல்

கி.பென்னேஸ்வரன் 

வடக்கு வாசலில் வெளியான என் சில ஆக்கங்கள்,இணையத்தில்....

மெல்லத் தமிழினி நீர்க்கு(ம்)மோ?


கண்ணகி என்ற கலாச்சார அடையாளமும்,மங்கலதேவி வழிபாடும்..2.


கண்ணகி என்ற கலாச்சார அடையாளமும்,மங்கலதேவி வழிபாடும்..1


கல்வித் தரத்தில் அக்கறை கொண்டோரின் மேலான கவனத்திற்கு...


நேர்காணல் இணைப்புக்கள்;

நேர்காணல்..-பகுதி 1

நேர்காணல்.- பகுதி 2

நேர்காணல்.-பகுதி 3


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....