துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

21.2.10

நேர்காணல் - பகுதி 3 (பொது)

(வடக்குவாசல் இதழில் வெளியான நேர்காணலின் தொடர்ச்சி)

சொற்பொழிவு மேடைகளில் கிட்டிய ஏதாவது குறிப்பிட்ட அனுபவத்தைப் பகிரலாமா? பட்டி மன்றங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?

ஒரு வகையில் சொல்லப் போனால், தரமான இலக்கியச் சொற்பொழிவுகள் தான் இளங்கலை வேதியியல் மாணவியாக இருந்த என்னை, இலக்கியக் கல்வியின்பால் ஈர்த்துச் சென்றிருக்கின்றன.
பட்டிமன்றம் என்ற வடிவம், தமிழகத்தில் அரும்பு விட்ட இடங்களில் மிகக் குறிப்பானது காரைக்குடி கம்பன் கழக மேடை.
60களில் நிகழ்ந்த காரைக்குடி கம்பன் விழாச் சொற்பொழிவுகள், பட்டி மன்றங்கள் ஆகியவை நுட்பமான பல ஆய்வுகளுக்கு நிகராக மதிப்பிடக்
கூடிய செறிவும், உள்ளடக்கமும் கொண்டவையாக இருந்தவை. அந்தச் சூழலில் வளர்ந்து... அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன், திருச்சிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன், இடதுசாரிச் சிந்தனை கொண்ட பேராசிரியர் எஸ்.ஆர்.கே எனப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் (கம்பனும், மில்டனும் நூலாசிரியர்), பாஸ்கரத் தொண்டைமான், கம்யூனிஸ்ட் தலைவர் திரு ஜீவா, நீதியரசர் மு.மு.இஸ்மாயில் ஆகியோரின் செறிவான தமிழ்ப் பேச்சுக்களைக் கேட்டுப் பழகியே முதுகலை தமிழுக்கு வந்து சேர்ந்தேன் நான்.
 
ஆனால், பிற்பாடு மேடைத் தமிழ் நீர்த்துப் போய்விட்டது கண்டு... குறிப்பாகப் பட்டி மன்றங்கள் வெறும் பொழுதுபோக்கு கேளிக்கை அரங்கங்கள் போல மாறிப்போய் விட்டது கண்டு மிகவும் மனம் வெதும்பிப் போனேன். அது பற்றி வெளிப்படையாக விமரிசனங்கள் கூறி அவற்றில் பங்கேற்போரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு.
 
கூடியவரை கருத்துக்கு முதன்மை அளிக்கும் இலக்கிய, சமூக - தனிச் சொற்பொழிவு மேடைகளையும் - பெரும்பாலும் கல்வி நிலையங்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களையும் மட்டுமே என் பங்கெடுப்புக்கு நான் தேர்வு செய்து கொள்கிறேன்.
 
நல்ல கருத்துக்களைத் தேவையற்ற துணுக்குத் தோரணங்கள் இன்றிச் சுவையாக - செறிவாகத் தரும்போது அவற்றையும் பார்வையாளர்கள் ஆழமாகவே உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதையே என் மேடை அனுபவங்கள் எனக்குப் புரிய வைத்திருக்கின்றன. மேடைப் பேச்சினால் யாரையும் மாற்றிவிட முடியாதென்ற போதும் வலுவான வாதங்கள், ஒரு சில மனங்களிலேனும் சின்னச் சின்ன அசைவுகளையாவது ஏற்படுத்திவிடக் கூடியவைதானே?
 
பல்கலைக் கழகங்களில் தற்போது மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பற்றியும் ஆய்வு மாணவ மாணவியர் படும் துயரங்கள் பற்றியும், பல்கலைக்கழகங்களில் நிலவி வரும் சரியற்ற தன்மையையும் நீங்கள் வெளிப்படையாக விமர்சித்து வருகிறீர்கள். இது குறித்து சில இடங்களில் எழுதியும் இருக்கிறீர்கள். இது குறித்துக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

ஆய்தல்' என்ற சொல்லுக்கு "உள்ளதன் நுணுக்கம்' என்று விளக்கம் தருகிறது தொல்காப்பியம்.
அப்படி நுணுகிப் போகாவிட்டாலும் கூடச் சரியான புரிதல் கூட இல்லாமல், எடுத்துக் கொண்ட பொருளை நுனிப் புல் மேய்ந்தபடி பட்டம் பெற முனையும் முனைவர்களும், அந்தப் படுபாதகத்துக்குத் துணைபோகும் வழிகாட்டிகளும் என்னைக் கோபப் படுத்துகிறார்கள். பதவி உயர்வுக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் தமிழாய்வு தரம்குன்றிப் போவதைத் தாங்கிக் கொள்ள முடியாத என் மன உளைச்சலின் வடிகால்களே அக் கட்டுரைகள்.

மெல்லத் தமிழினி நீர்க்கு(ம்)மோ?
கல்வித் தரத்தில் அக்கறை கொண்டோரின் மேலான கவனத்திற்கு....

சொந்தத் தரப்பின் மீதே கல் வீசுவதாக ஒரு சிலர் கோபப்பட்டாலும், நேர்மையான பல பேராசிரியர்கள் என் கருத்துக்களைத் தயக்கமின்றி ஏற்று வழி மொழிகிறார்கள் என்பதே எனக்கு ஆறுதல் அளிக்கிறது. கல்வித் துறையிலிருப்போரின் மனச்சாட்சியை இலேசாகச் சென்று தைத்தாலும் அதுவே அவற்றின் வெற்றியாக அமையும். 

 வேதாத்ரி மகரிஷி அவர்களின் யோகக்கலையில் ஆர்வம் செலுத்துகிறீர்கள். டெல்லியில் உள்ள சமுதாய சேவை மையத்திலும் ஆர்வத்துடன் பங்காற்றி வருகிறீர்கள். யோகம், தியானம் போன்றவற்றில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி? யோகாசனப் பயிற்சிகள் மூலம் உடலைப் பேண எண்ணித்  
தில்லித் தமிழ்ச்சங்கத்தில் சனி, ஞாயிறுகளில் நடக்கும் சமுதாய சேவை மையத்தின் மனவளக்கலை வகுப்பில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தேன். இந்த அமைப்பு வழங்கும் SKY-SIMPLIFIED KUNDALINI YOGA - எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி முறை என் வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்றபடி அமைந்திருந்தது; மேலும் வேதாத்திரியத் தத்துவங்கள் சமயம் சாராதவையாகவும், முழுக்க முழுக்க அறிவியல் அடிப்படை கொண்டவையாகவும் இருப்பதைக் கண்டு அவற்றில் என் ஈடுபாடு அதிகரித்தது. பாரதியார் பல்கலைக்கழகமும், ஆழியாறு அறிவுத் திருக்கோயிலும் இணைந்து நடத்தும் "யோகமும், மனித மாண்பும்' என்ற முதுகலைப் படிப்பில் (தொலை நிலைக்கல்வி) சேர்ந்து யோகக்கலையைக் கல்வியாகப் பயிலும் நிலை வரை அந்த ஆர்வம், என்னைக் கொண்டு சேர்த்திருக்கிறது.

வாழ்க்கை குறித்த உங்கள் பார்வை என்ன?


"நீர்வழிப் படூஉம் புணை போல ஆருயிர் முறைவழிப் படூஉம்''
என்ற புறநானூற்று வரிகள் வாழ்வின் சித்தாந்தத்தை எனக்கு அழுத்தமாக உணர்த்தியிருக்கின்றன.
"வாழ்ந்தே தான் தீரணும் வாழ்க்கை' என்ற ஞானக் கூத்தனின் வரிகள் மெய்தான் என்ற போதும், வாழும் காலம் வரை அதைப் பயனும், பொருளும் மிகுந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் இயலும் காலம் வரை வாழ்வின் எந்தக் கட்டத்திலும் தேடலை நிறுத்தி விடாமல், தேக்கத்தை அனுமதித்து விடாமல் தொடர்ந்து உற்சாகமாக... சுறுசுறுப்பாக ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம்.
 
நன்றி;
http://www.vadakkuvaasal.com/

6 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

//தேக்கத்தை அனுமதித்து விடாமல் தொடர்ந்து உற்சாகமாக... சுறுசுறுப்பாக ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம்.//

True and excellent ma...

அ.வெற்றிவேல் சொன்னது…

கவிஞர் தேனம்மை அவர்கள் வாயிலாக தாங்கள் 60 வது பிறந்த தினம் அறிந்தேன். வாழ்த்துக்கள் அம்மா..மிகச்சிலரே தங்கள் பணிக்கு மரியாதை செய்கிறார்கள்.தங்களால் பேராசிரியர் பதவி மரியாதை பெற்றுள்ளது என்பது தேனம்மை போன்ற கவிஞர்களை உருவாக்கியதில் இருந்து தெரிகிறது..எனக்குத் தெரிந்து தேனம்மை..இன்னும் எத்தனை பேர்களோ..தாங்கள் மேலும் பல்லாண்டு வாழ்ந்து இத்தமிழ்ச் சமூகத்திற்கு தங்கள் அரிய தொண்டினைச் செய்து வரவேண்டும் என்று வேண்டி வாழ்த்துகிறேன்..அன்புடன் வெற்றிவேல்

அண்ணாமலையான் சொன்னது…

இறைவன் என்றென்றும் உங்கள் துனையிருந்து எல்லா வகையிலும் வெற்றியை கொடுக்க வேண்டுகிறேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

என் அன்பிற்குரிய அம்மாவை வாழ்த்தியதற்கு நன்றி வெற்றிவேல் சார் மற்றும் அண்ணாமலையான்

சிவகுமார் சொன்னது…

.

ஏதோ சொல்லால் விடுதலை என்றில்லாமல், செயலாலும் தன்னால் இயன்றதை
இயன்றவரையில் செய்துள்ளார் என்பது இந்தக் கலந்துரையாடலில் கண்டது,
அறிந்தது.
தற்பொழுது நடக்கும் பட்டி மன்றங்கள், அவற்றின் தலைப்புகள் பற்றிய இவரது
கருத்து யார் காதிலாவது விழுமா? முனைவர் பட்டம் பெற வேண்டி
மேற்கொள்ளப்படும் ஒழுங்கற்ற முயற்சிகள் பற்றி அனுபவ ரீதியாக இவர்
கூறியவை திடுக்கிட வைத்தன. எங்கே போகிறோம்? (Quo Vadis?)
இவருடைய ஒன்றிரண்டு சிறுகதைகள் பற்றி இன்னும் விவரமாகப் பேசியிருக்காலாமோ
என்று தோன்றியது.அதாவது - வடிவம், கருப்பொருள், எளிமை, மொழியின் இயல்புத்
தன்மை போன்றவை....
நன்றி

பெயரில்லா சொன்னது…

//ஆய்தல்' என்ற சொல்லுக்கு "உள்ளதன் நுணுக்கம்' என்று விளக்கம் தருகிறது தொல்காப்பியம்.//

நன்றி மேடம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....