துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

21.2.10

’நினைக்கப்படும்’ ஜெயந்தன்

ஜெயமோகன்,சுரேஷ் கண்ணன், கார்த்திகா வாசுதேவன் ஆகியோரின் பதிவுகளிலிருந்து திரு ஜெயந்தன் அவர்கள் காலமான செய்தியைத் தாமதமாகவே தெரிந்து கொண்டதால்,இது சற்றுக் காலம் தாழ்ந்த அஞ்சலிதான் என்றபோதும்,   நினைவுகூர்ந்தே ஆக வேண்டிய  தரமான எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கியவர்   ஜெயந்தன் என்பது நிராகரிக்கப்பட முடியாத உண்மை.




 இவரது படைப்புக்கள் பலவும் வெகுஜன இதழ்களிலேயே மிகுதியாக வெளிவந்திருந்தபோதும் ,ஜெயகாந்தனைப்போலவே இதழ்களின் போக்குக்காகப்  படைப்பின் தரத்தைக் குறைத்துக் கொள்ள ஒப்பாதவர் ஜெயந்தன்.

’இத்தனை வெள்ளத்தை இந்த மேகம் எத்தனை நாள் சூல் கொண்டிருந்ததோ’என்று வியக்க வைக்கும் வகையில் அடைமழை கொட்டித் தீர்ப்பது போலத் தன் உள்ளத்தில் கருக் கொண்ட செய்திகளைக் கதை வெள்ளமாகப் பொழிந்து தீர்த்தவர் என்று,ஜெயகாந்தனைப் பற்றி ஒரு முறை ஜெயந்தன் குறிப்பிட்டது அடிக்கடி நினைவுக்கு வருவதுண்டு.
எண்ணிக்கை அளவில்  அப்படிக் கொட்டித் தீர்த்தவரில்லை ஜெயந்தன் என்றாலும் கூடத் தமிழ்க் கதை வெளியில் அவரும்  குறிப்பிட்ட சில முத்திரைகளைப் பதித்துவிட்டே சென்றிருக்கிறார்.
நினைக்கப்படும்’என்ற அவரது நாடகத்தை என் கல்லூரிப் பணிக்காலத்தில் மாணவியரை வைத்து  அரங்கேற்றியதும்,
 ‘80களின் நடுவில்,மதுரையில் ஒரு முறை அவரைச் சந்தித்து உரையாடியதும்,
அவர் செய்து வைத்த அறிமுகத்தின் வழியாகவே, என் முதல் சிறுகதைத் தொகுப்பு நர்மதா வெளியீடாக வெளிவந்ததும்  ,
‘கிளி’ என்ற அவரது குறுநாவலைப் படித்துவிட்டு அவருக்கு எழுதிய விமரிசனம் கண்டு - பெண் பற்றிய ஒரு படைப்புக்கு அது குறித்த சரியான புரிதலுடன் ஒரு பெண்ணிடமிருந்தே வந்த எதிர்வினைக்கு மகிழ்ந்து அவர் கடிதத்தின் மூலம் அளித்த மறுமொழியும்-
ஜெயந்தன் சார்ந்த தனிப்பட்ட அனுபவங்களாய் உள்ளத்தில் என்றும் உறைந்திருப்பவை.
ஜெயந்தனின் கதைகளில் இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்றவைகளும்(’அவள்’-1981,’நினைக்கப்படும்’நாடகமும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றதே) ,பாலுமகேந்திராவால் குறும்படமாக்கப்பட்டவைகளும் (’பாஷை’)உண்டு.

மனிதத்தின் குறைநிறைகளைப் புறவயமான பார்வையோடு கூடிய சமூக சிந்தனைகளோடு கலைப்படைப்புக்களாக ஆக்கித் தந்த ஜெயந்தனின் எழுத்துக்கள் அவர் பெயரை என்றென்றும் சொல்லிக் கொண்டிருக்கும்.
பி.கு;ஜெயந்தனைப் படிக்க....
 ‘நிராயுத பாணியின் ஆயுதங்கள்’என்ற தலைப்பில்,
ஜெயந்தனின் படைப்புக்கள் வம்சி புத்தக நிலையத்தால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. வம்சி புக்ஸ்,19,டி.எம்.சாரோன்,திருவண்ணாமலை,
606 601
 
"இந்தச் சக்கரங்கள்”, குறுநாவல், ஜெயந்தன், விலை ரூ.70/- தோழமை வெளியீடு, 5-டி, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை-78.
 
ஜெயந்தன் கதைகள் (பகுதி – 2)  ராஜராஜன் பதிப்பகம்.
 
’சம்மதங்கள்’-சிறுகதைத் தொகுப்பு,நர்மதா வெளியீடு
 
கதை அரங்கம் மணிக் கதைகள்(2),மீனாட்சி புத்தக நிலைய வெளியீட்டில் ‘குணாலட்சுமி’என்ற ஜெயந்தனின் சிறுகதை இடம் பெற்றுள்ளது.
 
திரு விட்டல்ராவ் தொகுத்திருக்கும்’இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்’(3)இல் ஜெயந்தனின் ‘மொட்டை’ சிறுகதை சேர்க்கப்பட்டிருக்கிறது.

5 கருத்துகள் :

chandramohan சொன்னது…

எழுத்தாளர்களின் பிரபல்யம் மட்டும் மனதில் கொள்ளாமல் எழுத்தின் தரத்தை மட்டும் பார்த்ததால் தான் தங்களால் நல்ல எழுத்தை அடையாளம் கண்டு அதன் மீதான தேடலையும் எப்பொழுதும் தொடர முடிகிறது. இளம் தலைமுறைக்கு நீங்கள் ஒரு வழிகாட்டி.
ஜெயந்தனின் நினைவாஞ்சலி நெகிழ்வாக இருந்தது.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி சந்திரமோகன்.
‘80களில் ஓரளவு அறியப்பட்டவராகத்தான் இருந்தார் ஜெயந்தன்.
வேறொரு இடத்தில் படித்ததைப் போல அவரால் தன்னை ‘சந்தைப்’படுத்திக்கொள்ளமுடியவில்லை.அல்லது அதை அவர் விரும்பாமலும் இருந்திருக்கலாம்.அவ்வளவுதான்.

கண்ணம்மாள் சொன்னது…

ஜெயந்தனின் படைப்புக்கள் கிடைக்கும் இடங்களையும் பதிவில் சுட்டியமைக்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நல்ல பகிர்வுக்கு நன்றி அம்மா .. உங்கள் மொழிபெயர்ப்பில் இடியட் எந்த அளவில் உள்ளது ..?சீக்கிரம் வெளீயிடுங்கள் அம்மா.. படிக்க ஆவலாய் இருக்கிறோம் .

அண்ணாமலையான் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....