முன் குறிப்பு:
புது தில்லியிலிருந்து வெளியாகும் ‘வடக்கு வாசல்’ ஜனவரி (2010) இதழில்,
இலக்குகளை நோக்கிய ஒரு பயணம்
என்ற தலைப்பில் எனது நேர்காணல் வெளியாகியிருக்கிறது.
வடக்கு வாசல் இணைய தளத்திலும் அது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
http://vadakkuvaasal.com/article.php?id=479&issue=66&category=2
அந் நேர்காணலைக் குறிப்பிட்ட சில தலைப்புக்களாகப் பகுத்து இவ் வலைப்பூவில் பதிவேற்றம் செய்யவிருக்கிறேன்.
(படைப்பு,சமகால இலக்கியம்,பெண்ணியம்,வாழ்க்கை ஆகியவை குறித்த என் கண்ணோட்டங்களை நேர்காணல் வழி வெளிப்படுத்த எனக்கு வாய்ப்பளித்த இதழாசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றி)
தொடர்ந்து..நேர்காணல்;(படைப்பாக்கம்,இலக்கியம்)
படைப்புலகில் சிறுகதை வடிவத்தில் இயங்கிக் கொண்டிருந்த நீங்கள் இப்போது மொழி பெயர்ப்பில் அதிகம் கவனம் செலுத்துகிறீர்கள். உதாரணத்துக்கு தஸ்தயவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் போன்ற செவ்வியல் படைப்பு. இப்போது நீங்கள் செய்து வரும் 'இடியட்' புதினத்தின் மொழிபெயர்ப்பு. படைப்பாக்கம் குறித்த உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
மொழிபெயர்ப்புத் துறைக்கு நான் வந்தது மிக மிகத் தற்செயலான ஒரு நிகழ்வுதான். பணி ஓய்வு பெற்று, மதுரையிலிருந்து தில்லிக்கு இடம் பெயரவும் நான் ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஒரு சூழலில் - மதுரை, பாரதி புத்தக நிலையத்தின் உரிமையாளர் தஸ்தாயெவ்ஸ்கியின் "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்ப்புச் செய்து தருமாறு என்னை அணுகினார். மொழியாக்கத் துறையில் அதுவரையில் முனைந்ததில்லை என்பதாலும், நாவலின் நீட்சி கருதியும் முதலில் நான் சற்றுத் தயங்கியது உண்மைதான். ஆனாலும் அப்போதைய சூழலில்-36 ஆண்டுகள் என் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்து வந்த ஆசிரியப் பணியிலிருந்து நான் விடை பெறும் ஒரு தருணத்தில், அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை ஆக்க பூர்வமாக இட்டு நிரப்பும் ஒரு பிடிமானமாக - பற்றுக்கோடாக, அந்த மொழிபெயர்ப்புப் பணியை நான் ஏற்றுக் கொண்டேன்.
மேலும் வேறு சில முக்கியமான பொறுப்புக்களும் எனக்காகக் காத்திருந்த அந்தச் சூழலில், சொந்தப் படைப்பாக்கத்துக்குப் போதிய நேரம் ஒதுக்க முடியாத ஒரு நிலையில், எழுத்தார்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், தொடர்ந்து எழுத்துடனும், இலக்கியத்துடனும் ஊடாடவும் அந்த மொழியாக்கப் பணி எனக்கு வாயில்களைத் திறந்து வைத்தது.
அதற்குள் ஆழ்ந்து ஈடுபடத் தொடங்கிய பின், அது, தானாகவே என்னை இழுத்துக் கொள்ளவும் தொடங்கியது; அயல் மொழி நாவலொன்றை வெறுமே படித்துவிட்டுப் போவது போலல்லாமல் வார்த்தை வார்த்தையாக மொழிபெயர்ப்புச் செய்து கொண்டு போகும்போது மூலநூலாசிரியனுக்கு மிக நெருக்கமாகச் சென்றுவிடும் அனுபூதி நிலை - ஒரு மகத்தான தரிசனம் - காட்சியாவதை நான் உணர நேரிட்டது.
மொழிபெயர்ப்பு வெளியானபோது, நான் எண்ணியதை விட இலக்கிய வட்டத்தில் அது பெற்ற வரவேற்பும் எனக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது. அதன் காரணமாகவே தொடர்ந்து தஸ்தயேவ்ஸ்கியின் ‘இடியட்’ நாவலை மொழியாக்கும் பணியையும் ஏற்றுக் கொண்டேன்.இப்பொழுது அது கிட்டத்தட்ட நிறைவுறும் நிலை.
ஆனாலும் மொழியாக்கப் பணி என்பது மட்டுமே என் எழுத்தின் முடிவான இலக்கல்ல.
சிறுகதைகள் - குறிப்பாக இலக்கிய, இதிகாச, புராணங்களை மீட்டுருவாக்கம் செய்யும் சிறுகதைகள் பலவற்றுக்கான கருப்பொருள் என் இதயத்தில் உறைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிச்சத்துக்கு இட்டு வந்தாக வேண்டும்.
இருபதாம் நூற்றாண்டில் இந்தியப் பெண்கள் சுமக்க நேர்ந்த பல சிலுவைகளை ஒட்டு மொத்தமாகச் சுமந்து, ஆனாலும் நிமிர்ந்தே நின்ற என் தாயின் கதையை எல்லோரும் படிக்கக் கூடிய வகையில் ஒரு நீண்ட நாவலாக அளிக்க வேண்டும். பலமுறை தொடங்கிப் பாதியில் நிற்கும் அதை முழுமை செய்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியப் பெண்கள் சுமக்க நேர்ந்த பல சிலுவைகளை ஒட்டு மொத்தமாகச் சுமந்து, ஆனாலும் நிமிர்ந்தே நின்ற என் தாயின் கதையை எல்லோரும் படிக்கக் கூடிய வகையில் ஒரு நீண்ட நாவலாக அளிக்க வேண்டும். பலமுறை தொடங்கிப் பாதியில் நிற்கும் அதை முழுமை செய்து முடிப்பதே என் எழுத்தின் குறிக்கோள்.
நீண்டகால ஆசிரியப் பணி வாழ்வில் நான் எதிர்ப்பட்டிருக்கும் வெவ்வேறு குணாதிசயம் கொண்ட பல்வேறுபட்ட மனிதர்கள் அவ்வப்போது என் நெஞ்சில் கும்மி கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை ஒரே கண்ணியில் இணைத்து ஒரு நாவலை எழுத வேண்டும்.
தமிழ் நவீன இலக்கியம் சரியான பாதையில் பயணித்துக் கொண்டு வருகிறதா? செவ்வியல் இலக்கியம் மற்றும் நவீன இலக்கியத்தில் பரிச்சயம் கொண்ட ஒரு பேராசிரியராக, முனைவராக உங்கள் பார்வை மற்றும் கருத்து என்ன?
இந்தக் கேள்விக்கு ஒரு பேராசிரியர் அல்லது முனைவர் என்ற நிலையிலிருந்து பதில் கூறாமல் '60 களிலிருந்து கடந்த நாற்பது ஆண்டுகளாக வாசிப்பைத் தொடர்ந்து வரும் ஒரு வாசக நிலையிலிருந்து விடையளிக்க விரும்புகிறேன்.
உவமை என்ற ஒரே அணி, வெவ்வேறு அணிகளாக வேடம் புனைந்தபடிவெளிப்பாடு கொள்வதைப் போலவே இலக்கியமும் கால மாற்றத்துக்கு ஏற்றபடி பல்வகைக் கோலங்களைப் பாங்குறப் புனைந்து கொண்டு வருகிறது. அவற்றின் போக்கைக் கவனமாகத் தொடர்ந்து கொண்டிருப்பதே தீவிர வாசகக் கடமை; அவற்றுள் எது நிலைக்கும் என்பதை முடிவு செய்வது காலத்தின் பொறுப்பு.
வெகுஜன இதழ்களைப் பொறுத்தவரை - இன்றைய சூழலில் இலக்கியத்திற்கு அங்கே சிறிதும் இடமில்லை என்பது வெளிப்படையாகப் புலப்படுவதால் ஓரளவு தரமான இலக்கிய முயற்சிகளுக்கு நாம் இலக்கிய, சிற்றிதழ்களையே நாட வேண்டியிருக்கிறது. அந்த வகையில் அவற்றின் பெருக்கம் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியதே என்ற போதும் வெவ்வேறு இலக்கியக்குழு அரசியல்களின் நெடியே அவற்றிலும் தூக்கலாக வெளிப்படும்போது நல்ல எழுத்தைத் தேடி வரும் வாசக மனம் சோர்வுக்கும் ஏமாற்றத்துக்கும் ஆளாகும் நிலையும் சம்பவித்து விடுகிறது.இன்றைய நவீன, பின் நவீனப் படைப்புக்கள் பலவும் கோட்பாட்டுச் சிறையில் அதிகமாகச் சிக்கியிருப்பதால் எழுத்தின் சாரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளப் பொறுமையற்ற வாசக வட்டம் அவற்றை அன்னியமாக உணர்ந்தபடி ஒதுங்க ஆரம்பித்து விடுகிறது. இந்தப் போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு ஆபத்தானது; இலக்கியம் நீர்த்து விடவும் கூடாது, அதே வேளையில் ஒரேயடியாக மாயவித்தை காட்டி ஒரு புதிரைப் போல ஆகிவிடக் கூடாது என்றே நான் கருதுகிறேன்.
இன்றைய படைப்புக்கள், அழகியலுக்கு இடமளிக்கும் அதே வேளையில் கருத்து வெளிப்பாட்டுக்கும் முதன்மை அளிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
5 கருத்துகள் :
நேர்காணல் வாசித்தேன். கருத்துகளை அருமையாக பதிந்திருக்கிறீர்கள்.
‘இடியட்‘ புத்தக மொழிபெயர்ப்பு யூமா வாசுகி செய்கிறார் NCBH ற்காக என்று தகவல் வெளியாகியிருக்கிறதே. நீங்களும் செய்கிறீர்களா?
மிக்கநன்றி.
இடியட்டை யூமா வாசுகி செய்யப்போவதாக முன்பு திரு எஸ்.ராமகிருஷ்ணன் வழி அறிந்தேன்.
தொடர்ந்து அதைப் பற்றித் தகவல் தெரியாது.
மேலும் ஒரு படைப்புக்குப் பல மொழிபெயர்ப்புக்கள் இருப்பதும் இயல்புதானே.
எப்படியும் மிக விரைவில் வெளியிட்டுவிடும் முடிவில் இருக்கிறோம்.
’உயிரோடை’ லாவண்யா வழி அக நாழிகையின் சந்தாதாரராகியுள்ளேன் என்பதைத் தங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
வடக்கு வாசலிலேயே வாசித்து விட்டேன் நன்றாக இருக்கின்றது நேர்காணல்
நேர்க்காணல் நன்றாக உள்ளதுங்க. வாழ்த்துக்கள்.
// கடந்த நாற்பது ஆண்டுகளாக வாசிப்பைத் தொடர்ந்து வரும் ஒரு வாசக நிலையிலிருந்து விடையளிக்க விரும்புகிறேன்//
"நாற்பது ஆண்டு கால வாசிப்பு" -பிரமிப்பு..
கருத்துரையிடுக