(29.7.11 வெள்ளியன்று வெளியிடப்படவிருக்கும் ‘தேவந்தி’ சிறுகதைத் தொகுப்பிற்கு வடக்கு வாசல் இலக்கிய இதழின் ஆசிரியர் திரு யதார்த்தா கி.பென்னேஸ்வரன் அவர்கள் எழுதிய பதிப்புரை)
கட்டியம்
சுசீலாம்மா என்று இங்கு எங்களால் அன்புடன் அழைக்கப்படும் எம்.ஏ.சுசீலா, தன்னை முனைவர் என்று அழைக்கப்படுவதையும் ஓய்வு பெற்ற பேராசிரியர் என்று விளிப்பதையும் அறவே தவிர்க்க விழைபவர். தலைநகர் வாழ்க்கையில் அவருக்குக் கிட்டும் மிகக் குறைந்த அவகாசத்தில், தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்கள், யோகக் கலை, தியானம், தீவிர வாசிப்பு, வலைத்தளத்தில் எழுதுதல் எனப் பல்வேறு பணிகளில் தீவிரத்துடன் இயங்கி வருகின்றவர். நம்மை அயரவைக்கும் உழைப்பு அவருடையது. கல்லூரியில் பயிற்றுவித்துக் கொண்டிருந்தபோது பல்வேறு அவலங்களின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த பல மாணவியரின் தற்கொலை முயற்சிகளைத் தவிர்க்கும் வகையில் தன்னம்பிக்கைப் பாடங்களை எடுத்தவர் சுசீலாம்மா என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்னை வதைத்து வரும் பொருளாதார இழப்புக்கள், கடன் சுமைகள், தொடர்ச்சியாக நான் சந்திக்க நேர்ந்த துரோகங்கள், நன்றி மறத்தல்கள், முதுகில் பெற்ற பலத்த குத்துக்கள் போன்றவை பலநேரங்களில் மனதைக் கடுமையாகச் சோர்வுற வைக்கும். எல்லாவற்றையும் விட்டு உதறி ஒடுங்கத் தீர்மானித்த பல கணங்கள் உண்டு. அவை போன்ற நேரங்களில் சுசீலாம்மா எனக்கு அளிக்கும் ஆறுதல், மனோதைரியம் போன்றவை பயணத்தின் சோர்வகற்றி எனக்கப் பெரும் பலம் அளித்திருக்கின்றன. இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மனித வாழ்க்கையின் பல்வேறு முகங்களை அக்கறையுடன் கேள்விக்கு உள்ளாக்கி அவற்றின் ஒப்பனைகளைக் கலைத்து எறிகின்ற முயற்சியின் துவக்கமாக எடுத்துக் கொள்கிறேன். வாழ்வின் அனுபவ உளிகளால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் இந்தச் சிறுகதைகள். தன்னுடைய முதல் சிறுகதையில் துவங்கி, படைப்புலகப் பயணத்தில் பதித்துச் செல்லும் தடங்களையும் பன்முகப் பார்வைகளையும் ஓரிடத்தில் பதிவுசெய்வதற்கு மிகவும் துணிச்சல் வேண்டும். நேர்மையான அணுகுமுறை வேண்டும். விமர்சனங்களுக்கு அஞ்சாத நெஞ்சுரம் வேண்டும். இவை அனைத்தையும் தன்னகத்தே பெற்றுப் படைப்புலகில் தனித்த இடத்தைப் பெறுகின்றவர் சுசீலாம்மா. அவருடைய பல காலகட்டங்களில் படைக்கப்பெற்ற சிறுகதைகளை இங்கே ஓரிடத்தில் தொகுத்து வழங்குவது எங்களுக்குப் பெருமையும் மகிழ்வும் தரும் விஷயம். ஒரு நாடகத்தின் சிறப்பு அதன் பார்வையாளர்களின் கண்களில் தெறிக்கும் என்று சொல்வார்கள். இச்சிறுகதைகளின் சிறப்பு பாவண்ணன் அளித்துள்ள மிகவும் சுவாரசியமான அணிந்துரையில் தெறிக்கிறது.இத்தொகுப்பில் உள்ள கதைகளின் அழகுக்கு அழகு சேர்த்த அவருடைய அணிந்துரைக்கு என் நன்றி. சுசீலாம்மா அவர்கள் காட்டும் உலகில் பிரவேசிக்க உங்கள் அனைவருக்கும் கட்டியம் கூறி வரவேற்கிறது வடக்கு வாசல். யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
புது டெல்லி 06 ஜூலை 2011
3 கருத்துகள் :
தன்னம்பிக்கை ஊற்று அன்புடன் மகன்
velumani.t 9361228299
"சுசீலாம்மா"
நீங்களும் அப்படியே அழைக்கலாம் சரவணகுமார்...
கருத்துரையிடுக