துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.3.09

சங்கிலி/ தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு
நுழையுமுன்....
.
'சங்கிலி' என்ற தலைப்பில் 'புதிய பார்வை(டிச1-15,'05 )இதழில் வெளியான இந்தச் சிறுகதைக்கு நான் சூட்டியிருந்த தலைப்பு....'தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு' என்பதே. அதுவே மிகவும் பொருத்தமானது என நான் கருதுவதால் அந்தப்பெயரையே வலையில் பயன்படுத்தி இருக்கிறேன்.

படைப்பைப் பேசவிட்டுப் படைப்பாளி ஒதுங்கிவிட வேண்டும் என்பது எனக்கும் உடன்பாடானதுதான்; எனினும்...பெரிய புராணப்பின்னணியை அடிப்படையாக வைத்து மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்தக்கதை, புராணப்பின்புலத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பற்ற வாசகர்களுக்குச்சரிவரப்போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தில்,அது குறித்த ஒரு சிறு விளக்கம்....

தேவார மூவர்களில் ஒருவரான சுந்தரர்,கயிலையில் இருந்தபோது,அங்கிருந்த தேவ மாதர்களான கமலினி, அநிந்திதை ஆகிய இருவர் மீதும் காதல்கொள்கிறார்; அவர்கள் மூவரையும் மண்ணுலகிற்கு அனுப்பி வைக்கும் ஈசன், இக வாழ்வின் இன்பங்களை அங்கே துய்த்து முடித்துவிட்டுத் திரும்பி வருமாறு அவர்களைப் பணிக்கிறான்.
பூவுலகில் நம்பி ஆரூரராகவும், பரவை, சங்கிலியாகவும் பிறக்கும் அவர்கள், தங்களுக்குள் மணமுடிக்கும் முன், மற்றொரு குறுக்கீடு நேர்ந்து விடுகிறது. சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் மகளோடு நம்பி ஆரூரரின் திருமணம் ஏற்பாடாக,முதியவர் வேடத்தில் அங்கு வரும் ஈசன், சுந்தரரைத் தடுத்தாட்கொண்டு (பரவை,சங்கிலியை மணக்க உதவியாக)அந்தத்திருமணத்தைத்தடுத்து நிறுத்துகிறான்.

பெரியபுராணம் சொல்லும் இந்தக்கதையில்....மண மேடையில் சுந்தரரோடு உடனமர்ந்த அந்த முகம் தெரியாத..., ..பெயர் மறைக்கப்பட்ட(பெரிய புராணம் அவள் பெயரை எங்குமே குறிப்பிடவில்லை) பெண்ணின் நிலை மிகவும் அவலம் தோய்ந்தது. ஆண் மையச்சமூக அமைப்பால் இருட்டடிப்புச்செய்யப்பட்ட அவள் வாழ்வு என்ன ஆயிற்று,அல்லது அது என்ன ஆக வேண்டும் என்ற சிந்தனை எவருக்குமே எழவில்லை.இலக்கியம்....அங்கே மௌனமாக இருந்து விடுகிறது.
(தொடர்ந்து அவள் கதி என்ன ஆயிற்று என்பதை அறியப்பெரிய புராணத்திற்குள் போனால்...ஒரு சில பாடல்களிலேயே 'இறைச்சிந்தனையோடு வாழ்ந்து விரைவிலேயே இறந்து போனாள் 'என்பதோடு அவள் கதை முடிக்கப்பட்டு விடுகிறது.)
அந்த மௌனத்தைக்கட்டுடைத்து...அந்த இடைவெளியை இட்டு நிரப்பும் முயற்சியே இச்சிறுகதை.
-------------------------------------------------------------------------------------
நடு இரவுப்பொழுதின் தனிமை தரும் இதத்தில் தோய்ந்து கரைந்தபடி, மேன்மாடத்தில் நின்றிருந்தாள் சங்கிலி.மனக் குழப்பங்களை, எண்ணச் சிடுக்குகளைச் சாவதானமாகக் கோதிவிடுவதற்கும், இழை பிரித்துப் பார்ப்பதற்கும் கூட அவகாசமின்றிக் கேலியும், கிண்டலுமாய்ச் சூழ்ந்து நெருக்கிய தோழியர் கூட்டத்திலிருந்து கிடைத்த தற்காலிக விடுதலை, சற்றே நிம்மதி அளித்தது. சொல்லப்போனால்... அவர்களைக் குறை சொல்வதற்கும் என்ன இருக்கிறது?கல்யாணமே வேண்டாம் என்று கன்னி மாடத்தைப் புகலாக்கிக் கொண்டுவிட்ட அவர்களின் தோழி, சிவ பக்தன் என்ற தர முத்திரையுடன் அகிலம் முழுவதும் அறியப்பட்டிருக்கும் ஆலால சுந்தரனின் கைத்தலம் பற்றப் போகும் நாளல்லவா நாளை? அதை அவர்கள் கொண்டாடாமல் வேறென்ன செய்வார்கள்?

சங்கிலிக்கு உடம்பு ஒரு கணம் உதறிப்போட்டது. உள்ளுணர்வில் ஏதோ ஓர் இடைஞ்சல்.சுவையான பதார்த்தத்தில் குறுக்கீடாகிற கல் போல் ஒரு நெருடல். தன் எதிர்காலம் செல்லப்போகிற திசை..சரியானதுதானா? ..அந்தப்பாதை நிர்ணயமானதில் தன் பங்கு என்ன?..அதில் தன் பொறுப்பு சரியாக ஆற்றப்பட்டிருக்கிறதா?


பருவமடைந்த நாள் முதல் எதிரே வருவதற்கும், பேசுவதற்கும் கூடத் தயக்கம் காட்டிக் கொண்டிருந்த தந்தை, சென்ற வாரம் கன்னிமாடத்திற்கே வந்து தன் ஆற்றாமையைக்கொட்டிவிட்டுத் தான் எடுத்திருக்கும் முடிவையும் உறுதியாகக் கோடு கிழித்துக் காட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.. மகளின் திருமணத்தைக் கழுத்தை இறுக்கும் கல்லாக நினைக்கும் தந்தைமார்கள் ,வேறு எப்படித்தான் நடந்து கொண்டுவிட முடியும்?

''அம்மா சங்கிலி, ..நீ வயதுக்கு வந்த உடனேயே உன் அத்தை உன்னைப் பெண் கேட்டு வந்தாள். அத்தை மகன் வேண்டாம் என்றாய்...புரிந்து கொண்டேன். குடும்பப் பகையையும் தேடிக் கொண்டேன். கன்னிமாடத்தில் தங்கியிருந்து சிவ பூஜை செய்ய வேண்டுமென்றாய். அதையும் நான் தடுக்கவில்லை. இன்னும் எத்தனை நாளைக்குத்தானம்மா உன் திருமணத்தை ஒத்திப்போட்டு ஊர்ப் பழியைச் சுமப்பது? இப்பொழுது வலிய வந்திருக்கும் இந்த வரன் ஒரு வரமல்லவா? உன் அழகில் மயங்கி உன்னை ஆளவந்திருப்பவன்...அந்த ஆண்டவனே தடுத்தாட்கொண்ட ஆலால சுந்தரனல்லவா? கொஞ்சம் நினத்துப்பாரம்மா! உன் தாய்க்கும் ,எனக்கும் ஏறிக்கொண்டுபோகும் வயதை எண்ணியாவது எங்கள் நெஞ்சிலுள்ள பாரத்தை நீ இறக்கி வைக்கக் கூடாதா சங்கிலி?''

அதே உணர்வு பூர்வமான தாக்குதல்...அதே பாச வன்முறை...,அவள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட அந்தக் கட்டத்தில், தவிர்க்கக்கூடாத ஒரு வினாவை மட்டும் தவற விடாமல் கேட்டாள் அவள்.
''அதெல்லாம் இருக்கட்டும் அப்பா! ஆனால் அந்தப் பரவையோடு அவர் கொண்டிருக்கும் உறவென்னவோ உண்மைதானே?''
சற்றே இறுகிப்போன தந்தை ஒரு நொடியில் தன்னைச் சுதாரித்துக் கொண்டவராய்த் தொடர்ந்தார்.

''அதையெல்லாம் நீ பெரிதுபடுத்தக்கூடாதம்மா! நாங்கள் பெரியவர்கள் எதற்காக இருக்கிறோம்?அப்படியெல்லாம் உன் வாழ்வு வீணாக விட்டு விடுவோமா என்ன? வேண்டுமானால் உன் பயத்தை அவரிடம்சொல்லி ,அந்தப் பரவையிடம் இனிமேல் செல்வதில்லைஎன்று கோயிலில் வைத்து வாக்குத்தத்தம் செய்து கொடுக்கச் சொன்னால் போயிற்று...''
வாக்குத்தத்தம் செய்பவர்களெல்லாம் வாய்மையின் பாதுகாவலர்களாகவா வாழ்ந்து விட்டார்கள்? பாறையாக இருந்த தன் மனம், தந்தையின் பாசச்சூட்டில் இளகிப்போனது எப்படி? ஒருவேளை...சுந்தரனின் இளமைப்பொலிவும், அழகிய தோற்றமும் தன்னையும் கூட வேறு வகையில் கிளர்த்தி விட்டதோ?
நிலை கொள்ள முடியாத குழப்பத்தில் சங்கிலிக்குத் தலை கிறங்கிய தருணத்தில் வாசலில் ஏதோ அரவம் கேட்க....புயலென உள்ளே நுழைந்தாள் ஒரு சேடிப்பெண்.

''கடந்த ஒரு நாழிகையாக உங்களை உடனடியாகப் பார்த்தே ஆக வேண்டுமென்று ஒரு பெண் அடம்பிடித்து அழும்பு செய்து கொண்டிருக்கிறாளம்மா...பார்த்தால்..நம் ஊர், நம் மக்கள் போலத் தோன்றவில்லை. நாளைக்குத் திருமணம் என்பதையும், நீங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பதையும் எத்தனை முறை சொன்னாலும் அவள் கேட்பதாக இல்லை....! பொழுது விடிவதற்குள் உங்களைப்பார்க்க அனுமதிக்கவில்லையென்றால், உயிர்த்தியாகம் செய்து கொண்டுவிடப் போவதாகவும் கூட அச்சுறுத்துகிறாளம்மா.''

முந்தைய சிக்கல் முடிச்சுக்களே அவிழ்ந்திராத நிலையில் இன்னுமொரு புதுப்புதிரா?
..ஆனாலும் அடிமன ஆர்வம் அனிச்சையாக இயக்க, அந்தப் பெண்ணை உள்ளே வரச் சொல்லும் உத்தரவு, சங்கிலியிடமிருந்து பிறந்தது.உண்ணும் சோறும், பருகும் நீருமின்றி...வெறும் காற்றையே உட்செலுத்தி உலவிக்கொண்டிருக்கும் உயிரியைப் போன்றதொரு தோற்றத்துடன்...கறுத்து, மெலிந்து, சிறுத்துப்போன பெண் உருவம் ஒன்று வந்து அவளெதிரே நின்றது.

''நீ..நீங்கள்..?''

''பெண்ணே நாம் சற்றுத் தனியாகப் பேச வேண்டும்''

சங்கிலியின் கண்ணசைவைப் புரிந்து கொண்டவர்களாய்ப் பணிப்பெண்களும் ,பிற தோழிமார்களும் அகன்று செல்ல , சில வினாடிகளுக்கு அங்கே ஒரு மௌன இடைவேளை நிகழ்ந்தது. அச்சமூட்டிய அந்த அமைதிக்கணத்தைய்த் தன் கிசுகிசுப்பான குரலால் வகிர்ந்தபடி, தன் அடுத்த உரையாடலைத் தொடங்கி வைத்தாள் அவள்.

''என் அன்புத் தோழியே...நான் உன்னைத் தடுத்தாட்கொள்ள வந்திருக்கிறேன்.''

அறத்துன்பமான ஒரு சூழலில் ...சுழலில் மாட்டிக்கொண்டு விட்டதான உணர்வு..சங்கிலிக்கு...! இவளுக்குக் மூளைக்குழப்பம் எதுவும் நேர்ந்திருக்குமோ?

''முதலில் நீங்கள் யார்...உங்கள் பெயர் என்ன என்பதைக்கொஞ்சம் சொல்லுங்களேன்.''
பதற்றத்தை வெளிக்காட்டாத நிதானத்துடன் சங்கிலியிடமிருந்து சொற்கள் பிறந்தன.

''எனக்குப் பெயரும் இல்லை; முகவரியும் இல்லை....பிறந்தபொழுது... ஏதோ ஒரு பெயர் எனக்கு இடப்பட்டிருக்கலாம்....ஆனால் ..காலம் அதையெல்லாம் அழித்துத் துடைத்துத் தூக்கி எறிந்து விட்டது. பாலியத்தில் நான்..சடங்கவி சிவாச்சாரியாரின் மகள்....இளமையில் நான் சுந்தரரின் மனைவியாகக் காத்திருந்தவள். அதற்கு முன்பாகத்தான் தடுத்தாட்கொள்ளும் சூழ்ச்சி நாடகம் அரங்கேறி....என் அடுத்த முகவரியைக் கலைத்துப் போட்டுவிட்டதே?''

சுந்தரன் தடுத்தாட்கொள்ளப்பட்ட தருணத்தில்...மணக்கோலத்தில், மண மேடையில் அவனுடன் அமர்ந்திருந்த புத்தூர் சடங்கவி மகளா இவள்? சங்கிலிக்கு அந்தப் பெண்ணின் பேச்சில் சற்றே சுவாரசியம் தட்டிற்று.

''நீங்கள் இறந்து போய்விட்டதாக அல்லவா....?''

அவள் சிரித்தாள். நெற்றிக்கண் திறந்து முப்புரம் எரித்த கணத்தில் அந்தப் பரமன் சூடியிருந்த பாவனையாக சங்கிலிக்கு அது தோன்ற...அவள் சற்றே பயம் கொண்டாள்.

''அப்படி ஒரு கதையை உருவாக்கி விட்டவளே நான் தானே?என்னை வேறென்ன செய்யச் சொல்கிறாய் பெண்ணே! ஊரறிய..உலகறிய..ஒருவனோடு மண மேடை வரைபோய்விட்ட பெண்ணை நம் சமூகம் அத்தனை எளிதாக விட்டுவிடுமா என்ன? தாயும், தந்தையும் என்னைப் பார்த்து வடித்த கண்ணீர் பொறுக்கவில்லை எனக்கு. நான் செய்யாத தவறுக்காகச் சாகவும் விருப்பமில்லை. நான் இறந்து விட்டதாக அவர்கள் நம்பும்படி சில தடயங்களை மட்டும் விட்டு வைத்து விட்டு வெளியேறி விட்டேன்! ஆனால்..நீ வேண்டுமானால் பாரேன் !வருங்காலத்தில் சுந்தரனின் கதை காவியமாகிறபோது...அந்தக் காப்பியப் புலவர்கள், கட்டாயமாக- சாவைத்தான் எனக்கு முடிவாகத்தருவார்கள். கதையை முடிக்க வழி தெரியாதபோது...பாத்திரத்தை முடிப்பதுதானே இலக்கிய தர்மம்...?''

அவளது வாதத்தில் மனம் லயித்தபோதும்..தன்னைத்தேடி இந்தத் தருணத்தில் அவள் வந்திருக்கும் நோக்கம் சங்கிலிக்கு இன்னும் தெளிவாகவில்லை.

''தடுத்தாட்கொண்டது ஒரு சூழ்ச்சி நாடகம் என்றீர்களே...அது என்ன?''

''இது கூடவா புரியவில்லை? என்னை மணந்து கொள்ள சுந்தரனுக்கு விருப்பமில்லை.உருத்திர கணிகையின் குலத்தில் வந்த பரவையின் மீது அப்போதே அவனுக்கு ஒரு கண். பெரியவர்களிடம் விரும்பியதைச்சொல்லத் துணிச்சலில்லை. தனக்கு வேண்டியவர்களின் துணையோடு அந்த ஈசனே தடுத்தாட்கொண்டதாக ஒரு நாடகம் நடத்த ...என் வாழ்வு அதற்குப் பலிகடா ஆயிற்று.''

'இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன..?'- சங்கிலியின் விழிகள் வியப்பால் விரிய... வந்தவள் தொடர்ந்தாள்.

''ஏமாந்தவர்களாகவும்...சிந்தனை மழுங்கிப்போனவர்களாகவும் நம்மைப்போன்றவர்கள் இருக்கும்வரை...இப்படிப்பட்ட நாடகங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.அந்த நந்தனை எரித்த நெருப்பு, தில்லை வாழ் அந்தணர்களின் பொறாமை நெருப்புத்தான் என்பது மறந்து விட்டதா உனக்கு ? கொஞ்சம் யோசித்துப்பார் சங்கிலி ! உண்மையிலேயே சுந்தரன்...அந்த இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டிருந்தால்...தொடர்ந்து, அவன் பரமனின் பாதையில் அல்லவா பயணப்பட்டிருக்க வேண்டும்?அதை விட்டுவிட்டு அவன் ஒரு பரவையைத் தேடிப் போனது எதற்கு ?இன்று...மீண்டும் உன்னோடு...இந்தச் சங்கிலியோடு தன்னைப் பிணைத்துக்கொள்ள அவன் ஏன் துடிக்க வேண்டும் ?''

தந்தை சொன்ன கதை நினைவுக்கு வந்தது, சங்கிலிக்கு. சுந்தரன் பூவுலகில் பிறப்பெடுத்தபோது, அவனை மணக்க அங்கிருந்தே இரண்டு பெண்களும் இறக்குமதியாகி விட்டார்களாம்; அவர்களில் தன் மகளும் ஒருத்தி என்பதில் அவருக்குத்தான் எத்தனை பெருமை..?

''என்ன...கைலாயக்கதை கண்ணுக்குள் ஓடுகிறதோ?''- மனதைப் படித்துவிட்டவள் போலக்கேட்டாள் சடங்கவி மகள்.

''இரு தார மணத்திற்குத் தேவலோக அங்கீகாரம் தருவதற்காக, மனிதர்களின் கற்பனைக்குதிரை கட்டறுந்து ஓடி...எப்படிப்பட்ட புனைவுகளையெல்லாம் உற்பத்தி செய்திருக்கிறது பார்த்தாயா சங்கிலி ?''

சத்திய தரிசனம், மின்வெட்டாய்ச் சித்தியான அந்தக் கணத்தில், தான் செல்ல வேண்டிய பாதை எதுவென்பது புலப்படத்தொடங்கியது போலச் சங்கிலிக்குத் தோன்றியது. மறுபுறத்திலோ... திரும்பிச் செல்வதற்கே வழியில்லாத ஒரு முட்டுச்சந்தில்,தான் நின்று கொண்டிருப்பதான பிரமை கலந்த அச்சம் அவளைப் பீதியுறவும் செய்தது.

''இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?''

''அதை நான் சொல்வது நியாயமில்லை. உன் முடிவை நீதான் எடுக்க வேண்டும் சங்கிலி ! இதே மாதிரியான ஒரு கட்டத்தில்.. நான் பரவையையும் சந்திக்கச் சென்றதுண்டு. ஆனால் அவள் சார்ந்திருந்த கணிகையர் குல தருமம் தன்னிச்சையான முடிவை எடுக்க முடியாமல் அவளைத் தடுத்து விட்டது. அவளை எனக்குப் போட்டியாகவோ..பகையாளியாகவோ என்றுமே நான் நினைத்ததில்லை. நினைத்துப்பார். இப்போதும் கூட...உனக்கும், அவளுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் என்ன விரோதம் இருக்கிறது ? பெண்ணுக்குப் பெண்ணைப் பகையாக்கி ஆண் உலகம் செய்கிற சூழ்ச்சிக்கு நீயும் இரையாகி விடாதே என்று எச்சரிப்பது மட்டுமே என் நோக்கம் ! மற்றபடி உன் விருப்பம்..''

கீழ்த்தளத்தில் இருந்த திருமண மண்டபத்தில் மங்கல இசை மெலிதாக ஒலிக்கத் தொடங்கியிருந்த அந்த வேளையில், தீர்மானமான ஒருமுடிவுக்கு வந்து விட்டிருந்த சங்கிலி...,சடங்கவி மகளைப் பார்த்தபடி உறுதியான குரலில் சொன்னாள்.

''நமக்காக முக்கியமான ஒரு கடமை காத்திருக்கிறது. நாம் இரண்டு பேரும் உடனடியாகச்சென்று...பரவையைத் தடுத்தாட்கொண்டாக வேண்டும். இந்தத் திருமணம் தடைப்பட்டாலும்...தொடர்ந்தாலும் சுந்தரன், அடுத்தாற்போல் தேடிச் செல்லப் போவது அவளைத்தானே?''

புலர் காலை விடியலுக்கு ஒரு நாழிகையே எஞ்சி இருந்தபோது, அடர்ந்து செறிந்த இருளைக் கிழித்தபடி....அவ்விருவரின் பயணமும் தொடங்கியிருந்தது.

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

பெரிய புராணம் எழுதியவருக்கு எதிர் வினையா ? தங்களின் கோணமும் உண்மையை அறியும் பொருட்டு தேவையானது தான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....