துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.3.09

செம்மூதாய்

(ஒரு முன் குறிப்பு:
திரு முருகபூபதி,தமிழின் குறிப்பிடத்தக்க நவீன நாடகக்காரர்களில் ஒருவர்.சென்ற நூற்றாண்டில் புகழ் பெற்று விளங்கிய நாடகக்கலைஞரான மதுரகவி பாஸ்கரதாஸின்பேரன்;எழுத்தாளர்கள் கோணங்கியும்,தமிழ்ச்செல்வனும் இவரது சகோதரர்கள்.தனக்கே உரித்தான பாணியின் தனித்துவத்தோடு நவீனநாடகங்கள் பலவற்றையும் அரங்கேற்றிவரும் முருகபூபதியின் நாடகத்தைக்காணும் வாய்ப்பு,புதுதில்லியில் நடைபெற்ற 'தேசிய நாடக விழா'வில் எனக்குக்கிட்டியது. எழுத்தாளர் கோணங்கி,பெண்ணிய அரங்கின் மங்கை,எழுத்தாளரும் குறும்பட ஆர்வலருமான முத்துகிருஷ்ணன்,நாடகப்பேராசிரியர் ரவீந்திரன்,வடக்குவாசல் ஆசிரியர் பென்னீஸ்வரன்,மதுரையைச்சேர்ந்த 'யதார்த்தா'ராஜன் ஆகியோரைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் இனிய அனுபவமும் அத்துடன் வாய்த்தது.
தொடர்ந்து செம்மூதாய் நாடகம் என்னுள் கிளர்த்திய அனுபவப்பகிர்வுகள் ......)

செம்மூதாய்
புது தில்லியிலுள்ள தேசீய நாடகப்பள்ளியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவரும் 'தேசீய நாடக விழா' வின் 11ஆம் ஆண்டு நிகழ்வுகளுக்காகத் தெரிவு செய்யப்பட்ட பன்மொழி நாடகங்கள்,சங்கீத நாடக அகாதமியின் பல்வேறு அரங்குகளில்,இவ்வாண்டு ஜனவரிமாதம், நாடக ஆர்வலர்களின் பார்வைக்கு முன் வைக்கப்பட்டன.அவற்றுள் தமிழிலிருந்து தேர்வான இரு நாடக ஆக்கங்களில் ஒன்றான முருகபூபதியின் 'செம்மூதாய் 'நாடகம்,12.01.09 மாலை ஆறு மணி அளவில் 'மேகதூத்' திறந்த வெளிக்கலையரங்கில் நிகழ்த்தப்பட்டது.

இந்நாடகத்தை எழுதி,இயக்கிய திரு முருகபூபதியும்,தமிழகத்தின் மணல்மாகுடி என்னும் சிற்றூரைச்சேர்ந்த அவரது குழுவினரும்-தங்கள் படைப்பில் முன்வைக்க எடுத்துக்கொண்ட கருப்பொருளாலும்,அதைப்பார்வையாளர்களிடம் கொண்டுசெல்லக் கையாண்ட வீரியமான உடல்மொழியாலும் காலத்தை நம் கண் முன்பு உறையச்செய்துவிட்டனர் என்றுதான் கூற வேண்டும்.

மனிதனின் இருப்பியல் களங்கள்,வாழ்வியல் சூழல்கள், அவனாலேயே சுரண்டலுக்கும், சூறையாடலுக்கும் ஆளாகிவிட்ட பிறகு, அவனது இருப்பே அர்த்தமற்றதாகவும், வறண்டதாகவும்,சிக்கல்கள் நிரம்பிய கேள்விக்குறியாகவும் மாறிப்போகும் யதார்த்தமான அவலமே இப்படைப்பின் உள்ளீடு.மண்வளம்,நீர்வளம்,பசுமைக்காடுகள் என, இயற்கை இயல்பாக அமைத்துக்கொடுத்த எல்லாவற்றையுமே அன்றாட அற்பத் தேவைகளுக்காகவும்,சுயநலத்தேடல்களுக்காகவும் பலியாக்கிக் காவுகொடுத்துவிடும் மனித இனம்,பிறகு அதற்காகக் கையற்றுத் தவிக்கிறது;கூடடையும் பறவைகளின் ஒலி கேட்கத்துடிக்கிறது;இளைப்பாற நிழல் கொடுக்கும் மரங்களைக் காணாமல், ஒப்பாரிவைத்து ஓலமிடுகிறது. இயற்கைச் சூழலை-இயல்பான மனித நேயத்தை- சக உயிரியாகப் பெண்ணைக்கருதும் சிந்தனையை...இன்னும் இவை போன்ற சகலத்தையும் துறந்துவிட்டு ,ஆதிக்கக்கருத்தியல்களை மட்டுமே வளர்த்துக்கொண்டு,அழிவின் ஆயுதமான போரை-வன்முறையைக்கையில் எடுத்துக்கொள்ளும் மனித வாழ்வு,தவிர்க்க முடியாத அவலங்களோடு-தப்பிக்க முடியாத ஒரு தண்டனையாக முடிந்து போவதென்பது,ஒருவகையில் காவிய நீதியாகவே அமைந்து விடுகிறது என்பதைப் பல தளங்களிலிருந்தும் இந் நாடகம் பூடகமாக உணர்த்திக்காட்டியது. தனித்துவமிழந்து வெற்று எண்களாகக் குறுகிப்போகும் மனிதர்கள், தங்கள் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் காட்சியே நாடகத்தின் உச்ச கட்டம்.

மழைக்காலங்களில் மட்டும் ஜீவித்துவிட்டுப்பிறகு காணாமல் போய்விடும் 'செம்மூதாய்' என்னும் அற்ப உயிரினம், இந்நாடகத்தில் பலவற்றையும் சுட்டும் அடிப்படையான ஒரு குறியீடாக அமைந்திருக்கிறது.

நமது மரபில் காலம்காலமாகப்பலவகைப்படிமங்களையும் உணர்த்துவதற்குப்பயன்பட்டு வரும் தாய்த்தொன்மம்,இப்படைப்பிலும் குறிப்பான பங்கு வகிக்கிறது.தமிழக நாட்டுப்புற வெளியில்-அங்கு கையாளப்படும் சடங்குகளில்-பெண்கள்,தெய்வங்களாக,தேவ தாசிகளாக, குறிசொல்லிகளாக,மருத்துவச்சிகளாக,தாய் வழிச்சமூகத்தின் தொல் எச்சங்களாக....என்று பலவகைகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். பெண் என்ற ஒரு மனித உயிர் இத்தனை வேடங்களையும் மாறி,மாறித்தரிப்பதும் கூட இவ்வகை நாடக ஆக்கத்திற்கு ஓர் உந்துதலை வழங்கியிருக்கிறது.பெண்ணின் உடலுக்குள், ஒரே நேரத்தில் பத்து ஆவிகள் கூடக்குடியேற முடியும் என்பதும்,அவற்றின் பத்து வேறுபாடான குரல்களைக் கண நேரத்திற்குள் அவளால் மாற்றி, மாற்றி ஒலிக்க முடியும் என்பதும் நாட்டாரியல் சார்ந்த ஒரு நம்பிக்கை. நடிப்பை நிகழ்த்தும் ஓர் உடலுக்குள்ளும் கூட அவ்வாறான சடங்குகளின் சாயல் எஞ்சியிருக்கிறது என்பதைக் கருதுகோளாகக்கொண்டு,ஒரு பாத்திரத்தின் உடல்மொழியிலிருந்து வேறுபட்ட பல பரிமாணங்களை வெளிப்படச்செய்யும் முனைப்பு, இந்நாடக நிகழ்வின் அடிநாதமாக அமைந்திருக்கிறது.ஒரே உடல் புழுவாகவும், பூச்சியாகவும், மீனாகவும், மனிதனாகவும், மனிதப்பறவையாகவும், மீமனிதனாகவும் பரிணாமம் கொள்ளும் அற்புதத்தை நாடகத்தில் பங்கேற்ற அத்தனை கலைஞர்களுமே தங்களது அபாரமான நடிப்புத்திறமையாலும்-குறிப்பாகக் கடுமையான பயிற்சியால் கைவரப்பெற்ற அசாத்தியமான தங்கள் உடல் மொழிகளாலும்-அங்க அசைவுகளாலும் அருமையாகச்சித்தரித்துக்காட்டினர்.
தொடர்ச்சியான கதைப்பின்னல், உரையாடல் போன்ற சம்பிரதாயமான நாடகப்போக்கு எதுவுமற்ற இப்படைப்பின் வெற்றிக்குத் திறந்த வெளி அரங்கின் சுதந்திரச்சூழலும்,மிகப்பொருத்தமான ஒளிஅமைப்புக்களும்,நாட்டுப்புற இசைக்கருவிகளின் துணையோடு கூடிய பின்னணி இசையும் பெரிதும் துணை புரிந்தன.

இன்றைய நவீன வீதி நாடக ஆக்கங்கள் பலவும் நாட்டுப்புறக்கலைமரபுகளிலிருந்து தங்கள் வடிவங்களை மீட்டெடுத்துக்கொண்டு வருவது உண்மைதான் என்றபோதும், முருகபூபதியின் நாடகங்கள்,நகர்மயமாதல் காரணமாக வழக்கொழிந்து வரும் பல சடங்குகளை-கிராமப்பகுதிகளிலே கூடக்காண்பதற்கு அரிதான-ஆதிவாசிகள்மட்டுமே கையாளும் சடங்குகளையும் கூட மீட்டெடுத்து,நாடகம் என்னும் நிகழ்கலை வடிவத்தின் வழியாக அவற்றுக்கு வேறு வகையில் புத்துயிர் அளிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன; பூபதியின் இதற்கு முந்தைய சில நாடகங்களும் கூட,நகர நாகரிகங்களின் கறை படியாத அடர் காடுகளையும் அங்குள்ள காட்டுவாசிகளின் சடங்குகளையும் பின்புலமாகக்கொண்டவைதான்.வரலாறும் ,இலக்கியமும் வாய் பேசாது மௌனிக்கும் இடங்களே பெரும்பாலும் முருகபூபதியின் கதைக்களங்கள்; நகர்சாரா மக்களின் வாழ்வியல் களங்களும், சடங்குகளுமே அவரது படைப்புக்களில் முதன்மை தந்து முன்னிறுத்தப்படுபவை. நவீன நாடக அரங்கியலில் புதுமொழி ஒன்று உருப்பெறுவதற்கு இவ்வகையான படைப்புக்கள் அடித்தளம் அமைத்து வருகின்றன என்று துணிந்து கூறமுடியும்.
நன்றி:இக்கட்டுரையை வெளியிட்ட 'புத்தகம் பேசுது'(மார்ச்'09)இதழுக்கு.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....