துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.3.09

குற்றமும் தண்டனையும்:கடிதங்கள்.என்னுரை:

'குற்றமும் தண்டனையும்' மொழியாக்கப்பணி முடிந்து நூல் வடிவில் அதைப் பார்த்தபோது ,மகிழ்ச்சியுடன் கூடவே வேறோர் உணர்வும் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. வாசிப்புப்பழக்கம் என்பதே படிப்படியாகக் குறைந்துவரும் இன்றைய கால கட்டத்தில்- இத்தனை பெரிய ஒரு புத்தகத்தை (அதிலும் ஒரு மொழியாக்கப்படைப்பைப்)பொறுமையாகப்படிக்கும் வாசகர்கள் எனக்கு வாய்ப்பார்களா என்ற மிகப்பெரிய சந்தேகம்தான் அது. என் உழைப்பு உரிய வகையில் போய்ச்சேராதோ என்ற ஆயாசமும், வெறுமையும் என்னை ஆட்கொள்ளத்தொடங்கியிருந்தன.

படைப்பாளியும்
தேர்ந்த விமரிசகருமான திரு சி. மோகன் அவர்களிடமிருந்து செல்பேசி வழி அனுப்பப்பட்ட முதல் பாராட்டுச்செய்தி...என்னைச்சற்றே ஆறுதல் கொள்ள வைத்து நம்பிக்கை ஊட்டியது. தொடர்ந்து திரு ஜெயமோகன், திரு ராமகிருஷ்ணன் முதலிய உலக இலக்கிய வாசிப்புக் கொண்ட படைப்பாளிகள், குறிப்பிட்ட அந்த மொழியாக்கம் பற்றிய கருத்துக்களைத் தங்கள் வலையில் பதிவு செய்து என்னை மேலும் சிறிது நம்பிக்கை கொள்ளச் செய்தனர். எழுத்தாளர்கள், திரு.கு.சின்னப்ப பாரதி, திரு கோணங்கி ஆகியோரும் தனிப்பட்ட முறையில் எனக்குக்கடிதம் எழுதிப் பாராட்டுத் தெரிவித்தனர்.

இவற்றோடு....வாசக வட்டத்திலிருந்து வந்துள்ள கடிதங்களில் சில, அந்த வாசகர்களின் ஆழ்ந்த வாசிப்பையும்,தீவிரமான உள்வாங்கலையும் வெளிப்படுத்தி என்னைப் பிரமிக்க வைக்கின்றன. 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்பதைப் போல அந்த நூலால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்டதற்கு முழுமுதற்காரணம் தஸ்தாயெவ்ஸ்கி என்ற மாமேதையின் வல்லமை மட்டுமே என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்; ஆனாலும் கூட அந்த மேதையின் எழுத்து இப்படிப்பட்ட தரமான தமிழ் வாசகர்களைச் சென்றடைய நான் ஒரு கருவியாக இருந்திருக்கிறேன் என்ற நிறைவு,பிற பரிசுகளையும்,பாராட்டுக்களையும் விட எனக்கு உகப்பானதாக இருக்கிறது.அருமையான அந்த வாசக அவதானிப்புக்களையும், எழுத்தாளர்களின் கடிதங்களையும் வலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
முனைவர் திருமதி ஜே.பாத்திமா,
மதுரை, 18.10.08
(பாத்திமா அவர்கள்,மதுரை பாத்திமாக் கல்லூரித் தமிழ்த்துறையில் முப்பது ஆண்டுக்காலத்திற்கும் மேலாக-என்னுடன் ஒருங்கே பணியாற்றித் ( துறைத் தலைவராகவும்) தற்பொழுது பணி நிறைவு பெற்றிருப்பவர்.என் உற்ற தோழி.தீராத இலக்கிய ஆர்வம் கொண்ட மிகச் சிறந்த வாசகி; தேர்ந்த- நுணுக்கமான திறனாய்வுப்பார்வை கொண்டிருப்பவர்.
லா.ச.ராமாமிருதத்தின் சிறுகதைகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் 'லா.ச.ரா.கதைகளில் கருவும், உருவும்' என அதனை நூல் வடிவிலும் வெளியிட்டுள்ளார்.
சிறுகதைப் படைப்பாளியுமான பாத்திமாவின் சில கதைகள்,குறிப்பிட்டுச் சொல்லத்தக்க தனித்துவம் வாய்ந்தவை.
வெளி நாட்டில் தத்துக்கொடுக்கப்பட்ட அனாதைச் சிறுமி ஒருத்தி,சற்றுப்பெரியவளாக வளர்ச்சி பெற்ற பின், இந்தியாவில் தன் வேர்களைத் தேடி மேற்கொள்ளும் பயணத்தைப் பற்றிய ''ஜூலியின் வேர்களைத் தேடி...''என்ற அவரது மொழியாக்க நூல் சிறப்பான ஒரு படைப்பு.
தன் பணி நெருக்குதல்களுக்கு இடையில் மிகுந்த ஆர்வத்தோடு நேரம் ஒதுக்கி என் மொழியாக்கம் பற்றிய விரிவான ஒரு திறனாய்வுக்கடிதத்தை(எந்த மதிப்புரைக்காகவோ, என் வேண்டுகோளுக்காகவோ அல்லாமல் தன் சுய உந்துதலால்மட்டுமே) எழுதியிருக்கும் அவர்களின் ஆர்வத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.
இக் கடிதத்தைப் படிப்பவர்கள், என் மீது கொண்ட நட்பின் வெளிப்பாட்டை விடவும், தஸ்தாயெவ்ஸ்கி என்ற மாமேதையின் பால், இப்படைப்பால் விளைந்திருக்கும் பிரமிப்பையே அவர்கள் மிகுதியாக வெளிப்படுத்தியிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
வெற்றுப் புகழ்ச்சிகளை விடவும் எனக்கு இதுவே உகப்பானதாக இருக்கிறது.)

தொடர்ந்து...கடிதம்.

அன்புள்ள சுசீ,
இரு பகல்களும், ஒரு இரவுமாகக் 'குற்றமும் தண்டனையும்' என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது. நூலின் பிரம்மாண்டம்தான்முதலில் கருத்தை ஈர்க்கிறது; ஆனால், உள் நுழைந்து ஓரிரு பக்கங்களைப்படித்த உடனேயே இப்படைப்பு
சாதாரணமானதல்ல என்பது புரியத் தொடங்குகிறது.

ஒரு மனநிலைச்சித்திரிப்பு ,உடனேயே அதற்கு எதிர்நிலையான மனநிலைச் சித்திரிப்பு, எல்லையற்ற விவாதங்கள், ஆகிய எல்லாவற்றயும் குற்றத்தோடு (கொலைச்செயல் நிகழ்வோடு) சம்பந்தப்படுத்தி விடுவது...,அதன் வழி கதையின் மைய இழை தொடக்கம் முதல் பாதை விலகாமல் பார்த்துக் கொள்வது...,கூடவே உளவியல் விளக்கங்கள் என்று அறாத முப்புரி நூல் போலக்கதைப் பின்னல் செல்கிறது.

நிகழ்ச்சிகளின் பொருத்தமான அடுக்காக முழுப்புதினமும் இருந்தாலும், உள் அடுக்குகள், மனநிலைச் சித்திரிப்புக்களாகவோ,மனநிலை விளக்கங்களாகவோ உள்ளன.

'குற்றமும் தண்டனையும்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப் புதினம், குற்றத்தை எளிதாகச் செய்யத் தூண்டும் மன நிலைக்கும், அதைத் தடுக்க உந்தும் உள்ளுணர்வுக்கும், குற்றம் செய்யப்பட்ட பின் அதை ஒத்துக் கொள்ள எழும் அவாவுக்கும்,குற்றத்தை மறைக்க முயலும் முயற்சிக்குமிடையேயான தொடர் போராட்டத்தை அற்புதமாய்ச் சித்திரிக்கிறது.தராசு முள்ளின் வேகமான இரு பக்க அசைவு போல் ,ஒரு பகுதி தரும் விரிவான மனநிலைச் சித்திரிப்பு அதற்கடுத்த பகுதியிலேயே தீவிரமாய் மறுக்கவும், மறுதலிக்கவும் பட்டு அடுத்து என்ன என்ற கேள்வியால் நம் ஆவலைத் தூண்டுகிறது; பக்கங்களைப் புரட்டி முடிவை அறிந்து கொண்டாலும்கூட,இந்த முடிவுக்கு ,இந்த மனிதன் எப்படி வந்தான் என்ற கேள்வி இராத் தூக்கத்தைக் கலைத்து மீண்டும் பொறுமையாய்க் கதையைத் தொடரச் செய்கிறது.

இரட்டைக் கொலைகளச் செய்யும் ரஸ்கோல்நிகோவ் நம்மைப்போன்ற சாதாரண மனிதன்
தான்; எந்த பயங்கரவாத இயக்கத்தையும் சார்ந்தவனல்ல என்பது நம்மைப் பாதிக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அன்றாடம் சந்திக்கும் படிப்பறிவும், சிந்தனையும் உள்ள ஒரு மனிதன் ,அடகுக்கடை நடத்தி சாமானியரைக் கொள்ளையடிக்கும் ஒரு வயதான பெண் மேல் கொள்ளும் வெறுப்பால்,அவளைக் கொலை செய்வதை நியாயமானதாகவும், நீதியானதாகவும் எண்ணிக் கொள்கிறான்.ஒரு பேனை நசுக்குவது போல அவளை நசுக்கி விட்டதாக அவன் நினைத்துக் கொள்கிறான். ஆனால்..செயல் முடிந்த சில கணங்களிலேயே உண்மையை வெளிப்படுத்தும் உந்துதல் அவனுக்கு ஏற்பட்டு விடுகிறது.அதே நேரத்தில் அதன் விளைவுகளை உணர்த்தி அவன் அறிவு அவனை எச்சரிக்கிறது.
அறிவுக்கும், ஆன்மாவுக்கும்(ஆழ்மனதிற்கும்)இடையேயான போராட்டமாக நாவல் விரிகிறது.

அடிப்படையில் அவன் நல்லவனாக இருப்பதால்...சமூகத்தால் குற்றவாளியாய்த் தீர்க்கப்பட்டவளும், பொருள் வளமோ, உடல் வலிமையோ.., சமூகப் பாதுகாப்போ இல்லாதவளும், வயதில் சிறியவளுமான சோனியா,தன் உள்ளத்தின் உண்மை ஒளியால் ,பலர் அறிய அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் என்று திட்டமாக அறிவுறுத்தும்போது ,அவன் அதை ஏற்றுக் கொள்கிறான். அவள் வார்த்தைகள் அவனை ஆச்சரியப்படுத்துகின்றன; அந்த வார்த்தைகளை விடவும்- கொலைக்குற்றவாளிகள் கொண்டு செல்லப்படும் சைபீரியாவுக்கு அவனோடு வர அவளும் தயார் என்பதை வெளிப்படுத்தும் அவளுடைய அன்பும், கடினமான போராட்டத்தை இத்தனை காலம் தாங்கிக் கொண்டிருக்கிறானே என்று அவனுக்காக உருகும் அவளது மன உருக்கமும்தான் உண்மையின் பாகையில் அவன் காலடி எடுத்து வைக்கக் காரணங்களாய் உள்ளன.அவள் அன்பால் மீண்டும் ஒரு வாழ்வு தனக்குண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளத்தான் விவிலியத்திலிருந்து 'லாசரஸ் உயிர்த்தெழுதல்' பகுதியை அவளை வாசிக்கச் சொல்கிறான்.

ஆனாலும்...உண்மையை ஒத்துக்கொண்டதோடு எல்லாம் சரியாய்ப் போய் விடவில்லை.
''ரஸ்கோல்நிகோவ், தன் வாக்குமூலத்தை மீண்டும் ஒரு முறை கூறத் தொடங்கினான்'' என்ற மையக்கதையின் இறுதி வரி, கொலை பற்றிய ஒரு நாவலுக்குப் போதுமானதாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையை ,அதன் அனைத்துப் பரிமாணங்களிலும் ஆழ்ந்து நோக்க முடிந்த தஸ்தாயெவ்ஸ்கியால் அதைத் தன் புதினத்தின் இறுதியாகக் கொள்ள முடியவில்லை. அதனால் 'பின் கதை' என்று தலைப்பிட்டு இரு அத்தியாயங்கள் எழுதுகிறார்அந்தப் பின்கதையும் மிகத் தேவையாகவே உள்ளது.அவன் என்ன ஆனான் என்று ஆவலோடு தொடர்ந்து படிக்கிறோம். கதை என்ற உணர்வு இல்லாமலே அதைப்படித்தேன்..

தான் செய்த கொலை நியாயமானது என்றும், ஒரு பலவீனமான கணத்திலேயே தான் உண்மையை ஒத்துக்கொண்டு தண் டனையை வரவழைத்துக் கொண்டதாகவும் கருதி, அந்த எண்ணத்தால் அலைக்கழிக்கப்பட்டதும், அவன் தண்டனைக்கு உட்படக் காரணாமாய் இருந்த சோனியாவை அவன் கடுமையாகப் புறக்கணித்து ,அவளுடனான சில கண சந்திப்புக்களைப் புறகணிப்பின் கணங்களாய் மாற்றி அவளுக்கு வேதனை தந்ததும் அப்பின் கதையில் எந்த மறைவும் இன்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன்னைப் பற்றியே அவன் சிந்தனை சுழன்று கொண்டிருந்தவரை, அவனுக்கு விடுதலை இல்லை.

தன் சக கைதிகள் சிறைப் பறவகளாய் இருந்தாலும், வாழ்க்கையை அவர்கள் நேசிப்பதை உணர்ந்தபோதும், கண நேரம் வந்து போகும் சோனியாவின்பால் அவர்கள் வைத்திருந்த மதிப்புக்கான காரணம் என்ன என்று எண்ணிப் பார்த்தபோதும், தன் மீதும் தன் நம்பிக்கைகளின் மீதும் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்ற அந்தராத்மாவின் மென்மையான உணர்த்துதலை ஏற்றுக்கொள்கிறான் அவன்.

காலமும், சோனியாவின் அன்பும் சிந்தனை வலைகளிலிருந்து விடுபட்டு அன்புக்கு முன் அவனை மண்டியிடச் செய்கின்றன. இங்கும்கூட ''இது ஒரு புதிய கதையின் தொடக்கம் மட்டும்தான்.....கற்பனை உலகிலிருந்து கனவில் கூடத் தான் கண்டறியாத யதார்த்த உலகத்திற்குள் அவன் எவ்வாறு அடியெடுத்து வைத்தான் என்பதும் ஒரு புதுக் கதைக்கான விஷயங்கள்'' என்றுதான் தஸ்தாயெவ்ஸ்கி குறிப்பிடுகிறார்.

புதினம் என்பது...ஒரு சிக்கலின் தொடக்கமும், வளர்ச்சியும், முடிவும் மட்டுமல்ல; அது...வாழ்க்கையின் விரிவு என்பதான புரிதலை இப்புதின வாசிப்பு நமக்குத் தருகிறது.

தமிழ் வாசகர்களை ஆச்சரியப்பட வைக்கும், திரும்பப் படித்துச் சரிபார்க்க வைக்கும் பல விஷயங்கள் ,இப்புதினத்தில் உள்ளன.

கொலையை ஆராய வந்த போர்பிரி, தன் கூர்த்த மதியால் கொலையாளி யார் என்பதை அறிந்த பிறகும் ,தான் அறிந்த செய்திகள் எவற்றையும் காவல் துறையில் வெளிப்படுத்தாமல்- ரஸ்கோல்நிகோவ், தானாகவே குற்றத்தை ஒப்புக்கொள்ளவும், அதன் மூலம் அவன் தண்டனைக்காலம் குறையவும் வாய்ப்பளிக்கிறார். குற்றவாளி, தன் கையிலிருந்து தப்பித் தற்கொலை செய்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அறிந்திருந்தும், துப்பறியும் நிபுணனாகத் தன்னைக் காட்டிக் கொள்வதை விட, மனிதனாய்ச் செயல்படுவதையே தேர்ந்து கொள்கிறார்.

பெண் பித்தனாய் அறியப்பட்ட ஸ்விட்ரிகைலோவ் ,தன் மரணத்தின் முன் சோனியாவை விபச்சாரத் தொழிலிலிருந்து மீட்கக் கணிசமான தொகையைத் தருகிறார்.

கனவானாக அறியப்பட்டவரும், மதிக்கப்பட்டவருமான லூசின், சோனியாவைத் திருடி என்று எண்பிக்க முயன்று கேவலமாய்த் தோற்றுப் போன பின்னும், அதைக்குறித்த கவலையின்றிஇருக்கிறார்.

தன் வாழ்க்கையையும், மனைவி, மக்கள் வாழ்க்கையையும் குடிப்பழக்கத்தால் சீரழித்த மர்மெலாதோவை அவன் மனைவி காதரீனா நம்பிக்கையோடு நேசிக்கிறாள்.

தன் மகனின் கசப்பான நிகழ் காலத்தை உள்ளுணர்வில் அறிந்திருந்தாலும், அவனைக் குறித்த சிறப்புக்களை மட்டுமெ பேசும் மாற்றுத் தேடல் மூலம், தன் உயிரைத் தாங்கிக்கொண்டிருக்கிறாள், ரஸ்கோல்நிகோவின் தாய்; ஒரு எல்லைக்கு மேல் அதைத் தொடர முடியாமல் மரித்துப் போகிறாள்.

துனியா, சோனியா இருவரும்- அதிலும் சோனியா கொஞ்சம் அதிகமாகவே- மனதில் நிலைக்கின்றனர்.சோனியாவின் மீது திருட்டுப் பழி சுமத்த முயலும் பீட்டர் பெத்ரோவிசை விட நிச்சயம் ஸ்விட்ரிகைலோவ் நல்லவன்
.
நீங்கள் முன்னுரையில்குறிப்பிட்டது போல மிக நல்லவர்கள், மிகக் கெட்டவர்கள், குடிகாரர்கள், டிப்ளமேட்டுகள் என்று பல நிலையினரையும் இந்நாவல் வெற்றிகரமாகச் சித்திரிக்கிறது.

தொடக்கத்தில் ரஷ்யாவின் குளிர் மட்டுமே இது நம் நாட்டு நாவல் இல்லை என்பதை நினைவுபடுத்தியது; மற்றபடி, தஸ்தாயெவ்ஸ்கி இதைத் தமிழில் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார் என்றே தோன்றியது. படிக்கும் வாசகர்களைப் பாதிக்கும் அவரது சிந்தனை, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக அவரோடு ஊடாடிய உங்களை,,,உங்கள் மொழியை,,,சிந்தனையை எவ்வளவு பாதித்திருக்கும் என்று புரிகிறது.''தமிழில் தன்னைத் தானே அவர் எழுதிக் கொண்டு போவதான மன மயக்கம்..''என்று நீங்கள் எழுதியிருப்பது என்னவென்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த அடர்த்தியான சிந்தனையை உள்ளே வைத்துக்கொண்டு, அவற்றுக்கான மொழி மாற்றத்தை யோசித்துக்கொண்டு, அன்றாடக் கடமைகளில் எப்படி இயங்கினீர்கள்? அல்லது....அன்றாட வாழ்வின் அர்த்தமற்ற பல அபத்தங்களைத் தள்ளியிருந்து பார்த்து, சமநிலை மாறாதிருக்க ,இந்த எழுத்துத் தவம்தான் உங்களுக்கு உதவியதோ?
பகீரதப் பிரயத்தனம் செய்துள்ளீர்கள் என்பதைத் தவிர உங்களை எப்படிப் பாராட்டுவது என்று புரியவில்லை.

உங்கள் மொழிபெயர்ப்பு, தமிழுக்கு ஒரு வரவு என்பது அறியப்படக் கொஞ்ச காலம் ஆகலாம்.ஆனால் அதற்கு முன்னதாகவே-பதற்றத்தில் செய்யும் செயலின் விளைவுகளைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் சுட்டிக் காட்டுவது மட்டுமன்றிக் கல்லில் எழுத்தாய், உள்மனதில் பதிய வைக்கும் அருமையான காரியம் இந்த நூலால் சாத்தியமாகி உள்ளது.

உங்களுக்கும், தஸ்தாயெவ்ஸ்கிக்கும், பாரதி புத்தக நிலையத்தாருக்கும் என் உளமார்ந்த நன்றியும், வாழ்த்தும்!

நூலை வாங்க..
தொடர்பு முகவரி;
திரு,துரைப்பாண்டியன்,
பாரதி புத்தக நிலையம்,
D- 28,கார்ப்பரேஷன் வணிக வளாகம்,
பெரியார் பேருந்து நிலையம் எதிரில்,
மதுரை- 625 001
தமிழ் நாடு
bharathibooks@yahoo.co.in

சென்னையில் கிடைக்குமிடங்கள்:
எனி இந்தியன் பதிப்பகம்,
ஹிக்கின்பாதம்ஸ்

இணைப்புக்கள்:
திரு ஜெயமோகன்
http://jeyamohan.in/?p=559
http://jeyamohan.in/?p=1780
திரு எஸ்.ராமகிருஷ்ணன்
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=142&page=3

2 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

நான் தங்களது மொழிபெயர்ப்பை சற்று முன் தான் படித்து முடித்திருக்கிறேன். எவ்வளவோ படித்திருந்தாலும் இந் நாவலில் நிறைய விடயங்களினை புரிந்து கொள்ள முடிந்துள்ளது. நீங்கள் மொழிபெயர்ப்பு செய்த விதம் மிகவும் அருமை. ஒவ்வொரு வசனத்தையும் மிகவும் கவனத்துடன் படித்தேன். உண்மையில் நான் மறந்து போன ஏராளமான தமிழ்ச் சொற்களை திரும்பவும் நினைவூட்டியுள்ளீர்கள். நான் பாரதி பதிப்பகத்துக்கு நன்றி சொல்ல நினைத்திருந்தேன். அவர்களுக்கும் இங்கு நன்றி சொல்ல வேண்டும். உங்களது பணி தொடந்தும் தமிழ்ச் சமுகத்துக்கு தேவைப்படுகின்றது என்பதை என்னுடன் சேர்ந்தவர்கள்(அறை வாசிகள்) சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ச.தமிழ்ச்செல்வன் சொன்னது…

வணக்கம் சுசிலா மேடம்,உங்கள் வலைப்பதிவுகளில் சிலவற்றை மட்டும் இன்று படித்தேன்.ஏற்கனவே தங்கள் மொழிபெயர்ப்பான தாஸ்தாவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் படித்து தோழர்களிடமெல்லாம் பேசிக்கொண்டிருந்தேன்.எவ்வளவு நுட்பமும் பிரம்மாண்டமுமான வேலை அது.வாழ்த்துக்கள்.மின்சாரப்பூ பற்றிய பதிவு அருமை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....