16.3.09
கிருத்திகா- சில நினைவுகள்
தனது 93ஆம் வயதில் பெங்களூரில் காலமான(13.02.09)கிருத்திகா அவர்கள்,தமிழ் நவீன இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாளி.ஹெப்சிபா ஜேசுதாசனைப்போலவே இவரும் வெகுஜனத்தளத்தில் பரவலாக அறிமுகமாகாத ஒரு பெண் எழுத்தாளராகவே இருந்து வந்திருக்கிறார்.
35 வயதில் எழுதத்துவங்கியபோது,ஆங்கிலம்,பிரெஞ்சு,சமஸ்கிருதம்,தமிழ் எனப்பலமொழிகளிலும் தேர்ந்த ஞானம் அவருக்கு உருவாகிவிட்டிருந்தது.
மகாகவி பாரதியையே தனது ஆதர்சமாக வரித்துக்கொண்ட இவரின்'புகை நடுவினில்','நேற்றிருந்தோம்..','புதிய கோணங்கி' ஆகிய நாவல் தலைப்புக்கள் பாரதியிடம் இவர் கொண்டிருந்த பிடிப்பை வெளிப்படுத்தக்கூடியவை.
கிருத்திகாவின் படைப்புக்கள், அவரது சமகாலப்பெண் எழுத்துக்களிலிருந்து மாறுபட்டவை. பெண் குறித்த தனிப்பட்ட பிரச்சினைகளைக்காட்டிலும்,நாடு, சமூகம் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளித்தவை.விடுதலை இயக்கப்போராளியாகவும் செயல்பட்ட அவர்,சரோஜினி நாயுடு,கஸ்தூரிபாய்,மணிபென் படேல் ஆகியோரின் தாக்கத்தை மிகுதியாகப்பெற்றிருந்ததனால் ,அவர்கள் கனவு கண்டு ,உருவாக்க விரும்பிய இந்திய சமூகத்தைத்தன் கதைகூறல் வழியே முன்வைப்பதிலேயே பெரிதும் நாட்டம் கொண்டிருந்தார்.
ஒரு கற்பனைச்சமுதாயத்தை- நடப்பில் இல்லாத புதியதொரு கிராமத்தை அல்லது ஊரைப்பற்றிய புனைவுகளின் வழியே நடப்பியல் இந்திய சமூகத்தின் அவலங்களை அங்கதப்போக்கில் சித்தரிப்பதே அவரது தனிப்பட்ட பாணி.'தர்மக்ஷேத்ரே' ,'வாசவேஸ்வரம்' ஆகிய அவரது நாவல்கள் அந்தப்போக்கில் அமைந்தவையே.21ஆம் நூற்றாண்டு பற்றிய கற்பனைச்சமூக அமைப்பைத் தனது புனைவின் வழி உருவாக்கிய 'புதிய கோணங்கி'யில் அவர் சித்தரித்திருக்கிறார்.
ஐ.சி.எஸ் பட்டம் பெற்ற வாழ்க்கைத்துணைவர் வாய்க்கப்பெற்றிருந்ததால் மேல்தட்டுமக்களின் வாழ்நிலை குறித்த பதிவுகளையும் 'புகை நடுவினில்' போன்ற படைப்புக்களில் அவரால் வெளியிட முடிந்திருக்கிறது.
'விதியின் வினை','கண்ணகி'போன்ற அவரது நாடகங்கள்,சாவித்திரி, கண்ணகி ஆகியோரின் 'பதிவிரதா தரும'த்தைப்பெண்ணிய நோக்கிலான மீள்பார்வைக்கு உட்படுத்தியுள்ளதை எழுத்தாளர் அம்பை(The Face Behind The Mask) தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிருத்திகாவின் பல நாவல்களும் வாசகர்வட்ட நாவல்களாக தில்லியில் பதிப்பித்து வெளியிடப்பட்டவை.அவை இன்றைய தலைமுறையை எட்டுவதற்கான முயற்சிகள்- -அவரது நூல்கள் மறுபதிப்பு செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமலிருப்பதைத்தமிழின் துர்ப்பாக்கியம் என்றே சொல்லத்தோன்றுகிறது.
நிறைவு பெறாமல் எஞ்சியிருக்கும் அந்தப்பணியைச்செய்து முடிப்பதே,நிறைவாழ்வு வாழ்ந்துமுடிந்திருக்கும் கிருத்திகா அவர்களுக்குச்செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமைய முடியும்.
(நன்றி;அஞ்சலியை வெளியிட்ட வடக்குவாசல் இதழுக்கு-மார்ச்09)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
2 கருத்துகள் :
வணக்கம் அம்மா நல்ல பதிவு.படைப்பாளர்களுடையப் படைப்புகளை அழியாமல் காப்பது நம் கடன்.இதனை ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்
இவர் எழுத்தையும் தேடிப் படிக்க வேண்டும். அறிமுகத்துக்கு நன்றி.
கருத்துரையிடுக