துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.2.13

கடல்-சாத்தானும் தேவதையும்

கடல்-நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெளிவந்திருக்கும் மணிரத்னத்தின் படம். இடைவெளி கூடிப்போனதாலும் ஜெயமோகனின் கதை வசனப்பங்களிப்பாலும் எதிர்பார்ப்பைக்கூட்டிய படம்.

வணிகப்படத்துக்கே உரிய வழக்கமான தன் பாணி மசாலாக்களை -பிரம்மாண்டமான காட்சி அமைப்பு,சம்பந்தமே இல்லாத உடை அலங்காரத்துடன் கடல்வெளி மக்கள் ஆடும் குழு நடனம்- 

என்று மணிரத்னம் ஆங்காங்கே தூவியிருந்தாலும் கூட கதையின் அடிநாதச்செய்தியின் அற்புதத்தாலும்,பின் களத்துக்கு ஏற்றபடி அமையும் ஜெயமோகனின் மிகப்பொருத்தமான உரையாடல்களாலும்,அர்விந்த்சாமி,அர்ஜுனின் பண்பட்ட நடிப்பாலும் கடல் தன் கம்பீரம் குன்றாமல் முழக்கம் செய்யத் தவறவில்லை என்றே சொல்லலாம்.

அர்விந்த்சாமியின் மிகையற்ற நடிப்பும் சற்றும் அலட்டிக்கொள்ளாத அர்ஜுனின் லாவகமும் படத்தின் பலம்.நாயக நாயகியரை விடவும் படத்தை நிமிர்த்துவதும்,கட்டிப்போடுவதும் இவ்விருவரின் நடிப்பும் பாத்திர முரண்களை மிகச்சரியாக உள் வாங்கி வெளிப்படுத்தியிருக்கும் அனுபவத் தெளிவுமே.

உண்மையான கிறித்தவ இறையியல் இந்தப்படத்தைப்போல வேறெதிலும் சரியாக வெளிப்பட்டதில்லை. சாத்தானாக இருந்து மனித நிலைக்குத் திரும்பியவன் ஒருபோதும் -அவன் நினைத்தாலும் கூட மீண்டும் சாத்தான் நிலைக்குத் திரும்ப முடியாது என்ற செய்தி படத்தில் தாமஸின் பாத்திரத்தில் [கௌதம்] மட்டுமல்லாமல் அர்ஜுனின் பாத்திர அமைப்பின் வழியாகவும் மிகத் தெளிவாக அதன் அழகியலோடு-கதைப்போக்கோடு இணைந்தபடி கிடைக்கிறது.ஜெயமோகனின் பங்களிப்பை அதன் வழி உணர முடிகிறது.

பியாட்ரிஸின் பாத்திரம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இடம் பெற்றிந்தால்- அவர் பங்கு பெறும் காட்சிகள் இன்னும் சற்று அதிகம் இடம் பெற்றிருந்தால் கௌதமின் மன மாற்றத்துக்குப் போதிய அழுத்தம் கிடைத்திருக்கலாம்.குழந்தைத்தனமான பாத்திரத்தைக்குழந்தையாகவே மாறிச் செய்திருக்கும் துளசி பாராட்டப்பட வேண்டியவர்.

கௌதமும் முதல் படம் என்ற உணர்வு தோன்றாதபடி தன் பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

ராஜீவ் மேனனின் காமரா கடலின் பல்வேறு முகங்களை,பரிமாணங்களை,அழகுகளை,ஆவேசத்தைக் காட்சிகளுக்குத் தகுந்தபடி கொண்டு வந்து கொட்டியிருக்கிறது.

ரஹ்மானின் இசையில் ’’நெஞ்சுக்குள்ளே’’ இனிமேல் பெரும் கவனம் பெறக்கூடும்.படத்தின் இறுதிக்காட்சியில் ஒலிக்கும் பாடல்வரிகள் ரசிக்கக்கூடியதாக இருந்தபோதும் படம் முடிந்த பிறகு நீண்டு கொண்டு போகும் காட்சிகள் அலுப்பூட்டுவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

கன்னத்தில் முத்தமிட்டாலுடன் தொலைந்து போயிருந்த மணிரத்னத்தைக் கடல் சற்றே வெளிக்கொணர்ந்திருந்தாலும் இந்தப்படத்தைப் பொறுத்த வரையில் ஒட்டுமொத்தமாக மனதில் இடம் பிடிப்பது நேர்மையான கிறித்தவ போதகராக வரும் அர்விந்த்சாமியே ...






3 கருத்துகள் :

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

சாத்தானாக இருந்து மனித நிலைக்குத் திரும்பியவன் ஒருபோதும் -அவன் நினைத்தாலும் கூட மீண்டும் சாத்தான் நிலைக்குத் திரும்ப முடியாது என்ற செய்தி படத்தில் தாமஸின் பாத்திரத்தில் [கௌதம்] மட்டுமல்லாமல் அர்ஜுனின் பாத்திர அமைப்பின் வழியாகவும் மிகத் தெளிவாக அதன் அழகியலோடு-கதைப்போக்கோடு இணைந்தபடி கிடைக்கிறது// இப்படி ஒன்று இருக்குன்னு இப்பத்தான் புரியுது ..

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நம்ம தில்லி ஓவியர் முத்துசாமி கூட ஒரு காட்சியில் சிறிது நேரம் வந்து போகிறார்.

பெயரில்லா சொன்னது…

படத்தில் அர்ஜுன் அவர்கள் சாத்தான் என்று அடிக்கடி சொல்வது இன்னும் யதார்த்தமாக, எளிமையாக,ஜீவனோடு கையாள பட்டிருக்க வேண்டும்.பிரசார தொனி தெரிகிறது மேடம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....