துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.2.13

தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-6

சுஜாதாவின் நிபந்தனை

நவீன தமிழின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவர் சுஜாதா. தமிழ் உரைநடையில் ஒரு புதிய -வேகமான பாணி எழுத்து நடை உருப்பெறுவதற்கான வாயிலைத் திறந்து வைத்தவர். சிறுகதைகள்,சமூக/மற்றும் துப்பறியும் நாவல்கள்,வரலாற்று,விஞ்ஞானப்புனைவுகள் எனப் பல வகையான படைப்புக்களையும் உருவாக்கியிருக்கும்  சுஜாதா ,நாடகங்கள்,மற்றும் திரைக்கதை உருவாக்கலிலும் விற்பன்னர். தனக்கு வசப்பட்ட எழுத்துக் கலையைப் பிறருக்கு எளிதாக ஆக்கித் தருவதிலும் ஆர்வம் காட்டியவர் .கணையாழி போன்ற சிற்றிதழ்களிலும் தன் முத்திரையைப் பதித்திருந்தாலும்  எல்லா வகையான எழுத்துக்களையும் எழுதிப்பார்க்க வேண்டும் என்று எண்ணிய அளவுக்குத் தீவிர இலக்கியம் மட்டுமே படைக்க வேண்டும் என்பதில் சுஜாதா ஏனோ முனைப்புக் காட்டவில்லை; அவ்வாறான முனைப்பு மட்டும் அவருக்கு நேர்ந்திருந்தால்....வணிக இதழ்களாலும்,வணிகப்படங்களாலும் அவர் கபளீகரம் செய்யப்படாமல் இருந்திருந்தால் சாகித்திய விருது போன்ற பல இலக்கிய விருதுகளைப்பெறுவது அவருக்குக் கடினமாக இருந்திருக்காது. இருந்தாலும் இன்றும் கூட சுஜாதாவின் எழுத்துக்கள் புதுமையாகவும்,இளமையாகவும் இருப்பதும்- தேர்ந்த பல இலக்கிய விமரிசகர்களும் கூட சுஜாதாவின் பல சிறுகதைகளைத் தரமானவையாக இனம் காட்டுவதும் [நகரம்,நிபந்தனை,ஒரு லட்சம் புத்தகங்கள்] தமிழ் எழுத்தில் சுஜாதாவுக்கென்று ஓரிடம் என்றும் நிலையாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருப்பவை.


சுஜாதாவின் நினைவு நாள் 27 ஃபெப்ரவரி
இனி நிபந்தனை பற்றி...

திருவனந்தபுரத்துக்குச் சென்றிருக்கும் சோமசுந்தரம்-ஈஸ்வரி தம்பதியர் கோயிலருகே பிச்சையெடுக்கும் நடுத்தர வயது அந்தணப்பெண் ஒருத்தியைப் பார்க்கிறார்கள்.அவளது நிலையைக் கண்டு இரக்கம் கொள்ளும் ஈஸ்வரி அவளைத் தங்களுடன் அழைத்துச் சென்று வீட்டு வேலைக்கு அமர்த்திக்கொள்ள விரும்புகிறாள்.தடுத்துப்பேசும் கணவனிடம் நியாயம் பேசித் தர்க்கம் செய்கிறாள்.பிற்பகலில் தன் மகளையும் அழைத்துவந்து அவர்களுடன் சேர்ந்து கொள்வதாகச்சொல்லி விட்டு விடை பெற்றுச் செல்கிறாள் அந்தப்பெண்.

இடையே அவர்களைத் தவறான வழியில் செலுத்தியபடி ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் தாடி வைத்த கடைக்காரன் ஒருவன் அவர்களிடம் வந்து அந்தப்பெண்ணின் நடத்தை மோசமானதென்று சொல்ல,அதைக்கேட்ட ஈஸ்வரியின் உள்ளம் மாறி விடுகிறது.

’’என்னை உங்காத்திலே சேத்துக்க வேண்டாம்.பட்டணத்திலேஅழைச்சுண்டு போய் ஏதாவது ஒரு ஆச்ரமத்திலே ரெண்டு பேரையும் சேத்துடுங்கோ புண்ணியம் உண்டு’’என்று அந்தப்பெண் அவர்களிடம் கெஞ்சிக்கதறி மன்றாடியபோதும் அவள் மனம் நெகிழவில்லை.ஆனால் முதலில் ஈஸ்வரியின் கருணக்கு மறுப்புத் தெரிவித்த அவள் கணவன் சோமசுந்தரம் இப்போது சற்று நிதானித்து உண்மை எது பொய் எது என்று அறிய நாட்டம் கொள்கிறான்.ஈஸ்வரியின் பலமான எதிர்ப்பில் அது அடிபட்டுப்போக அவர்களின் கார் சென்னையை நோக்கிப் பறக்கிறது.
கார் கண்ணாடி வழி ஈஸ்வரி பார்க்க
‘’புடவைத் தலைப்பில் அழுது கொண்டு அலமேலு,சங்கிலியைக்கடித்துக் கொண்டு காலால் தரையில் கோடிட்டுக்கொண்டு கோமதி,சற்று தூரத்தில் அவர்களை வா என்று கூப்பிடும் அந்த சைக்கிள் தாடி’’என்று முடியும் கதை கருணைக்கும் சில நிபந்தனைகள் உண்டு என்பதை முன்வைக்கிறது.

கருணை காட்டவும் இரக்கம் கொள்ளவும் தயாராக இருந்தாலும் அவற்றுக்கும் கூட சில வரையறுக்கப்பட்ட எல்லைகளை நிபந்தனைகளை வைத்துக் கொள்ளும்  மனிதப்பொது இயல்பைக் கலையழகு குன்றாமல் எடுத்துக்காட்டியிருக்கும் சுஜாதாவின் கதை இது.

‘’எவ்வளவோ தடவை சாமி கும்பிடறோம்,என்ன பிரயோசனம்,நடைமுறையிலே ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டாம்?....வேற யாராவது பாத்துப்பாங்கன்னு எல்லாருமே விட்டுட்டா யாரு அந்த வேற யாராவது....கோயிலுக்குக்கூடப்போக வேண்டாம்.இந்த மாதிரி ஒரு நல்ல காரியம் செஞ்சா அதுவே பெரிய தபஸ்’’என்று முதலில் ஒரு குட்டிச் சொற்பொழிவே ஆற்றுகிறாள் ஈஸ்வரி.அவள் கணவன் அப்போது தயங்குகிறான்.முன் பின் தெரியாத பெண்களை உடனழைத்துச்செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை.ஆனால் தாடிக்காரன் வந்து அவர்கள் மீது புகார் சொன்னதுமே ‘ஈஸ்வரியின் முகத்தில் தீர்மானமின்மை தெரி’ய ஆரம்பிக்கிறது.

அந்தப்பெண்களைப்பற்றிய தகவல் தாடிக்காரன் வழி வெளியாகும் முன்னரும் பின்னரும் தம்பதியருக்குள் வெளியாகும் முரணைக்காட்சிப்படுத்தும் வகையில் கதையை சுவாரசியப்படுத்துகிறார் சுஜாதா.

முதலில் தன் மனைவி அவர்களை உடனழைத்துச்செல்ல எடுத்த முடிவை சோமசுந்தரம் எதிர்த்தாலும் தாடிக்காரன் சொன்னதைக்கேட்டபின் கொஞ்சம் யோசிக்கிறான்.அவன் சொல்வது உண்மைதானா என்று சோதித்துப்பார்க்க விரும்புகிறான்.
‘’இரு ஈஸ்வரி...இதைச் சரியா விசாரிச்சுறலாம்.யார் பொய் சொல்றான்னு பாத்துடலாம்’’
என்கிறான்.
ஆனால் கணவனின் அந்தப்பார்வைக்கு ஈஸ்வரியின் மனம் இப்போது சபல முலாம் பூசிப்பார்க்கத் தொடங்குகிறது.தன் கருணை, இரக்கத்தின் அடிப்படையில் பிறந்ததென்றும் அவனது கருணைக்கு வேறு உள்நோக்கம் இருக்கலாமென்றும் தனக்குத்தானே கற்பித்துக் கொள்கிறாள்.அதனாலேயே அவர்களை உடனடியாகத் தவிர்ப்பதில் முனைப்புக்காட்டுகிறாள்.

இதுநாள்வரை தன் விருப்பத்தின்படி ஆட்டி வைத்துக் கொண்டிருந்த ‘பட்சிகள்’கையை விட்டுப்பறந்து விடுமே என்பதற்காகத்தான் தாடிக்காரனும் அவர்களைத் தேடி வருகிறானே தவிர அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் அவனிடம் இல்லை.கணவன்-மனைவி இருவருமே கதை முடிவில் அதை உணர்ந்து விட்டாலும் துணிச்சலாக ஒரு முடிவெடுத்து அவர்களுக்கு அவனிடமிருந்து மீட்சியளிக்க விரும்பாமல் சராசரித்தனமாகப்பிரச்சினையிலிருந்து நழுவிப்போகிறார்கள்.அவர்களின் கார் வேகமெடுத்துப் பறப்பது யதார்த்தத்திலிருந்து விரைவாக நழுவித் தப்பித்துக்கொள்ள விரும்பும் மனித இயல்பையே வெளிக்காட்டுகிறது.

தங்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவரை பிறர் மீது கருணையை வர்ஷிப்பவர்களைப் போல பாவனை செய்து கொள்ள ஆசைப்படும் மனித மன விகாரங்களை இந்தக்கதையில் எடுத்துக்காட்டியிருக்கும் சுஜாதா
‘’பத்மனாப சுவாமி கோவில் முன்னால் ஒரு சம்பவம் நடந்தது.அதுதான் கொஞ்சம் கற்பனை சேர்ந்த ‘நிபந்தனை’’’என்று இந்தக்கதையின் பின்னணி பற்றியும் எழுதியிருக்கிறார்.

சிறுகதையை இணையத்தில் படிப்பதற்கான இணைப்பு
நிபந்தனை









1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

//’எவ்வளவோ தடவை சாமி கும்பிடறோம்,என்ன பிரயோசனம்,நடைமுறையிலே ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டாம்?....வேற யாராவது பாத்துப்பாங்கன்னு எல்லாருமே விட்டுட்டா யாரு அந்த வேற யாராவது....கோயிலுக்குக்கூடப்போக வேண்டாம்.இந்த மாதிரி ஒரு நல்ல காரியம் செஞ்சா அதுவே பெரிய தபஸ்’’என்று//

ஹாய் மேடம்,நம்மல நாமே திரும்பி பார்க்கிற மாதிரி இருக்கு.அக பயணத்தில் நீண்ட தூரம் பயணித்தவர்கள் மட்டுமே இவ்வாறு உணர வைக்க முடியும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....