துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

4.7.09

தேவந்தி -2

தேவந்தி - 1 இன் தொடர்ச்சி

'குறுகுறு நடந்து ...சிறுகை நீட்டி ..இட்டும் தொட்டும் , கவ்வியும் ..துழந்துமாய் ..அந்தப் பிஞ்சுக் குழந்தை தரும் பிள்ளை இன்பத்தில் தன்னை மறந்து லயித்துக் கிடந்தாள் மாலதி.மயங்க வைக்கும் அந்த மழலைச் செல்வத்திற்கு முன்னால் தன் கணவர் மறுமணம் செய்து கொண்ட துயரம் கூட அவளைப்பெரிதாகப் பாதிக்கவில்லை.

அவள் மடியில் கிடந்த அந்த மகவு சிணுங்கியது; கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுதது ;துணி விரிப்பில் அதைக் கிடத்தி விட்டுச் செம்பில் பாலும் , வெள்ளிச் சங்கும் எடுத்து வந்த மாலதி குழந்தையை மடியில் கிடத்திச் சங்கில் பால்புகட்டத் தொடங்கினாள். அதன் தாயும் , அவளதுகணவரும் பக்கத்து ஊரில் நடக்கும் ஒரு திருமணத்திற்குச் சென்று விட்டிருந்தனர்.

'இந்தப் பாவியைக்குடல் விளக்கம் செய்ய ஒரு மகள் ஜனிக்காமல் போனால்தான் என்ன ?நான் தான் பத்துத் திங்கள் சுமக்காமல்...பிள்ளைவலி என்னவென்றே தெரியாமல் இந்தக் குழந்தைக்குத் தாயாகி விட்டேனே..? நல்ல வேளையாக ...இவ்வாறு நான் குழந்தையைப் பார்த்துக் கொள்வதை அவள் தவறாக எண்ணவில்லை. ஒருக்கால் கணவரோடு கூடச் சேர்ந்து , நினைத்த நேரத்தில் , நினைத்த இடங்களுக்குச் சென்றுவர இது வசதியாக இருப்பதாகக் கூட அவள் எண்ணிக் கொண்டிருக்கலாம்...சரி! அப்படித்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே ! அதைப் பற்றி எனக்கென்ன வந்தது ?மடியை நிறைத்துக் கிடக்கும் இந்த மழலையைப் பார்த்தபடியே என் பொழுதை ஓட்டி விடலாமே..?''

ஏதேதோ எண்ணங்களில் மிதந்தபடியே அவள் பாலைப் புகட்டிக் கொண்டிருந்தாள். திடீரென்று , சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் குழந்தையிடமிருந்து ஒரு செருமல் ! புரையேறி மூச்சு அடைத்துக் கொண்டுவிட்டதைப் போல ஒரு திணறல்..! செய்வதறியாமல் அவள் திகைத்து நின்ற அந்த ஒரு நொடிக்குள் குழந்தையின் தலை துவண்டு சரிய , அது இறந்து விட்டதாகவே முடிவு கட்டிக் கொண்ட மாலதி....,பிரபஞ்ச சோகம் முழுவதையும் ஒன்றாக உள்ளடக்கி ஓலமிட்டாள்.

குழந்தையை இழந்து விட்ட அவலம் ஒரு புறமும் , மாற்றாளின் மகவைச் சாகடித்துவிட்ட பழிச் சொல் மறுபுறமுமாய்ப் பதை பதைத்து நடுங்கியது அவள் உள்ளம் ! அண்டை அயலாரிடம் ஆலோசனை கேட்கப் போய்..அந்தச் செய்தி அனைவருக்கும் அஞ்சலாக்கப்படுவதிலும் அவளுக்குச் சம்மதமில்லை.

சேலைக்கிழிசல் ஒன்றில் குழந்தையைப்பொதிந்து தோளில் கிடத்தியபடி...பூம்புகார் நகரத்திலுள்ள இந்திரக் கோட்டம் தொடங்கி , வேற்கோட்டம், நாகர் கோட்டம் என அங்குள்ள கோயில்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் வலம் வரத் தொடங்கினாள் மாலதி. அங்கிருந்த தெய்வ சன்னிதிகளின் முன்னிலையில் குழந்தையக் கிடத்தி மனதுக்குள் கதறினாள். குழந்தை இன்னும் கூடப் பேச்சு மூச்சு இல்லாமல்தான் கிடந்தது.

மாலதியின் உள்ளுணர்வில் ..அவளது குலதெய்வமான பாசண்டச் சாத்தனின் உருவம் திடீரென்று மின்னலடிக்க ...அங்கே சென்று பாடு கிடக்கலாம் ...அந்தக் கடவுள் முன்பு பழியாய்க் கிடக்கலாம் என்று எண்ணியவளாய் , அலறிப் புடைத்தபடி... அங்கமெல்லாம் அலுங்கிக் குலுங்கக் கோயிலை நோக்கி ஓட்டமும் , நடையுமாய் அவள் செல்லத் தொடங்கினாள். நகரத்திற்கு வெளியே ..எங்கோ தொலைதூரக் காட்டுப் பகுதியில் இருந்த அந்தக் கோட்டத்திற்குப் போய்ச் சேர்ந்த அவள் ,அதன் முற்றத்திலேயே குழந்தையோடு மயங்கிச் சரிந்தாள்.

தன் நினைவு தவறிக் கிடந்த மாலதியின் ஆழ்மனதிற்குள் ஊழிக் கூத்தாடிக் கொண்டிருந்தான் பாசண்டச் சாத்தன். ஒரு நேரம் அவளுக்குள் விசுவ ரூபம் எடுத்து விண் முட்ட வளரும் அவன் , அடுத்த கணத்திலேயே அழகுக் குழந்தையாகித் தவழ்ந்து தளர் நடையிட்டபடி ..அவள் மடி தேடி ஓடி வந்து விடுவான்.ஒரு நிமிடம் தெய்வமாக ஆசி வழங்கும் அவன் , அடுத்த நிமிடத்திலேயே மண்ணளைந்த கையோடு ...மிரண்டு போன பாலகனாக அஞ்சி வந்து அவள் முன்பு நின்று விடுவான். அவன் தெய்வமா...? இல்லை தெய்வக் குழந்தையா..?

மயக்கம் முழுதுமாய்த் தெளிந்திராத மாலதி ..சாத்தனின் திரு உருவச் சிலைக்குமுன்னால் அரைகுறையாகக் கண் விழித்தாள்....

'என்ன இது...சிலை வடிவத்தில் சாத்தனின் முகம் என் கண்ணுக்குத் தெரியவில்லையே ..?அங்கே எனக்குத் தட்டுப்படுவது ...என் குழந்தையின் முகமல்லவா..?'

எங்கிருந்தோ ஒரு குழந்தையின் முனகல் ஓசை ...மெதுவாய்...மிக மெதுவாய்க் கேட்கச் சாத்தனின் முகத்திலிருந்து மெள்ளத் தன் பார்வையை மீட்டுக் கொண்டாள் மாலதி. கோயில் முற்றத்தில் அவள் கிடத்தியிருந்த குழந்தை...கை, கால்களை உதைத்தபடி , சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது.அதை அள்ளி எடுத்துக்கொண்ட அவள் அதன் காதுகளில் ஓதினாள் 'நீ....குழந்தை இல்லை..கண்ணே ..நீ என் தெய்வம்..'
.............................................

''அந்தக் குழந்தைதான் என் கணவர்''என்றபடி கதைக்குச் சற்று இடைவெளி விட்டாள் தேவந்தி.

''அப்படியென்றால் உன் கணவர் உருவில் உருவில் பாசண்டச் சாத்தனா...?''

''அப்படி யார் சொன்னது..?அது என் மாமியார் அவளாகவே ஏற்படுத்திக் கொண்ட மனப்பிரமை! அது அவள் கொண்ட மன மயக்கம்! குழந்தையைச் சாகடித்துவிட்ட பழி , தன் மீது விழுந்து விடுமோ என்ற பதட்டமான உணர்ச்சியின் பிடியில் அவள் சிக்கியிருந்த நேரத்தில் , பால் விக்கியதால் பாலகன் சோர்ந்திருக்கிறானா ...அல்லது உண்மையிலேயே அவன் மாண்டு விட்டானா என்று சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது கூட அவளுக்குத் தோன்றாமல் போயிருக்க வேண்டும் ! குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் ஓடிய ஓட்டத்திலும் , அதைப் போட்டுக் குலுக்கி எடுத்ததிலும் அதற்கு ஏற்பட்ட விக்கலும் மூச்சுத் திணறலும் இயல்பாகவே சீராகி விட்டிருக்கிறது ! அப்படித்தான் அது நடந்திருக்க வேண்டும் ! ஆனால் இறுதி வரை அவள் அப்படி நினைக்கவே இல்லை .தான் உறுதியாக நம்பிய கடவுளின் அருளால்தான் மகன் பிழைத்தான் என்று பொதுவாக எல்லோரும் எண்ணுவது போல எண்ணக் கூட அவள் தயாராக இல்லை. குழந்தை முதலிலேயே இறந்து போய் விட்டது என்றும் , பிறகு அதற்குள் உயிராக வந்து உலவியது தன் இஷ்ட தெய்வம்தான் என்றும் அவள் திட்ட வட்டமாக முடிவு கட்டிக் கொண்டு விட்டாள். ஆனால் கணவரிடமும், மாற்றாளிடமும் அதைச் சொல்லித் தன்னையே காட்டிக் கொடுத்துக்கொள்ளும் துணிச்சலும் அவளிடம் இல்லை ! அதற்கு மாறாகக் குழந்தையோடு தனித்திருக்கும் தருணங்களிலும் ...வாய்ப்பு நேரும்போதெல்லாம் அதன் அசாதாரணத் தன்மையை அந்தப்பிஞ்சு மூளைக்க்குள் அவள் செலுத்திக் கொண்டே இருந்தாள்.....

'இதனால் பாதிக்கப்பட்டவர் என் கணவர்தான் ! மானுடத்திற்கும் , அமானுஷ்யத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்திலேயே வளர்ந்து வாலிபரானார் அவர். சராசரி மகனாகத் தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய யதார்த்தக் கடமைகள் ஒரு புறம் ! தெய்வீகமான தன் புனிதம் கறைப்பட்டு விடாமல் காத்துக் கொண்டு விட வேண்டுமென்ற இடைவிடாத போதனை மற்றொரு புறம் ! அவரது லௌகீக வாழ்வின் தவிர்க்க முடியாத திருமணக்கட்டத்தில் நான் அவரோடு இணைந்தேன். மணமேடையைத் தீவலம் வரும்போது என்னைப் பற்றிய அவரது கரங்கள் ...தொடர்ந்து நாங்கள் மண வாழ்க்கை நடத்திய எட்டாண்டுக் காலத்தில் என்னைத் தீண்டியதே இல்லை. அது ஏன் என்பது ...அப்போது எனக்கு விளங்கியிருக்கவில்லை.அப்படிப்பட்ட கேள்விகளை அவரிடம்கேட்க நான் வளர்ந்த சூழல் என்னை அனுமதிக்கவும் இல்லை.''

(தேவந்தி -2 இன் தொடர்ச்சி அடுத்த பதிவில்...)

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....