துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.7.09

தேவந்தி - 3

தேவந்தி -2 இன் தொடர்ச்சி
தேவந்தியை நெருங்கி வந்து அவளை ஆரத் தழுவிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் கண்ணகி. ஆயிரம் அர்த்தச் செறிவுகளை அடக்கியிருந்த அந்தக் கண்ணீர் ...தனக்கானதா அல்லது தேவந்திக்கானதா என்பதை அவளே அறிந்திருக்கவில்லை. தேவந்தி அவளை மெல்ல வருடிக் கொடுத்தாள்.

''உன் உள்ளம் புரிகிறது கண்ணகி ! நீயும் உன் கணவரைப்பார்த்து வினாக் குறியாகக்கூட ஒரு பார்வையைப் படர விட்டிருக்காதவள்தானே...?என்ன செய்வது ? இது இந்த யுகத்தின் சாபம். சரி. மீதியையும் கேட்டுவிடு.''

''நாங்கள் அப்படித்தான் வாழ்ந்தோம் . ஒருவர் நிழல் கூட அடுத்தவர் மேல் படாமல் எட்டாண்டுக் காலம் உலகத்தின் பார்வைக்கு நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்....அவர் உற்றார் , உறவினருக்கு உறுதுணையாக உதவினார்... ; கல்வி கேள்வியில் தேர்ச்சி பெற்றுச் சான்றோனென்று பெயரெடுத்தார் ; குலத் தொழிலில் கொடிகட்டிப் பறந்து ...கோலோச்சி உயர்ந்தார் ;...இப்படி...என்னைத் தவிரத் தன்னைச் சுற்றிக்கூடியிருந்தோரையெல்லாம் பலமுகம் காட்டிப் பதமாகக் குளிர்வித்தார் ; பெற்றோரின் காலம் முடிந்தது ; மாலதியும் மரணமடைந்தாள் ; அவர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களையெல்லாம் முறைப்படி கழித்த பிறகு ..., மெதுவாக என்னை நாடி வந்தார்...என்னிடம் முதலும், கடைசியுமாக அவர் பேசிய சந்தர்ப்பம் அது ஒன்றுதான் !

''நான் யார் என்பதை நீ அறிய மாட்டாய் தேவந்தி !என் மூவா இள நலத்தை உள்ளபடி நான் காட்டினால் ...அதைப் பொறுக்கும் சக்தி உன் கண்களுக்கு இல்லை . நான் தான் பாசண்டச் சாத்தன். மாலதியின் பழி துடைக்கவே, மறைந்த குழந்தையின் உருவில் நான் குடி புகுந்தேன். அவளுக்காகவே மனிதப் பிறப்பெடுத்த நான் , மனித வாழ்வின் கடமைகள் அனைத்தையும் செய்து முடித்தேன்....இனிமேல் நான் விடைபெறும் தருணம் வந்து விட்டது ! கடவுளையே கரம் பற்றும் அரியதொரு வாய்ப்பைப் பெற்றவள் நீ !அந்த மகிழ்ச்சியோடு எஞ்சிய உன் வாழ்நாளைக் கோயில் வழிபாட்டில் கழித்துக் கொள்.''

- இந்த வாசகத்தோடு என் வாழ்க்கையிலிருந்தே விடைபெற்று அவர் அகன்று போனார். வேரற்ற மரமாக நான் விழுந்து கிடந்த நாட்கள்...நீண்டு கொண்டே போன அந்தக் காலகட்டத்தில்தான் என் அறிவில் படிந்திருந்த மாயத் திரைகளெல்லாம் ...படிப்படியாக விலகிக் கொண்டே வந்தன....அது வரையில் புலப்பட்டிருக்காத புதிர்களின் முடிச்சுக்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்ந்து கொண்டே வந்தன.நான் ...தெளிந்தேன்..! என் கணவர் கடவுளில்லை ! மனித மனத்தின் கண நேரத் தடுமாற்றத்தால் அவ்வாறு ஆக்கப்பட்டவர் ! அவர் புனிதரில்லை. தாயின் மூளைச் சலவையால் இக வாழ்விலிருந்தே தன்னைத் துண்டித்துக் கொண்டு விட்ட ஒரு மனிதர்தான் அவர்..!''

''இந்த அளவு யோசித்து வைத்திருக்கும் நீ ...உன் கணவர் திரும்பி வர வேண்டும் என்பதற்காக நோன்பு நோற்பதாக ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்பதுதான் எனக்கு இன்னும் விளங்கவில்லை தேவந்தி !''

''நான் தான் முதலிலேயே தெளிவுபடுத்திவிட்டேனே கண்ணகி ! ஊராரின் கண் முன்னால் நான் போடும் வேடம் அது ! கண்ணகி ! நீ அருக (சமண) சமயத்தைச் சேர்ந்தவள்.இப்படிச் செய்வதையெல்லாம் ஒரே வார்த்தையில் 'மடமை' என்று சொல்லி விலக்கி வைத்து விட உன்னால் முடியும் ! ஆனால் .. என் பிறப்புப் பின்னணி அவ்வளவு எளிதாக என்னை விட்டு விடாது .தீர்த்த யாத்திரை சென்றிருக்கும் கணவன் நலமுடன் திரும்ப வேண்டும் என்று வழிபடாமல் நான் சும்மா இருப்பதை அது நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. அந்த வகையான நிந்தனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் நான் இப்படி நெஞ்சறிந்து பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ! இந்த உலகத்தவர்களின் நாக்கு இருக்கிறதே ...அது ...பிளவுபட்டுக் கிடக்கும் அந்த ஆதிசேஷப் பாம்பின் நாக்கை விடவும் கூடுதலான நச்சுத் தன்மையைக் கொண்டிருப்பது. கண்ணகி ! கோவலன் , மாதவியை நாடிச் சென்றிருப்பது , கலை மீது கொண்டிருக்கும் காதலால்தான் என்பது எல்லோருக்குமே வெளிப்படையாகத் தெரியும் ! ஆனால் உன்னிடம்தான் ஏதோ குறை இருப்பதைப் போல நரம்பற்ற நாவினராய் இந்த ஊரார் பேசவில்லையா? ''

- கண்ணகி ,தாளாத துயரத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். அவள் முகத்தைச் சற்றே உயர்த்திய தேவந்தி...அங்கே அரும்பியிருந்த கண்ணீர் முத்துக்களைத் தன் விரலால் சுண்டி விட்டாள்.

''இப்படி நாமெல்லம் கண்ணீருக்குள்ளேயே கரைந்துபோய் விடுவதனாலேதான் சில கேள்விகளைக் கேட்காமலே விட்டு விடுகிறோம் ! அப்படி நான் கேட்கத் தவறிய ஒரு கேள்வி ...என் உள்ளத்துக்குள் உட்கார்ந்து கொண்டு அல்லும் பகலும் என்னைக் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கிறது .''

-அது என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் தன் விழிகளை அகல விரித்தாள் கண்ணகி.

''மனிதக் கடமைகளில் மனைவிக்கு ஆற்ற வேண்டிய கடமை என்பதும் உட்பட்டிருக்கிறதா...இல்லயா ? அப்படி அதுவும் உட்பட்டதுதான் என்றால் மனித நிலையில் ஆற்ற வேண்டிய எல்லாக் கடமைகளையும் என் கணவர் முழுமையாகச் செய்து முடித்து விட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும் ?...மனைவி என்ற மனித உயிருக்குள்ளும் தனியாக ஒரு இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை ? இதையெல்லாம் அவரிடம் கேட்காமல் நான் மௌனமாக இருந்து விட்டேன் கண்ணகி ! இந்தக் கேள்விகளைக் கேட்பதற்காகவாவது அவரை நான் சந்தித்தே ஆக வேண்டும் !''

-அத்தனை நேரமும் , வேறு யாருடைய கதையையோ சொல்வதைப் போல் நிதானமாகச் சொல்லிக் கொண்டுவந்த தேவந்தியின் குரல் ...அந்தக் குறிப்பிட்ட கணத்தில் உடைந்து சிதறத் தொடங்கியது. உடனேயே அதிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டுவிட்ட அவள் ..ஆவேசமான குரலில் சூளுரைப்பதைப் போல் ஒரு பிரகடனம் செய்தாள் !

''ஆனால் இந்தக் கதை ..இந்தத் தேவந்தி ஒருத்தியின் வாழ்க்கையோடு முடிந்து விடப்போவதில்லை ! இனி வரும் காலங்களிலும் வேறு ஏதோ ஒரு வடிவத்தில் இது தொடரத்தான் போகிறது . அப்போது ..இன்றில்லை என்றாலும் ..என்றோ ஒரு நாள் ..ஏதாவது ஒரு யுகத்தில் நான் அந்தக் கேள்விகளைக் கேட்காமல் நான் விட்டுவிட மாட்டேன் ! இந்த மாதிரியான மௌனங்கள் உடைபடும் தருணத்தை ...நிச்சயம் நான் நிகழ்த்திக் காட்டத் தவற மாட்டேன் கண்ணகி !''

காலம் , தன் மீது உழுது விட்டுப் போயிருக்கும் பதிவுகளைச் சுமந்தபடி ...யுகங்களின் இருள் படர்ந்த கணங்களின் ஊடே ...மெள்ள ஊர்ந்து பயணிக்கத் தொடங்கினாள் தேவந்தி.

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

என் மனதில் பயணிப்பால் தேவந்தி.
இவளின் வலி அதிகம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....