துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.7.09

காற்றில் கலந்த 'கானக்குயில்'சங்கீத ஜாம்பவான்கள் பலராலும் 'பாட்டம்மாள்' என்று பாராட்டப்பட்ட திருமதி டி.கே. பட்டம்மாள் இன்று நம்மிடையே இல்லை.

இந்தியா சுதந்திரம் அடைவதற்குச் சற்று முன்பும் சுதந்திரம் அடைந்த அண்மைக் காலத்திலும் சிறு குழந்தைகளாக இருந்த தலைமுறையைச் சேர்ந்த பலரும் பட்டம்மாவின் பாட்டைக் கேட்டே பாரதியைப் பழகிக் கொண்டவர்கள்.
பாரதியின் 'கொட்டு முரசு ', அவரது கனத்த...கனிவான சாரீரத்தில் வீரியம் பெற்றுச் சிலிர்த்தெழும். 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே'என்று அவர் ஆனந்தத்தோடு இசைக்கும் பாடல் பாரதியின் தீர்க்க தரிசனக் கனவுகளை அப்பட்டமான நிதரிசனமாக மனக்கண் முன் கொண்டுவந்து சேர்க்கும். 'தாயின் மணிக் கொடி 'அவரது கம்பீரக்குரலில் பட்டொளி வீசிப் பறக்கும்.
எல்லாத் துறைகளையும் போலவே ஆணாதிக்கம் கோலோச்சிய ஒரு காலகட்டத்தில், சங்கீத மும் மூர்த்திகளைப் போலச் சங்கீதப் பேரரசிகளாகத் திகழ்ந்தவர்கள் எம். எஸ், எம்.எல். வி, பட்டம்மாள் ஆகிய மூவரும்.
பட்டம்மாள் பாடிய இசைத் தட்டின் மேலட்டையில் அவரது புகைப்படத்தை வெளியிடக்கூட அனுமதியளிக்க மறுத்த ஆசாரக் குடும்பப் பின்னணி அவருடையது என்று ஒரு செய்தித் தாளில் இன்று படித்தேன்.அப்படிப்பட்ட ஒரு பின்னணிக்குள் இருந்தபடி மேலெழுந்து உயர்ந்த அவரது சாதனை , உறுதியாகக் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல.
பட்டம்மாளின் பாட்டை ரசிக்கக் கர்நாடக இசை நுணுக்கங்கள் பற்றிய அறிவோ,தெலுங்குக் கீர்த்தனைகளைப் புரிந்து கொள்ளும் திறனோ கூடத் தேவையில்லை.அப்படிப்பட்ட ஞானம் இல்லாதவர்களையும் கூடத் தன் தமிழிசை வாயிலாகவும் , மெல்லிசை மற்றும் திரையிசை வாயிலாகச் சென்று அவர் பாடல்கள் எட்டியிருக்கின்றன. காதில் தேன் பாய்ச்சும் மதுரமான இசையை ஊனுருக அளித்து உயிருருக நெகிழ்த்தி இசை என்ற சுகமான போதைக்குள் ஆழ்த்தியிருக்கின்றன.

''நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை''

என்று கண்ணதாசன் பாடிச் சென்றது போலப் பட்டம்மாளின் தூல உடல் மறைந்தாலும் அவரது இசை , ஏதோ ஒரு வடிவில்....அவரது சிஷ்யைகளின் பாடல்களிலும்....அவரது பேத்தி நித்யஸ்ரீயின் எடுப்பான குரல் வளத்திலும் ....அவரது பழைய ஒலி நாடாக்களிலும் சுற்றிச் சுழன்று கொண்டுதான் இருக்கும்.
பிரபஞ்சப் பேரண்டத்தின் காற்றலைகள் முழுவதும் விரவி வியாபித்து என்றென்றும் நித்தியத்துவம் பெற்றுவிட்ட அந்த அமரக்குரலுக்கு என்றும்...எப்போதும் அழிவில்லை.

2 கருத்துகள் :

SUMAZLA/சுமஜ்லா சொன்னது…

தங்கள் தமிழை மிகவும் ரசிக்கிறேன். நேரம் கிடைத்தால் என் வலைக்கு வாருங்கள்.

goma சொன்னது…

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
திருமதி பட்டம்மாள் பாடுவதற்காகவே பாரதியார் எழுதியிருப்பார் என்பது போல் அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் வகையில் இன்றும் என்றும் நிலைத்திருக்கும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....