29.7.09
''மாளாத காதல் நோயாளன்....''
சங்கச் சமுதாயத்தில் காதலையும் வீரத்தையும் முன் வைக்க மட்டுமே பெரிதும் பயன்பட்டு வந்த தமிழ் மொழி,பக்தியின் பரவசத்தையும் பாங்குடன் புலப்படுத்தும் ஆற்றல் கொண்டிருப்பது.
தீயினுள் தெறலாய்ப் பூவினுள் நாற்றமாய்...அறத்தினுள் அன்பாய்..மறத்தினுள் மைந்தாய் இறைவனின் தரிசனத்தைக் கண்ட பரிபாடல் காலம் தொடங்கித் தமிழின் பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த புலவர்களும் இறை அன்பில், கடவுட்பற்றில் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் அழியாத இடம் பெறும் பாடல்கள் பலவற்றை , உள்ளாழத்திலிருந்து பொங்கிவரும் உண்மை உணர்வோடு ஊன் கலந்து, உயிர் கலந்து உருவாக்கியிருப்பவர் குலசேகர ஆழ்வார்.
சேர மன்னராய்க் கோலம் தரித்தபோதும்
‘’கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்’’
என்று அவற்றைத் துச்சமாய்க் கருதியபடி , திருவேங்கடச்சுனையில் மீனாய்ப் பிறக்க வேண்டுமென வேண்டிக் கொண்ட எளிமையான தொண்டர் அவர்.
வித்துவக்கோடு என்னும் சேர நாட்டு வைணவத் தலத்தில் வீற்றிருக்கும் திருமாலைப் போற்றி அவர் பாடியிருக்கும் பாடல்கள் அனைத்திலும் ஆன்மாவிற்கும், ஆண்டவனுக்கும் உள்ள உறவு - ஜீவாத்மாவிற்கும் , பரமாத்மாவிற்கும் உள்ள பந்தம் , உவமைகளால் வெளிச்சமிடப்படுகிறது.
அந்த உவமைகள் , வெறுமே சொற்களைத் தொடுத்துக்கொண்டு போகும் அலங்காரத் தோரணங்களல்ல;
நடைமுறை வாழ்வில் அன்றாடம் நாம் காணும் யதார்த்த உண்மைகள் அவை.
எளிய வாழ்வியல் செய்திகளை ஓவியமாய் வடித்துக் காட்டி , அவற்றின் வழி,அரிதான பரமநிலை அடைய வழிகாட்டும் அற்புதமான பாடல்கள் குலசேகரருடையவை.
மனிதனுக்கும்,கடவுளுக்கும் இடையிலுள்ள உறவை நோயாளிக்கும், மருத்துவனுக்கும் இடையிலுள்ள உறவாக எடுத்துரைக்கும் குலசேகரர் பாடல் ஒன்று....
‘’வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே’’
புண்ணை ஆற்ற வேண்டுமென்பதற்காக மருத்துவர் அறுவை சிகிச்சை செய்கிறார். காரமான மருந்துகளை வைத்துக் கட்டுகிறார். நோயாளி, வலி தாங்காமல், எரிச்சல் பொறுக்காமல் கத்துகிறான்;துடிக்கிறான். ஆனாலும் அதற்காக மருத்துவரை ஒதுக்கி விட முடிகிறதா என்ன ?
காயம் முழுமையாக ஆறி அவன் பூரண குணம் பெறும்வரை , மீண்டும் மீண்டும் ‘மாளாத காத’லுடன் அவன் நாடிப் போவது அந்த வைத்தியரைத்தான்.
இறைவனும் கூட ஒரு வகை வைத்தியன்தான்; பிறவிப்பிணிக்கு மருந்திடும் அற்புத மருத்துவன் அவன்.
மண்ணுலக வாழ்வில் மனிதன் செய்யும் கரும வினைகளால் மீளாத்துயர் வரும்போதெல்லாம் அவன் பற்றிக்கொள்ளும் ஒரே புகல் பரம்பொருள் மட்டுமே என்ற அழியாத உண்மையைக் கல்வெட்டாக உள்ளத்தில் பதித்து விடுகிறது இந்தப் பாசுரம்.
ஒரு தொடர் குறிப்பு:
இலக்கியம் படிப்பவர்கள்-உண்மையாகவே அதில் தோய்ந்து கலப்பவர்கள் -வாழ்வின் இனிய தருணங்களானாலும் , நெருக்கடியான சூழல்களானாலும் தங்களை இளைப்பாற்றிக் கொள்ளவும் களிப்பேற்றிக் கொள்ளவும் இலக்கியத்தின் துணையையே நாடுவதுண்டு;
இந்தப் பாடல் சார்ந்த அவ்வாறான சுவாரசியமான-சற்றுத் துன்பமான நிகழ்வு ஒன்று ,நான் ஆசிரியப் பணியில் இருக்கும்போது நேர்ந்தது.
முதலாம் ஆண்டு எம்.ஏ.தமிழ் மாணவியருக்கு இந்தப் பாடலையும், குலசேகரின் பெருமாள் திருமொழியிலிருந்து வேறு சில பாடல்களையும் அப்போது நான் கற்பித்துக் கொண்டிருந்தேன்.
முதல் வரிசையில் அமர்ந்து இலக்கியப் பாடல்களை ரசித்துக்கேட்கும் மாணவி ஒருத்தி, சில நாட்களாய்க் கல்லூரிக்கு வரவில்லை.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தந்தையை மருத்துவ மனையில் சேர்த்துவிட்டுக் கூட இருந்தாள் அவள் என்று நான் கேள்விப்பட்டேன்.
திடீரென்று இரண்டு நாட்கள் சென்றபின் அவளிடமிருந்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு.(அது செல்பேசி இல்லாத பொற்காலம்)
‘’அம்மா! அந்த ‘வாளால் அறுத்துச் சுடினும் ‘’பாட்டைக் கொஞ்சம் சொல்லுங்கம்மா எழுதிக்கிறேன் என்றாள் அவள்.
’’அதிருக்கட்டும்.அப்பா எப்படி இருக்கிறார்’’- இது நான்.
‘’அதுதாம்மா....சக்கரையாலே காலிலே சீழ் வச்சுப் புண்ணா இருக்கு. டாக்டர் ‘ஆபரேஷன்’செய்யணும்கிறார். அப்பத்தான் நான் டாக்டர் கிட்டே இந்தப் பாட்டைப் பத்திச் சொன்னேன். அவருக்குப் பாட்டை முழுசாத் தெரிஞ்சிக்கணுமாம்.சொல்லுங்கம்மா’’
என்று தன் கோரிக்கையைத் தொடர்ந்தாள் அவள்.
தந்தைக்கு நேர்ந்திருக்கும் சிக்கல்...மருத்துவமனைச் சூழல் என எல்லாவற்றையும் கடந்து - ஆனாலும் அதற்குள் தான் கற்ற இலக்கியத்தையும் முடிச்சுப்போட்டு மருத்துவரிடமும் அதைப்பகிரத் துடிக்கும் அந்தப்பெண்ணின் ஆர்வம்....இத்தனை நாள் ஆசிரியத் தொழில் செய்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது என்பதையும் ,வெறுமே பதவுரை பொழிப்புரை சொல்லி மதிப்பெண் வாங்க வைப்பதை விட மிக நல்ல பலன் இது என்பதையும் பொட்டில் அடித்தாற்போல எனக்கு விளங்க வைத்தது.
‘’துன்பம் நேர்கையில் .....தமிழில் பாடி நீ இன்பம் சேர்க்க மாட்டாயா’’என்ற பாரதிதாசனின் வரிகள் புதிய அர்த்தச் செறிவோடு மனதுக்குள் சிம்மாசனம் இட்டு அமர்ந்த அரிய நாள் அது.
கருத்துரை:
சுசீலா அம்மா,
கட்டுரை சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்
கமலம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
6 கருத்துகள் :
உண்மைதான் அம்மா நாம் நடத்தும் பாடங்கள் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்றபடுத்தும் போது மகிழ்வாகவே இருக்கிறது.......
//இத்தனை நாள் ஆசிரியத் தொழில் செய்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது என்பதையும் ,வெறுமே பதவுரை பொழிப்புரை சொல்லி மதிப்பெண் வாங்க வைப்பதை விட மிக நல்ல பலன் இது என்பதையும் பொட்டில் அடித்தாற்போல எனக்கு விளங்க வைத்தது.//
அம்மா நல்ல சம்பவமும் அந்த பாடலையும் பகிர்ந்தீர்கள்.
இது போல(உங்களைப் போல) நல்ல ஆசிரியர் எனக்கு கிடைக்க கொடுப்பனை இல்லை.
நல்ல பதிவு.
பக்திக்கும் இலக்கியத்துக்கும் ஒரு பந்தம் என்றுமே உண்டு.
அடிக்கடி வருவேன்.
வணக்கம் மேடம்.
பள்ளி, கல்லூரி நாட்களின் தமிழ் வகுப்புகளை நினைவில் படங்களாக கொண்டு வருகிறது தங்களின் படைப்புக்கள். தொடர்ந்து தங்களின் பதிவுகளை அறிந்து கொள்ளும் ஆர்வம்.
என்னுடைய பொன்மாலை பொழுது சற்று பொலிவுடன் நிறைய படங்களுடன் அமைத்துள்ளது. அவ்வப்போது வருகை தந்து மேலான கருத்துக்களை தரவேண்டுகிறேன்.
//வெறுமே பதவுரை பொழிப்புரை சொல்லி மதிப்பெண் வாங்க வைப்பதை விட மிக நல்ல பலன் இது என்பதையும் பொட்டில் அடித்தாற்போல எனக்கு விளங்க வைத்தது //
பலமுறை இயந்திர கதியில் நாம் கடமைகளை செய்துவரும் போது இத்தகைய நிகழ்வுகள் உண்மையிலேயே அற்புதமான வாழ்க்கைப் பாடமாகிறது. இதனால் ’கடமை’ காதலாகி வாழ்க்கையை மேலும் இனிதாக்குகிறது. அந்த இனிப்பை வாசகர்களோடு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி
பரம்பொருளைப் பற்றிக் கொள்வதால்
பாரம் எல்லாம் குறைவது போல்
இன்றும் இதை விளக்கிக் கூறி
எங்கள் நினைவலைகளில் எழுந்தருளிய
எங்கள் இனிய ஆசிரியைக்கு நன்றிகள் பல!!!
பரம்பொருளைப் பற்றிக் கொள்வதால்
பாரம் எல்லாம் குறைவது போல்
இன்றும் இதை விளக்கிக் கூறி
எங்கள் நினைவலைகளில் எழுந்தருளிய
எங்கள் இனிய ஆசிரியைக்கு நன்றிகள் பல!!!
கருத்துரையிடுக