துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.7.09

விருதுப்பகிர்வு



விருதுகளும் , பரிசுகளும் நம்மை மேன்மேலும் ஊக்கப்படுத்துவதற்காக வழங்கப்படுகின்றனவேயன்றி அவை நம் செயல்பாட்டின் முடிந்த முடிவுகளல்ல.
முனைவர் திரு குணசீலன் அவர்கள் எனக்கு அளித்த பட்டாம்பூச்சி விருதை - அவர் என் மீதும் என் எழுத்தின் மீதும் கொண்ட மதிப்பினால் மட்டுமே அளித்திருப்பதாக எண்ணி அதை ஏற்றுக் கொண்டபடி , தொடர்ந்த வலைப் பங்களிப்பில் முயன்று வருகிறேன்.

விருதை அளித்தபோது அவர் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க , சிறந்த வலைப் பதிவர்களாக நான் கருதும் ஐவருடன் அவ் விருதைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.

அந்த ஐவர்......

1.திரு பென்னீஸ்வரன்:


ராகவன் தம்பி என்ற புனைபெயரில் பல நல்ல படைப்புக்களையும் , அங்கதம் கலந்த பல சமூக, இலக்கிய விமரிசனங்களையும் எழுதி வருபவர் , புது தில்லியிலிருந்து வெளிவரும் 'வடக்கு வாசல்' மாத இதழின் ஆசிரியராகிய மதிப்பிற்குரிய திரு'யதார்த்தா' பென்னீஸ்வரன் அவர்கள். நவீனத் தமிழிலக்கிய முயற்சிகளுக்கும், நவீன நாடக நிகழ்கலை ஆக்கங்களுக்கும் இந்தியத் தலைநகரில் அடித்தளம் அமைத்தவர்களில் இவரும் ஒருவர்.

வலை எழுத்தில் என்னிலும் மூத்தவர்;அத் துறையில் கரை கண்டவர்;தொடக்கத்தில்'சனிமூலை'என்ற தலைப்பில் வலைப்பூ எழுதி வந்த அவர், தற்பொழுது தான் நடத்தி வரும் 'வடக்கு வாசல்' இதழுக்கான இணையத்திலேயே 'ராகவன் தம்பி பக்கங்கள்' என்ற தலைப்பில் தன் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்.

மதுரை மண்ணிலிருந்து மூன்றாண்டுகளுக்கு முன் தில்லி வந்து தமிழ்த் தாகத்தால் தவித்துக் கொண்டிருந்த எனக்குத் தமிழிலக்கிய ஆக்கங்களைப் பதிவு செய்யத் தன் 'வடக்கு வாச'லை விரியத் திறந்து வரவேற்ற நல்லுள்ளத்திற்குச் சொந்தக்காரர்.
அவர் கொண்டுள்ள தணியாத தமிழார்வத்திற்காகவும், அவரது தொடர்ந்த இணையச் செயல்பாட்டை மதித்துப் போற்றும் வகையிலும்...
விருதுகளையெல்லாம் கடந்து விட்டவர் அவர் என்றபோதும் என் எளிய சமர்ப்பணமாக....
பட்டாம்பூச்சிவிருதை அவருடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வடைகிறேன்.

2.திருமதி திலகபாமா:


கவிஞரும் , விரசம் தவிர்த்த - ஆக்கபூர்வமான பெண்ணியப் படைப்பாளியுமான திருமதி திலகபாமா அவர்கள்,
கணவரின் மருத்துவப் பணிக்குக் கைகொடுக்கும் அதே வேளையில் தன் கவிதை மற்றும் எழுத்தார்வங்களையும் குன்ற விடாமல்,தன்னைத் தானே செதுக்கிச் சீரமைத்தபடி பல கவிதை நூல்களையும் , விமரிசன மற்றும் பயண எழுத்துக்களையும் உருவாக்கி வருபவர்; பல நாடுகளுக்கும் பயணம் செய்து பல மாநாடுகளில் பங்கேற்ற செழுமையான அனுபவம் கொண்ட திலகபாமா , நான் பணிபுரிந்த பாத்திமாக் கல்லூரியின் முன்னாள் வணிகத் துறை மாணவி என்பது எனக்கு மேலும் பெருமை சேர்க்கக் கூடியது.
'சூரியாள்', 'ஒளிக் கவிதை' ஆகிய இரு வலைப்பூக்களின் வழி இணையத் தமிழுக்கு வளம் சேர்த்து வரும் என் அன்பு மாணவிக்கு மன மகிழ்வுடன்
பட்டாம்பூச்சி விருதை அளித்துச் சிறப்பிக்கிறேன்.

3.கபீரன்பன்:

இணையத்தின் வழி எனக்கு அறிமுகமானவர்.இலக்கியம், ஆன்மீகம்,மருத்துவம்,இணையத் தொழில் நுட்பம் எனப் பல வகை ஈடுபாடு கொண்டிருக்கும் இவர் மைசூருவைச் சேர்ந்த ஒரு பொறியாளர்.

'தேடிவரும் தேன் சிட்டு' என்ற பெயரில் alt-webring.com , தான் வடிவமைத்திருக்கும் வலை சுற்றியில் என் வலைப்பூவைச் சேர்த்துக் கொண்டு பலரும் அதைப் பார்வையிடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுமாறு எனக்கு ஆலோசனை வழங்கியவர்.அவர் உருவாக்கியுள்ள அந்த வலைசுற்றி பற்றி அவரது சொற்களிலேயே சொல்வதானால்....
''தேன் சிட்டு- ஒரு வலை சுற்றி
தேன்சிட்டு நில்லாமல் பறப்பது. அடுத்து எந்த பூவிற்கு செல்லும் என்று திட்ட வட்டமாக சொல்ல முடியாது. Random movement. அதுவே அதன் அழகும் கூட.
இணையத்தில் வலைச் சங்கிலிகள் (web ring) உண்டு. அதனைத் தொடர்ந்து சென்றால் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த வலைப்பக்கங்களை அடுத்தடுத்து காணலாம். அது வருகையாளர்களை வலைப் பக்கம் அதிகமாக்கப் பயன் படும். ஓவியம், இசை,ஆன்மீகம் போன்ற பலபிரிவுகளில் இது அதிகம் காணப்படுகிறது.
இந்த தேன் சிட்டைத் தொடர்வதன் மூலம் வாசகரும் பல வலைப்பூக்களை சுற்றி வரலாம்
!''

('தேடிவரும் தேன் சிட்டு'வலை சுற்றிக்கான வார்ப்புருவை என் வலையின் பக்க இணைப்பில் பார்க்கலாம்.)

தற்போது உலகநீதி மற்றும் முதுமொழிக் காஞ்சி இரண்டையும் பலரும் அறிந்து கொள்ளும் வகையில் Google Gadget வடிவில் இவர் தயாரித்து வருகிறார்.

தன் இணைய ஞானத்தைத் தமிழிலக்கிய வளர்ச்சிக்காகப் பயன்படுத்திச் சக பதிவர்களையும் ஊக்குவித்துவரும் திரு கபீரன்பன் 'கபீரின் கனிமொழிகள்' ,'சித்திரமும் கைப் பழக்கம்','கற்கை நன்றே' என்று மூன்று வலைப்பூக்களை ஒரே நேரத்தில் எழுதிவருபவர்.
அயராத ஊக்கத்துடன் நாளும் நாளும் செயல்பட்டுவரும் திரு கபீரன்பன் அவர்கள் முன்பே ஒரு முறை வலைப் பதிவர்களுக்கான பட்டாம்பூச்சி விருதைப் பெற்றிருந்தபோதும் ,மூன்று வலைப்பூ எழுத்துக்களிலும் தமிழிலக்கிய விட்ஜெட்டுக்களை வடிவமைக்கும் அரிய தொழில் நுட்பத்திலும் முனைந்திருக்கும் அவருக்கு மற்றுமொரு முறை அந்த விருதை வழங்குவதில் தவறில்லை ,அது அவருக்கும் விருதுக்கும் மேலும் பெருமை சேர்ப்பது எனக் கருதிப்
பட்டாம்பூச்சிவிருதைத் திரு கபீரன்பனுக்கு வழங்கிப் பாராட்டுகிறேன்.
எழுதி வருபவர்.

3.கமலாதேவி அரவிந்தன்:



சிங்கப்பூரைச் சேர்ந்த திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்கள் , எனக்கு வலைப் பரிமாற்றங்கள் வழி அறிமுகமானவர். பழகிய சில நாட்களிலேயே தனது அளவு கடந்த அன்பையும், பாசத்தையும் தனது மின் அஞ்சல்கள் வழியே எனக்கு அளித்து வரும் இவர் 'கமலகானம்' என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருபவர்.
சிங்கைத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் தனி முத்திரை பதித்து வரும் 'மலையாளச் சேச்சி' இவர்.
தாய்மொழியை மலையாளமாகக் கொண்டிருந்தபோதும் , தமிழ் மீதும் தணியாத ஆர்வம் கொண்டு , இரு மொழிகளிலும் சிறுகதை,நாவல் படைப்புக்கள்,மொழியாக்கங்கள்,ஆய்வுக் கட்டுரைகள்,நாடக நிகழ்கலைஆக்கங்கள் எனப் பல துறைகளிலும் முனைப்போடு தீவிரமாக இயங்கி வருபவர்.
தான் ஈடுபட்டுள்ள துறைகளில் குறிப்பிடத்தக்க பல விருதுகளையும், பரிசுகளையும் ,பாராட்டுக்களையும் பெற்றுள்ள -இன்னும் நேரில் காணாத -இந்த அன்புத் தோழிக்கு என் சார்பில் -அவரது சிறந்த இணையப் பங்களிப்புக்காகப்
பட்டாம்பூச்சி விருதை அளிப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.


5.திருமதி கோமதி நடராஜன்:


வலை வழி இவர் எனக்கு அறிமுகமானபோதும் , எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவி .தன் இளமையில் எழுதாமல் விட்டதையெல்லாம் சேர்த்து இப்பொழுது எழுதி,'வள்ளுவம்' என்ற தன் வலையில் பதிவு செய்து வருபவர்.
கல்லூரி நாட்களில்தன்னுள் உறங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தாயைத் துயில் கலைத்து (இவை அவரின் சொந்த வார்த்தைகள்) வெள்ளமெனப் பொங்கி வரும் தன் கற்பனைக்கும், எழுத்துக்கும் வலையை வடிகாலாக்கிக் கொண்டிருப்பவர்.
மூத்த குடிமக்களுள் ஒருவரான இவரது தமிழ்ப் பற்றையும், படைப்பார்வத்தையும் பாராட்டும் வகையில்
'பட்டாம்பூச்சி' விருதை இவருக்கு அளித்துப் பாராட்டுகிறேன்.

பி.கு. :
வலை வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
விருது பெற்ற ஐவர் குறித்த அறிமுகத்தோடு நின்றுவிடாமல் அவர்களது வலைத் தளங்களுக்கு வருகை புரிந்து கருத்துரை இடுவதே அவர்களை மகிழ்வடையச் செய்யும்..

5 கருத்துகள் :

KABEER ANBAN சொன்னது…

விருதுக்கு மிக்க நன்றி பேராசிரியர் அவர்களே,

பல பெரியவர்களிடையே என்னையும் பரிந்துரைத்திருப்பது கூச்சமாக இருக்கிறது.

//....அது அவருக்கும் விருதுக்கும் மேலும் பெருமை சேர்ப்பது //

தங்கள் பரிந்துரையே ஒரு பெரிய பெருமையன்றி வேறில்லை. தங்கள் பரிந்துரையை ஏற்று என் ‘கற்கை நன்றே’ வலைப்பூவில் செயல்படுத்தி விட்டேன். :)) மிக்க நன்றி.

பிற பதிவாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

goma சொன்னது…

எம்.ஏ.சுசீலா
தங்கள் தேர்ந்தெடுப்பில் என் பெயரும் கண்டு மகிழ்ந்தேன்.பட்டாம்பூச்சி விருது, வள்ளுவத்தை அலங்கரிக்கிறது .விருதுக்கு நன்றி.

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

வணக்கம் அம்மா பட்டாம் பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

விருது பெற்றவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்......

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இவ்விடுகையின் வாயிலாக புதிய வலைப்பதிவர்களை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி....
தொடர்க தங்கள் தமிழ்ப்பணி...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....