''சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது''
-பிரமிள்
''அள்ளிக் கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அன்னியமாச்சு
ஆகாயம் அலைபுரளும் அதில்
கைநீரைக் கவிழ்த்தேன்
போகும் நீரில்
எது என் நீர்''
-சுகுமாரன்
''தினசரி வழக்கமாகிவிட்டது
தபால் பெட்டியைத் திறந்து
பார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது
இரண்டு நாட்களாகவே எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்
எந்தப் பறவை எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தை''
-வண்ணதாசன்
''செயலின் உச்ச கட்டம் செயலின்மை; பேச்சின் உச்ச கட்டம் மௌனம்; வில் வித்தையின் உச்ச கட்டம் வில்லை எய்யாமல் இருப்பதுதான்''-ஒரு 'ஜென்'கதையிலிருந்து...
''கலைஞனின் திட்டங்களை மீறிப் படைப்பு அவனை அழைத்துக் கொண்டு போகும் இடம்தான் படைப்பின் உச்சம்''
-ஓவியர் மணியம் செல்வன்
''மொழியைப் படைப்பு மொழியாக மாற்றுவதற்கு மொழியை மீட்டியபடியே இருக்க வேண்டும். பல்வேறு விதமாக மொழியைச் சுருதி கூட்ட வேண்டும். ஒரு தருணத்தில் அக மனதின் சுருதியும் , மொழியின் சுருதியும் ஒன்றாகின்றன.
அகமனதின் அலைவரிசைக்கும், மொழியின் அலைவரிசைக்கும் இடையே இசைவு ஏற்பட்டால்தான் படைப்பு உருவாக முடியும்''
-ஜெயமோகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
3 கருத்துகள் :
நல்ல தொகுப்பாகவுள்ளது அம்மா.
//''செயலின் உச்ச கட்டம் செயலின்மை; பேச்சின் உச்ச கட்டம் மௌனம்; வில் வித்தையின் உச்ச கட்டம் வில்லை எய்யாமல் இருப்பதுதான்''-ஒரு 'ஜென்'கதையிலிருந்து...//
அடடே!
வண்ணதாசன் சிறுகதை எழுத வந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கன் கல்லூரியும் சந்தியா பதிப்பகமும் இணைந்து 'அந்நியமற்ற நதி' என்ற தலைப்பில் விழா நடத்தினார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ச.தமிழ்ச்செல்வன், பாரதிகிருஷ்ணகுமார், லிபிஆரண்யா, சாம்ராஜ் எனப் பலர் வண்ணதாசனின் கதை, கவிதை, கடிதங்களைப் பற்றி உரையாற்றினர்.
மேலும், அன்று காலை பாத்திமாகல்லூரியில் பேசியதாக வண்ணதாசன் சொன்னார்.
பதிவில் உள்ள வண்ணதாசன் கவிதை வரிகளைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது.
கருத்துரையிடுக