துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

5.6.09

இயக்கங்களும் பண்பாட்டு அதிர்வுகளும்

மனித குல வரலாற்றின் பக்கங்கள் புரளும்போதெல்லாம் , 'மாற்றம் என்பது மட்டுமே என்றென்றும் மாறாத மெய்ம்மை ' என்ற தத்துவம் , மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக் கொண்டு வருகிறது. பண்பாட்டு மாற்றங்களும் இதிலிருந்து விலக்குப் பெற்றதில்லை.

மனிதன் தன்னை ஆறறிவு பெற்றவனாக உணரத் தொடங்கிய நாள் முதல் அவன் வாழ்வில் நாகரிகமும் , பண்பாடும் படிப் படியாகத் தலையெடுக்கத் தொடங்கின.இவற்றுள் எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரக் கூடிய சிறந்த கூறுகளும் உண்டு;கால மாற்றங்களுக்கேற்பக் கழற்றி மாற்றியாக வேண்டிய சில தவறான போக்குகளும் அவற்றில் உண்டு ; சக மனிதர்களை அடக்கி ஆளும் ஆதிக்க மனப் போக்கு மனிதனிடம் தலையெடுக்கத் தொடங்கிய பிறகு வலிந்து புகுத்தப்பட்ட கூறுகள் என்று அவற்றைக் கூறலாம்.

மனித இனம் ,வருணங்களாலும் , சாதிகளாலும் பிளவுபட்டு அவற்றின் அடிப்படையில் எழுந்த மேலாதிக்கம் , உடல் அளவில் மட்டுமே மாறுபட்டிருக்கும் ஆண் - பெண் வேறுபாட்டை அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தித் தன்னை உயர்வான தளத்தில் நிலைநிறுத்திக் கொண்ட ஆணாதிக்கம் ஆகிய ஆதிக்க சக்திகளின் முயற்சிகளால்'பண்பாடு' என்ற பெயரில் -அந்தப்போர்வையில் நுழைக்கப்பட்ட - திணிக்கப்பட்ட கற்பிதங்களை இந்திய வரலாற்றில் ஏராளமாகக் காண இயலும். மேலே குறிப்பிட்ட சக்திகளுக்கு எதிராக , ஒடுக்கப்பட்ட இனம் எழுச்சி கொள்ளும் காலகட்டம் சம்பவிக்கும்போது , பொய்மையான பண்பாட்டு வேலிகள் , இயல்பாகவே தகர்ந்து விடுகின்றன.

காலத்திற்கும் , மனித நேயத்திற்கும் ஒவ்வாத பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படைகள் ஆட்டம் காணுகையில் ,இது நாள் வரையில் தங்கள் வசதிக்காக அவற்றை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்த 'போலிப் பண்பாட்டுக் காவலர்க'ளும் அதிர்ச்சிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர். சமூகப்பொதுப்புத்தியில் அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் சில கருத்துருவாக்கங்களால் -குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் மட்டுமே தங்கள் சிந்தனையைச் சுருக்கி வைத்திருக்கும் சமூகத்தின் ஒரு பகுதியினரும் எந்த வழியில் செல்வதென்பதை அறியாதவர்களாய் அதிர்ந்துபோய் மிரண்டு போய்விடுகிறார்கள்.வழிவழி வந்த மரபுகள், மறு பரிசீலனைகளுக்கும் , மறுபார்வைக்கும் உட்படுத்தப்படுவதைக் காலங்காலமாக மூளைச் சலவைக்கு ஆட்பட்டு வந்த அவர்களால் தாங்கிக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் இயலாமல் போய் விடுகிறது.

கலகக் குரல்களாக வெடிக்கும் இத்தகைய மாற்றுப்பண்பாடுகள் , எதிர் பண்பாடுகள் ஆகிய பண்பாட்டுப் புரட்சிகள் , தனி மனித முயற்சிகளால் ஓரிரவுக்குள் சாத்தியமாகக் கூடியவை அல்ல. தகுந்த சித்தாந்தப் பின் புலமும் , மனித சக்தியும் பின்னிப் பிணைந்திருக்கும் சமூக , அரசியல் , பொருளாதார இயக்கங்களே பண்பாட்டு ரீதியாக மாற்றுக் கருத்துக்களைத் தனி மனித மனங்களில் படிப் படியாகத் தூவுகின்றன.அந்த இயக்கங்களை அடியொற்றி , அவற்றின் தாக்கத்தால் வெளிவந்த இலக்கியங்களுக்கும் இம் மாற்றங்களில் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.

இந்தியாவைப் பொறுத்தவரை , 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நேர்ந்த கல்விப்பெருக்கம் , நகர்மயமாதல் , தொழிற்புரட்சி ஆகியவற்றால் விளைந்த பண்பாட்டு மாற்றங்களே , குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில், முதல் அடியை எடுத்து வைத்த முதன்மையான மாற்றங்கள்.நாட்டில் வீறு பெற்றுவந்த தேசிய இயக்கம் , சமய , சமூக மறுமலர்ச்சி இயக்கங்கள் ,பகுத்தறிவு இயக்கம் , பொதுவுடைமை இயக்கம் ஆகியனவும் , அவ்வியக்கங்களின் தாக்கங்களை அழுத்தமாக உள்ளடக்கியபடி வெளிவந்த படைப்பிலக்கியங்களும் மனித மனதில் அழுத்தமாக வேரோடிப் போயிருந்த பண்பாடு குறித்த கண்ணோட்டத்தில் தொடக்க நிலையிலான சில அடிப்படையான மாற்றங்களைத் தோற்றுவித்தன. தொடர்ந்து நவீனத்துவ , பின் நவீனத்துவ கால கட்டங்களில் தமிழ் இலக்கிய வெளியிலும் , சமூகப்பரப்பிலும் தலித்திய - பெண்ணிய இயக்கங்கள் வலுப் பெறத் தொடங்கின. அவற்றின் பாதிப்பால் வெளிவரும் படைப்புக்களின் உள்ளடக்கம் மட்டுமன்றிப் படைப்பு மொழியுமே கூட மாற்றம் பெற்றதாகச் சில வலுவான பண்பாட்டு அதிர்வுகளை ஏற்படுத்தி வருவதைக் காண முடிகிறது.

நேற்றைய அதிர்வுகள் , இன்று இயல்பானவையாகி விடலாம்; இன்றைய அதிர்ச்சிகள் நாளை மிகவும் எளிதாக ஏற்கவும் படலாம்.
'பழையன கழிதலும் புதியன புகுதலும்' வழுவில்லாததுபோலவே , பண்பாட்டில் படிந்துள்ள கசடுகள் நீங்குவதிலும் , மனித மாண்புக்கு வழிகோலும் புதிய பண்பாடுகள் தழைப்பதிலும் எந்தத் தவறும் இல்லை. எனினும் சமூக மேம்பாட்டுக்கு அவற்றால் பயன் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நலனிலும் , இலக்கிய வளர்ச்சியிலும் மெய்யான அக்கறை கொண்டோரின் உண்மையான விழைவாகும்.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....