துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

23.1.11

தாகூரின் தாக்கத்தில்.....


இலக்கியப் படைப்பு, இலக்கிய ரசனை ஆகியவற்றில் ஈர்ப்புக் கொண்டவர் எவராயினும் தாகூர்,பாரதி என்னும் இரு மகாகவிகளின் தாக்கம் பெறாதவர்களாக அவர்கள் இருப்பதென்பது, சாத்தியமில்லை.

மொழியும் அதன் அழகும் என்னை வசீகரிக்கத் தொடங்கிய இளம் பருவத்தில் தமிழின் வழியாக,பாரதியை நேரடியாகக் கண்டடைய முடிந்ததைப் போல்,தாகூரின் வாழ்வையும்,அவரது படைப்புக்களையும் தமிழின் மொழியாக்க நூல்கள் வழியே(குறிப்பாக த.நா.குமாரஸ்வாமி)நான் கண்டு கொண்டேன்.
செல்வச்செழுமை வாய்ந்த குடும்பத்தில் பிறக்க நேர்ந்தாலும் அதிலிருந்து ஒதுங்கி விலகி...ஒரு தனிமை விரும்பியாய்...மரபு சார் கல்வியின் பால் தனது எதிர்ப்புணர்வைப் பதிவு செய்பவராகத் தாகூரின் இளமைப் பருவம் கழிந்திருப்பதை முதன்முதலாக நான் அறிந்து கொள்ள நேர்ந்தபோது ஒற்றைக் குழந்தையாகப் பிறந்து தனிமை என்பது நிர்ப்பந்தமாக்கப்பட்ட நிலையில் என் உள்ளமும் கூட அந்த வகையான உணர்வுகளின் ஒத்த அலைவரிசையில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதை- நான் அறிந்து கொள்ள நேர்ந்தது.

பிறகு கல்லூரிக்காலம் வரை மொழியாக்க நூல்கள் மூலமாகவே நான் தாகூரின் சிறுகதைகள்,நாவல்கள்,கவிதைகள் என அனைத்தையும் வாசித்துக் கொண்டு வந்தேன்.
குறிப்பிட்ட அந்த இலக்கிய வடிவங்களுக்கான இலக்கணம் இன்னதென்பது புரிபடாத ஒரு பருவத்திலும்கூட, அவை குறித்த அடிப்படைப் புரிதலும், கவிதை மற்றும் சிறுகதை ஆக்கங்களை உருவாக்க வேண்டும் என்னும் பொறியும் என் உள்ளத்தில் ஆழமாக விதைக்கப்பட்டதற்குத் தாகூர் சார்ந்த தொடர்ந்த என் வாசிப்பும் முதன்மையான ஒரு காரணமாக இருந்திருத்தல் கூடும்.

கல்லூரி நாட்களில் படிக்க நேர்ந்த தாகூரின் புயல் நாவல்-'The wreck- அவரை ஒரு அகலமான கிழியில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.
சாருலதாவும் காபூலிவாலாவும் போஸ்ட்மாஸ்டரும் வினோதினியும் என்னைப் பலகாலம் அலைக்கழித்ததுண்டு என்றபோதும் என் நெஞ்சுக்கு நெருக்கமாக நான் அடிக்கடி உணர்ந்து இப்போதும் திளைப்பவை..கீதாஞ்சலியின் பல வரிகளே.
குறிப்பாக..

’’நான் பாட நினைத்த பாடல் இன்னமும் பாடப்படாமலேயே இருக்கிறது.
சுருதியை மீட்டுவதிலும்....கலைப்பதிலுமே என் காலம் கழிகிறது
பாடலின் அலைவரிசை கையில் சிக்கவில்லை..
சொற்கோவையும்கூடச் சரிவர இயையவில்லை.....

பாடியே ஆக வேண்டுமென்ற தாகம் மட்டும் நெஞ்சினுள்..’’

என்னும் வரிகளில் வெளிப்படும் தாகூரின் எளிமை..அடக்கம்...
படைப்பின் உச்சம் தொடவேண்டுமென்று--இன்னும் இன்னும் என எழும் தாகம்...
இவையனைத்தும் ஒரு வேதம் போல என்னை ஆட்கொண்டு என்றும் இயக்கி வருபவை;
எழுதியதன் போதாமையை வாசிப்பின் அரைகுறைத்தனத்தைச் சாஸ்வதமாக அறிவுறுத்தியபடி...இன்னும் செம்மைப்பட வேண்டும் என எனக்குப் போதித்துக் கொண்டே இருப்பவை..

‘’சூரியன் மறைந்து விட்டதே என்று அழாதே 
நிலவானது உன் வானிலும் ஒளிரும்
நிலவும் மறைந்து விட்டதே என்று வருந்தாதே
அங்கே
நட்சத்திரங்களாவது கண்சிமிட்டிக் கொண்டிருக்கும்’’
என்னும் தாகூரின் சொற்கள்,தன்னம்பிக்கைப்பாடத்தை எனக்குப் புகட்டியபடி இன்றுவரை என்னுடன் கை விளக்காய்த் துணை வந்து கொண்டிருப்பவை.

தாகூர் ஒரு பாற்கடல்.
அந்தப் பாற்கடலின் தெறிப்புக்கள்  பெரும்பாலான இலக்கிய ஆர்வலர்களின் படைப்புக்களில் மட்டுமன்றி, வாழ்வின் தருணங்களிலும் உள்ளீடாக ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.
என் தருணங்களும் அது போன்றவையே!



5 கருத்துகள் :

அப்பாதுரை சொன்னது…

பாரதியைப் போலவே முற்போக்கு எண்ணங்களை எழுத்தில் வடித்தவர் தாகூர். தாகூருக்குக் கிடைத்த தேசீய/உலகளவு அங்கீகாரம் பாரதிக்குக் கிடைக்கவில்லையே என்ற மண் ஆதங்கம் அவ்வப்போது தோன்றினாலும், பள்ளி/கல்லூரி நாட்களில் தாகூரின் கருத்துக்களைப் படித்து ரசித்தேன். பின்னாளில் தாகூரின் கலைத்தடங்கள் எந்த அளவுக்கு பரவியிருந்தது என்பதை அறிந்த போது பிரமித்துப் போனேன். இந்தியாவின் அசல் பொக்கிஷம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமையான பகிர்வு .பகர்வுக்கு நன்றி .

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நண்பர்களுக்கு,
நன்றி..
நோபல் பரிசு பெறத் தகுதியானவராக இருந்தது மட்டுமன்றி, அதற்குச் சாதகமான பல காரணிகளும் உடன் சேர்ந்ததனாலேயே தாகூர் அப் பரிசை வெல்ல முடிந்தது என்பதையும்,பாரதியின் சிறந்த கவிதைகள் ஆங்கிலத்திலோ,ஃஃபிரெஞ்சிலோ சுவை குன்றாமல் மொழிபெயர்க்கப்படாததுமே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காததற்கான காரணம் என்பதையும் வங்க மொழிபெயர்ப்பாளராகிய கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி தனது அண்மை நூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
’’எந்தப் பரிசும் ஒரு கலைஞனின் தகுதிக்குச் சான்று அல்ல.....எந்த ஒரு பரிசும் ஒருவருக்குக் கிடைப்பது,சில சாதகமான காரணிகள் ஒன்றிணைவதைப் பொறுத்தது.அது ஒரு தற்செயல் நிகழ்ச்சி’’என்கிறார் அவர்...
இது எல்லாக் காலத்திலும் எல்லா விருதுகளுக்கும் பொருத்தமானதுதானே?

எம்.ஏ.சுசீலா சொன்னது…

கமலாதேவி அரவிந்தன். சிங்கப்பூர்.
சுசீலா சேச்சி
அழகியல் பாணியில் நுண்விவரிப்பு, இக்கட்டுரையில் பல இடங்களில் வருகிறது
மிகவும் ரசித்து, லயித்து, படித்தேன்.
வாழ்த்துக்கள்.
(எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பட்ட மினஞ்சல்)

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

மேடம்,நான் மிக சாதரணமாக பதிவு எழுதுபவள்.எனக்கு தற்போது கிடைத்திற்கும் வாய்ப்பில் தங்களையும் தங்களின் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்,கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கலாம்.

http://blogintamil.blogspot.com/2011/10/7102011.html

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....