.
‘’மெய்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க
மா மேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை
கன்று கோள் ஒழியக் கடிய வீசிக்
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப்பானாள்..’’
என்று கூதிர் காலத்து நள்ளிரவு வேளையின் நடுக்கும் குளிரை விவரித்துக் கொண்டு போகின்றன நக்கீரரின் வரிகள்
(கூதிர் காலம் என்பது,அடைமழை பொழியும் ஐப்பசி,கார்த்திகை மாதங்களைக் குறிப்பது-2000 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தக் குறிப்பிட்ட மாதங்களில் அத்தகைய குளிர் தமிழகத்தை ஆட்டிப் படைத்திருக்கலாம்.புவிவெப்பமடைந்து பொங்கும் இன்றைய சூழலில் அது ஒரு கற்காலக்கனவு மட்டுமே )
.
கூதிர்காலப் பெரும்பனி மெய்யை-உடம்பை- நலிய வைக்கிறது.
தீப்பந்தங்களாகிய கொள்ளிக்கட்டைகளை ஏற்றிக் கூட்டமாய்க் குளிர் காய்ந்தபடி பற்கள் பறை கொட்ட ,கன்னக் கதுப்புகள் (கவுள்புடை)நடுநடுங்க மக்கள் தவிக்கிறார்கள்.
’மா ’வாகிய விலங்குகள் மேய்ச்சலை மறந்து போகின்றன.
மந்திகள் கிளை விட்டுக் கிளை தாவாமல் ஒடுங்கிக்கிடக்கின்றன.
பறக்கும் தொழிலைத் துறக்கும் பறவைகள் சிறகு பொத்திக் கூடடைந்து கிடக்கின்றன.
பால்கறக்கும் கறவைப் பசுக்கள் கன்றுகளை அரவணைத்து நக்கிக் கொடுக்காமல் சோர்ந்து கிடக்கின்றன.
கற்பாறையாகிய குன்றையும் குளிர வைக்கும் -குன்று குளிர்ப்பன்ன-கூதிர் காலத்து நள்ளிரவுப் பொழுதில் கடிதாக வீசும் வாடையின் கொடுமை இது..பி.கு;
தமிழ்நாட்டில் வசித்த 58 ஆண்டுகள் அனுபவித்திராத மேற்குறித்த வாடையின் கொடுமையை.-குளிரின் தாக்கத்தை
தில்லியில் வாழ நேர்ந்த கடந்த 4 ஆண்டுகளில் ஓரளவு உணர்ந்துபழகி விட்டாலும்...
கடந்த ஒரு வாரமாக..
அதிகபட்ச வெப்பநிலை 12,13 டிகிரியாகவும்,
குறைந்தபட்ச வெப்பநிலை 3,4 டிகிரியாகவும்.
இருக்கும் கொடுமை தாங்காமல்......
கையுறையும் காலுறையும் தலையுறையும் மாட்டி..
நெடுநல் வாடைக்குள் தஞ்சம் புகுந்த நடுநடுங்க வைக்கும் நடு இரவுக் குளிர்ப்பொழுதொன்றின் பதிவு இது.
போர் நிமித்தம் பிரிந்து சென்றிருக்கும் தலைவன் வரத் தாமதமாவதால் நெடு வாடையாக-நீண்ட வாடையாக நீளும் கூதிர் காலம் ,
அவன் வரவால் நல் வாடையாக மாறுவதால் நெடு ,நல் என இரு அடைமொழி தந்து நெடுநல்வாடையாகச் சங்கப் பத்துப் பாட்டில் நக்கீரர் பாடி வைத்ததே நெடுநல்வாடை.
சங்கத் தலைவிக்கு வேண்டுமானால்,இது நல் வாடையாக இருக்கலாம்.
நிச்சயம் தலைநகர்(தில்லி)வாசிகளுக்கு இந்த நீண்ட கடுங்குளிர்அப்படி இருக்கவாய்ப்பில்லை....
கூதிர்ப் பானாள்-பால் நாள் என்பது நாளின் நடுப்பகுதி,
இங்கு நள்ளிரவுப் பொழுதைக்குறிக்கிறது...
8 கருத்துகள் :
அம்மா கூதிர் காலத்தின் குளிரை தங்கள் எழுத்து அழகாக சுட்டிக்காட்டுகிறது.
பழமை வாய்ந்த நம் தமிழ் இலக்கியத்தின் மகத்துவத்தை தங்களின் வாயிலாக
கற்றுக்கொள்ள விரும்புகிறோம். இன்னும் இது போன்ற சங்க , சமய இலக்கியங்களை எடுத்து இயம்பி , சம காலத்தோடு ஒப்பிட்டுக் கூறும் தன்மைமிக்க பத்திகளை தர வேண்டுகிறோம்.
என்றென்றும்
தங்கள் வாசகன்
தேவராஜ் விட்டலன்
http://vittalankavithaigal.blogspot.com
கூடிய விரைவில் கூதிர் காலம் முடியட்டும் அம்மா..
மிக அருமையான பதிவு. குளிர் விரைவில் நின்றுவிடும் . ஆனால் இதுபோன்ற பதிவுகள் தொடர வேண்டும்
selvakumar
இந்நாளில் நெடுநல்வாடை - குளிருக்கு இதமாக காபி, ஏலக்காய் டீ, சுக்குக்கஷாயம், மற்றும் ஹாட் சாக்லேட்டின் மணம் தான் :) தில்லிக்குளிரைப் பற்றி ஒன்றும் தெரியாமல் ஒரு முறை சிக்கிக் கொண்டதை மறக்கவே முடியாது.
அந்நாளில் இது போன்ற பாடல்களெல்லாம் பொதுமக்களுக்குச் சென்றடைய என்ன செய்தார்கள்? "யம்மா குளிருதே" என்று பதுங்காமல், 'மந்தி கூர' என்று நுண்ணிய பார்வையோடு பாட்டெழுதியிருக்கும் புலவர்களை மக்கள் எப்படி நடத்தினார்கள்? விவரம் இருந்தால் சொல்லுங்களேன்? நன்றி.
தஞ்சையிலும் கூட இம்முறை குளிர்கூடுதலென்று கேள்விப்படுகிறோமே..
கடுங்குளிரைப் பொருட்படுத்தாமல் இதனை தட்டச்சியதும் பெரிய விசயம் தான்..
பறக்கும் தொழிலை மறந்த பறவையைப்போல் பதிவெழுதுவதை மறந்து அமர்ந்திருக்கிறேனே..
புலவர்களுக்குப் புரவலர்களாக இருந்து அவர்களின் புலமை சாகாமல் பார்த்துக் கொண்டது..பெரும்பாலும் மன்னர்கள்தான்.இலக்கியம் ஜனநாயகப்படுத்தப்பட வெகுகாலம்பிடித்ததென்றே கூற முடிகிறது.ஆனாலும் அரசர்கள் ஒதுக்கினாலும் ஆன்மத் துணிவோடு’எத்திசைச் செலினும் அத் திசைச்சோறே’எனப் பாடியபடி குளிர்,வெயில்,வறுமை நோக்காமல் அக்காலப் புலவர்கள் பாடித் திரிந்திருக்கிறார்கள்.
வரவுக்கு நன்றி விட்டலன்,முத்து,இளங்கோ,இந்திரப்பிரஸ்தம்,அப்பாதுரை..
கடுமையான குளிரைப்பற்றி
சிறப்பான இலக்கியப்பகிர்வுகள்..
கருத்துரையிடுக