''பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’’
-புறநானூறு

11.12.10

அசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்

’உண்மையின்அழகு பொதிந்த ஓர் ஆன்மாவை சிருஷ்டிப்பதே என் நோக்கம்’’எனக் குறிப்பிடும் தஸ்தாயெவ்ஸ்கி அந்த எண்ணத்துடன் உருவாக்கியுள்ள ஆக்கமே இடியட்/அசடன்.(The Idiot)

 குற்றமும் தண்டனையும் நாவலை விடவும் அளவில் பெரியதாக
 நான்கு பாகங்களைக் கொண்டிருக்கும் இந்த நாவலைக்
கொடிய வறுமை,இடைவிடாச்சூதாட்டம்,முதற்குழந்தையின் மரணம் முதலிய சொந்த வாழ்க்கைச்சிக்கல்களுக்கு நடுவிலிருந்து கொண்டு,அவற்றோடு போராடியபடி
-
 முன்னதை முடித்த இரண்டு வருடங்களுக்குள்ளேயே உருவாக்கிச் சாதனை படைத்தார் தஸ்தாயெவ்ஸ்கி.அந்த நாவலைப் போன்ற சீரான ஒருமுகத் தன்மை அற்றதாய்ப் பல்வேறு முடிச்சுக்களும் பலரின் உணர்வுப் போராட்டங்களும் இணைந்த ஒரு கலவை இடியட். 
 மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த நாவலின் மூலம் தரிசிக்கும்போது ஏற்படும் பரவசச் சிலிர்ப்பு வார்த்தையில் விவரிக்க ஒண்ணாதது

மனிதச் சிறுமைகளின் கறை படியாத புனிதமான ஒரு மானுடனாக வளர்ந்து உருவாகும் இளவரசன் மிஷ்கின் , தான் போற்றிவந்த மேன்மையான கிறித்தவக்கோட்பாடுகளுக்கு எதிர்மாறான ஒரு சமூகத்துக்குள் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது;
பணம்,அதிகாரம்,பாலியல் வேட்கை ஆகியவற்றில் மட்டுமே கருத்துச் செலுத்தி வெறி கொண்டு அலையும் அந்தக் கும்பல் அவனை எவ்வாறு மூச்சுத் திணற வைக்கிறது என்பதே இந்நாவல். 
குறிப்பிட்ட அந்தச் சமூகத்துக்குள் அவன் காலடி எடுத்து வைத்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே - அதி பயங்கரமாகத் தன்னை மூழ்கடிக்கக் கூடிய ஒரு காதல் முக்கோணத்தின் பிடிக்குள்ளும் அவன் ஆட்பட்டுப்போகிறான்;
’ஊரறிந்து’சிறுமைப்பட்டுப்போன ஒரு பெண்ணும்,அழகிய வேறொரு 
இளம் பெண்ணும் அவனது அன்பைப்பெறப் பகையாளிகளாகிப் போட்டி போடுகின்றனர்.மிஷ்கினை அலைக்கழிக்கும் அந்த இரண்டு பெண்களையும்....அவர்களின் மன அமைப்பையும் துருவித் துருவிப் படம் பிடித்து அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.
 ஒருத்தி மிகப் பாதுகாப்பான சூழலில் வாழும் வாய்ப்புக் கிடைத்தவள்;ஒழுக்கத்தை அரணாகப் பூண்டிருப்பவள்.
(அக்லேயா இவாநோவ்னா)
மற்றொருத்தி, சந்தர்ப்ப சூழலால் சீரழிவுகளுக்கு ஆளாகி  அதன் காரணமாகவே ஒருபுறம் வஞ்சத்தோடும் , மறுபுறம் தாழ்வு மனப்பான்மையோடும் தவித்துக் கொண்டிருப்பவள்.(நஸ்டாஸ்யா பிலிப்போவ்னா)
இருவருமே இடியட் மிஷ்கினை நேசிக்கவும் செய்கிறார்கள்; அவனை அலைக்கழிப்புக்கும் ஆளாக்குகிறார்கள்.
மிஷ்கினும் அவர்கள் இருவரையும் வெவ்வேறு கண்ணோட்டங்களோடு அணுகிப் பரிவும் பாசமும் காட்டுகிறான்.
ஆனால்  ஏற்கனவே சற்று மனப்பிறழ்வுக்கு ஆட்பட்டிருந்த அவனை மேலும் பைத்தியமாக்கி வேடிக்கை பார்ப்பதே அவர்கள் இருவரின் வாடிக்கையாக இருக்கிறது.
ஒருத்தி திருமண நிச்சயம் வரை சென்றுவிட்டு அவனை மறுதலிக்கிறாள்.
இன்னொருத்தியோ மணமேடையில் அவனைக் காத்திருக்க வைத்து விட்டு ஓடிப் போகிறாள்.
பொருள்கொள்ளை,வதந்தி,கொலை ஆகியவை தொடர்ந்து நிகழ்ந்தபடி மிஷ்கினின் அற உணர்வுகளுக்குச் சவால் விடுக்கின்றன.
மனித மனத்தின் புரியாத பக்கங்களை....இண்டு இடுக்குகளைப் புறவயப் பார்வையோடு வாசகர் முன் வைத்து விட்டுத் தீர்ப்பை அவரவர் ஏற்புத் திறனுக்கே விட்டு விடுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி

மனிதனுக்குள் ஒளிந்திருக்கும்’ இன்னொரு மனிதனை இனம் காண நேரும்போது ஏற்படும் கரைகாணா மானுட வேதனைகளையும்,உள்ளச் சிதைவுகளையும் இந்நாவலின் மூலம் கண்டடைய முனைந்திருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.

ரஷ்ய மக்களின் சிக்கலான - வேறுபட்ட மனோபாவங்களைத் துருவிப்பார்த்துப் பதிவு செய்திருக்கும் முற்றான ஒரு ரஷ்யத் தன்மை கொண்ட நாவலாக உருப்பெற்றிருப்பது ‘அசடன்’.
’’எல்லோரும் என்னை ஓர் உளவியலாளன் என்று அழைக்கிறார்கள்;ஆனால் அது பொருத்தமானதில்லை.என்னிடம் இருப்பது சற்று மிகையான யதார்த்தவாதம்;அதனாலேதான் மனித ஆன்மாக்களின் அடியாழம் வரை ஊடுருவிப் பார்த்து என்னால் சித்தரித்திருக்கமுடிந்திருக்கிறது’’என்பதே தன்னைக்குறித்து தஸ்தாயெவ்ஸ்கி வெளியிடும் கணிப்பு....


பின்குறிப்பு;

தஸ்தயெவ்ஸ்கியின் இடியட் நாவல் அதன் ஆங்கில மொழியாக்கத்தின் துணையுடன் ’அசடன்’என்ற பெயரில் என்னால் முழுமையாக மொழியாக்கம் செய்யப்பட்டு மார்ச் மாதம் - (2011 )வெளியாக இருக்கிறது.
நூலை வெளியிடவிருக்கும் மதுரை பாரதி புத்தக நிலையம் அதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை அறிவித்திருக்கிறது.
(தமிழில் 800 பக்க அளவு வெளிவரவிருக்கும் இந்நாவலின் விலை 500 ரூபாய்;
பிப்.15 தேதிக்குள் முன்பதிவு செய்வோர்க்கு 350 ரூபாய்.

கூரியரில்பெற..75 ரூபாய்
’பாரதி புக் ஹவுஸ்’என்ற பெயரில்மதுரையில் மாற்றும் வகையில் வரைவோலையாகவோ- மணிஆர்டராகவோ கூட அனுப்பலாம்
மேலும் தொடர்புக்கு;
Bharathi Book House,D-28, Corporation Shopping Complex,Periyar Bus Stand, Madurai
இந்நூல் வெளியீடு குறித்த செய்தி,இம்மாதக் காலச்சுவடு(டிச.2010)இதழிலும் வெளியாகி இருக்கிறது.

[குற்றமும் தண்டனையும் நூல் தேவைப்படுவோரும் மேற்குறித்த முகவரியை அணுகலாம்]
2 கருத்துகள் :

தேவராஜ் விட்டலன் சொன்னது…

தங்கள் அயராத உழைப்பு என்னை பொன்ற இளம் வாசகனுக்கு ஊக்கம் அளிக்கிறது.
அசடனுடன் ஆன அறிமுகத்திற்காக ஏங்கி கொண்டுள்ளேன்.
இந்த புத்தகத்தை வெளியிடும் பாரதி புக் ஹவுஸ்-ற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
என்றென்றும்
தங்கள் வாசகன்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

(எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கடிதம் சுசீலாவால் உள்ளிடப்பட்டது)அன்பிற்குரிய சுசீலா அவர்களுக்கு
தாங்கள் வலைத்தளத்தில் எழுதுவதை தொடர்ந்து வாசிக்கிறேன் மிக நன்றாக இருக்கிறது
அத்தோடு இலக்கிய விழாக்கள். கருத்தரங்குகள் என்று தீவிரமாகத் தொடர்ந்து செயல்படுவதும் ஒரு முன்னோடி ஆளுமையாக உங்களை அடையாளம் காட்டுகிறது
உங்கள் இடியட் மொழியாக்கத்தை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்
மிக்க அன்புடன்
எஸ்ராமகிருஷ்ணன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....