உங்கள் பதிவை அவ்வப்போது வந்து ஆவலோடு படிப்பேன். அந்த வகையில், நீங்கள் அறிவித்திருக்கும் இரண்டு மாற்றங்கள் பற்றிய என் கருத்து இது
1. இலக்கிய உரையாடல் செவிக்கும் அறிவுக்கும் சிறிதீயும் அருமையான திட்டம். எனினும் அதைக் கடிதம் மூலமாகச் செயல்படுத்த எண்ணியிருப்பது நடைமுறைச் சிக்கல். உங்களுக்கும் எனக்கும் (எங்களுக்கும்?). இணையத்தின் சிறப்பே அதன் சிறகுகள் தானே? இப்படித் தான் பறக்க வேண்டும் என்று சொல்லலாமா? உங்கள் தளம் உங்கள் மனம் - ஒப்புக்கொள்கிறேன்; இருந்தாலும் அறிவு நாலிடத்திற்கு சென்றடைய வேண்டும், இலக்கிய இன்பம் தொட்டனைத்தூறும் மணற்கேணித் தன்மையது என்று நம்பினால் பொதுவில் வையுங்கள். பகிர்வோருக்கும் எளிமையாக இருக்கும். இதனால் சில அறிவுக்குருடர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் - நாளடைவில் குறைந்து விடும். இதைக் கேள்வி பதில் தளமாக்குங்கள். கூடவே கருத்துப் பரிமாறவும் இடங்கொடுங்கள்.
2. பின்னூட்டத்துக்கும் கடிதமா? பின்னோக்கிப் போகிறீர்களே என்று உரிமையுடன் கேட்கலாமா? ஒரு வரிக்கருத்துகளின் வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் அவை வாசகர்களின் வாழ்த்துக்கள் தானே? விருப்பமில்லையென்றால் நீக்கிவிட உங்களுக்கு வசதியுண்டே?
இணையக் கலாசாரத்தின் அடிப்படையே தடையில்லாத உடனுக்குடன் கருத்துப் பரிமாற்றம் தானே? கருத்தையும் கோப்பையும் பொறுத்து உங்கள் தளத்தில் பரிமாற்றமும் முதிருமே?
அன்புடன்
-அப்பாதுரை
http://moonramsuzhi.blogspot.com/
http://nasivenba.blogspot.com/
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எம்.ஏ.சுசீலா..
அன்பான வலை நட்புக்களுக்கு,
எனது வலையில் நான் மேற்கொள்ளத் தொடங்கிய இரு மாற்றங்கள் பற்றி வந்த இந்தக் கடிதமும்,சென்ற பதிவில் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டிருந்த சில செய்திகளும் நண்பர்களுடனான உரையாடல்களும் இவற்றை மறு பரிசீலனை செய்வது நல்லது எனச்சற்று யோசிக்க வைத்திருக்கின்றன.
//இணையக் கலாசாரத்தின் அடிப்படையே தடையில்லாத உடனுக்குடன் கருத்துப் பரிமாற்றம் தானே? //
//இணையத்தின் சிறப்பே அதன் சிறகுகள் தானே? இப்படித் தான் பறக்க வேண்டும் என்று சொல்லலாமா?//
என்று திரு அப்பாதுரை எழுப்பும்கேள்வி மிக நியாயமானதுதான்.
நான் ஒரு சோதனை முயற்சியாகவே முதலில் இதை எண்ணினேன்.
வாசகர்களின் கருத்துப் பகிர்வுக்கும் தடையற்ற உடனடிக்
கருத்துப் பரிமாற்றத்துக்கும் இதனால் சிரமம் ஏற்படும் என்றால் - உடனடி எதிர்வினைகளைப் பெறுவதில் தடை விளையும் என்றால்
கருத்துரைப் படிவங்களை/பின்னூட்டங்களை
மீண்டும் மகிழ்வோடு திறந்து வைப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
கருத்துரைப் படிவங்களை/பின்னூட்டங்களை
மீண்டும் மகிழ்வோடு திறந்து வைப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
கருத்துரைப் பெட்டியின் கொள்ளளவுக்குள் அடங்காத கடிதங்களை மட்டும் தனியே வெளியிடுகிறேன்.
எனவே கருத்துரைகளுக்கு மாறாகக்கடிதங்கள் என்பதை மாற்றிக்
கருத்துரைகள்,கடிதங்கள்
என இரண்டுமேஏற்கப்படும் எனத் திருத்திக் கொள்கிறேன்.
கருத்துரைகள்,கடிதங்கள்
என இரண்டுமேஏற்கப்படும் எனத் திருத்திக் கொள்கிறேன்.
இலக்கிய உரையாடல் பகுதி அப்படியே இருக்கட்டும்.அதன் வழி எதைக் கேட்க வாசகர்கள் நினைக்கிறார்களோ அதைக் கேட்கட்டும்.இலக்கியம் தொடர்பான விளக்கங்களை..தகவல்களைப்பெற அது ஒரு வாயிலாக இருந்தால் பதிவுகளின் விறுவிறுப்பும் சுவையும் கூடும் என எதிர்பார்க்கிறேன்.
2 கருத்துகள் :
ஆஹா நான் நினைத்தேன், அப்பாதுரை சொல்லிவிட்டார். இதுதான் சரியான, இயல்பான, அணுகுமுறை, கருத்துக்களைப் பெற. நன்றி.
பெரிய மனம் உங்களுக்கு.
கருத்துரையிடுக