துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.12.10

நெறியாளுகை ,புனைவிலக்கியம்-விளக்கம்

அன்புள்ள அம்மா,
தில்லி தமிழ்ச் சங்கத்தின்  கருத்தரங்கத்தில்    தாங்களும் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி. 
வாழ்த்துக்கள்
எனது சிறிய இரு சந்தேகங்களைத் தெரிவிக்கிறேன்.
௧)கருத்தரங்கத்தில்  தங்களுடைய பணி நெறியாளுகை.  
தொகுத்து  வழங்குதலுக்கும் நெறியாளுகைக்கும் என்ன வேறுபாடு. .
௨)புனைவிலக்கியம்  என்றால் என்ன? 
    விளக்கவும்
அன்புடன்
நாராயணசாமி.ம 
புது தில்லி 
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
எம்.ஏ.சுசீலா
அன்பிற்குரிய திரு நாராயணசாமி அவர்களுக்கு,
தங்கள் வினா தில்லி தமிழ்ச்சங்கம் நிகழ்த்தவிருக்கும் 
இலக்கியக் கருத்தரங்கம் தொடர்பாக உள்ளதால் தங்கள் வினாக்களை , என் தளத்தில் புதிதாகத் தொடங்கியுள்ள இலக்கிய உரையாடல் என்னும் பகுதியின் முதல் உரையாடலாகக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.அந்த வாய்ப்பைத் தாங்கள் ஏற்படுத்தித் தந்ததில் மகிழ்ச்சி.
1.தொகுத்து  வழங்குதல்-நெறியாளுகை வேறுபாடு
Moderation என்னும் ஆங்கிலச் சொல்லையே நெறியாளுகை எனத் தமிழாக்கியுள்ளோம்.
கருத்தரங்கம் என்பது தொகுத்து வழங்கும் ஒரு கூட்டம் அல்லது நிகழ்வு அல்ல;அதற்கு மேலான சற்றுத் தீவிரத் தன்மை அதற்கு உண்டு.கருத்தரங்கில் பங்கேற்றுக் கட்டுரை வாசிப்போரின் ஆளுமை பற்றிய தெளிவு,புரிதல் இவற்றோடு,அவர்களது கட்டுரைகள் சார்ந்த கருத்துக்களின் மீதான விமரிசனங்களை/அல்லது அந்தக் கட்டுரை தொடர்பான மேலும் சில கருத்துக்களையும் கூறும் உரிமையும்,பார்வையாளர்களிடமிருந்து எழும் விவாதங்களையும்,கேள்விகளையும் - அத்தகைய வாதங்களின் போக்கு - மையக் கருத்துக்கு மாறாகத் திசைதிரும்பிச் சென்றுவிடாமல் நெறிப்படுத்திக் கொண்டு செல்லும் பொறுப்பும் நெறியாளும் நபருக்கு உண்டு. 
கருத்தரங்கை நெறிப்படுத்துபவர் குறிப்பிட்ட துறையில் கொஞ்சமாவது பரிச்சயமும்,தேர்ச்சியும் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதே தொகுப்பாளரையும்,நெறியாளுபவரையும் வேறுபடுத்தும் மற்றொரு முக்கியமான அம்சம்.

நாடகம்,திரைப்படம் முதலிய ஊடகங்களில் அனைத்தையும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும் முழுப் பொறுப்பும் இயக்குநர் வசத்திலேயே இருப்பதால் சில நாடக,திரைப்பட இயக்குநர்கள் ,இயக்கம் என்பதற்கு மாறாக நெறியாளுகை என்று குறிப்பிட்டுக் கொள்வதும் உண்டு.
பி.கு;இறுதியாக..இதைச் சொல்ல வேண்டாமென்று நினைத்தாலும் சொல்லாமலிருக்க முடியவில்லை.
பட்டிமன்றம்,வழக்காடு மன்றம் போன்றவற்றில் முன் வைக்கப்படும் விவாதங்களின் போக்கையும் கூட நடுவர்கள் கிட்டத்தட்ட இந்த முறையிலேதான் சமன் செய்து கொண்டு போக வேண்டுமென்றாலும், (50.60களில் அப்படித்தான் இருந்தது)
இன்றைய இலக்கியச் சூழலில் அவ்வாறு நடைபெறாமல் அவை நீர்த்துப் போய்க் கேலிக் கூத்துக்களாகிவிட்டதால் அங்கே பயன்படும் நடுவர் என்னும் சொல் இங்கே கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. 
மற்றும் ஒன்று..
தொகுப்பாளர் என்கிற கலாச்சாரமே தொலைக்காட்சி போன்ற ஊடகங்களால் பரவலாக்கப்பட்டு - இலக்கியக்கூட்டங்கள் வரை.-..அண்மையில்,புதிதாக வந்து சேர்ந்த ஒன்றுதான். 
அதற்கு முன்பு வரையில் குறிப்பிட்ட கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர்களே அடுத்தடுத்துப் பேச இருப்பவர்களை ஒருங்கிணைத்து நடத்தும் பணியையும் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார்கள்.
இன்று...தொகுப்பாளர்களுக்குத் திறமை இருக்கிறதோ,இல்லையோ தோற்ற,நடை உடை பாவனைகள் கவர்ச்சிகரமாக இருந்தால் போதும் என்ற அளவுக்குச் சில இடங்களில் நிலைமை கீழிறங்கிக் கிடக்கிறது.
2.புனைவிலக்கியம் பற்றி...
புனைவு என்பது கற்பனை.
நடந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கட்டுரைகளைத் தவிரக் கற்பனையான புனைவுகளால் உருவாகும் நாவல்,சிறுகதை,கவிதை ஆகிய அனைத்தும் புனைவிலக்கியங்களே.புனையப்படும் இலக்கியமே புனைவிலக்கியம்.
இன்னும் ஒன்று..
புனையப்படும் எல்லாமே புனைவிலக்கியமாக ஆகிவிடுவதுமில்லை.
புனையப்படும் எழுத்தில்,மெய்யான இலக்கியத் தகுதிகள்,அழகியல்கூறுகள்,உள்ளடக்கச்செறிவு ஆகியவைகளும் உடன் இணையும்போதுதான் புனைவிலக்கியம் என்ற உண்மையான தகுதிப்பாட்டுக்கு அது உரியதாகிறது.

7 கருத்துகள் :

ம.தி.சுதா சொன்னது…

தங்கள் தளத்தின் முதல் வருகை கருத்து இது... தங்களது இலக்கியப் பார்வையும் சொல்லாக்க விதமும் அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஷாஜஹான் ரஹ்மான் எழுதிய கடிதம்,
சுசீலாவால் உள்ளிடப்பட்டது
நன்றி.
இக்கேள்வியிலிருந்து பல விஷயங்கள் தெளிவாகின்றன.
ஒன்று, தமிழ் வலைப்பக்கங்களையும், வலைபூக்களைப் பார்வையிடுகிறார்கள்.
இரண்டு, அதில் உள்ள செய்தியை முழுதும் படித்திருக்கிறார்கள்.
மூன்று, சரி ஏதோ கிடக்கட்டும் என்று விடாமல், தெளிவுபடுத்திக்கொள்ள கேட்கிறார்கள்.
மகிழ்ச்சிதான். இப்படிக் கேட்காவிட்டால் தாங்கள் கூறியதுபோன்ற தெளிவான பதிலும் கிடைக்காது அல்லவா...
நன்றி, வணக்கம்

Unknown சொன்னது…

நெறியாளுகை மற்றும் புனைவிலக்கியம் பற்றிய தங்களது விளக்கங்களை படித்து அறிந்து கொண்டேன் . மேலும் தங்களது இலக்கிய உரையாடலை இந்த கடிதத்தின் வாயிலாக தாங்கள் துவங்கியுள்ளது மட்டற்ற மகிழ்ச்சி தருவதாக உள்ளது . ஏனெனில் இன்று திரு . நாராயணசாமி.ம அவர்களால் இயம்பப்பட்ட இந்த கேள்வி நாளை என்னை போன்ற வாசகர் மனதிலும் வரலாம் . அப்போது வாசகர் தனது ஐயங்களை, தங்களது இலக்கிய உரையாடல் தொகுப்பின் மூலம் , தீர்த்துக் கொள்ள முடியும்
தங்களது போற்றத்தக்க செயல்பாடிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்
இவன்
தங்கள் வாசகன்
தேவராஜ் விட்டலன்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பெற்றது.

முத்துலெட்சுமி/MUTHULETCHUMI
DELHI, புதுதில்லி
http://sirumuyarchi.blogspot.com
நல்ல கேள்வி கேட்ட அவரால் நாங்களும் தெளிவுபெற்றோம்.. நன்றி

அப்பாதுரை சொன்னது…

பட்டிமன்றங்களில் நடுவரின் பணி 'நடுநிலை' வகிப்பதிலிருந்து 'தீர்ப்பு' வழங்குவதற்கு மாறியது வருத்தம் தான். ''கம்பன் பாட்டு தமிழ்க்காவியமா இறைக்காவியமா?' போன்ற பட்டிமன்றங்களிலிருந்து விலகி 'சட்டினிக்கு உகந்தது இட்லியா தோசையா?' போன்ற தலைப்புகளில் கட்சி கட்டுவதனால் வந்த நிலையோ?

suneel krishnan சொன்னது…

தீர்கமான விளக்கத்திற்கு நன்றி அம்மா :)
நடுவர் ,பட்டி மன்றம் என்றால் எனக்கு நம்ம ஊர் கம்பன் கழக விழா நினைவுக்கு வருகிறது ,நன்றாக இருக்கும் .
இப்பொழுது தொலைகாட்ச்சி பட்டி மன்றங்கள் ஒரு 'செட்-அப் ' என்று எனக்கு ஐயம் இருக்கிறது ?!,நீ பேசுற மாறி பேசு ,நான் பதில் சொல்லுற மாறி சொல்லுறேன் ,முடிவும் கூட விவாத போக்குகள் ஏதும் கணக்கில் கொள்ளாமல் நடுவரின் முன் முடிவை ஒட்டியே வருகிறது.நீங்கள் கையாளும் முறை மிக சரியானது .

எம்.ஏ.சுசீலா சொன்னது…

கருத்துப் பதித்தோர்க்கு நன்றி.
திரு அப்பாதுரையும்,டாக்டர் சுனிலும் சொல்லியிருப்பது போலப் பட்டிமன்றங்கள் மெய்யான தமிழ் ஆர்வம் உடையவர்களுக்குத் தலை குனிவைஏற்படுத்துவனவாகத்தான் இருக்கின்றன.
அவை கிச்சு கிச்சு மூட்டும் நகைச்சுவை அரங்களாகத் தரம் தாழ்ந்து பலகாலமாகி விட்டது.

‘’பட்டிமன்றம் என்ற வடிவம், தமிழகத்தில் அரும்பு விட்ட இடங்களில் மிகக் குறிப்பானது காரைக்குடி கம்பன் கழக மேடை.
60களில் நிகழ்ந்த காரைக்குடி கம்பன் விழாச் சொற்பொழிவுகள், பட்டி மன்றங்கள் ஆகியவை நுட்பமான பல ஆய்வுகளுக்கு நிகராக மதிப்பிடக்
கூடிய செறிவும், உள்ளடக்கமும் கொண்டவையாக இருந்தவை. அந்தச் சூழலில் வளர்ந்து... அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன், திருச்சிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன், இடதுசாரிச் சிந்தனை கொண்ட பேராசிரியர் எஸ்.ஆர்.கே எனப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் (கம்பனும், மில்டனும் நூலாசிரியர்), பாஸ்கரத் தொண்டைமான், கம்யூனிஸ்ட் தலைவர் திரு ஜீவா, நீதியரசர் மு.மு.இஸ்மாயில் ஆகியோரின் செறிவான தமிழ்ப் பேச்சுக்களைக் கேட்டுப் பழகியே முதுகலை தமிழுக்கு வந்து சேர்ந்தேன் நான்.

ஆனால், பிற்பாடு மேடைத் தமிழ் நீர்த்துப் போய்விட்டது கண்டு... குறிப்பாகப் பட்டி மன்றங்கள் வெறும் பொழுதுபோக்கு கேளிக்கை அரங்கங்கள் போல மாறிப்போய் விட்டது கண்டு மிகவும் மனம் வெதும்பிப் போனேன். அது பற்றி வெளிப்படையாக விமரிசனங்கள் கூறி அவற்றில் பங்கேற்போரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு’’
என்பதை என் நேர்காணலிலும் கூடப்பதிவு செய்திருக்கிறென்.
http://www.masusila.com/search/label/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....