துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.12.10

விருதுக்கு வாழ்த்து


ஒரு வார இடைவெளியில் தில்லியிலும்,கோவையிலுமாக இலக்கிய நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்த 
திரு நாஞ்சில் நாடன் அவர்களுக்குச் ‘சூடிய பூ சூடற்க’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இவ்வாண்டுக்கான சாகித்திய அகாதமி விருது
அறிவிக்கப்பட்டிருப்பது பெருத்த மகிழ்ச்சியையும்,மிகுந்த மன நிறைவையும் ஆறுதலையும் அளிக்கிறது.
கோவையில் ஆ.மாதவனுக்கு நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் அமைப்புசார் விருதுகளின் அரசியல் பற்றிக் கோவை ஞானியும்,நாஞ்சிலும் கடுமையாகக் கொட்டித் தீர்த்து 24 மணி நேரம் கழிவதற்குள்
(விழா முடிந்த அன்று இரவு உணவு நேரத்தில் ஜெயமோகனும் கூடநாஞ்சிலைப் பார்த்து angry old man என்று கிண்டலடிக்கும் அளவுக்குக்    கும்பமுனி எனக் குறிப்பிடப்படும் நாஞ்சிலின் கோபம் கட்டுமீறியிருந்தது)
இந்த விருதுச் செய்தி வந்தடைந்து விட்டது அதிசயம்தான்!

முதல்நாள் 19/12 அன்று விஷ்ணுபுர விருது விழா முடிந்து மறுநாள் 20/12 மதியம் கோவை விஜயா பதிப்பகத்தின் புத்தகக்குவியலுக்குள் மூழ்கித் திளைத்து நாஞ்சிலின் புத்தகங்களையும் அள்ளிக்கொண்டு நிமிருகையில் அப்போதுதான் உள்ளே நுழைந்த விஜயா பதிப்பக உரிமையாளர் திரு வேலாயுதம் அவர்கள்
 ‘’அம்மா ஒரு சந்தோஷமான செய்தி கிடைச்சிருக்கு.நம்ம நாஞ்சிலுக்கு அகாதமி அவார்டாம்’’என்று தனக்கே பரிசு கிடைத்தது போன்ற குழந்தைக்குதூகலத்துடன் என்னிடம் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
உடன் அலைபேசி எண் தந்து நாஞ்சில்நாடன் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும் அவரே உதவினார்.

நாற்பது ஆண்டுக் காலமாக இடைவிடாமல் எழுதி வரும் நாவலாசிரியர்,சிறுகதையாசிரியர்,கட்டுரையாளர் என்ற பெருமைகளுக்குரியவர் நாஞ்சில் நாடன்.
அவரது முதல் நாவலான ‘தலைகீழ் விகிதங்க’ளைப் படித்தபோது நான் அடைந்த கொந்தளிப்பான உணர்வுகள் இன்னும் கூட என் நினைவில் எஞ்சியிருக்கின்றன.
(’சொல்ல மறந்தகதை’யாக தங்கர்பச்சான் இயக்கத்தில் அது திரைப்படமானபோது நான் படித்து மனதில் காட்சிப்படுத்தியிருந்த நாவலுக்கும் அதற்கும் இடைவெளிகள் நிறைய இருப்பதாக உணர்ந்தேன் நான்.)
அலுவல் காரணமாக மும்பையில் புலம்பெயர்ந்து வாழ்ந்ததால் விளைந்த மன உளைச்சல்களை..சொந்த மண்ணின் மீதான ஏக்கத்தைத் தனது ‘மிதவை’நாவலிலும்,சிறுகதைகளிலும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கும் இவரது புகழ் பெற பிற நாவல்கள்
சதுரங்கக்குதிரை,
என்பிலதனை,
எட்டுத்திக்கும் மதயானை
ஆகியன.
இவரது சிறுகதைகளும் முழுமையான தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன.
அண்மைக்காலமாகக் கட்டுரைகளைக் கூடக் கதைக்குரிய புனைவுத் தன்மையோடு முன்வைத்து வரும் நாஞ்சில், கம்பனிலும் தேர்ந்த புலமை படைத்தவர்.
இவ்வாண்டின் சாகித்திய அகாதமி விருது அதற்கு முற்றிலும் தகுதி படைத்த ஒருவருக்குத்தான் போய்ச் சேர்ந்திருக்கிறது என்னும் உள்ளப் பூரிப்போடு  நாஞ்சில் நாடன் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.

திலீப்குமார்..
 இவ்வாண்டின் ‘விளக்கு’ விருது பெறும் திரு திலீப்குமார் அவர்கள் குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டவரெனினும் தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளைஎழுதியிருப்பவர்.
மூங்கில் குருத்து,கடவு ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களைத் தந்திருக்கும் திலீப்குமார் தேர்ந்த திறனாய்வாளராகவும்(மௌனியுடன் கொஞ்ச தூரம்),மொழிபெயர்ப்பாளராகவும்கூட இயங்கி இருக்கிறார்.
2002இல் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாஷா பாரதி" என்ற மதிப்புமிக்க விருதினைப் பெற்ற திலீப்குமாருக்குச் ‘சாரல்’ விருதும் முன்பு வழங்கப்பட்டிருக்கிறது.
.திரு திலீப்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
இணையத்தில்

திலீப்குமார்;.

பி.கு;கூடிய விரைவில் புத்தாண்டின் தொடக்கத்தில் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் சென்னையில் நாஞ்சில் நாடன் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தவிருக்கிறார்கள் என்பது ஒரு கூடுதல் தகவல்.



2 கருத்துகள் :

போ. மணிவண்ணன் சொன்னது…

நாஞ்சிலாருக்கு கிடைத்த விருது குறித்து கொண்டுத் தமிழன் என்ற முறையின் நானும் பெருமிதம் கொள்கிறேன்.வாழ்த்துகிறேன்.

NARAYAN சொன்னது…

தில்லியில் நடந்த கருத்தரங்கில் அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அவருடைய எளிமை என்னை மிகவும் கவர்ந்தது.

அவருக்கு இந்த விருது கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி.
அவரிடமிருந்து இன்னும் பல படைப்புக்களை எதிர்பார்க்கிறோம்.

நாராயணசாமி.ம
புது தில்லி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....