’’கறுத்த மலைத் தொடர்களின் நடுவே
வெண்நிறத்தில் மின்னும் மலை முகடுகளைக் கண்டபோது…
வெண்நிறத்தில் மின்னும் மலை முகடுகளைக் கண்டபோது…
வாழ்க்கை என்பது மகிழ்வு-துன்பம், கசப்பு-இனிப்பு, இருட்டு-வெளிச்சம் என்ற இருவகை முரண்களாலேயே நெய்யப்பட்டிருக்கிறது என்னும் தத்துவ தரிசனம் விடியலின் வெளிச்சம் போல உள்ளத்திலும் வெளிச்சமாகிக் கொண்டிருந்தது...’’
ஜோஷிமட்-
வெள்ளிப்பனி இமயத்தின் முதல்காட்சி...
மே 8 ஆம் தேதி காலை சரியாக 3 மணிக்கு –அடர்த்தியான இருள் கப்பியிருந்த அந்தப் பொழுதில் ஜோஷிமட் நோக்கிய எங்கள் பயணம் துவங்கியது.
பீப்பில்கோட்டியிலிருந்து கிட்டத்தட்ட 30 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஆதிசங்கரர் நிறுவிய மடங்களில் ஒன்றான ஜோஷிமட் எனப்படும் ஜோஷிமடம் பல வகைகளில் முக்கியத்துவம் பெற்றிருப்பது.
சைவத் திருக்கோயில்களில் தேவார மூவரால் பாடப் பெற்றவை பாடல் பெற்ற தலங்கள் என அழைக்கப்படுவது போல ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் அவர்களால் பாசுரம் பாடப்பட்ட ஆலயங்கள் அவர்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்டிருக்கும் திவ்விய தேசங்களாகக் கருதப்படுகின்றன. அந்த 108 தலங்களில் ஒன்று ஜோஷிமட். அதனைப் ‘பிருதி’ ’என்னும் செந்தமிழ்ச்சொல்லால் குறிப்பிடும் திருமங்கையாழ்வார்.
‘’மறங்கொள் ஆளரி உருவென வெருவர ஒருவனது அகல்மார்வம்
திறந்து வானவர் மணிமுடி பணிதர இருந்த நல் இமயத்துள்…’’என்றும்,
‘’ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறுதுயர் அடையாமல்
ஏதம் இன்றி அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல்புரை எழில்நோக்கி
பேதை வண்டுகள் எரியென வெருவரும் பிருதி என்று அடை நெஞ்சே’’
என்றும் தனது பெரிய திருமொழியில் ஜோஷிமடத்து நரசிம்ம மூர்த்தியைப் பாடிப் பரவுகிறார்.
இங்கு துர்க்கை நரசிம்மர் ஆகியோரின் மூர்த்தங்கள் ஒன்றாக அமைந்திருப்பது பெருஞ்சிறப்பு. இரண்டாயிரம் ஆண்டுப் பழமை உடையதாகக் கருதப்படும் கல்பதரு ஒன்றையும் இங்கே காண முடியும்.
சிவா-விஷ்ணு ஆலயங்கள் என்றே அமைந்திருக்கும் சில கோயில்களைத் தவிரப் பிற வைணவக் கோயில்களில் சிவன் துர்க்கை உருவங்களைக் காண்பது அரிது. ஆனால் சிவ வழிபாடு முதன்மை பெற்றிருக்கும் வடநாட்டு ஆலயங்கள் இப் பொதுப் போக்கிலிருந்து மாறானவை. மேலும் ஜோஷிமடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டிருப்பதுவும் கூட இங்கு துர்க்கை [சண்டிகா] சன்னதியும்,சிவன் உருவங்களும் அமைந்திருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.
‘நரசிம்மதுவார்’என்னும் பெயர் தாங்கிய கருவறைக்குள்
லட்சுமிநரசிம்மரின் உருவச்சிலையோடு பத்ரிநாத் கோயிலில் காணப்படும் அதே வரிசை முறையில் குபேரன்,உற்சவர்,விஷால்பத்ரி,கருடாழ்வார் ஆகியோரின் திரு உருவங்கள் காணப்படுகின்றன; கூடுதலாக இராமன் சீதை இலட்சுமணன் உருவங்களும்…
கடும் குளிர்காலங்களில் பனி மலைச் சிகரத்துக்கு வந்து பத்ரிநாதரைத் தரிசிக்க முடியாதென்பதால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பின்பு குளிர்காலம் தொடங்கியதுமே பத்ரிநாத்திலுள்ள உற்சவமூர்த்தியின் சிலை ஜோஷிமட்டிலுள்ள இந்தக் கருவறையில் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடுகிறது; ஏப்ரல் இறுதியிலோ மே தொடக்கத்திலோ கோடைகாலம் பிறந்ததும் உற்சவப்பெருமாள் பத்ரி மலைக்கு ஏறி விடுகிறார்.
புலர்ந்தும் புலராத காலைப் பொழுதில் நரசிம்ம சன்னதியின் வாயிலில் காத்திருந்து முதல் தரிசனம் செய்ய முடிந்தது அளவில்லா ஆனந்தத்தை அளித்தது.
பனியின் குளுமையும் இரவின் ஈரமும் பரவிப் படர்ந்திருந்த ஆலயத்தின் கல்தரையில் கால் பதித்தபடி வெளியே வந்தபோது இரவின் இருட்போர்வை மெல்லிதாக விலகத் தொடங்கியிருந்தது. நள்ளிரவில் கண் விழித்தது பசியைக் கிளர்த்த அங்கே திறந்திருந்த தெருவோரத் தேநீர்க்கடை ஒன்றில் தேநீரைப் பருகியபடி சற்றே நிமிர்ந்தால்….முற்றிலும் இருள் விலகாத கரிய மலைகளுக்கு நடுவே இமயத்தின் பனிச் சிகரங்கள் வெள்ளித் தகடுகளாக மின்னத் தொடங்கியிருந்தன. நந்தாதேவி, நீலகண்ட் ஆகிய சிகரங்களின் தோற்றமும் அவற்றில் அடக்கம்.
நின்றும் இருந்தும் கிடந்தும் மூன்று கோலங்களில் காட்சி தருபவன் நெடுமால். அவனது கிடந்த கோலக் காட்சி போல….அவன் பள்ளி கொண்டிருக்கும் அதே தோற்றத்தில் ஒரு மலைத் தொடரின் அமைப்பு தென்படுவதைச் சுட்டிக் காட்டினார் தோழியின் கணவர்.[அவர் ஒரு எழுத்தாளரும் கூட..]
’திருக் கண்டேன்…பொன் மேனி கண்டேன்..திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்..’’ என ஆழ்வார்கள் விடுத்த ஆனந்த அறைகூவல், இயற்கையின் இயல்பான எழில் வடிவில் அவனைக் கண்டுகொண்ட பரவசத்தாலேயே நேர்ந்திருக்கக் கூடும் என அப்போது தோன்றியது. கறுத்த மலைத் தொடர்களின் நடுவே வெண்நிறத்தில் மின்னும் மலை முகடுகளைக் கண்டபோது…வாழ்க்கை என்பது மகிழ்வு-துன்பம், கசப்பு-இனிப்பு, இருட்டு-வெளிச்சம் என்ற இருவகை முரண்களாலேயே நெய்யப்பட்டிருக்கிறது என்னும் தத்துவ தரிசனம் விடியலின் வெளிச்சம் போல உள்ளத்திலும் வெளிச்சமாகிக் கொண்டிருந்தது.
எங்கள் வண்டிக்கு முன்னால் தொடர்வரிசையாய் நின்றிருந்த வாகனங்கள் நகரத் தொடங்கியபின் நாங்களும் ஜோஷிமட்டிலிருந்து பத்ரி நோக்கிய பாதையில் செல்லத் தொடங்கினோம்.
வழியில் பாண்டுகேஷ்வர் என்னும் சிற்றூர் ஒன்று எதிர்ப்பட்டது.அங்கே சிறிதான ஒரு கோயிலும் கூட.
மகாபாரதத்தின் பாண்டு சிலகாலம் வாழ்ந்த்தாக்க் கருதப்படும் அங்கிருந்து தென்பட்ட இமயச் சிகரம் ஒன்றுபனிலிங்கம் போல எனக்குக் காட்சி தர, என் தோழிக்கோ துதிக்கையுடன் கூடிய விநாயகர் உருவமாக அது தென்பட்டது. புகைப்படக் கருவியைச் சீரமைத்து நெருக்கமாக நோக்கியபோது எனக்கும் அது சரியானதாகவே தோன்ற…காமராவில் சிறைப் பிடித்துப் பார்த்தால் அப்படியே...அச்சு அசலான பிள்ளையார் வடிவம்!.
’’அவரவர் தம தம அறி அறிவகை வகை..’’என நம்மாழ்வார் சுட்டுவதும் இதைத்தானோ?
ஜோஷிமட்டிலிருந்து பத்ரிநாத் செல்லும் தொலைவு 30 கி மீதான் என்றபோதும் அதுவரை நாங்கள் கடந்து வந்த மலைப்பாதைகளையெல்லாம் விஞ்சி விடும் அளவுக்குக் கடுமையான பாதை அது.மண்குழைந்து நெகிழ்வாக இருந்துவந்த மலையடுக்குகள் இப்போது இறுகிய கற்பாறைகளாகக் காட்சி தரத் தொடங்கியிருந்தன.
ஆழம் காண முடியாத பள்ளத்தாக்குகள் , கோட்டை மதில்களைப் போல விண்முட்ட எழுந்து நிற்கும் நெடிதுயர்ந்த மலைத்தொடர்கள்…, சரிந்து கொண்டிருக்கும்……சரியும் நிலையில் இருக்கும் கற்குவியல்கள் இவை அனைத்தும் இறைவனை அடையும் வழி அத்தனை எளிதானதல்ல என்பதை உணர்த்தியபடி எங்களை நடுக்கத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.
பிடரி பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த அச்சம் ஒரு மூலையில் இருந்தாலும் குறிப்பிட்ட அந்தப் பாதை முழுவதும் தென்பட்ட பனி இமயத்தின் பல்வேறு முகங்கள் வாழ்வில் என்றுமே காணக் கிட்டாத அபூர்வ கணங்களாய் இதுவரை உணர்ந்தறியாத சிலிர்ப்பைக்கிளர்த்தியபடி இருந்ததால் அச்ச உணர்வு அதிசய உணர்வாய் மாறிப்போனது..
’வெள்ளிப்பனி உருகி’ மலையிடுக்குகளில் நீரோடை போல வழிந்து வர….
மலைச் சரிவுகளில் பாளம் பாளமாய்ப் பனி உறைந்து கிடக்க இமயத்தின் முகடுகள் பனிச் சிற்பங்கள் போல் காட்சி தர…
’’மன்னும் இமய மலை எங்கள் மலையே ‘’என இதயம் ஒரு கணம் பூரித்துப் பொங்கியது.
மலைச் சரிவுகளில் பாளம் பாளமாய்ப் பனி உறைந்து கிடக்க இமயத்தின் முகடுகள் பனிச் சிற்பங்கள் போல் காட்சி தர…
’’மன்னும் இமய மலை எங்கள் மலையே ‘’என இதயம் ஒரு கணம் பூரித்துப் பொங்கியது.
நேற்றைய பயணத்தில் எதிர்ப்பட்டிராத பஞ்சப்பிரயாகைகளில் ஒன்றான விஷ்ணுப்பிரயாகை...இப்போது எதிர்ப்பட்டது.அதில் பொங்கிப் பெருகும் நீரைக் கொண்டு புனல் மின்சாரத் திட்டப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதைக் கண்டபடியே அதைக் கடந்து சென்றோம்.
விஷ்ணுப்பிரயாகை. அடுத்து பத்ரிநாதரை எண்ணித்தவமிருந்த அனுமன் தவம்செய்த ஹனுமான்சட்டி.... |
…
பொழுது முற்றாகப் புலர்ந்து விட்ட காலை.8 மணியளவில் பத்ரிநாத் எல்லையைத் தொட்டதும்…அங்கு தென்பட்ட அற்புதக் காட்சிகள் ‘’கண்டேன்..கண்டறியாதன கண்டேன்..’’என
ஆனந்தக் கூச்சலிட வைக்க, வாழ்க்கையின் மகத்தான...உன்னதமான கணங்களில் அதுவும் ஒன்றாய் ஆகிப்போனது.
ஆனந்தக் கூச்சலிட வைக்க, வாழ்க்கையின் மகத்தான...உன்னதமான கணங்களில் அதுவும் ஒன்றாய் ஆகிப்போனது.
[மேலும் அடுத்த தொடர்ப் பதிவில்..]
.புகைப்படங்கள்;பதிவர்
.புகைப்படங்கள்;பதிவர்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக