துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.9.11

அசடன்:சில முன் குறிப்புகள் [1]


உலக இலக்கிய மாமேதை ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்  ‘குற்றமும் தண்டனையும்’  நாவலை முழுமையாக மொழியாக்கம் செய்ய நான் எடுத்துக் கொண்ட காலம் எட்டு மாதங்கள்தான்...
பிறகு மீண்டும் ஒரு முறை மொழியாக்கத்தையும் அதன் ஆங்கில மூலத்தையும் ஒப்பிட்டு சரி பார்த்து,அச்சுப்படி திருத்தி,பதிப்புத் தொடர்பான பிற பணிகளெல்லாம் முடிந்து நூல் ஒன்று ஒன்றரை ஆண்டுக்குள் வெளிவந்து விட்டது.

ஆனால்....இடியட்/அசடனின் மொழியாக்கமும் வெளியீடும் சற்றுக் கூடுதலாகவே நேரத்தை எடுத்துக் கொண்டு விட்டன.

ஒரு குற்றத்தைப் புரிந்து விட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு ஒருவன் படும் அவதிகளை- பெரும்பாலும் அந்த ஒற்றைப் பார்வையை மட்டுமே பெரிதும் முன்னிலைப்படுத்திய ஒரு ஆக்கம் ‘குற்றமும் தண்டனையும்’.
ஆனால்..இடியட்/அசடன் பன்முகத்தன்மையையும் பற்பல வகைமாதிரியான(types) பாத்திரங்களையும் கொண்டது..
ஆழமான உளவியல்,தத்துவச் சிக்கல்கள் பலவற்றை நீண்ட மன ஓட்டங்கள் மற்றும் உரையாடல்கள் வழி விவரித்துக் கொண்டே செல்வது.
இடையிடையே ஃபிரெஞ்சுப் பழமொழிகள்,தொடர்கள்,கலைச்சொற்கள் ஆகியவை விரவி வருவது.
அளவிலும் மிகப் பெரியதாய் நான்கு பாகங்கள் கொண்டது.
இந்தக் காரணங்களால் கொஞ்சம் அதிகமான முயற்சி,உழைப்பு,நேரம் ஆகியன இந்நூலின் மொழிபெயர்ப்பைச் செய்து முடிக்கத் தேவையாகி விட்டன.

மூல நூல்களை அச்சிடுவதும்,சந்தைப்படுத்துவதுமே சிறு வெளியீட்டாளர்களுக்குச் சிக்கலாக இருக்கும் சூழலில் - சாதாரணமான நூலைப் போன்ற இரு மடங்கு வடிவமுள்ள( டபிள் கிரவுன் சைஸ்) - கிட்டத்தட்ட 800 பக்கங்கள் வரை நீளும் உலகப் பேரிலக்கிய மொழியாக்க நூல் ஒன்றை வெளிக் கொணர்வற்கான முதலீட்டைத் திரட்டுவதும்,பிறகு அதை விற்பனை செய்வதும் தமிழ்ச் சூழலில் எத்தனை கடினமான ஒன்று என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அதனாலேயே பதிப்பாளர் இந்நூல் வெளியீட்டுக்கான முன் வெளியீட்டுத் திட்டம் ஒன்றையும் சென்ற டிசம்பர் மாதத்திலேயே அறிவித்திருந்தார்.


                          அசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்


எழுத்தாளர்கள் திரு ஜெயமோகனும்,திரு எஸ்.ராமகிருஷ்ணனும் கூடத் தங்கள் வலைத் தளங்களில் அது குறித்த செய்தியை வெளியிட்டு முன்வெளியீட்டுத்திட்டத்தில் பங்கேற்ற்று நூல் விரைவில் வெளிவர உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஜெயமோகன்:
இத்தகைய பெரிய நூல்களுக்கான முதலீட்டை சிறிய வெளியீட்டாளர்கள் எளிதில் திரட்டிவிட முடியாதென்பதனால் இந்த முன்வெளியீட்டுத்திட்டம் முக்கியமானதாக ஆகிறது. தமிழில் பேரிலக்கியங்கள் வெளிவருவதற்கு இம்மாதிரி உதவிகள் அவசியமானவை


எஸ்.ராமகிருஷ்ணன்
 தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கிய நாவலான இடியட்டைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா. இவர் முன்னதாக குற்றமும் தண்டனையும் நாவலை மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்தவர், இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்காக ஒரு முன்வெளியீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இலக்கிய வாசகர்கள் அனைவரும் இதில் முன்பதிவு செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்

இடியட் நாவல் அன்பின் பிரகாசத்தை ஒளிரச்செய்யும் அற்புதப்படைப்பு, இதிகாசத்தைப் போல வாழ்வின் மேன்மைகளைச் சொல்லும் ஒரு உயர்ந்த நாவல்

தமிழில் இந்த நாவல் வெளிவர இருப்பது ஒரு மிக முக்கிய நிகழ்வு
நாம் அதை வரவேற்றுக் கொண்டாட வேண்டும்
http://www.sramakrishnan.com/?p=2066

முன் பதிவை ஆன்லைன் வழி மேற்கொள்ள உடுமலை டாட் காம் திரு சிதம்பரம் அவர்களும் உதவி செய்தார்.

குறிப்பிட்ட நாள் முடிந்த பிறகும் கூட முன் பதிவுக்கான அவகாசம் சற்று நீட்டித் தரப்பட்டது.
[அது குறித்த அறிவிப்பும் வலைத் தளத்தில் வெளியாயிற்று]

இடியட்/அசடன் முன்பதிவு நாள் நீட்டிப்பு...


ஆர்வமுள்ள பல நண்பர்கள் முன் பதிவு செய்து கொண்டாலும்,நினைத்த அளவுக்கு முன் பதிவு எண்ணிக்கை இல்லையென்பதால்,நான் முதல் படியை எழுதி முடித்த்து ஓராண்டுக்கு மேலான பிறகும்,நூல் பதிப்பிக்கப்படுவதில் நேரிட்ட சிக்கல்களால் அச்சிடுவது தாமதமாகி, இப்போது சற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு..
அச்சுப்படிகளின் திருத்தம்,முகப்பட்டை,பின்னிணைப்பு,மற்றும் அசடன் ரஷிய திரைப்படக்காட்சிகளை நூலின் இடையிடையே சேர்த்தல்( ‘குற்றமும் தண்டனையும்’. நூலிலும் அதே போல பட ஸ்டில்கள் பொருத்தமான இடங்களில் சேர்க்கப்பட்டிருந்தன) என நூல்பதிப்பு தன் இறுதிக்கட்டத்தை எட்டியபடி,தன் புழுக்கத்திலிருந்து விடுபட்டு வெளியுலகக் காற்றை சுவாசிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.

’அசடனும் ஞானியும்’என்ற தலைப்பில் இம் மொழியாக்கத்துக்கு அருமையான முன்னுரை ஒன்றை அளித்திருக்கிறார் எழுத்தாளர் திரு ஜெயமோகன்.

இடியட்/அசடன் வெளியீட்டுக்கான முன் பதிவு செய்தோர்,மற்றும் நேரிலும் மின் அஞ்சலிலும் தொடர்பு கொண்டு நூல் வெளியாவது பற்றி ஆர்வமுடன் விசாரித்துக் கொண்டிருந்த நண்பர்கள்,இலக்கிய ஆர்வலர்கள் ஆகிய எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவிப்பதோடு - நூல் வெளியீட்டில் ஏற்பட்ட கால தாமதத்துக்காக மன்னிப்பையும் கோருகிறேன்.
கட்டாயம் அக்டோபர் மாதம் முடிவதற்குள் நூல் வெளி வந்து விடும் என்று நம்பிக்கையோடு உறுதியும் கூறுகிறேன்.

நூலுக்குள் நுழையு முன் அது குறித்த முன்னோட்டமான சில செய்திகளை-
அதிலுள்ள பாத்திர வார்ப்புக்கள்..
வித்தியாசமான உரையாடல்கள்...
சில வருணனைகள்,தத்துவங்கள்..
மற்றும் சிறியதாக ஒரு கதைச் சுருக்கம் 
ஆகியவற்றைத் தொடர்ந்து பல பதிவுகளில் அடுத்தடுத்து இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்..
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’ஒரு காலத்தில் நான் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தபோது - உண்மையிலேயே கிட்டத்தட்ட ஒரு அசடு போலத்தான் இருந்தேன்.ஆனால் அதன்பின் வந்த கொஞ்ச நாட்களிலேயே அந்தக் கட்டத்தைத் தாண்டி வந்து விட்டேன்.அதனால் என் முகத்துக்கு நேராக என்னை அசடன் என்று எவராவது சொன்னால் அதை நான் விரும்புவதில்லை’’
என்று அசடன் நாவலின் கதைத் தலைவன் இளவரசன் மிஷ்கின் தன்னைப் பற்றி வெளிப்படையாகவே பிரகடனப்படுத்திக் கொண்ட பிறகும் கூட அவன் அசடனாகவே கருதப்பட்டு ஏன் பரிகசிக்கப்பட வேண்டும்..?


மிஷ்கின் ..உண்மையில் அசடனா..ஞானியா..? அல்லது இரண்டுமேயா...?

[அடுத்த பதிவில்...மேலும்...]



2 கருத்துகள் :

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மின் அஞ்சலில் வந்த கடிதம்
பதிவரால் உள்ளிடப்பெற்றது;
ஷஹிதா,
http://moonramkonam.blogspot.com/
வணக்கம் அம்மா..நலமா இருக்கீங்களா? ,
அசடன் படிச்சிட்டு பதிவு போட்ட கையோட உங்களுக்கு எழுதனும்னு என்னவோ பெரிசா கூந்தல் அள்ளி முடியாம இருந்தேன். இப்போ முடியாம முடியல..மதுரைக்கு போன ஒரு தோழியின் கணவரிடம் பணம் கொடுத்து அட்ரெஸ் சொல்லி, புத்தகம் வாங்கி வரச்சொன்னேன். கடையிலிருந்தே கூப்பிட்டார்.' இன்னமும் தயாராகலையாம் முன்பதிவு செய்யட்டுமா 'என்று.'ஓ' என்றேன். இப்போ முழுசா 2 மாதம் ஆகிட்டது. இன்னைக்குதான் அக்டோபரில் கிடைக்கும் என்று உங்கள் பதிவு பார்த்து தெரிந்து கொண்டேன். மேலும் தாமதமாகாமல் கிடைத்து விட வேண்டும். என் போல காத்துக்கொண்டு இருப்பவர்கள் பாவம் இல்லையா? உண்மையில விருப்பமா இருக்கேன்.அன்புடன்,ஷஹிதா,http://moonramkonam.blogspot.com/

Jegadeesh Kumar சொன்னது…

அன்புள்ள அம்மா
குற்றமும் தண்டனையும் பற்றி ஒரு கட்டுரையை எழுதி உள்ளேன்.
http://jekay2ab.blogspot.com/2011/09/blog-post_24.html
நான் வாசித்தது ஆங்கிலத்தில்தான் என்றாலும் உங்கள் மொழிபெயர்ப்பு தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த கோடை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....