துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.9.11

எழுத்தெனப்படுவது....


’’வாசிக்க வாசிக்க நம் அம்பறாத் தூணியிலிருந்து வார்த்தைகள் வற்றாது பொங்கி வரும்.
அவற்றை நாம் தேடிச் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் எழுதத் தொடங்கியதுமே அவை நம் ஏவலுக்கு வந்து முன் நிற்கும்.’’


மதுரையிலிருந்து ஒரு வலைப் பூ வாசகர்,எழுதுவது குறித்தும்- குறிப்பாக மொழிமாற்றங்களைப் பற்றியும் சில ஆலோசனைகள் நாடிக் கடிதம் எழுதியிருந்தார்.
’’100 சதவீதம் பிழையில்லாமலும், அசலின் உணர்வுகள் கெட்டுவிடாமலும் ’’மொழிமாற்றங்களை எவ்வாறு செய்வது என்பதும், ’’இது குறித்து என்ன புத்தகங்கள் வாயிலாக அறியலாம் ’’என்பதும் அவர் குறிப்பாக முன் வைத்த கேள்வியாக இருந்தது.
அவரும் இதழ்களிலும்,இணையத்திலும் அவ்வப்போது சில கட்டுரைகள் எழுதி வருபவரே;சில மொழியாக்கப் பணிகளையும் அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார்.ஆனாலும் தன்னை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ளவும் இன்னும் சற்று மேலான தளத்தில் முழுமைப்படுத்திக் கொள்ளவும் என்னிடம் கருத்துக் கேட்டிருந்தார்.
அதற்கு நான் அளித்த பதில் கடிதம் எழுதும் கலையில் ஆர்வமுள்ளோருக்கு- குறிப்பாகத் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்குப் பயன்படக் கூடும் என்பதால் நான் அந்த வாசகருக்கு எழுதிய கடிதத்தைக் கீழே வெளியிடுகிறேன்.


அன்புள்ள நண்பருக்கு,

தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி.
முதலில் உங்கள் எழுத்துப் பணி நன்கு வளர வாழ்த்துக்கள்.

மொழி மாற்றம் அல்லது மொழியாக்கம் என்பது சுயமான படைப்பாக்கத்தையே அடித் தளமாகக் கொண்டிருக்கிறது.சுயமாக எழுதக் கூடிய ஒருவரே நல்ல மொழிபெயர்ப்பாளராகவும் சிறக்க முடியும். படைப்பாக்கத்துக்கான பொறி நம்முள்ளே இருந்தாக வேண்டும்.புதுமைப்பித்தன்,க.நா.சு,போன்ற அன்றைய எழுத்தாளர்களும் சரி..ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன்,பாவண்ணன் போன்ற சம காலப் படைப்பாளிகளும் சரி நல்ல மொழிபெயர்ப்புக்களையும் கூடவே செய்திருக்கிறார்கள்.எனவே உங்கள் படைப்பாக்கத் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.அவ்வப்போது ஏதேனும் ஒரு பொருள் பற்றிச் சொந்தமாக ஒரு சிறு குறிப்போ,கட்டுரையையோ எழுதுவதை விட்டு விடாதீர்கள்.

சுயமான எழுத்தாக இருந்தாலும்,மொழிமாற்றமென்றாலும் முதலில் தேவைப்படுவது மொழி வளமும் (diction) மொழியின் மீதான ஆளுமையுமே (command)என்றே நான் எண்ணுகிறேன்.

தரமான நல்ல நடையில் -இன்றைய காலகட்டத்துக்கேற்ற நவீனமான நடையில்- தங்களுக்கு ஆர்வமூட்டும் நூல்கள் என்னவெல்லாம் கிடைக்கிறதோ [புனைவுகள் அபுனைவுகள்]- அவை எல்லாவற்றையும் படித்து மொழியை உங்கள் ஆளுகைக்குள் முதலில் வசப்படுத்திக் கொள்ளுங்கள்.இடை விடாத வாசிப்பு ஒன்று மட்டுமே மொழியின் வாயில்களை நமக்குத் திறந்து விடக் கூடியது.அதை ஒரு பக்கம் தொடர்ந்து செய்தபடி படைப்பாக்க மனநிலையுடன் இருந்தாலே மொழி நம் கட்டுக்குள் வந்து விடும்.
கண்ணதாசனின் மொழி வளம் கம்பனைப் படித்ததால் ஏற்பட்டதே என்பார் அவர்.


அபுனைவுக்கட்டுரைகள் உங்கள் தேர்வாக இருக்கும் பட்சத்தில் சரளமான தெளிவான நடையில் எழுதப்பட்ட அவ்வாறான நூல் வாசிப்புக்கள் மூலமாக உங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள்.
எழுத்துக்கு வலுவான அடித்தளம் அமைப்பது தொடர்ச்சியான தேர்ந்த வாசிப்பு மட்டுமே.
வாசிக்க வாசிக்க நம் அம்பறாத் தூணியிலிருந்து வார்த்தைகள் வற்றாது பொங்கி வரும்.
அவற்றை நாம் தேடிச் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் எழுதத் தொடங்கியதுமே அவை நம் ஏவலுக்கு வந்து முன் நிற்கும்.எழுதும் கலை பற்றியும் மொழிமாற்றம் பற்றியும் நூல்கள் வழி படித்து அறிய முற்படுவதை விடவும், தொடர்ந்து நீங்களாக எழுதி வருவதே உங்கள் வளர்ச்சிக்கு உதவக் கூடும்..எழுதச் சொல்லிக் கொடுக்கும் நூல்கள் கட்டிக் கொடுத்த சோறு போன்றவைதான்.அவை எப்போதும் கை கொடுப்பதில்லை.தண்ணீரில் குதித்துத்தான் நீச்சலைப் பழக முடியும்.


தொடர்ந்து கடிதம் எழுதி வந்ததன் வாயிலாகவே தான் ஒரு கதை சொல்லியாக உருவாக முடிந்தது என அண்மையில் ஒரு பேட்டியில் சொலியிருந்தார் தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ராஜநாராயணன்.
சென்ற தலைமுறையில் கடிதம் எழுதும் வழக்கம் தொடர்ந்து வந்ததால் 7,8 ஆம் வகுப்பு மட்டுமே படித்திருப்பவர்கள் கூட நீண்ட கடிதத்தைப் பிழைகளின்றி எழுதி விடுவார்கள்.
ஆனால் கடிதம் எழுதுவதென்பதே இன்று அருகிப் போயிருப்பது எத்தனை பெரிய அவலம் பாருங்கள்.தொடர்ச்சியாகச் சில வரிகளைக் கூட எழுத முடியாமல் இன்றைய தலைமுறை தவிப்பதற்கு சுருக்கப்பட்ட குறுஞ்செய்திப் பரிமாற்றங்களும் குறுமடல்களுமே காரணம் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை.எனவே நீளமாக எதையாவது எழுதிக் கொண்டே இருங்கள்.

மொழியாக்கப் பணியைச் செய்யத் தொடங்கு முன் அந்த நூலை முழுமையாக ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.அதன் உள்ளடக்கம் உங்களுக்குப் பரிச்சயமானதாக,பிடித்ததாக,உங்கள் மனத்தின் அலை வரிசைக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதையும்,கலைச் சொற்கள் உங்களால் அணுகக் கூடியதாக இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.
எளிய சொற்களில் இலகுவான நடையில் சிறு சிறு வாக்கியங்களாகத் தெளிவு படச் சொல்லுங்கள்.
நேரடி மொழியாக்கம் -literal translation- என்பது தட்டையானது;உயிரற்றது.எனவே நேரரடி மொழியாக்கமாக இல்லாமல் அதுவே ஒரு தனிப் படைப்பு போலத் தோற்றமளிக்குமாறு ஓர் உயிரோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

‘எழுதும் கலை’என்னும் தலைப்பில் தமிழினி வெளியீடாக ஜெயமோகன் எழுதியிருக்கும் நூல் உங்களுக்குப் பயன் படக் கூடும்.

அசலின் உணர்வுகள் கெடாமல் மொழிமாற்றத்தைச் செய்ய உகந்ததாக உங்கள் நடை இருப்பதை உங்கள் சீரான 
கடிதத்தின் ஓட்டமே புலப்படுத்துகிறது.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
எம்.ஏ.சுசீலா


10 கருத்துகள் :

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தங்கள் அனுபவம்
எங்களுக்குப் பாடம்..

மிக அருமையாகச் சொன்னீர்கள் அம்மா..

மகிழ்ச்சி..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

என் அறிவுக்கு எட்டியவரை..

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல

என்னும் இடுகையில் என் புரிதலைக் காணத் தங்ளை அன்புடன் அழைக்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_17.html

Rathnavel Natarajan சொன்னது…

’வாசிக்க வாசிக்க நம் அம்பறாத் தூணியிலிருந்து வார்த்தைகள் வற்றாது பொங்கி வரும்.
அவற்றை நாம் தேடிச் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் எழுதத் தொடங்கியதுமே அவை நம் ஏவலுக்கு வந்து முன் நிற்கும்.’’


அருமை அம்மா
மிக்க நன்றி அம்மா

எஸ் சம்பத் சொன்னது…

தொடர்ந்து படியுங்கள், தொடர்ந்து எழுதுங்கள் - அனைத்தும் புரிபடும் என்ற அற்புதமான அறிவுரைகளுக்கு முதல் வாழ்த்து வேர்களை தினசரி தேடிக்கொண்டிருக்கும் முனைவரிடமிருந்து - சிறப்பான பொருத்தம், நன்றி அம்மா தங்களின் மேலான அறிவுரைகளுக்கு

ஜோதிஜி சொன்னது…

வணக்கம் அம்மா

நேற்று சம்பத் பேசியிருந்தார். இந்த கட்டுரை குறித்து அவருடன் நீங்கள் மின் அஞ்சல் வாயிலாக உரையாடியது வரைக்கும் சொன்னார்.

நான் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவன் தானே? ( எங்கே என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்)

சில விசயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.


ஆறாம் வகுப்பு முதல் வாசிக்கத் தொடங்கிய எனக்கு அடுத்த 15 வருடங்கள் வரைக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இது சரி அது தவறு என்று நோக்கமில்லாமல் எல்லாவிதமான புத்தகங்களையும் படித்து வந்து இருக்கின்றேன்.

சிலதினங்களுக்கு முன்பு ஒரு பதிப்பக தலைவர் பேசிக்கொண்டிருந்தார். புதுமைப்பித்தன் படித்தாயா? ராஜாஜி எழுத்துக்களை படித்தாயா என்று கேட்டார். இல்லை என்றேன். வண்ணநிலவன், நாஞ்சில் நாடான், என்று தொடங்கி அவர் கேட்ட எந்த எழுத்துக்களையும் நான் படித்தது இல்லை. இன்று வரைக்கும்.

நீங்கள் கூட ஜெயமோகன் குழுமத்தில் எழுதும் கருத்துக்களை பல முறை பார்த்துள்ளேன். நான் ஜெயமோகன் எழுத்துக்களை படித்ததே இல்லை என்று சொன்னால் ஏதோவொரு வஸ்துவை பார்ப்பது போல் பார்க்கிறார்கள். இது குறித்து கூகுள் பஸ்ஸில் சில நண்பர்கள் ஜெயமோகன் எழுத்துக்களை படிக்காமல் இருப்பது என்று சொல்லி சுயபெருமை விளம்பரம் தேடிக் கொள்வது போல என்று கலாய்த்தார்கள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இதென்ன கொடுமை? படிக்கவில்லை என்றால் அப்படி தானே சொல்ல முடியும்.

ஜோதிஜி சொன்னது…

அம்புலிமாமா, தமிழ்வாணன், லேணா தமிழ்வாணன், புஷ்பா தங்கதுரை என்று தொடங்கிய பயணம் இது. இது அப்படியே ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகரன், ரமணி சந்திரன், அனுராதா ரமணன், இந்துமதி, வாஸந்தி, பாலகுமாரன் என்று வந்து கடைசியில் சுஜாதா என்று வரைக்கும் வந்து நின்று போனது.

இடையில் பத்து வருடங்கள் திருப்பூர் சூழ்நிலையில் எந்த புத்தகங்களையும் படிக்க இங்குள்ள சூழ்நிலையில் முடியவில்லை. 2007 முதல் கட்டுரைகள் சார்ந்த விசயங்களை மட்டுமே படித்துக் கொண்டிருக்கின்றேன்.

பதிப்பக தலைவரும் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் நீங்களும் சொல்லி இருக்கீங்க. படிக்க படிக்க மட்டுமே மொழி ஆளுமை, லாவகம் நம் கைவசப்படும் என்றார். புதுமைப்பித்தனின் பொன்னகரம் (சரிதானே?) படிக்கவில்லை என்று எவரிடமும் சொல்லிவிடாதே? உண்மை வினோதமாக பார்ப்பார்கள் என்றார். சிரித்து விட்டேன்.

ஆனால் என்னால் எழுத முடிகின்றது. காரணம் அனுபவங்கள் ஒவ்வொன்றும் என்னை போட்டு வாட்டி வதக்கி என்னை நல்வழிபடுத்தியிருக்கிறது. கற்றுத் தந்துள்ளது. கவலைகளை போக்கியுள்ளது. காரணங்களை தேடாமல் இந்த உலகத்தை கனிவுடன் பார்க்க வைத்துள்ளது. அதுவே என்னால் எழுத முடியும் என்று நான் என்னை உள் நோக்கி கவனித்த போது வலைப்பதிவில் எழுத வைத்துள்ளது. கற்றுக் கொள்ள கற்றுக் கொள்ள, எழுதிக் கொண்டே வர இன்று என்னால் பல விசயங்களை தொட்டு எழுத முடிகின்றது.

ஜோதிஜி சொன்னது…

என் வலைப்பூக்களை நீங்கள் ஏற்கனவே படித்தது தானே? அரசியல், அனுபவம், சமூகம், ஆன்மீகம், என்று தொடங்கி நான் எழுதாத தொடாத துறைகள் இல்லை. ஒரு கட்டுரை கூட பொழுது போக்க என்ற நோக்கத்தில் எழுதியதே இல்லை. ஈழம் குறித்து நான் எழுதி பல கட்டுரைகள் கூகுள் பஸ்ஸில் விடுதலைப்புலிகளை விருப்பு வெறுப்பின்றி ஒரு விவாத பொருளாக எடுத்துக் கொண்டு பேசும் அளவுக்கு இருந்துள்ளது.

தமிழர்களைப் பற்றி அவர்களின் காலடித்தடங்களைப் பற்றி இதுவரைக்கும் 50 கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளேன். எவருமே தொடாத துறைகள் இது.

வலைபதிவில் ஒரு ஊரைப்பற்றி தொடர்ந்து எழுதியது நானே. திருப்பூர் குறித்த கட்டுரைகளை படித்துப் பாருங்க. திருப்பூரில் வாழ்ந்து விட்டு சென்றவர்களுக்கும், திருப்பூர் என்பது எப்படியிருக்கும் என்று தெரியாதவர்களுக்கும் கூட முழுமையாக அதன் பரிணாமத்தை புரிய வைக்கும்.

நாடார் வரலாறு, இராமநாதபபுரம் தல வரலாறு, ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்த விதம், தங்களை நிலைப்படுத்திய விதங்கள் என்று நான் எழுதிய ஒவ்வொன்றும் சுய ஆர்வத்தில் கற்றுக் கொண்ட விடங்கள்.

இத்தனை விவரங்களை விஸ்தாரமாக எழுதக்காரணம்.

எழுதுபவனுக்கு, படிக்க வேண்டும், கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை விட எழுதி எழுதி பார்க்க நினைத்தால் மட்டுமே அவனால் மொழி லாவகத்திறமை வரும் என்பதை நான் அனுபவத்தில் கற்றுக் கொண்டேதாகும் என்பதை புரியவைக்கவே.

மற்றபடி அரசியல் குறித்த நாட்டு நடப்புகளில் மட்டுமே நான் தற்போது கவனம் செலுத்துகின்றேன். மற்றபடி எந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் நான் படிப்பதில்லை. அதற்கான சூழ்நிலையும் என்க்கு அமைவதில்லை.

இப்படித்தான் வாழ்க்கை என்னை இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

சரியா தவறா? என்பது கூட எனக்குத் தெரியவில்லை.

மற்றபடி உங்கள் இந்த வயதில் நீங்கள் உழைக்கும் உழைப்பை பார்க்கும் போது உங்கள் தற்போதைய வயது என்ற நிலைக்கு நான் வரும் போது நான் இந்த அளவுக்கு எழுதுவேனா? என்பதே எனக்கு யோசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

நன்றி அம்மா.

ஜோதிஜி தேவியர் இல்லம் திருப்பூர்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நண்பர்களுக்கு நன்றி...
திரு ஜோதிஜி சொல்லியிருக்கும் கருத்துக்களின் அடிப்படையில் சில எதிர்வினைகள்.
ஜோதிஜி,தங்கள் மூன்று அஞ்சல்களையும் படித்தேன்.மிக்க நன்றி.எனக்கு உங்களை நன்றாகவே நினைவிருக்கிறது.உங்கள் எழுத்துக்களையும் வாசித்திருக்கிறேன்.
எழுத்தை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் ,கூர்மையாக்கிக் கொள்ளவும் வாசிப்பு உதவும் என்பதாலேயே நான் அப்படிக் குறிப்பிட்டேனே தவிர..வாசிப்பில்லாமல் எழுதவே கூடாது என்பது நான் முன் வைக்கும் வாதமல்ல.உங்களால் இப்போது பிற வாசிப்புக்கள் இல்லாமல் எழுத முடிந்தாலும் நீங்களே சொல்லியிருப்பது போல முன்பு நீங்கள் படித்ததெல்லாம் உங்களுக்குள் மொழியாக இறங்கி உங்கள் எழுத்தை உங்கள் ஆளுமைக்குள் வசப்படுத்தியிருக்கலாம்.எந்த வாசிப்புமே இல்லாமல் சுயம்புவாகப் பொங்கி வரும் எழுத்துக்களும் அரிதாக உண்டு என்பதிலும் எனக்கு உடன்பாடே.
நான் பரிந்துரைத்தது சம்பத் போல ஏற்கனவே எழுதி வருபவர்களுக்கானது மட்டுமல்ல.புதிதாக எழுதி வருவர்கள்,எழுதத் தொடங்குபவர்கள்..எதையுமே வாசிக்காமல் மொழியையும் பிழைபடக் கையாண்டு வருவதைக் காண நேர்வதால்’கண்டதைப் படிக்கப் பண்டிதனாவாய்’என்னும் சொலவடைக்கேற்ப இன்னும் வாசித்தால் அவர்களின் மொழிவளம் மேலும் செழுமையுறக் கூடும் என்பது பற்றியே.
எழுத்தையும் விடாமல் பழகி வர வேண்டும் என்பதையும் கி.ரா போன்றவர்கள் கடிதம் எழுதியே கதைசொல்லியாக மாற முடிந்ததைச் சுட்டிக் காட்டி என் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
சமகாலத்தில் ஜெயமோகன் போன்றவர்கள் மொழியின் பல சாத்தியக் கூறுகளையும் கையாண்டு வருவதால் இன்றைய மாற்றமுற்ற நடைப்போக்கைப் புரிந்து கொள்ள அவ்வாறான நூல் வாசிப்புக்கள் உதவக் கூடும் என்பதையே நான் கோடி காட்டியிருக்கிறேன்;மற்றபடி குறிப்பிட்ட சில எழுத்தாளர்களைப் படித்தே ஆக வேண்டும் என யாரும் யாரையும் நிர்ப்பந்தம் செய்வதும்,படிக்காமல் இருப்பதனாலேயே ஏளனம் செய்வதும் பேதமைதான்.அவற்றை ஆரோக்கியமான நல்லபோக்குகள் என நான் சற்றும் கருதவில்லை;அது அவரவர் ரசனையின் பாற்பட்டது;சூழல் நெருக்குதல்கள் சார்ந்தது.
அவரவர் எல்லைக்குள் அவரவர் வரையறைக்குள் ஏதாவது செய்து கொண்டே இருக்கிறோமல்லவா.அதுவே போதுமானது;அது நம் நெஞ்சுக்கு நிறைவளிப்பதாகவும்,ஓரளவு சமுகம் மற்றும் இலக்கியத்துக்கு நன்மை தருவதாக இருந்தாலே போதுமானது.
தங்கள் எழுத்துப் பணி வற்றாது தொடர என் வாழ்த்துக்கள்

அப்பாதுரை சொன்னது…

பயனுள்ள அறிவுரை. அனுபவப் பாடம். (இதனால் தான் உங்களால் ஆசிரியராகச் சிறக்க முடிந்தது என்று தோன்றுகிறதே?) தொடர்ந்த வாசிப்பும் எழுத்தும் தரும் பயிற்சியின் பலனை நன்றாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

அப்பாதுரை சொன்னது…

ஜோதிஜி மற்றும் உங்கள் எழுத்தாடல் அற்புதம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....