துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.10.11

அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-2





ரோகோஸினையும் நஸ்டாஸ்யாவையும் தொடர்ந்தபடி மிஷ்கின் மாஸ்கோவுக்கு ஓடுவது இபான்சின் குடும்பத்தாருக்குச் சற்று சங்கடத்தை ஏற்படுத்தினாலும் மிஷ்கின் எதற்காகவும் யாருக்காகவும் கவலை கொள்ளாமல் நஸ்டாஸ்யாவை மீட்பது ஒன்றே குறியென இருக்கிறான்;ஆனால் அவளோ கிட்டத்தட்ட ஆறுமாத காலம்,அவனையும் ரோகோஸினையும் மாறி மாறி அலைக்கழிக்கிறாள்;ரோகோஸினோடு மணமேடை வரை பல முறை வந்து விட்டுத் திடீரென மிஷ்கினிடம் ஓடி வந்து விடும் அவள் அவனிடமிருந்தும் சட்டென்று மாயமாகி விடுவாள்.


இனிமேல் தன்னால் ஆவது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து கொண்ட கட்டத்தில், மிஷ்கின் பீட்டர்ஸ்பர்க் நகருக்குத் திரும்பி வருகிறான்.ரோகோஸின் வீட்டிலேயே அவனைச் சந்தித்து அவன் மீதான தன் நல்லுணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்கிறான். தான் அணிந்திருக்கும் சிலுவையை மிஷ்கினுடன் மாற்றிக் கொண்டு அவனைத் தாயிடம் ஒரு சகோதரனாக அறிமுகம் செய்து வைக்கும் ரோகோஸினுக்கு அவனைக் கொல்லும் பொறாமை வெறியும் (
நஸ்டாஸ்யா சார்ந்ததாக)  
உடனேயே 
ஏற்பட்டு விட, 
மிஷ்கினைக் கொல்லும் வெறியோடு அவன் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து அவனைக் கத்தியால் குத்த முயல்கிறான்.மிஷ்கினுக்குத் திடீரென ஏற்படும் காக்காய் வலிப்பு நோய் அப்போது ஏற்பட்டு அவன் மயங்கி விழுவதால் ரோகோஸின் எதுவும் செய்யாமல்,அங்கிருந்து அகன்று சென்று விடுகிறான்.



மிஷ்கினுக்கு எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்திருக்கும் சொத்து பெருந்தொகையாக இல்லையென்பதோடு,ஏற்கனவே அதில் சேர வேண்டிய கடன் பாக்கி 
தங்களுக்கு 
இருப்பதாக 
வேறு 
 சொல்லிக் கொண்டு பலரும் அவனை முற்றுகையிட்டபடி இருக்கிறார்கள். இயல்பாகவே இரக்க குணம் படைத்த மிஷ்கின் அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை; அவனது ஏமாளித்தனம் கண்டு லிசவெதாப்ரகோஃபியேவ்னா-இபான்சின் தம்பதியர் வருத்தம் அடைந்தாலும் அவனது உயர்வான குணம் அவர்களை வியக்கவும் வைக்கிறது.

சொத்துக்களைப் பராமரிப்பதில் மிஷ்கினுக்கு உதவியாக இருந்தாலும் ஒரு புறம் அவன் மீது பொறாமை உணர்வை அடைகாத்தபடியே இருக்கிறான் கன்யா; ரோகோஸினுக்குக் கூட்டாளியாக இருந்த லெபதேவ் இப்போது மிஷ்கினோடு ஒட்டிக் கொள்கிறான்.பணம் படைத்தவர்களோடு ஒட்டிக் கொண்டிருப்பதே அவனது பிறவிக் குணம்.பாவ்லோஸ்க் என்னும் கோடைவாசச் சிற்றூரில்,லெபதேவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கு ஓய்வெடுக்க வருகிறான் மிஷ்கின்; தங்கள் கோடை காலத்தைக் கழிப்பதற்காக இபான்சின் குடும்பமும் 
 பாவ்லோஸ்கிலேதான் தங்கியிருக்கிறது. நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னாவும்தன் தோழி ஒருத்தியின் வீட்டில்- பாவ்லோஸ்கில் தங்கியிருக்கிறாள்;அவளை அவ்வப்போது கண்காணிக்க ரோகோஸினும் அங்கு வந்து செல்கிறான்.


மிஷ்கினை வளர்த்த பாவ்லிஷ்ட்சேவின் மகன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டபடி பர்தோவ்ஸ்கி என்ற ஓர் இளைஞனும் அவனைச் சார்ந்த வாலிபர் கூட்டமும் மிஷ்கினை வளைத்துக் கொண்டு பணம் பறிக்க முயல்கிறது.மிஷ்கின் அந்தச் சூழ்நிலையை நிதானமாகவும்,பொறுமையாகவும் கையாளுகிறான்;பர்தோவ்ஸ்கி 
பாவ்லிஷ்ட்சேவின் மகன் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டாலும் அவனுக்குப் பணம் தர முன் வருகிறான்.
அந்தக் கூட்டத்திலுள்ள இளைஞர்கள் மிஷ்கினின் நல்லியல்புகளைப் புரிந்து கொண்டு அவனுக்கு நண்பர்களாகிறார்கள்.


பாவ்லோவ்ஸ்கில் இபான்சின் குடும்பத்தாரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு மிஷ்கினுக்கு நிறையவே வாய்க்கிறது. 

நஸ்டாஸ்யாவின் மீது தான் கொண்டிருந்தது கருணை உணர்வு மட்டுமே என்பதைப் புரிந்து கொண்டிருக்கும் மிஷ்கின் இபான்சின் குடும்பத்தினரின் மூன்றாவது பெண்ணான அக்லேயா மீது காதல் வயப்படுகிறான்.ஆனாலும் அதற்குக் கூடத் தனக்கு அருகதை உண்டா என்ற கேள்வியும் அவனுள் தலை காட்டாமல் இல்லை.
‘’அவன் காதல் வயப்பட்டிருக்கிறான் என்றோ உணர்ச்சிகரமான காதலில் அவன் மூழ்கிப் போயிருக்கிறான் என்றோ அந்தத் தருணத்தில் யாராவது சொல்லியிருந்தால் அவன் அவர்களின் அந்த எண்ணத்தை வியப்போடும் சிறிது வெறுப்போடும் கூட மறுக்கவே செய்திருப்பான்......அப்படி எண்ணுவதற்கே அவனுக்குக் கூச்சமாக இருந்தது.அவனைப் பொறுத்த வரையில் ‘அவனைப் போன்ற ஒரு மனிதன் காதல் கொள்வதும்,அவன் மீது பிறர் காதல் கொள்வதும்’ அரக்கத்தனமான ஒரு விஷயமாகவே தோன்றியது..’’
என்று அவனது அப்போதைய மனநிலையை விவரித்துக் கொண்டு போகிறது நாவல்.
குறும்புத்தனமும்,ஏதாவது ஒரு சாகசம் செய்தே ஆக வேண்டுமென்ற வேண்டுமென்ற விருப்பமும் கொண்ட அக்லேயாவும் மிஷ்கினின் பால் ஈர்க்கப்பட்டபோதும் - முன்பு நஸ்டாஸ்யாவுடன் அவன் கொண்டிருந்த அன்பு,மற்றும் உலகியலுக்கு ஒவ்வாத அவனது நடத்தை ஆகியவை ,தனது முடிவைத் துணிந்து உடனடியாக வெளிப்படுத்த முடியாமல் அவளைத் தடுக்கின்றன. அவ்வப்போது அவனைப் பரிகாசம் செய்வதும்,சில வேளைகளில் அவனுக்குப் பரிந்து பேசுவதுமாக அவள் இருந்தாலும் அவள் மனம் இன்னதென்று அவளது பெற்றோருக்குப் பிடிபடாமல் இல்லை.
இடையே பாவ்லோஸ்கில் தங்கியிருக்கும் நஸ்டாஸ்யாவும் மிஷ்கினை மணக்குமாறு அக்லேயாவுக்குத் துண்டுக் கடிதங்களைச் சில நபர்கள் வழி அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கிறாள். மிஷ்கினுக்கு அமையவிருக்கும் 

நல்வாழ்வு,தன் மீது அவன் கொண்டிருக்கும் கருணை உணர்வினால் பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்ற ஆதங்கமே அவ்வாறு செய்யுமாறு அவளைத் தூண்டுகிறது. அவள் கொண்டிருக்கும் அவ்வாறான எண்ணத்தை,ரோகோஸினும் கூட ஒருமுறை மிஷ்கினிடம் பகிர்ந்து கொள்கிறான்; அக்லேயாவை மிஷ்கின் மணந்த பின்புதான் அவனைத் தான் மணக்க முடியும் என்று நஸ்டாஸ்யா அவனிடம் தெரிவித்திருப்பதால்,மிஷ்கின் - அக்லேயா உறவில் ரோகோஸினும் அக்கறை காட்டுகிறான்.

சம்பிரதாயமான நிச்சயதார்த்தமாக இல்லாவிடினும் தங்கள் நண்பர்கள்,உறவினர்கள் ஆகியோருக்கு மிஷ்கினை அறிமுகம் செய்து வைக்கும் வகையில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்கிறது இபான்சின் குடும்பம். 

அது போன்ற விருந்துகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற மரபுகளையெல்லாம் அறிந்து பழகியிராத மிஷ்கின் அந்தக் கூட்டத்தில் அசந்தர்ப்பமாக எதையேனும் பேசி விடக் கூடும் என்றோ..அங்குள்ள நாகரீகமான-பழமை வாய்ந்த விலையுயர்ந்த பூச்சாடியை உடைத்து விடக் கூடும் என்றோ அக்லேயா அஞ்சி அவனை எச்சரிக்கவும் செய்கிறாள்; அதே போன்ற உள்ளுணர்வு அவனுக்கும் இருந்தபோதும் கூடியவரை அமைதியாகவே இருக்க முயல்கிறான் அவன்; இடையே ஒரு கட்டத்தில் நடக்கும் உரையாடலில் தன்னை மறந்தவனாய் உணர்ச்சி வசப்பட்டுப் பலவற்றையும் பேசி அந்தப் பூச்சாடியை உடைத்து இலேசான வலிப்பினால் தாக்கப்பட்டு அங்கேயே மயங்கியும் வீழ்கிறான். 

அக்லேயாவுக்கு அவன் பொருத்தமான ஜோடி இல்லை என அந்தக் கூட்டத்தார் எண்ணியபோதும் அக்லேயா அவனை நிராகரித்து ஒதுக்கி விடவில்லை; அவள் அவனைப் புரிந்து கொள்ளவே செய்கிறாள்.
ஆனாலும் அவனையும் அழைத்துக் கொண்டு அவன் முன்னிலையில் வைத்து நஸ்டாயாவைச் சந்திக்கிறாள் அவள்.மிஷ்கினின் வாழ்வில் குறுக்கிடும் இரு பெண்களும் எதிரும் புதிருமாகச் சந்திக்கும் இந்தக் கட்டமே நாவலின் உச்சகட்ட திசை திருப்பமாகிறது.
மிஷ்கினை மணக்க வேண்டும் என்பது தானாக எடுக்கும் முடிவு,அதில் 
நஸ்டாயா ஏன் தலையிட்டுத் தன்னை அவ்வாறு செய்ய வற்புறுத்த வேண்டும் என்பது அக்லேயா முன் வைக்கும் வாதம்.
தொடக்கத்தில் நிதானமாகவே பேசிக் கொண்டு வந்த
நஸ்டாயா ,அக்லேயா பயன்படுத்தும் சொற்கள் தன்னை இழிவுபடுத்துவதாகவும்,தனது 
தன்மானத்தைக் காயப்படுத்துவதாகவும் போய்விடும் நிலையில் தானும் பதிலுக்குச் சீறி வெடிக்கிறாள். 
மிஷ்கின் அக்லேயா மீது நேசம் வைத்திருந்தாலும் நாவலின் தொடக்க கட்டம் முதல் மீது அவனிடம் பொங்கித் ததும்பும் காருண்யம் அக்லேயாவின் வார்த்தைகள் தவறானவை என்று அவனைச் சொல்ல வைத்து விடுகின்றன. 
அதில் புண்பட்டுப் போன அக்லேயா அடிபட்ட பார்வையுடன் அவனைப் பார்த்து விட்டு அங்கிருருந்து ஓட எத்தனிக்கிறாள்;மிஷ்கினும் அவளைத் தொடர்ந்து சென்று 
நஸ்டாயா 
மீது தான் கொண்டிருப்பது வெறும் இரக்கமும் கருணையும் மட்டுமே என்று சொல்ல முற்படுகிறான்.அதற்குள் 
நஸ்டாயா 
அவன் கரங்களில் மயங்கி விழுந்து விட- காதலா கருணையா என முடிவெடுத்தாக வேண்டிய அந்தக் கணத்தில்...அந்த நேரத்தில் காதலை விடவும் அவனுக்குக் கருணையே முதன்மையாகி விடுகிறது.
நஸ்டாயா
வைச் சற்றே அமைதிபடுத்தி விட்டு அக்லேயாவை அவன் தேடிச் செல்வதற்குள் காலம் கடந்து விட, அக்லேயாவின் மனக் கதவு அவனைப் பொறுத்தவரை முற்றாக அடைபட்டுப் போய் விடுகிறது.


இம் முறை உறுதியாக 

மிஷ்கினையே 
மணக்கப் போவதாக 
நஸ்டாயா
அறிவிக்கிறாள்;  எதிலும் ஒட்டாத மனத்துடன் இருக்கும் அவனும் அவளது மன ஆறுதலுக்காக அதற்கான ஏற்பாடுகளில் முனைகிறான்.அவளுக்கு விருப்பமான உடைகள்,விலையுயர்ந்த ஆபரணங்கள் அனைத்தும் வாங்கிக் குவிக்கப்பட அவளும் ஆசையோடு தன் திருமண நாளை எதிர்நோக்கியிருக்கிறாள்.

ஆனாலும் அவள் மனதுக்குள் ஏதோ ஒரு பிறழ்வு ஏற்பட்டுப் போயிருப்பதாகவே ஐயப்படும் மிஷ்கின் அவள் கூடவே உடனிருந்து அவளை மகிழ்வான மனநிலையில் வைத்துக் கொள்ள இயன்ற வரை முயல்கிறான்.
மண நாளன்று மணமகளின் வருகைக்காக மணக் கோலத்தில் கோயிலில் மிஷ்கின் காத்திருக்க அவளோ திருமணத்துக்கான கோச்சு வண்டியில் ஏறப் போகும் மிகச் சரியான வேளையில் கூட்டத்தில் பாய்ந்து அங்கிருக்கும் ரோகோஸினைத் தன்னைக் கூட்டிச் செல்லுமாறு கூறியபடி அவனுடன் ஓடி விடுகிறாள்.


தனக்கு நேரிட்ட அவமானத்தை விடவும் அவள் மீதான அக்கறையும் கவலையுமே தூண்டப் பெற்றவனாய் மறுநாள் அவளைத் தேடிச் செல்லும் மிஷ்கின்,தன் உள்ளுணர்வில் பட்டவாறே ரோகோஸின் வீட்டில்- ரோகோஸினால் கத்திக் குத்துக்கு ஆளாகி மரணித்த நிலையில் அவளைக் காண்கிறான். ஏதோ ஒரு வன்மமும் பொறாமையும் தூண்ட அவளைக் கொலை செய்து விட்ட போதும் அந்தக் கொலையால் சித்தப் பிரமை பிடித்தவனைப் போலிருக்கும் ரோகோஸின்,மிஷ்கினின் வருகையை முன் கூட்டி எதிர்பார்த்தது போல,அவனை இயல்பாக எதிர்கொள்கிறான்.வாசனைத் தைலம் நிறைத்த ஜாடிகளை அறையில் வைத்துவிட்டு,அவளது சவத்தின் இரு புறங்களிலும் அவர்கள் இருவரும் படுத்துக் கொள்ள ஏற்ற முறையில் படுக்கைகளைக் கூடத் தயார் செய்து வைத்திருக்கிறான் அவன்.

மறுநாள் காலை அறைக் கதவை உடைத்துத் திறப்பவர்கள் சித்தப் பிரமை கொண்டு கலங்கிய நிலையில் ரோகோஸினையும் அவனைத் தழுவித் தழுவி ஆறுதல் கூறும் நிலையில் மிஷ்கினையும் காண்கின்றனர்.

உடலும்மனமும் சற்றுத் தேறிய பின்,தன் குற்றத்தை உள்ளபடி ஒத்துக் கொள்ளும் ரோகோஸினுக்குப் பதினைந்து ஆண்டுக்கால சிறை வாசம் விதிக்கப்பட சைபீரிய சிறைக்குச் செல்கிறான். 
நாவலின் தொடக்கப் புள்ளிக்கே வந்து சேர்ந்து விட்டிருக்கும் மிஷ்கின்,மன நலசிகிச்சைக்காக மீண்டும் சுவிட்சர்லாந்து மருத்துவரின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்படுகிறான்.

பின் குறிப்பு..
இந்த இரு பதிவுகளிலும் மாமேதை தஸ்தயெவ்ஸ்கியின் இடியட்/அசடன் நாவலின் கதைச் சுருக்கம் மட்டுமே கோடிகாட்டப்பட்டிருக்கிறது. 
தஸ்தயெவ்ஸ்கியின் ஆன்மாவைத் தரிசிக்க...மனிதமன விகாரங்களின் சித்தரிப்பை அவர் மொழியில் கண்டடைய நாவல் முழுவதிலும் பயணப்படுவது ஒன்றே வழி..
காண்க,

அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1

அசடன்:சில முன் குறிப்புகள்[3]



5 கருத்துகள் :

அப்பாதுரை சொன்னது…

கதைச் சுருக்கம் பிரமாதம். தீவிர இலக்கியங்களைப் புரிந்து கொள்ள சுருக்கம் மிகவும் உதவியாக இருக்கும். கோனார், க்லிப் நோட்ஸ் போல.
மொழி பெயர்க்கும் பொழுது உள்ளூர் பெயர்களை வைப்பது முறையா தவறா? கதையோட்டத்தில் மனதை செலுத்த ஏதுவாக இருக்குமோ?

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்பிற்குரிய அப்பாதுரை அவர்களுக்கு
வணக்கம்.
மிகப் பெரிய ஒரு நாவலுக்குள் நுழைய மலைப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே..கதைச் சுருக்கம் .
தயவு செய்து இம் மாத இறுதியில் வெளிவர இருக்கும் நாவலைப் படியுங்கள்.அப்போதுதான் அந்த நாவலாசிரியரை முழுதாக விளங்கிக் கொள்ள முடியும்.
//மொழி பெயர்க்கும் பொழுது உள்ளூர்ப் பெயர்களை வைப்பது முறை//யாக இருக்காது.எந்தக் கலாசார வாழ்வின் பின் புலத்தில் மூலம் அமைகிறதோ அதை அந்த ஜீவன் கெடாமல்-நாம் படிக்கவும் சரளமாகவும் கொடுப்பதே மொழிபெயர்ப்பவரின் பணி...

aotspr சொன்னது…

உங்களின் கதைச் சுருக்கம் அருமை.......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

வணக்க்கம் அம்மா நீண்ட நாட்கள் ஆகிவிட்டது கதை சுருக்கம் நாவலை வாசிக்கவேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது.

பெயரில்லா சொன்னது…

இயக்குனர்-மேதை அகிரா குரோசவா இயக்கிய ஜப்பானிய மொழிப்படம் "இடியட்"டை பார்த்திருக்கிறீர்களா? அன்புடன் கணேஷ் (தில்லி-ஞாபகமிருக்கிறதா?) :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....