துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

23.10.11

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 3



 குறைகளும்,தன்னலமும்,வஞ்சக மாசுகளும் மண்டிக் கிடக்கும் மானுடர்களுக்கு நடுவே தான் காண விரும்பிய நவீன ஏசுவின் வடிவமாகவே அசடனாகிய மிஷ்கினின் பாத்திரத்தை தஸ்தயெவ்ஸ்கி சித்தரித்திரிக்கிறார்.
’’மிஷ்கினுக்கு இருக்கும் கிறிஸ்துவின் சாயலைப்பற்றி மேலைநாட்டு இலக்கியவிமர்சகர்கள் நிறையவே எழுதியிருக்கிறார்கள். சகமனிதர்களின் துயரங்களுக்கும்,தன் சொந்தத் துயரங்களுக்கும் வேறுபாடு தெரியாதவன் அவன். அந்த இயல்பே அவனை அனைத்து மானுடத் துயரங்களுக்கும் மேலானவனாக, அவற்றில் இருந்து மீட்பளிப்பவனாக ஆக்கிவிட்டிருக்கிறது’’என்று தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஜெயமோகன்.
விமரிசகர்கள் இவ்வாறு கூறுவதற்கான ஆதாரங்களை நாவலின் ஓட்டத்தில் பல கட்டங்களில் காண முடிந்தாலும் அதன் உச்சமாக அமைவது நஸ்டாஸ்யா கொலப்பட்டுக் கிடக்கும் இறுதிக் கட்டம்.

நாவல் முழுவதும் யார் மீது செலுத்திய கருணைக்காகத் தன் காதலையும் வாழ்வையுமே கூடத் தொலைத்துக் கொண்டானோ அந்த நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா,ரோகோஸினால் கொலையுண்டு கிடக்கிறாள்.ஏதோ ஒரு பொறாமை உணர்ச்சியின் மூர்க்கமான ஆவேசத்தால் அவளைக் கத்தியால் குத்திச் சாகடித்த ரோகோஸின் ஜுர வேகத்தில் சித்தப் பிரமை பிடித்தவனைப் போல இருக்கிறான். இது இப்படித்தான் நடக்கப் போகிறது என்பதை வழக்கமான தன் உள்ளுணர்வின் தூண்டுதலால் ஓரளவு ஊகிக்க முடிந்து விட்டிருந்தபோதும் அந்த எழில் வடிவம்...வாழ்வில் நிம்மதி என்பதையே சற்றும் நுகர்ந்திராத பாவப்பட்ட அந்தப் பெண் அவ்வாறு இறந்து கிடப்பது அவனுள் பெரும் துயரத்தைக் கிளர்த்துகிறது.


ஆனால் அதையும் மீறியதாய் அவனது இயல்பான பரிவுணர்வு அவனில் தலை காட்டத் தொடங்க,ரோகோஸினின் நிலைக்காக வருத்தம் கொண்டவனாய்...மிகுந்த ஆதங்கத்துடன் அந்தக் கொலைகாரனை கொன்றவனை அணைத்து ஆறுதலளிக்கத் தொடங்குகிறான் அவன். 
’’அவ்வப்போது தனது உரத்த முரட்டுக் குரலில் சம்பந்தமே இல்லாதபடி எதையாவது திடீர் திடீரென்று முணுமுணுத்துக் கொண்டும் கத்திக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தான் ரோகோஸின்.அவ்வாறான தருணங்களில் மிஷ்கின் தன் நடுங்கும் விரல்களால் அவனது தலையையும் தலை முடியையும் தொட்டு அவற்றைத் தன் விரல்களால் கோதி விடுவான்;கன்னங்களில் பரிவுடன் தட்டிக் கொடுப்பான்.கையற்ற நிலையில் பரிதவிப்புடன் தன் முகத்தை எந்த விதத் தயக்கமும் இன்றி ரோகோஸின் முகத்தோடு மிக நெருக்கமாக வைத்துக் கொண்ட மிஷ்கினின் கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீர்,ரோகோஸினின் கன்னங்களின் மீது விழுந்து கொண்டிருந்தது.ஜன்னி கண்ட அந்த மனிதன் ஒவ்வொரு முறை கூச்சலிடும்போதும் பிதற்றத் தொடங்கும்போதும் தனது நடுங்கும் கரத்தை மென்மையாக அவனது தலையிலும் கன்னத்திலும் வைத்து வருடிக் கொடுத்தபடிஅவனுக்கு ஆறுதலளித்துக் கொண்டிருந்தான் மிஷ்கின்’’
என்று அந்தக் கட்டத்தை விவரித்துக் கொண்டு போகிறது நாவல்..
உலகப் பேரிலக்கியங்கள் அளிக்கும் தரிசனங்கள் மானுடத்தின் உச்சமான நல்ல பக்கங்களைத் திறந்து காட்டும் நுழை வாயில்கள் என்பதை நிறுவும் அந்தக் கட்டம்தான் எப்படிப்பட்ட ஒரு மகத்தான காட்சி? மானுட மன்னிப்பின்- சகிப்புத் தன்மையின் உச்சமான அற்புதமான ஒரு முரண் கணமல்லவா அது?

ஏசுவின் குறிப்பிட்ட ஒரு ஓவியம் பற்றிய குறிப்பும் நாவலின் மூன்று நான்கு கட்டங்களில் இடம் பெற்றிருக்கிறது. இருள் மண்டிக் கிடக்கும் ரோகோஸின் வீட்டு வரவேற்பறையில் மிக வினோதமான வடிவத்தில் - வழக்கத்தில் அதிகமாகக் காண முடியாத வித்தியாசமான அளவுடன் ஆறடி நீளமும் ஓரடி உயரமும் கொண்டதாக இருக்கும் அந்தப் படத்தைப் புகழ்பெற்ற ஜெர்மானிய ஓவியர் ஹேன்ஸ் ஹோல்பெயின் வரைந்த ஓவியத்தின் நகலாகக் குறிப்பிடுகிறான் மிஷ்கின்.அவன் அந்தப் படத்தைக் கண்டவுடன் சற்றுத் துணுக்குற்றாலும் தொடர்ந்த அவனது சிந்தனை ஓட்டம் வேறு ஏதேதோ எண்ணங்களால் தடைப்பட்டுப் போய்விடுகிறது. கதைப் போக்கில் தொடர்ந்து அதே ஓவியத்தைக் காண நேரும் இப்போலிட் என்னும் இளைஞனும் நஸ்டாஸ்யாவும் அந்த ஓவியம் தங்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

குறிப்பாகக் காச நோயின் பிடியில் சிக்கி ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இப்போலிட்டின் மீது அதன் தாக்கம் மிகக் கூடுதலாகவே இருப்பதால் அவன் சொற்களின் வழியாகவே அந்த ஓவியத்தை இவ்வாறு வருணிக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.


’’கலைக் கண்ணோட்டத்தோடு பார்க்கும்போது எந்தச் சிறப்பான அம்சமும் இல்லையென்றபோதிலும் மிக வினோதமான ஒரு பதட்டத்தை இருப்புக் கொள்ளாத தவிப்பை அது என்னுள் கிளர்த்தியது.பொதுவாக ஏசுவை வரையும் ஓவியர்கள் சிலுவையில் இருக்கும் நிலையிலும் அதிலிருந்து அகற்றப்பட்ட பிறகும் அவரது முகம் அதீதமான அழகுடனும் பொலிவுடனும் இருப்பதாக வரைவதே வழக்கம்.அவர் மிகக் கடுமையான வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த நேரத்திலும் கூட அவரது முகத்தின் பொலிவையும் எழிலையும் தக்க வைப்பதற்கே அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள்.ஆனால் ரோகோஸின் வீட்டில் இருந்த படத்தில் அந்த எழிலில் சாயலே கொஞ்சமும் இல்லை.சிலுவையில் அறைபட்டு இறந்து போவதற்கு முன் அளவற்ற வேதனைகளை எதிர்ப்பட நேர்ந்த ஒரு மனிதனின் பிணத்தைப் போலத்தான் எல்லா வகையிலும் இருந்தது அது.


சிலுவையைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டு அதன் பாரம் தாங்க முடியாமல் விழுந்தபோது உடன் வந்த காவலர்களாலும் மக்களாலும் அடி உதை சித்திரவதைகளுக்கு ஆளாகி வேதனையை வெளிப்படுத்தும் முகம் அந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது.


இப்போதுதான் சிலுவையிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட மனிதனின் முகம் அது.இன்னும் கூட அந்த முகத்தில் உடற்சூடும் உயிர்த்துடிப்பும் இருக்கத்தான் செய்தது.இறந்து போன மனிதனின் முகத்தில் அவன் அனுபவித்த துன்பத்தின் நிழல் இப்போதும் கூடத் தேங்கித்தான் இருந்தது.இன்னமும் கூட அந்தத் துன்பம் தரும் வாதனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பது போலவே அந்த முகத் தோற்றம் இருந்தது.ஒரு மனிதன் அனுபவிக்கக் கூடிய கடுமையான வேதனைகளும் துன்பங்களும் அந்த ஓவியத்தில் சிறிது கூட விட்டு வைக்கப்படவில்லை.இதுதான் இயற்கையின் நியதி,யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்தபின் ஒரு மனிதப்பிணம்-அதன் முகம் இப்படித்தான் இருக்கமுடியும் என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது அந்த ஓவியம்.அந்த உணர்வுகளை மிக அருமையாக வெளிப்படுத்தியிருந்தான் ஓவியன்.
ஹேன்ஸ் ஹோல்பெயின் வரைந்த ஓவியம்
அந்தப் படத்திலிருந்த முகம் அடிகளாலும் குத்துக்களாலும் சிதைக்கப்பட்டு அச்சமூட்டும் வகையில் வீங்கிப் போயிருந்தது.சவுக்கடிகளால் விளாறப்பட்ட -இரத்தம் உறைந்துபோன திட்டுத் திட்டான இரத்தக் காயங்கள் அந்த உடலெங்கும் முகமெங்கும் பரவிக் கிட்ந்தன.கண்கள் திறந்த நிலையில் காணப்பட்டன.விரியத் திறந்திருந்த அந்த விழிகளின் வெண்படலத்தில் மரண ஒளியின் ரேகைகள் நிழலாகப் படர்ந்திருந்தன.

இறப்பு என்பது இத்தனை கொடூரமானதாகவும் இயற்கையின் விதிகள் இந்த அளவு வலிமை வாய்ந்தவையாகவுமிருக்கும்போது அவற்றை வெற்றி கொள்வது எவ்வாறு சாத்தியமாகும்...இயற்கையையே தன் வசப்படுத்தியிருந்தவரும்,இறந்து போன தன் நண்பரையே உயிர்ப்பித்தவருமான அவராலேயே - கடவுளை ஒத்த அவராலேயே மேற்கூறியவற்றை வெற்றி கொள்வது சாத்தியமாகவில்லையே...அந்தப் படத்தைப் பார்க்கும்போது இயற்கை என்பதே ஒரு கருணையற்ற பூதாகரமான ஊமையான ஒரு மிருகத்தைப் போலத்தான் தோன்றுகிறது’’

ஒழுக்கநியதிகளின்படி வாழும் மனிதர்களை விடப் பாவத்திலும் புறக்கணிப்பிலும் துன்பப்பட்டு அவற்றில் அழுந்திப்போனவர்கள்,ஏசுவின் இந்தக் கோலத்தில் தங்கள் மன ஆறுதலைப் பெறுவதும அவரை அணுகிப் புரிந்து கொள்வதும் எளிதாக இருக்கிறது;குற்றமும் தண்டனையும் நாலிலும் கூட மர்மலேதோவ்,சோனியா ஆகியோரின் பாத்திரங்கள் வழி இதே கருத்தை வலியுறுத்துகிறார் தஸ்தயெவ்ஸ்கி. அதே போல இங்கும் ஏசு பட்ட துன்பங்களும்,காயங்களும் மரணத்தின் நிழலில் இருக்கும் இப்போலிட்டுக்கு ஒருவகை ஆறுதலை அளிக்கின்றன;அதே போலப் பிறரின் பழிச் சொற்களுக்கும் ஏளனத்துக்கும் பரிகாசத்துக்கும் மட்டுமே காலம் முழுவதும் ஆட்பட்ட நஸ்டாஸ்யாவுக்கும் அந்த ஓவியம் இனம் புரியா ஆறுதலை ஏற்படுத்துகிறது.
பிறரின் துயரங்களுக்காகத் தன்னை ஒப்புக் கொடுத்து அவற்றை வலிந்து ஏற்கும் மிஷ்கினோ நவீன ஏசுவின் மறுவார்ப்பாகவே ஆகி விடுகிறான்...


காண்க இணைப்புக்கள்


அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -1

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -2

அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1





1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

மிக அருமை அம்மா.. அசடனுக்காக காத்திருக்கிறேன். எப்போ வருகிறீர்கள். உங்கள் கையால் கையெழுத்தோடு வாங்க வேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....