முழுமையான தீமை/நன்மை என்றோ...முழுக்க முழுக்கத் தீயவர்கள்/நல்லவர்கள் என்றோ உலகில் எதையும் யாரையும் இருமைகளாக மட்டுமே எப்போதும் வரையறுத்து விட முடியாது என்பதையே தன் படைப்புக்களில் பெரும்பாலும் முன்னிறுத்தும் தஸ்தயெவ்ஸ்கி முழுமையான ஒரு நன்மையின் உருவகமாகக் காட்ட முயன்றுள்ள பாத்திரமே மிஷ்கின் என்னும் அசடன்
பிறமொழி நாவல்களை வாசிக்கையில்-அதிலும் குறிப்பாக அயல்நாட்டு இலக்கியங்களை வாசிக்கையில் அவற்றில் இடம் பெறும் பெயர்கள் - குடும்பத் துணைப் பெயர்கள்-surname-மற்றும் சுருக்கமாகக் குறிப்பிடும் செல்லப் பெயர்கள் இவை நம்மை அந்த நாவலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற ஒரு தயக்கமும் மலைப்பும் ஏற்படுவது இயல்புதான்..ஆனால் முன் பதிவொன்றில் நான் குறிப்பிட்டிருப்பது போல அந்தப் படைப்புக்கள் ’’விசித்திர விபரீத உடையுடன்,பாஷையுடன் காணப்பட்டாலும் - அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்க முயற்சிக்கி’’ன்றன என்று மட்டும் கொண்டால்-(நம் ஊர் சுப்பிரமணியனும்,கணேசனும்,ரமேஷ் சுரேஷ் முதலிய பெயர்களும் அவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும் என்று மட்டும் நினைத்தபடி)-
அந்தக் கட்டத்தைத் தாண்டிச் சென்று விட்டால் மகத்தான தரிசனங்களும் உச்சங்களும் அங்கே நமக்காகக் காத்திருக்கும்.
தஸ்தயெவ்ஸ்கியின் இடியட்/அசடன் நாவலில் வந்து போகும் பாத்திரங்கள் மிகப்பல.தளபதி என்ற அதிகார மிடுக்கு ஒரு புறம் இருந்தாலும் குடும்பப் பாசமும் மிஷ்கின் மீது பிரியமும் கொண்டவராய் நாவலில் இடம் பெறும் இபான்சின்,வெளிப்படையாகப் பேசும் இயல்பு கொண்ட கபடுகளற்ற மனம் கொண்ட அவரது மனைவி,பாசநெருக்கத்தோடு கூடிக் குலவும் அவரது மகள்கள்,மரணத்தின் நாளை எதிர்நோக்கியபடி தன் இறுதி சாசனத்தை வாசிக்கும் நோயாளியான இப்போலிட்,வன்மத்தோடு வளைய வரும் கன்யா, கொலைவெறியோடு சுற்றிவரும் ரோகோஸின்,பணம் படைத்தவர்களிடம் வளைந்து நெளிந்தபடியே வாழ்வை நகர்த்தும் ஒட்டுண்ணி மனிதர்களின் பிரதிநிதியாகிய லெபதேவ்,பழைய நினைவுகளில் சஞ்சரிப்பதையே பொழுது போக்காய்க் கொண்டிருக்கும் கன்யாவின் தந்தை முன்னாள் தளபதி இவால்ஜின்,மிஷ்கின் மீது வெகுளித்தனமான உண்மையான பாசம் வைத்திருக்கும் அவரது இரண்டாவது மகன் கோல்யா என அசடன் நாவலில் இடம் பெறும் பலதரப்பட்ட பாத்திரங்களில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு தனித் தன்மையுடன் காட்ட நாவலாசிரியர் முயன்றுள்ளபோதும் இளவரசன் மிஷ்கின் மற்றும் அவனது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா,அக்லேயா ஆகிய இரு பெண்கள் -இடையே குறுக்கிடும் ரோகோஸின் இவர்களை மையம் கொண்டதாகவே நாவல் பெரிதும் நகர்கிறதென்பதால் அவர்களை முன்னிலைப்படுத்தி இங்கே சில செய்திகள்....
ரஷ்ய பிரபுத்துவ/சிற்றரச வம்சம் ஒன்றின் வாரிசான 26 வயது இளைஞன் லேவ் நிகொலெயெவிச் மிஷ்கின் இளவரசனே நாவலின் முதன்மைப் பாத்திரமாகிய அசடன்.உலகியலின் சூது வாதுகளைப் பற்றிச் சிறிதும் அறியாத பரிசுத்தமான உள்ளம் கொண்டிருக்கும் அவன்,பிறர் துன்பம் கண்டு நெகிழ்வதோடு மட்டுமன்றி அவர்களின் நன்மைக்காகத் தன் வாழ்வையே கூடப் பணயமாக்கி விடத் துணிபவன்.மிகப் பெரிய இந்த ஆக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் வஞ்சனை எண்ணங்களே கிஞ்சித்தும் தலை காட்டாத ஒரு பாத்திரமாக மட்டுமே மிஷ்கினைக் காட்ட முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி என்பது அசடன் சில முன் குறிப்புகள்[3]இலும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
முழுமையான தீமை/நன்மை என்றோ...முழுக்க முழுக்கத் தீயவர்கள்/நல்லவர்கள் என்றோ உலகில் எதையும் யாரையும் இருமைகளாக மட்டுமே எப்போதும் வரையறுக்க முடியாது என்பதையே தன் படைப்புக்களில் பெரும்பாலும் முன்னிறுத்தும் தஸ்தயெவ்ஸ்கி முழுமையான ஒரு நன்மையின் உருவகமாகக் காட்ட முயன்றுள்ள பாத்திரமே மிஷ்கின் என்னும் அசடன்.
தன்னைக் கொலை செய்யவோ ஏமாற்றவோ முன்வரும் எவரையும் கூட,எந்தக் கட்டத்திலும் தவறாக எண்ணத் துணியாதவன் மிஷ்கின்.
''இவரைப் போன்ற ஒரு மனிதரை ..இந்த அளவு பெருந்தன்மையும்,எளிமையும் கொண்ட ஒரு மனிதரை நான் எதிர்ப்பட்டதே இல்லை.அவரை ஏமாற்றிவிட வேண்டும் என்று எவர் நினைத்தாலும் அவரை ஏமாற்றி விட முடியும்;தன்னை அவ்வாறு ஏமாற்றியவரைக் கூட அவர் பிற்பாடு மன்னித்து விடுவார்’’
என்கிறாள் அவனை நேசிக்கும் அக்லேயா.
தன் மீது வன்மமும் பொறாமையும் கொண்டு தன் மீது கத்தி வீச வரும் ரோகோஸினையும் கூட அவனால் மன்னித்து ஏற்க முடிகிறது.
உண்மையில் நஸ்டாஸ்யாவை முன் வைத்துத் தன் மீது விளைந்த பொறாமை உணர்வால் ரோகோஸின் தன் மீது கத்தியை வீசக் கூடும் என்பது மிஷ்கினின் உள்ளுணர்வுக்குள் தோன்றவே செய்கிறது.
ரோகோஸின் வீட்டின் படிக்கும் அறையில் புத்தகத்தின் நடுவே பார்க்க நேரிடும் கத்தி அவனுள் அவ்வாறான ஒரு முன்னறிவிப்பைக் கிளர்த்தியபோதும் அப்படி ஒரு நினைப்பு தன்னுள் தோன்றியது கூட நினைதைக் கூட ஒரு பாவச் செயலென்றே கருதுகிறான் அவன். ஒரு வேளை தான் நினைத்தபடி எதுவும் நடக்காமல் போனால் அப்படி மனதுக்குள் நினைத்துக் கொண்டது ஒரு தவறுதானே என எண்ணும் அளவுக்கு நெகிழ்வானவன் அவன். இதை ரோகோஸினிடமே அவன் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறான்.
‘’தொடக்கத்திலிருந்தே உங்களைப் பார்க்கும்போதெல்லாம் அப்படிப்பட்ட எதிர்பார்ப்போடு கூடிய ஒரு உள்ளுணர்வு என்னிடம் இருந்துகொண்டுதான் இருந்தது.நாம் சிலுவைகளை மாற்றிக் கொண்ட அந்தத் தருணத்திலே கூட அப்படிப்பட்ட சந்தேகம் என் மனத்தின் ஒரு மூலையில் இருந்திருக்கலாம்.நம் இருவரின் எண்ணங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன.ஒருவேளை நீங்கள் என்னைத் தாக்க முற்படாமல் இருந்திருந்தால் நான் என் முகத்தை எங்கே வைத்துக் கொள்வேன்!நீங்கள் அப்படித்தான் ஏதோ செய்யப் போகிறீர்கள் என்று சந்தேகப்பட்டு விட்டதால் கிட்டத்தட்ட நம் இருவரின் பாவங்களும் ஒரே மாதிரியானவைதான்..’’
இப்படிச் சொன்னதோடு நின்று விடவில்லை மிஷ்கின்.
உண்மையாகவே ரோகோஸின் தன்னைத் தாக்க வந்து அதிலிருந்து தப்பிப் பிழத்த பிறகும் கூட அவனது அந்தச் செயல் ஆத்மார்த்தமானதல்ல..ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் நிகழ்ந்த பைத்தியக்காரத்தனமே அது என்றும் அவனால் பார்க்க முடிகிறது.
‘’அப்பொழுது நடந்த எல்லாவற்றையும் வெறும் பைத்தியக்காரத்தனமாக மட்டுமே நான் பார்க்கிறேன்...அன்றொரு நாள் நாம் பரஸ்பரம் சிலுவைகளைப் பரிமாறிக் கொண்டோமே அந்த பர்ஃபியோன் ரோகோஸின்தான் என் நினைவில் இருக்கிறான்,மற்ற எல்லா விஷயங்களையும் மறந்து விடும்படியும் திரும்பவும் அது பற்றிப் பேச வேண்டாம் என்றும் நேற்றிரவு நாந்தான் உங்களுக்கு எழுதியிருந்தேனே அப்புறமும் ஏன் இப்படி விலகிப் போக வேண்டும்....நாம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஏன் கோபம் கொள்ள வேண்டும்..’’
மிஷ்கினின் இந்த வார்த்தைகள் கொடூர நெஞ்சம் படைத்த ரோகோஸினைக் கூட இலகுவாக்கி விட
‘’ஏதோ உங்களால் கூடக் கோபமும் பகைமையும் கொள்ள முடியும் என்பதைப் போல அல்லவா பேசுகிறீர்கள்.நீங்கள் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறீர்கள் இளவரசே...’’
என்று அவனே மிஷ்கினுக்கு நற்சான்றும் வழங்கி விடுகிறான்.
மகதலீனா மேரியின் மீது கல்லெறியாமல் இருக்கச் சொன்ன இயேசுவைப் போல எல்லோரும் பரிகசித்து இழிவு செய்யும் நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா மீது கரை காணாக் கருணை காட்டி அவளுக்காகவே தன் காதல் வாழ்வையும் கூடத் தொலைத்து விட்டு நாவலின் முடிவில் மீண்டும் மனநிலைப் பிறழ்வுக்கு ஆளாகிறான் மிஷ்கின். உலகியல் வாழ்வின் அளவுகோல்களுக்குப் பொருத்தமற்ற அசடனாக அவன் கணிக்கப்படுவதற்கு அந்தச் செயலும் முதன்மையான ஒரு காரணமாகிறது.
(அடுத்த பதிவில் அது பற்றி..)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக