துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.12.11

’தேவந்தி’-மற்றுமொரு எதிர்வினை...


எனது தேவந்தி சிறுக்தைத் தொகுப்பு பற்றி சி.சு.என்பவர் அனுப்பிய மின் அஞ்சலைப் பிரதி எடுத்து வெளியிட்டிருக்கிறேன்.மிகவும் தேர்ந்த ஒரு வாசக எதிர்வினை அது
என்பதைப் பதிவைப் படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள முடியும். முகமறியா அந்த வாசக உள்ளத்துக்கு  நன்றி...

இனி..சி சு..
சிறு வயது முதல் 'பெண்' என்ற அடையாளம் மேல் எனக்கு ஒரு வித சங்கோஜம் ஏற்பட்டுவிட்டிருந்தது. சிந்திக்க வேண்டும் என்றால் ஒரு 'ஆணை'ப் போல ஆணித்தரமாக, சுய அடையாளத்தை ஒரு எல்லையாகக் கொள்ளாமல் படைக்க வேண்டும் என்று ஒரு மனசித்திரம் விரிந்திருந்தது. சிந்திக்கும் தளங்கள் பொதுவானதாக இருக்கும் போது, இந்தப் பால் ப்ரக்ஞையைக் கடந்து சிந்திப்பது தானே முக்திக்கு வழி? எனவே பால் அடையாளத்தைப் ப்ரக்ஞை பூர்வமாகவே தவிர்த்து விட்டிருந்தேன்; மறந்து விட்டேன், கடந்து விட்டேன் என்றெல்லாம் நம்பியிருந்தேன். ஆனால் எதிர்கொள்ளாத ஒன்றைக் கடக்கவோ மறக்கவோ முடியாது; கண்ணை மூடிக் கொண்டால் சிங்கம் மறைந்து விடும் என்று நம்பும் கழுதையைப் போல. சமூகத்தைப் பற்றிப் புறவயமாக சிந்திக்க நேரும் ஒவ்வொரு தருணமும் பால் அடையாளத்தை அலட்சியப் படுத்தும் நேர்மையான சிந்தனை இல்லை என்பது புத்தகத்தின் அக வெளியிலிருந்து அன்றாட வாழ்க்கை நிறுவனங்கள் என்ற புற வெளியில் உலவும்போது தான் மண்டையில் படாரென்று உரைத்தது. ஒரு இன்பமான லட்சியவாதத் துயிலிருந்து விழித்து எழும்போது ஒரு வாழ்க்கை முடிந்து மற்றொன்றில் எச்சரிக்கையில்லாமல் விழித்து விட்டது போல இருக்கிறது, கூட்டுக்குள்ளிருந்து வெளிவரும் பட்டாம்பூச்சி போலப் படபடப்பாக இருக்கிறது. பால்களற்ற இனிமையான லட்சியவாத இருப்புத் துயரிலிருந்து, அன்றாட வாழ்வின் அடையாளங்கள், சமூகப் பொறுப்புகள் குறித்த புதிய இருப்புத் துயர்கள் கனக்கவே, அடையாளங்களைக் கவிழ்த்துக் கொட்டி எதைப் பொறுக்கிக் கொள்வது எதை விட்டு விடுவது என்று தவித்துக் கொண்டிருக்கிறேன். அதில் இருப்பதிலேயே கனமான அர்த்தப் படாத பொருளாக நடுவில் உட்கார்ந்திருக்கிறது பால்.  

இந்தக் குழப்பமான மன நிலையில்தான் சுசீலாம்மாவின் 'தேவந்தி' படிக்க வாய்த்தது. எனக்கு முன் இதே சமூகத்தைக் கடக்க ஆரம்பித்த ஒரு பெண்ணின் வாழ்க்கைக் குறிப்புகள் எனக்கு ஒரு கையேடாக இயலுமா என்ற ஆவலுடன் படித்தேன். அவற்றில் முதலில் மின்னிய அம்சம் 'நேர்மை'; நிமிர்ந்த நடை, நேர்கோண்ட பார்வை, பாரினில் எவர்க்கும் அஞ்சாத நெறிகள், இவை தரும் ஒரு சுத்தமான மன எழுச்சி. பொதுவாக லட்சியவாதக் கருத்தியல்களில் நம்பிக்கை உள்ளவர்கள் தாங்கள் எந்தத் தரப்பிற்காகப் போராடுகிறார்களோ அந்த மக்களையே ஆழமாக வெறுக்க முற்படுவர்- கம்யூனிஸ்டு உழைக்கும் வர்க்கத்தை ஒரு அறிவற்ற மந்தை போல மேய்க்க விரும்புவது போல, பெண்ணியர்களும் சக பெண்களைக் கருணைக்குரியவர்களாகக் கீழ் நோக்கிப் பார்க்கப் பழகிக் கொள்வதே தற்காலத்து முறைமை. ஒடுக்குபவர், ஒடுக்கப் படுபவர் என்ற சீரான இருமை, முத்திரைகள், வெறுப்புக்கள் என்று பல தளங்களில் உளவியல் நுண்ணுணர்ச்சியற்ற அணுகுமுறையால் மனச் சோர்வே மிச்சம். (எனக்கு மிகவும் ஊக்கமளித்து என் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் பரந்த சிந்தனை உள்ள இரு நலம்விரும்பிகள் பேசிக் கொண்டது, "இவ ரொம்ப எழுதப் படிக்க ஆரம்பிச்சுட்டாளே, எங்கயாவது பெண்ணியவாதியாகிடப் போறா!" என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தனர். எனக்கு மட்டும் அடி வயிற்றில் புளியைக் கரைத்தது! ) 

அந்த வித சோர்வை எதிர்கொள்ளவே இதைப் போல ஒரு நூல் எவ்வளவு அவசியம் என்று தோன்றியது. இந்த சிறுகதைகள் ஒவ்வொன்றும் தேவையால் எழுந்த சமூக ஆவணங்கள். இவற்றின் மிகப் பெரிய விசையே இவற்றின் கட்டுரை நேர்மை; ஒரு நேரடி சமூகப் பயன்பாடு. சிறுகதை என்ற வடிவம் இன்று புதிய படிமங்களை உருவாக்கும் கலையாக மிளிர்ந்து வருகிறது, ஆனால் ஒரு புதிய வடிவத்திற்குள் நுழையுமுன் பழைய வடிவத்தைப் பரிசீலப்பது ஒரு சமூகப் பொறுப்பு. காலம் காலமாகக் கட்டப் பட்ட பெண் படிமங்களைக் கட்டுடைப்பு செய்தாலொழியப் புதிய பெண் பிம்பம் எழ வாய்ப்பில்லை; எழுந்தாலும் அது பழைய வடிவத்தின் பிடியில் சிக்கிச் சிதைந்துதான் தலை காட்டும். அந்த வகையில் சுசீலாம்மாவின் கதைகள், குறிப்பாக வரலாற்றை மறு ஆக்கம் செய்யும் தேவந்தி, மானிடவர்க்கென்று பேச்சுப் படில், புதிய பிரவேசங்கள், சங்கிலி [தடுத்தாட்கொண்ட புராணம் பாகம்-2]போன்றவை வெறும் சீலங்களின் குறியீடுகளாக வழிபடப் பட்ட பெண் விக்கிரகங்களைக் கட்டுடைத்துத் தகர்த்து, ரத்தமும் சதையும், மிக முக்கியமாக சிந்திக்கும் மூளையும், விழிப்புள்ள சமூக நுண்ணுணர்ச்சியும் கொண்ட பெண்களின் சித்திரத்தை மீட்டெடுக்கின்றன. இந்தச் சித்திரம் ஒரு ஆழ்படிமமாய் உருப்பெற இந்தக் கட்டுடைப்பு மிகவும் அவசியமாகிறது; ஏனென்றால் முன்மாதிரிகளைத் துல்லியமாகக் கற்பனை செய்ய முடியாத சமூகம் மனச்சாட்சி என்ற மகாலட்சுமியை இழந்து தரித்திரத்தில் தவிக்கும்.  

இத்தருணத்தில் நண்பர் ஒருவரின் கேள்வி நினைவிற்கு வருகிறது: "ஏன் பெண்கள் அந்தரங்கத்தில் நுண்ணுணர்வற்றிருக்கிறார்கள்? எந்த மன சோகமும் ஒரு ஆணைத் தாக்கும் விசையோடு பெண்ணை நிலைகுலைய வைப்பதில்லையே? வலியைப் பொறுத்துக் கொண்டு விடுகிறார்களே? ஒரு ஆணுக்கு சிறு வலியென்றால் ஊரைக் கூட்டி விடுகிறானே, அனைவருக்கும் தன் வலி உரைக்க வேண்டும் என்று துடிக்கிறானே?" என்று கவனித்தார். புறவயமாக நிரூபிக்க இயலாத ஆனால் உண்மை போலத் தோன்றும் இதைப் போன்ற அவதானிப்புகளை அணுகுவதற்கு மிகுந்த தர்க்க முதிர்ச்சி வேண்டும். யோசிக்கையில், மனிதன் எப்பொழுதும் தன் அளவில் நீதியை எதிர்பார்க்கிறான்; தான் இயங்கும் நிறுவனத்திற்குள் தனக்கெது நீதி, எது அநீதி என்று மிகத் தெளிவாகவே வரையறை செய்து, அநீதியை ஒரு நெறிப் பிறழ்வாகக் கட்டமைத்ததால் அது இழைக்கப் படும்போது சீற்றம் கொள்கிறான், எதிர்க்க முடியாத தருணத்தில் நிலைகுலைகிறான். எப்பொழுதெல்லாம் மனிதன் அநீதியை செரித்துக் கொள்கிறானோ அப்பொழுதெல்லாம் அவன் மன விகாரங்களை அடைகிறான்- ஆண்டான் அடிமை என்ற இயக்கத்துக்கு அவிசாகிறான். காந்திய சிந்தனையின் சாரமே இந்த அநீதியை அடையாளம் கண்டு கொள்வதோடல்லாமல், அதை எதிர்த் தரப்பிற்கும் எடுத்துரைத்தல். அவர் இந்தியரைத் தன் சுயத்தை இழக்காமல் இருக்கக் கோரும்தோறும் ஆங்கிலேயரையுமே அநியாயத்தின் பாரத்தால் சிதிலமடையும் பரிதாபத்திற்குரியவர்களாய்ப் பாவித்தார். 

பெரும்பாலான பெண்கள் தாங்கள் உலவுவது ஒரு சமமற்ற உலகம், தங்கள் நீதி வேறு என்ற நடைமுறையை யதார்த்தமாக ஏற்றுக் கொண்டு விட்டதால்தான் இந்தச் சட்டகத்துக்குள் நடக்கும் அநீதி அவர்களுக்கு ஒரு பிறழ்வாய்த் தெரிவதேயில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. தாய்மை, கன்னிமை, பத்தினித்துவம், அளவிலாப் பொறுமை, குடும்பப் பொறுப்புகள் போன்ற அணிகளால் 'அழகு' படுத்திப் பாராட்டி, சிந்தனையை வருடிக் கொடுத்துத் தூங்கச் செய்யும் ஆதராவான அநீதியைக் கண்ணுக்குக் கண் சமரசமில்லாமல் எதிர்கொள்ளும் பார்வை ’தேவந்தி’யில் இருக்கிறது. சமூகப் பழக்கங்களின் புண்ணைச் சொறியும் சுகங்களைப் புரிந்து கொள்ள முடியாத விடலைப் பெண்ணின் களங்கமற்ற பார்வை அது. வெறும் வகுப்பறைகளில் மட்டுமே புகட்டப் படும் நீதி நெறிகள், அதற்கு வெளியே செல்லுபடியாகாத விசித்திரத்தை ஒரு இளம் மாணவரோ, அல்லது அவரையொத்த மனம் கொண்ட ஆசிரியராலோதான் இவ்வளவு எளிமையாகக் கண்டு கொள்ள முடியுமோ என்று கூடத் தோன்றுகிறது. ’சொல்லில் புரியாத சோகங்க’ளில் உமா வியக்கிறாள்- ஆன்மாவுக்கென்று ஒரு தொழில் கிடையாதா?  

சொல்லிச் சொல்லி சலித்துப் போன சோகங்களை மக்கள் நினைவிலிருந்து ஒதுக்குவதோடு, தேய்வழக்காக்கி அவற்றின் தீவிரத்தையும் மரக்கடித்து விடுகின்றனர். பல பிரச்சனைகளின் எளிமையான தொடக்கப் புள்ளி இந்த சலிப்பு உண்டாக்கும் புதுமைத் தேடல்களிலும், புதிய சிக்கல்களிலும் மறைந்து விடுகிறது; முடிச்சுக்களை அவிழ்க்க முடியாமல் மரபுத் திரியையே கத்தரிக்கும் அளவிற்குப் பொறுமையிழக்கிறோம். இந் நிலையில், அதே சோகங்களைப் பேசும் இக்கைதள் மூலம் திடீரென்று ஆண்டாள் மானுடரை மணக்க மறுத்ததன் காரணம் பெரியாழ்வாருக்கு உறைப்பதைப் போல நமது அடிப்படை சமூக-உளவியல் தளத்தில் நடக்கும் அநீதிகள் உறைக்கிறது. பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும் தன் உயிர்த் தோழியோடு அரை மணி நேரம் அமர்ந்து கூடப் பேச முடியாதபடி ஒருவர் தாய் வேலையையும் மனைவி வேலையையும் சிறு விடுப்புமின்றி செய்யக் கூடும் என்பது  மிக நுண்மையான சமூக விமர்சனம்.(சந்திப்பு). கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் 'பாரமாக' இல்லாத அன்பு நிலையை ஒரு அரிய தரிசனமாகக் கண்டு மகிழும் பெண் (’பொன்னை விரும்பும் பூமியில்’), பெண்மையின் உயிரியல் அம்சங்கள் 'தீட்டா'க ஆழ்மனதில் படிந்த வக்ரம் ('சந்திப்பு' இல் விஜி பூப்படையும்போது அழும் சின்ன சம்பவம், உயிர்த்தெழல்), இவையெல்லாம் 'அதான் தெரியுமே' என்று ஒவ்வொரு நாளும் நாம் கடக்கும் விஷயங்கள் தானே? 


சமூகத்தின் பார்வைக்கஞ்சி ஒரு மானுடப் பிள்ளைக்கு இறைத்தன்மையென்ற பாரமான மகுடத்தை அணிவித்த தாயின் கதை, தனக்கு நடந்த வஞ்சனையை வெளியே பகிர முடியாமல் குமுறும் தேவந்தியின் கதை, இறையவதாரமானாலும் மண்ணில் ஒரு ஒற்றைப்படையான யுகநீதியை மனசாட்சியையும் மீறி நிறுவும் அரசன் இராமனின் கதைகள்- சமூகத்தை பயங்களால் கட்டி எழுப்பியிருக்கிறோம் என்று நினைக்க வைக்கிறது. 'எல்லா பயங்களும் ஆன்மாவைத் தின்னும்' என்ற மேற்கத்தியப் பழமொழி நினைவில் வருகிறது. இந்தக் கதைகள் அனைத்திலும் ஓடும் ஒரு திரி இந்த பயத்தை எதிர்கொள்ளும் அறவுணர்வு, அநியாயத்தைப் பொறுக்காத ஆரோக்கியத்தை நாடும் கதைகள், மகேசுகள் மகேஸ்வரிகள் ஆக வாய்ப்பே இல்லையா என்று வியக்கும் விழித்தெழல்கள், பொம்பளை வண்டியில் தனியாக சவாரி செய்யக் கிடைக்கும் திறப்புகள், எல்லாவற்றிலும் அழுத்தமான சமூகப் பொறுப்புணர்ச்சி...இவையெல்லாம் இக்கதைகளை ஆக்கப் பூர்வமான வரலாற்று ஆவணங்களாக்குகின்றன.  

பொறியியல் கல்வி போன்ற ஒரு பொருளாதார வாய்ப்பு ஒரே அலையாக நம்மூர் நடுத்தர வர்க்கத்தின் சமூக நீதிகளைப் பெருமளவு சமச்சீர் நோக்கித் தள்ளி வரும் தருணத்தில் நான் வாழ்கிறேன். பெரும்பாலும் வலக்கைக்காரர்களுக்கென்று வடிவமைக்கப் பட்டது போலவே ஆண்களின் வசதிக்காக வடிவமைக்கப் பட்ட பொதுவெளிகள் இன்று கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்களின் வசதிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. ஆனாலும் சுசீலாம்மாவின் கதைகள் என் நினைவில் பச்சையாக இருக்கும் அநீதியின் நினைவுகளுக்கு சாட்சி, ஒரு எச்சரிக்கையேடு, ஒரு கையேடு. காலங்கள் மாறிக் கொண்டிருக்கிறது போலத் தோன்றினாலும் வெறும் பொருளாதாரம் தரும் சமூக நீதியை நம்ப முடியவில்லை, இன்னொரு அறிவொளி இயக்கம் வேண்டும் என்று மனம் ஏங்குகிறது, பெண்ணியம் என்பது, பெண்களே பேசக் கூச்சப் படும் ஒரு கெட்ட வார்த்தையாகிவிட்ட இந்த மயக்கமான காலகட்டத்தில் இந்த நிகழ்-கால வரலாற்று ஆவணத்தைப் ப்ரக்ஞையின் ஒரு மூலையில் இருத்தி வைத்திருக்க மனம் எச்சரிக்கிறது; நான் உண்மையென உணர்ந்ததைப் பேச இந்த சமூகத்திற்க்கும் கடமைப் பட்டவள் என்ற ஊக்கம் பிறக்கிறது.
காண்க:
கட்டுரையில் சுட்டப்படும் சில சிறுகதைகளுக்கான இணைய இணைப்புக்கள்;
சங்கிலி [தடுத்தாட்கொண்ட புராணம் பாகம்-2]

4 கருத்துகள் :

அப்பாதுரை சொன்னது…

தேர்ந்த வாசக மனம் என்று நீங்கள் சொல்லியிருப்பது சரி. அவருடைய எதிர்வினையே இலக்கியத் தரத்தில் உள்ளது. 'லட்சியவாதத் துயில்' மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க வைக்கிறது. குழப்பங்களிடையே.. கையேடென எதிர்பார்த்து.. கதை படிக்கும் பழக்கம் இருக்கிறதா இவருக்கு! பொழுது போக மேம்போக்காக உலாவும் என் போன்ற உள்ளங்கள் சி.சு போன்ற ஆழ்ந்த வாசக மனங்களால் சற்றே உருப்பெறலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

பெண்கள் வலிகளை உள்படுத்துவதும் ஆண்கள் வலிகளை வெளிப்படுத்துவதும் பொதுவான் இயல்பு என்று எழுதுவது.. பெண்களின் இயல்பு :). எப்படிபெண்களின் வெளிப்பாடுகளை ஆண்கள் புரிந்து கொள்ளத் தடுமாறுகிறார்களோ அதே போல் ஆண்களின் வெளிப்பாடுகளைப் புரிந்து கொள்வது பெண்களுக்குக் சிக்கலான விஷயம் என்றே நினைக்கிறேன். ஊரைக் கூட்டுவது இருசாராருக்கும் பொது. 'தாய்மை' என்ற ஒரு கோணத்தை மட்டும் வைத்து உலக வலிகளையெல்லாம் பொறுத்துக் கொள்கிறாகள் பெண்கள் என்பது சற்று முதிர்ச்சி பிறழ்ந்த கோணமோ?

இணைய இணைப்புகளுக்கு நன்றி. 'மானிடவர்க்கென்று..' முன்பே சில முறை படித்திருக்கிறேன்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

பார்த்தீர்களா அப்பாதுரை..ஒரு சிறிய மாற்றுக் கருத்தை ஏற்கக் கூட ஆண்மனம் எப்படித் தயங்கி விடுகிறது?'தாய்மை' என்ற ஒரு கோணத்தை மட்டும் வைத்து அவர்கள் சொல்லவில்லை;பொதுவாகவே இடிதாங்கி போல வலி தாங்கிப் பழகிப் போனவள் பெண்.ஒரு சிறு தலைவலி வந்தால் கூடத் தாங்க முடியாமல் தவித்துத் துடிப்பவன் ஆண்.இதற்கு உயிரியல் காரணம் உண்டா தெரியாது,ஆனால் சமூகவியல் ரீதியாகச் சொல்லப் போனால்,வலியால் துடிக்கும் அவனைத் தாங்க ஆயிரம் பேர்-மனைவி உட்பட.அவள்,தன்னுடைய வலி பொறுத்தபடியே வீட்டின் அன்றாட அலுவல்களுக்கு நகர்ந்தாக வேண்டியிருக்கிறது.அதனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் பொறுத்திருக்கப் பழகி விடுகிறது அவளுக்கு.

அப்பாதுரை சொன்னது…

நான் சொல்ல எண்ணியது - 'வலிகளை உள்படுத்துவோர் பெண்கள்' என்ற பொதுவாக சொன்னது பொருந்தவில்லை என்பதே. உள்படுத்துவதும் வெளிப்படுத்துவதும் ஆண்/பெண் இயல்பு என்பதே. உள்படுத்திக் குமைந்த ஆண்களையும் அறிவேன்; ஒரு கணமும் பொறுக்காமல் பகிரங்கமாக வெளிப்படுத்தி ஊரைக்கூட்டிய பெண்களையும் அறிவேன். ஒரு சாராருக்கென அமையாத இயல்பு என்றே நினைக்கிறேன்.
மற்றபடி, நீங்கள் சொல்வது சரியே. மாற்றுக் கருத்தை எந்த மனமும் - பெண்ணோ ஆணோ - சட்டென்று ஏற்பதில்லை :).

பெயரில்லா சொன்னது…

//தேர்ந்த வாசக மனம் //

சுசீலாம்மா உங்களின் நேர்மை எனக்கு வியப்பளிக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....