துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.12.11

மொழிபெயர்ப்பென்னும் சவால்..


''ஒரு கலாசாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாசாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச் செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்.இச் சவால் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்கு இடம் பெயரும்போது பேருருவம் கொள்கிறது.அடிப்படையான கலாசார இடைவெளிதான் இதற்கான இயங்கு காரணி’’

’’மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கும் படைப்பில் மொழிபெயர்ப்பாளனுக்கு ரசனை கலந்த ஈடுபாடு வேண்டும்
It should be a labour of love. 
மூலப் படைப்பாளியின் படைப்பாளுமை குறித்த பொருளார்ந்த பிரக்ஞையும் புரிதலும் கூடுதல் சிறப்பு....''

-ஜெயகாந்தனின் படைப்புக்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின்இலக்கிய ஆளுமைகள்என்னும் நூலிலிருந்து

4 கருத்துகள் :

ராம்ஜி_யாஹூ சொன்னது…

மூலப் படைப்பாளி உயிருடன் இருந்தால் அவரிடம் தோடர்பு கொண்டு அறிய முடியும் இதை.

மூலப் படைப்பாளி மறைந்து விட்டால் , முழுமையான புரிதல் மொழி பெயர்ப்பாளருக்க் கிடைக்காது அல்லவா.

உதாரணமாக- தி ஜா வின் சிறுகதைகளை ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்க்க எண்ணினால், அவர் என்ன மனதில் நினைத்து அந்த கதையைச் சொன்னார் என்பதை எவ்வாறு அறிவது.


தமிழக வட்டாரப் பகுதிகள் சார்ந்த கதைகளை , ஐரோப்பா, அமெரிக்காவிற்கு மொழி பெயர்த்தால் பொருந்தி வருமா.

வண்ணதாசன், வண்ண நிலவன், தி ஜா கதைகள் (சமீபத்தில் வந்த ஷோபா சக்தியின் கப்டன்) இவை மீது வேறு கண்டத்து மக்களுக்கு ஈர்ப்பு ஏற்படுமா

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வணக்கம் ராம்ஜி
சிந்திக்க வைக்கும் கேள்வி...டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனைப் பொறுத்தவரை ஜெயகாந்தன் என்ற சமகாலப் படைப்பாளியை மொழிபெயர்த்ததார்;அவரோடு உடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது.எல்லோருக்கும் அது வாய்த்து விடுவதில்லை;அப்படி வாய்க்காமல் போவதில் பாதகமும் இல்லை;
‘’ மூலப் படைப்பாளியின் படைப்பாளுமை குறித்த பொருளார்ந்த பிரக்ஞையும் புரிதலும் ’’
மட்டும்தான் தேவையே தவிர அந்தப் படைப்பாளியிடமே கேட்டுத் தெளிவு பெற்றுத்தான் மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டுமென்றால் அதை மேற்கொள்ளவே முடியாது.அவனது ஆன்மாவுக்குள் மனம் கலந்து செய்யும் பயணமே இருண்ட மூலைகளை வெளிச்சமாக்கி விடும்;வட்டார மொழிகள் வேறுபட்டாலும் உலகத்து மக்களுக்கு உணர்வுக் கொந்தளிப்புக்கள் ஒரே வகையானவைதானே..அதை மட்டும் தேடிச் செல்பவர்கள் நிச்சயம்-மொழி வழக்குகளைத் தாண்டி அந்த மனதைக் கண்டடைவார்கள்.
டால்ஸ்டாயும்,தஸ்தாயெவ்ஸ்கியும்,மாப்பசானும்,அரிஸ்டாடிலும் கண்டம் விட்டுக் கண்டம் வரும்போது நம் தி.ஜாவும்,வண்ணநிலவனும்,வண்ணதாசனும் கண்டம் தாண்டி அங்கே போகக் கூடாதா..என்ன?திறமுள்ளவர்கள் அப்படி இந்தப் படைப்புக்களைப் பிற மொழிகளுக்குக்(ஆங்கிலம் வழியாவது) கொண்டு சேர்க்காமலிருப்பதனாலேயே நம்மவர்களுக்கு உலக அளவில் கிடைக்க வேண்டிய இடம் அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது;பாரதி உட்பட...
இன்னும் ஒன்று..வட்டார மொழிச் சிக்கலைப் பொது ஆங்கிலச் சொற்கள் மூலம் கடந்து சென்று படைப்பை மட்டும் முன் வைப்பதும் சாத்தியமே.

ஷஹி சொன்னது…

அம்மா வணக்கம் ..நலமா இருக்கீங்களா ?
முன்னமே புக் செய்திருந்தேன் அசடனுக்கு ..சென்ற சனிக்கிழமை தான் கையில் கிடைத்தது . வழக்கம் போல் கடைசி பக்கங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் . ரொம்பப் பெரிய இன்ப அதிர்ச்சி குடுத்துட்டீங்க மா ..என் கடிதம் எல்லாம் அத்தனை மதிப்பு உள்ளதா ? உங்க புத்தகத்துல பப்ளிஷ் ஆகுற அளவுக்கு ? மிக்க நன்றி உங்களுக்கு ..இளங்கோவுக்கும் தொலைபேசினேன் . ரொம்ப சந்தோஷப்பட்டார் ..புத்தகத்துக்கு சொல்லி வச்சிருக்காராம் இன்னம் கிடைக்கலையாம் . இப்ப எங்க ரெண்டு பேருக்கும் போட்டி. யார் முதலில் பதிவு இடுவது ? யார் சிறப்பாக செய்வது என்று ..ஆனால் சொல்ல முடியாது ..தேனம்மை முந்திக்கொண்டாலும் கொள்வார் ! நன்றியும் மகிழ்ச்சியும் அம்மா ..

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஷஹி..
அத்தனை பெரிய நூலை மொழியாக்கம் செய்து முடிக்கையில் சில வேளைகளில் ஒரு ஆயாசம் ஏற்படும்.இதை யாராவது படிப்பார்களா..இத்தனை உழைப்பும் விரயமோ என்றெல்லாம் தோன்றும்.உங்களைப் போன்றவர்கள் முழுக்க வாசித்து அது பற்றிக் கட்டுரையும் எழுதுகையில்தான் மனதில் பூரணத்துவம் ஏற்படும்.அதற்கு உங்களுக்குச் செலுத்தும் சிறு மரியாதையே உங்கள் கடிதங்கள் பின் இணைப்பாக வெளியிடப்பட்டது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....