எத்தனை இனிய மரணம் இது….?
வாழ்நாளெல்லாம் ஒரு பெரு வேள்வியாகத் தான் மேற்கொண்டு வந்த
தன் மனதுக்கு நெருக்கமான ஒரு செயலில்,இளைஞர்களோடான ஊடாட்டத்திலும் அவர்கள் நெஞ்சில்
கனவு விதைகளைத் தூவிக்கொண்டிருப்பதுமான தருணத்தில் ….அதில் தன்வயமிழந்து கரைந்து கலந்து
போயிருக்கும் விநாடியில் காலனுடன் கை குலுக்கியபடி வாழ்விலிருந்து அநாயாசமாக விடை பெறும்
பேறு எத்தனை பேருக்கு வாய்க்கும்?
மேதகு அப்துல் கலாம் போன்ற தூய ஆத்மாக்களுக்கு மட்டுமே அது
சாத்தியமானது…
ஓர் அறிவியலாளர்,அணு விஞ்ஞானி,முன்னாள் குடியரசுத்தலைவர்
ஆகிய அடையாளங்களை விட ஓர் ஆசிரியராக இளம் உள்ளங்களுடன் அளவளாவுவதையே தன் நெஞ்சுக்கு
நெருக்கமானதாகக்கொண்டு அதில் அலாதி இன்பம் கண்டுவந்த மேதகு கலாமின் முடிவு அப்படிப்பட்ட
ஒரு கணத்திலேயே நோவும் பிணியும் இன்றி நொடிப்பொழுதில் முடிந்து போக வேண்டுமென்றால்
இறையருள்தான் எத்தனை கருணை மிக்கது…
தன் கொடுங்கரங்களால் எந்தச்சித்திரவதையும் செய்யாமல் ஒரு
பூவை உதிர்ப்பது போன்ற லாவகத்துடன் இயற்கை
அவரது உயிரை எல்லையற்ற பிரபஞ்சத்தோடு ஐக்கியமாக்கி இருக்கிறது…
வாழ்வு மட்டும் சரித்திரமாவதில்லை,மரணமும் சரித்திரமாக வேண்டும்
எனச்சொல்லி வந்த கலாம் மரணமில்லாப்பெருவாழ்வென்ற மாபெரும் சரித்திரத்தைப்படைத்துச்
சென்றிருக்கிறார்.
தில்லியில் நான் கழித்த ஏழாண்டுக்காலத்தில் மேதகு அப்துல்
கலாம் அவர்களைப் பல முறை அருகிலும் தொலைவிலுமாகக் கண்டிருந்த போதிலும் அவற்றில் மறக்க
இயலாத இரண்டு சந்திப்புக்கள் என்னுள் என்றும்
உறைந்திருக்கின்றன,
எதிர்பாராத இனிய அதிர்ச்சியாய் முதல் சந்திப்பு 2007 மார்ச்சில்
குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள முகலாயர் தோட்டத்தை என் பேரக்குழந்தைகளோடு சுற்றிப்பார்த்து
வரும்போது நேர்ந்தது.
பூக்களின் அழகில் லயித்திருக்கும் வேளையில் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த
மக்கள் நடுவே ஒரு சிறிய பரபரப்பு…
அப்போது குடியரசுத்தலைவராய் இருந்த கலாம் திடீரென்று எவரும்
எதிர்பாராத மின்வெட்டுப்போன்ற ஒரு விநாடியில் தன் குடியிருப்பிலிருந்து வெளியே வந்து
தோட்டத்தைக்காண வந்த பொது மக்களோடு ஒரு குழந்தையைப்போலக் கை குலுக்கி நலம் விசாரித்துக்கொண்டிருந்தார்.
வந்திருந்த மக்களெல்லாம் பூக்களை விட்டு விட்டு அவரை நோக்கிப் பாய்ந்தோடத்
தொடங்கியிருந்தனர்.
நம்புவதற்கு அரிதான அந்தக்காட்சியைக்கண்டதும் எங்கோ தொலைவில்
இருந்த நானும் என்னோடு துணை வந்த பெண்ணும் குழந்தைகளோடு அவரை நோக்கி விரைந்தோம்.காவலர்கள்
எல்லோரையும் வரிசைப்படுத்தி அவரோடு பேசும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர, என் முறை வந்தபோது
தமிழில் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்;அவரும் ஆர்வத்தோடு தமிழ்நாடா என்று கேட்டபடி
தமிழிலேயே பேசிப் பேரக்குழந்தைகளைக் கையால் தொட்டு ஆசீர்வதித்தார். நான்கு வயதான என்
பேத்தியிடம் எந்தப்பாடத்தில் ஆர்வம் என்று கேட்கவும் அவர் தவறவில்லை.
[இன்று 13 வயதை எட்டியிருக்கும் அவள், பின்னொரு சந்திப்பின்போது
அவரிடம் பெற்ற கையெழுத்துடன் கூடிய தனது பொக்கிஷமான WINGS OF FIRE ஆங்கில நூலிலேயே
அவரது மரணச்செய்தி கேட்டது முதல் மூழ்கிக்கிடக்கிறாள்.பள்ளி விடுமுறை விட்டால் அஞ்சலி
செலுத்தி விடுவார்களா என்ற என் ஐயத்தைத் தவிடு பொடியாக்கி விட்டு அதைப் படிப்பதன் வழி அவருக்கு உரிய அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறாள் அவள்]
திரு கலாமோடு மிகச்சிறப்பான சந்திப்பு நேர வாய்ப்பமைத்துத்
தந்த நண்பர் வடக்கு வாசல் இதழின் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன். வடக்கு வாசல் வெளியீடாக
வந்த என் தேவந்தி சிறுகதைத் தொகுப்பை வேறு சில நூல்களுடன் சேர்த்து அப்துல் கலாம் அவர்களின்
கையால் தில்லி தமிழ்ச்சங்கத்தில் வெளியிட அவர் ஏற்பாடு செய்திருந்தார். நூலை வெறுமே
வெளியிட்டதோடு மட்டுமன்றி அதை ஆழ்ந்து படித்து உரையில் குறிப்பிட்டதோடு நூலை வெளியிட்ட
தருணத்தில் என்னை அருகே அழைத்து ஓரிரு வார்த்தைகளும் பேசி என்னோடு உரையாடினார் திரு
அப்துல் கலாம் அவர்கள்.
என் வாழ்வின் அபூர்வக்கணங்களில் ஒன்றான அது குறித்து முன்பு
நான் எழுதிய பதிவிலிருந்து சில பகுதிகளை மீண்டும் இங்கே பகிர்ந்து அந்தப்பெருமகனார்க்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
தேவந்தியின் கணம்
//வாழ்வின் சில கணங்கள் ..என்றென்றும் நினைவுகூரத்தக்க அபூர்வமான வினாடிகளாக வாய்த்து மனதுக்குள் நிலைத்து விடுகின்றன.
அவ்வாறான ஒரு தருணம்...வெள்ளி( 29/7/11) மாலை மேதகு அப்துல் கலாம் அவர்கள் ‘தேவந்தி’ நூலை வெளியிட்ட கணம்...!சுப்புடு நினைவாய் வடக்கு வாசல் நிகழ்த்திய இசை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசை விமரிசகர் சுப்புடு பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட திரு அப்துல் கலாம் அவர்கள்,அதே அரங்கில் வடக்கு வாசல் பதிப்பக நூல்களை வெளியிட்டதோடு ஒவ்வொரு நூல் குறித்தும் சில குறிப்புக்களைத் தன் உரையில் சேர்த்துப் பேசியது, ஒவ்வொரு நிகழ்வுக்கும் முக்கியத்துவம் அளித்துக் குறிப்பிட்ட நபர்களைக் கௌரவிக்க வேண்டும் என எண்ணும் அந்த அந்த மாமனிதரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்றாக அமைந்தது.
எனது ‘தேவந்தி’தொகுப்பை வெளியிட்ட அவரிடம் அருகில் சென்று பிரதியைப் பெற்றபோது...
‘சாத்திரம் அன்று சதி’ கதையைக்குறிப்பிட்டு
‘இராமனைப் பத்தி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கம்மா...’
தேவந்தி நூல் பற்றி என்னிடம் பகிர்ந்து கொள்ளும் திரு அப்துல் கலாம் . |
நூலின் முதல் பிரதியைப் பெறும் என் மகள் மீனு பிரமோத் |
நூலின் பிரதியைப் பெறும் என் அன்பு வாசகரும் இளம் படைப்பாளியுமான திரு தேவராஜ் விட்டலன் |
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக