துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.3.23

“சிறுமைகளும் அவமதிப்புகளும்”-மொழி பெயர்ப்பு நாவல்

 என் மொழிபெயர்ப்பில் நற்றிணை பதிப்பக வெளியீடாக,ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் மகத்தான நாவல்களில் ஒன்றான

"The Insulted and Humiliated" ன் தமிழ் மொழிபெயர்ப்பு “சிறுமைகளும் அவமதிப்புகளும்”:



சிறுமைகளின் கருநிழலால் சிறிது நேரமேனும் போர்த்தப்படாதவர்களோ, அவமானங்களாலும், அவமதிப்புக்களாலும் தீண்டப்படாதவர்களோ, புண்படுத்தப்படாதவர்களோ எவரும் இல்லை. இதுவே வாழ்க்கை நமக்குக் கணந்தோறும் புகட்டிக்கொண்டிருக்கும் பாடம். ஆனாலும் ஒரு மிகப்பெரிய நாவலின் பாடுபொருளாக அதை மட்டுமே அமைத்துக்கொள்வதற்கு , அதையே பாத்திரங்கள் வழியாகவும் காட்சிகள் மற்றும் உரையாடல்கள் வழியாகவும் நெஞ்சில் சுமந்து அசைபோட்டு உருத்தந்து படைப்பாய் வெளிக்கொணர்வதற்கு மிக வலுவான ஆன்ம உரம் தேவைப்படுகிறது. அது, இலக்கிய உலகின் மாபெரும் மேதையான தஸ்தயெவ்ஸ்கிக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.‘பாவப்பட்ட மனிதர்கள்’ - ( Poor Folks )என்ற சிறுநாவலுக்குப்பிறகு, தஸ்தயெவ்ஸ்கி எழுதிய சில சிறுகதைகள் குறுநாவல்களைத்தொடர்ந்து - அவரது பிற்காலப்பெரும் படைப்புக்களான குற்றமும் தண்டனையும்,அசடன்,கரமஸோவ் சகோதரர்கள் ஆகிய காலத்தால் அழியாத மாபெரும் புனைவுகளுக்குக் கட்டியம் கூறும் வகையில் அவர் உருவாக்கியிருக்கும் மகத்தான செவ்வியல் படைப்பே ‘சிறுமைகளும் அவமதிப்புகளும்’. இரத்தமும், சதையுமாய் அன்றாடம் நம் கண்முன்னர் உலவும் கள்ளம் கபடற்ற எளிய மக்களின் கண்ணீருக்குள் நம்மைக் கரைந்து போக வைத்து, அவர்கள் படும் சிறுமைகளுக்குள்ளும், காயங்களுக்குள்ளும் நம்மையும் மூழ்க வைத்து அவர்கள் பெறும் அனுபவங்களுக்குள் நம்மையும் சஞ்சரிக்க வைக்கும் உணர்ச்சிப் பெருக்கான இந்த நாவலை மொழிபெயர்த்த அனுபவம் என்றென்றும் என் மனதில் நிலைத்திருக்கும்.
‘ குற்றமும் தண்டனையும், ‘ அசடன்’ மொழிபெயர்ப்புகளை செம்பதிப்பாக வெளியிட்டிருப்பதோடு ‘தஸ்தயெவ்ஸ்கி கதைகள்’ ( 2015 ) தொடங்கி இன்று வரை தொடர்ந்து என் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வரும் நற்றிணை பதிப்பகத்தார்க்கு என் நன்றி




கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....