துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.7.13

’அசடனு’க்கு ’’திசை எட்டும்’’விருது

’அசடன்’ மொழிபெயர்ப்பு நாவலுக்கு மற்றுமோர் கௌரவம் கிட்டியிருக்கிறது.

மொழிபெயர்ப்பு ஆக்கங்களை ஊக்குவிப்பதற்காகவே இயங்கி வரும் ’’திசைஎட்டும்’’ மொழியாக்கக் காலாண்டிழ் இவ்வாண்டின் சிறந்த மொழியாக்கங்களுக்கான விருதுப்பட்டியலில் ‘அசட’னையும் இணைத்துச் சிறப்பித்திருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி கடலூரில் நடைபெறும் 2013-ம்
ஆண்டுக்கான நல்லி--திசைஎட்டும் மொழியாக்க இலக்கிய விருது வழங்கும் விழாவில் பரிசுத் தொகையும் பாராட்டிதழும் விருதுச் சின்னமும் அளிக்கப்படவிருப்பதாக ’’திசைஎட்டும்’’ இதழின் ஆசிரியர் திரு குறிஞ்சிவேலன் அவர்கள் தொலைபேசி வழியாகவும்,மின் அஞ்சலிலும் தெரிவித்திருக்கிறார்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இவ்வாண்டு ஜூன் மாதம் அசடனுக்கு அளித்திருக்கும் விருதைத் தொடர்ந்து  அதே மொழிபெயர்ப்புக்குக் கிடைக்கும் இரண்டாவது விருது இது.

விருதுகளும் பரிசுகளும் ஒருபுறம் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் - இது போன்ற முயற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்னும் ஊக்கத்தையும் அளித்தாலும் மற்றொரு புறம் இதே போன்ற தரத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்னும் அச்சத்தையும் , சிறந்த உலகப்பேரிலக்கியங்களைத் தேர்ந்து தெளிந்து மொழியாக்கம் செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வையும் கூடவே கிளர்த்துகின்றன.

உண்மையில் ‘அசடனு’க்குக் கிடைத்திருக்கும் இந்த இரு அங்கீகாரங்களும் தஸ்தயெவ்ஸ்கி என்னும் மாமேதைக்கு மட்டுமே உரித்தானவை என்பதையும் அந்த உலக இலக்கியப் பேராசானின் சொற்களைத் தமிழில் முன் வைக்க நான் ஒரு கருவியாக மட்டுமே இயங்கியிருக்கிறேன் என்பதையும் நன்றாகவே  உணர்ந்திருக்கிறேன்; இது அவையடக்கத்துக்காகச் சொல்லப்பட்டதில்லை; இதுவே உண்மை .

இப் பணியில்  உற்ற துணையாக இருந்து என்னை வழி  நடத்திய என் தமிழுக்கும் , உலக இலக்கியப் பேராசான் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கிக்குக்கும் என் நன்றிக்கை கூப்புக்கள். இதைச் சிறந்த முறையில் பதிப்பிக்கப்பெரும் முயற்சிமேற்கொண்ட மதுரை பாரதி புத்தகநிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கு என் வணக்கம்.

திசை எட்டும் ஆசிரியர் திரு குறிஞ்சி வேலன் அவர்களுக்கும், அசடன் நாவலை விருதுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் நடுவர் குழுவுக்கும் என் நன்றி.

இதுதான் முடிவு என முற்றுப்புள்ளி போட்டு விடாமல்
மேன்மேலும் கூடுதல் பொறுப்புடனும் விழிப்புடனும் இலக்கியப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள இத்தகைய அங்கீகாரங்கள் உற்சாமளிப்பவை எனக்கருதியபடி என் பயணத்தைத் தொடர்கிறேன்....

திசை எட்டும் இதழின் ஆசிரியர் அனுப்பிய கடிதமும் 
விருது பெறுவோர் பட்டியலும்

திசை எட்டும்- மொழியாக்கக்காலாண்டிதழ்
ஆசிரியர்: குறிஞ்சிவேலன்
6,பிள்ளையார் கோவில் தெரு, மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி-607302.
தொ.பேசி: 04142-258314 
அலை பேசி: 9443043583
 16.9.2012
பெறுநர்:
திருமதி எம்.ஏ.சுசீலா 
 கோவை

பேரன்புடையீர்,
 வணக்கம்.
 தாங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்த
அசடன் என்ற நூலுக்கு 2013-ம் ஆண்டுக்கான நல்லி - திசைஎட்டும்
மொழியாக்க இலக்கிய விருது கிடைத்திருக்கிறது என்பதை மகிழ்ச்சி
யுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
2013 ஆகஸ்ட் 18-ந் தேதி மாலை 6 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் பாஷ்யம் ரெட்டியார் சாலையிலுள்ள திருவள்ளுவர் திருமண மணடபத்தில் நடைபெறவிருக்கும் நல்லி -திசைஎட்டும் மொழியாக்க இலக்கிய விருது வழங்கும் விழாவில் விருது அளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதுடன்,
தாங்கள் அவசியம் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க
வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

2013-ஆம் ஆண்டுக்கான நல்லி-திசைஎட்டும் மொழியாக்க இலக்கிய விருது
பெற்றவர்களின் விவரம்.

வாழ்நாள் சாதனையாளர் விருது: 

டாக்டர் க. செல்லப்பன், சென்னை

மொழியாக்கப் படைப்பாளிகள்

1.திருமதி வைதேகி ஹெர்பர்ட்- பதிற்றுப்பத்து
கொன்றை பதிப்பகம்-சென்னை
(ஆங்கிலம்-தமிழ்)

2. திரு.போப்பு ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் சென்னைசந்தியா பதிப்பகம்
 (ஆங்கிலம்-தமிழ்)

3. திருமதி. எம்.ஏ.சுசிலா ,அசடன் ,பாரதி புக் ஹவுஸ்-மதுரை,
 (ஆங்கிலம் - தமிழ்) 

4. திரு.ந.மனோகரன், இந்திய இலக்கியக் கோட்பாடுகள்
 சூழல் - பொருத்தம்,மாற்று-சென்னை
 (மலையாளம்-தமிழ்)

5. திரு.ந.சுப்ரமணியன் , மனோதிடம்
  சாகித்திய அகாதெமி,சென்னை
(குஜராத்தி-தமிழ்)

6. திரு.மா.கோவிந்தராஜன்
அஞ்சனை பாஷா சங்கம்,அலகாபாத்
(இந்தி - தமிழ்)

சிறப்புப் பரிசு
 குழந்தை இலக்கியப் பரிசு பெறும் குழந்தை இலக்கிய மொழியாக்கப் படைப்பாளியும் நூலும் நூலும்

7.செல்வி வி.சைதன்யா, Nothing but Water
வம்சி,திருவண்ணாமலை
( தமிழ்-ஆங்கிலம்)

மேற்கண்ட படைப்பாளிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம்தேதி கடலூரில் நடைபெறும் 2013-ஆம் ஆண்டுக்கான நல்லி-திசைஎட்டும் மொழியாக்க இலக்கிய விருது வழங்கும் விழாவில் பரிசுத்
தொகையும் பாராட்டிதழும் விருதுச் சின்னமும் பெறுவார்கள்.
குறிஞ்சிவேலன்,
ஆசிரியர், திசைஎட்டும்

3 கருத்துகள் :

Packirisamy N சொன்னது…

வாழ்த்துக்கள்.

ஜோதிஜி சொன்னது…

தேவியர் இல்லத்தின் மனமார்ந்த வாழ்த்துகள் அம்மா

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....