18.8.2013 அன்று கடலூரில் நடைபெற்ற நல்லி - திசை எட்டும் ’’பாஷா பூஷண்’’ மொழியாக்க விருதுகள் வழங்கும் விழாவில்தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் பரிசு பெற்றோருக்கு விருதுகளை வழங்கினார்.
என் மொழியாக்கத்தில் பாரதி புத்தக வெளியீடாக வந்திருக்கும் தஸ்தயெவ்ஸ்கியின் ‘அசடன்’ நாவல் மொழிபெயர்ப்பும் விருது பெற்றது.
விழாவில் நான் நேரடியாகக் கலந்து கொள்ள இயலாததால் என் சார்பில் மதுரை பாரதி புத்தக உரிமையாளரும், பதிப்பாளருமான திரு துரைப்பாண்டி அவர்கள் விருதைப் பெற்றுக்கொண்டார்.
இந்த விருதைக்காட்டிலும் கூட எனக்கு மகிழ்வும் நிறைவும் அளிப்பது நான் பங்கு கொண்டிருக்கும் ஜெயமோகன் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த என் இனிய நண்பர் திரு கே .பி .வினோத் அவர்களின் 8 வயதே நிறைந்த மகள் சைதன்யாவுக்குக் கிடைத்த சிறப்புப்பரிசுதான்!
திரு எஸ் ரா மற்றும் குறிஞ்சிவேலனுடன் சைதன்யா |
எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் குழந்தைகளுக்காக எழுதிய ''கால் முளைத்த கதைகள் '' என்னும் நூலை அந்தக்குட்டிப் பெண் மொழியாக்கம் செய்திருப்பதோடு 'நத்திங் பட் வாட்டர் ''எனும் தலைப்பில் வம்சி வெளியீடாகவும் அந்தப்படைப்பு நூல்வடிவம் பெற்றிருக்கிறது. அதை உரிய முறையில் இனம் கண்டு கொண்ட திசை எட்டும் இதழின் ஆசிரியர் திரு குறிஞ்சி வேலன் அவர்கள் மொழியாக்கத்துக்கான சிறப்புப் பரிசையும் அதற்கு வழங்க முன்வந்திருப்பது வளரும் தலைமுறைக்கு ஊக்கமூட்டும் செயல்பாடு.
திரு குறிஞ்சி வேலன் அவர்களுக்கும்,
குட்டிப்பாப்பா சைதன்யாவுக்கும்,
அவளை இலக்கிய தாகத்தோடும்,ஆர்வத்தோடும் வளர்த்தெடுக்கும் வினோத் தம்பதியர்க்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....
1 கருத்து :
மகிழ்வூட்டும் செய்தி
பதிவாக்கி அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக