துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
தேவராஜ் விட்டலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவராஜ் விட்டலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24.2.18

’நிலவறைக்குறிப்புக்கள்’ -ஓர் எதிர்வினை





அம்மா 
​​
நிலவறைக் குறிப்புகள் படித்துவிட்டேன். மிக அற்புதமான மொழிநடை. 

ரஷ்ய இலக்கியங்களை பலரது மொழிபெயர்ப்பிலும் படித்துள்ளேன். சில பக்கங்களை படித்து கடக்கும்போதே மனம் சோம்பேறியாகிவிடும். ஆனால் இந்த இரண்டு நாட்கள் மிக மகிழ்ச்சியாக நிலவறைக் குறிப்புகள் புத்தகத்தோடு (மடிக்கணினி யோடு) பயணித்தேன். இரவுக்காவலில்,
அலுவலகத்தின் ஒரு மூலையில் அமர்ந்து தஸ்தயெவ்ஸ்கியோடு ஆத்மார்த்தமாக பயணித்தேன்.
லிசாவிற்காக தஸ்தயெவ்ஸ்கி வருந்தும்போது அவர் எனக்காக வருந்துவது போன்ற உணர்வு உண்டானது.
அற்புதமான நாவல், இசை போன்ற மொழி நடை .

உங்கள் மொழியில் தஸ்தயெவ்ஸ்கி மேலும் அழுத்தமாக பதிந்துவிடுகிறார்.

ஒரு வார்த்தையைக் கூட skip செய்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.. 

தஸ்தயெவ்ஸ்கியின் அகவுலகில் முன்னும் பின்னுமாய் பயணித்தேன். 
கேள்விகளை அவரே கேட்கிறார். அவரே பதில் சொல்கிறார்

ஒரே அலைவரிசையில் புத்தகத்தை படித்து முடித்தால்தான் 
புத்தகத்தை பற்றிய முழு ஜீவனையும் புரிந்து கொள்ள முடிகிறது.

''எனது இருண்ட அறையில்
முழு நிலவொளியின்
வெளிச்சம் தெரிகிறது!

நீங்கள் 
முட்டாள் 
மூடன் என
எள்ளி நகையாடலாம்!

கொஞ்சம் பொறுங்கள்

நீங்களும் என் கண்களோடு
கொஞ்சம் ஒத்துப்போங்கள் 
நான்
பார்க்கும் வானம்
என் கண்கள் வழியாயல்ல

தஸ்தயெவ்ஸ்கியின்
கண்கள் கொண்டு

உங்களுக்கும்
வெளிச்சத்தின் மேன்மை தெரியும்
தஸ்தயெவ்ஸ்கியின்  இருண்ட நிலவறைக் குறிப்புகளை கொஞ்சம் புரட்டுங்கள்
புரிதல்கள் தானாய் மலரும்!''
என் யாதுமாகி நாவலின் முதல் பிரதியை
ஜெயமோகனிடமிருந்து பெறும் விட்டலன்

.

28.1.15

’’யாதுமாகி’’ பற்றி தேவராஜ் விட்டலன்

’’யாதுமாகி’’ பற்றி தேவராஜ் விட்டலன் எழுதிஅனுப்பிய பதிவு




வாழ்க்கையில் பலதரப்பட்ட எண்ணங்களை கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள் . தனிமனிதன் என யாரும் இல்லை, அனைவரும் சமுதாயத்தில் ஏதோ ஒரு வகையில் ஒருவருக்கொருவர் பினைந்துதான் உள்ளோம்.

ஏமாற்றங்கள், பெருந்துயரங்கள் , சந்தோசங்கள் என காலம் மாறி மாறி அனைவரின் வாழ்விலும் இனிப்பையும் கசப்பையும் தந்து கொண்டுதான் உ:ள்ளது. பலர் பிரச்சனைகளை எதிர்கொள்ள இயலாமல் வாழ்வை சுருக்கி கொள்கின்றனர். சிலர் பிரச்சனைகளில் இருந்து மீண்டு புதிய தடத்தை பதிக்கின்றனர்.

யாதுமாகி நாவலில் வரும் தேவி கதாபாத்திரம் (தேவிதான் நாவலின் மையம் தேவியை சுற்றிதான் முழு நாவலும் வளர்கிறது) சந்திக்கும் பிரச்சனைகள் மிகவும் சிக்கலானவை அதுவும் பெண்களுக்கு சமுதாயத்தில் பல கொடுமைகள் நடந்த கால கட்டம், பெண் உரிமைகள் மறுக்கப்பட்ட கால கட்டம் . அத்தகைய சூழலில் பல கட்டுப்பாடுகள் கொண்ட பிராமண சமுதாயத்தில் பிறந்து, நல்ல மனிதர்கள் சிலர் உதவியால் தன் வாழ்க்கையை தனி மனுசியாக நின்று பிரச்சனைகளை எதிர் கொண்டு மாற்றி அமைக்கிறார். நாவல் முன்னும் பின்னும் நகர்ந்து செல்கிறது  சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் உள்ள காலங்களை படம் பிடித்து காட்டுகிறது.

  நைட்குவீன் பூக்களின் வாசம் நாவல் எங்கும் விரைந்து கிடக்கிறது. நாவலில் பல இடங்களில் நம்மை உருகச் செய்துவிடுகிறார் ஆசிரியர். ஏழை மாணவியான செல்லி பள்ளிக்கு வராததால் எதேச்சயாய் பார்க்கும் தேவி அம்மா செல்லியை அழைத்துப் பேசி அவள் குறை கேட்டு , உணவுதான் பிரச்சனை எனக் கண்டறிந்து அதை தீர்த்து வைப்பதும். ( ப. எண் 78,79)

வீடு கட்டும் தறுணத்தில் காண்ட்ராக்டர் சின்னையா பணத்தோடு தலைமறைவானபோது அந்த வேதனையில் கல்யாணிப் பாட்டி புலம்பும் போது “ சரி சரி விடுங்கோ மாமி ஏழெட்டுக் கொழந்தைகள் அவனுக்கு.. பெரிய சம்சாரி .. போய்த் தொலையறான் .. போங்கோ இனிமே நடக்க வேண்டியதைப் பாப்போம் எனக் கூறி பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு , அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறார் தேவி அம்மா.. (ப எண் – 172) தனக்கு துரோகம் செய்தவனையும் மண்ணித்து விடுகிறார் தேவியம்மா.

“முழு நிலவின் ஒளியில் வெள்ளிநுரைகளோடு பளபளக்கும் கடல் கண்ணுக்குத் தெரிகிறது கூடவே அதன் ஆரவாரக் குமுறலும்! இடைவெளியே இல்லாதபடி தொடர்ந்து மறிந்து மகிழும் அந்தக்கடல் அலைகள் எழுப்பும் ஓசை… கம்பீரமான அந்த முழக்கம், பழகிப்போன ஒரு நட்பைப்போல அவளோடு ஒட்டிக் கொண்டு இப்போது இந்த ராணி மேரி கல்லூரி விடுதி வரை வந்திருக்கிறது” என ஆசிரியர் குறிப்பிடுகிறார். கடல் தேவியின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிய ஒன்று. குழந்தை இயற்கைக்கே அந்த பால்ய விவாகம் பிடிக்கவில்லை போல, அதுவும் அறிவுக் குழந்தையாக இருக்கும் தேவிக்கு நடந்ததை கடல் பொறுக்க முடியாமல்தானோ அந்த சிறுவனை தேவியின் வாழ்க்கையில் இருந்து பிரித்துவிடுகிறதோ. கடல் தேவிக்கு வலியை தந்தாலும், தேவி இயற்கையை நேசிக்கிறார்.

 சாருவின் நினைவோடையின் வழியாய் உயிர்க்கும் இந்நாவல் வைகையில் தொடங்கி மலைச்சிகரங்களிலிருந்து சமவெளி நோக்கி ஆறாத காதலுடன் பாய்ந்து வந்து கொண்டிருக்கு ரிஷிகேசத்து கங்கையில், திரும்பியே பார்க்காமல் முன்னோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் கங்கையில் முடிவது சிறப்பான அம்சமாகும். நாவல் முன்னும் பின்னும் பயணித்தாலும் படிக்கும் போது அந்த கால கட்டத்திற்கே கொண்டு செல்கிறார் ஆசிரியர்.

  தாயாகி, தந்தையாகி, குருவாகி, ஏதுமற்ற ஏழைப் பிள்ளைகளையும் படிக்க வழி செய்து நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களையும் மண்ணித்து, தேவி கதாபாத்திரம் , தன் வாழ்வில் ஏற்பட்ட கஷ்ட்ட காலங்களில் மனதுடைந்து வாழ்க்கையை சுருக்கி கொள்ளாமல் தனது சுடர்மிகுந்த அறிவை பயன்படுத்தி எல்லா வேளையிலும் முன்னோக்கி பாயும் கங்கையைப் போலே வாழ்வில் பயணம் செய்கிறார், தேவி அம்மா போல் வாழ்வது  எளிதான காரியம் அல்ல. ஆனால் இந் நாவலை படித்த பிறகு அனைவரின் மனதிலும் தேவியம்மா யாதுமாகி நின்று மனபலம் அளிப்பார் என்பதில் எனக்கு சிறிதளவும் ஐயமில்லை.

2.11.14

விட்டலனின் வாசிப்பில் அசடன்

திரு தேவராஜ் விட்டலன் -

இளம் தலைமுறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு கவிஞர்;கதைஞர்.கட்டுரையாளர். அயராத தொடர்ச்சியான வாசிப்பை மட்டுமன்றி தொடர் எழுத்துமுயற்சியையும் ஒரு வேள்வியாகக் கொண்டிருப்பவர். வடக்கு வாசல்,கணையாழி,பயணம் முதலிய இதழ்களில் இவரது கவிதைகள்,கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.மாற்று சினிமா மற்றும் உலகத் திரைப்படங்கள் மீது தணியாத ஆர்வம் கொண்டிருப்பவர்.

இந்திய இராணுவத்தில் பணியாற்றும் எங்கள் ஊருக்குப்பக்கத்து ஊர்க்காரரான [மதுரை-திருமங்கலம்]விட்டலனின் அறிமுகம் தில்லியில் இருக்கும்போதுதான் எனக்கு நேர்ந்தது. பழகத் தொடங்கிய நாள் முதல் ஒரு மகனைப்போன்ற பாச உணர்வுடன் என்னுடனும் எங்கள் குடும்பத்துடன் பிணைந்து விட்ட விட்டலன் என் எழுத்து மற்றும் மொழியாக்க முயற்சிகளிலும் ஆர்வம் கொண்டு அவற்றின் மீதான தன் கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து என்னைத் தொடர்ந்து உற்சாகமாக இயங்க வைத்துக்கொண்டிருப்பவர்.குற்றமும் தண்டனையும்மொழிபெயர்ப்பை ஒரேமூச்சில் முடித்து விட்டு அசடன் எப்போது வரும் என்று என்னைத் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தவர்.  விருதுநகர்-மல்லாங்கிணறு பகுதியிலிருந்து வெளிவரும் பயணம் இதழில் ‘சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்’என்னும் தொடரை நான் தொடர்ந்து எழுதி வருவதற்கு அடிப்படைக்காரணமே தேவராஜ் விட்டலன்தான்.

அவரது படைப்பிலக்கிய ஆர்வத்தையும் என் மீது அவர் கொண்டிருக்கும் பாசத்தையும் உணர்ந்திருந்த வடக்கு வாசல் இதழின் ஆசிரியர் திரு யதார்த்தா பென்னேஸ்வரன் ,என் தேவந்தி சிறுகதைத் தொகுப்பை வடக்கு வாசல் வெளியீடாக - 2011இல் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களைக்கொண்டு தில்லி தமிழ்ச்சங்கத்தில் நடத்தியபோது முதல்பிரதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை விட்டலனுக்கு வழங்கி சிறப்பித்தார்.

தேவந்தியைப் பெறும் விட்டலன்

விட்டலனின் வாசிப்பில் அசடன் மொழிபெயர்ப்பு குறித்த அவரது கருத்துக்களை அவரது தளத்திலிருந்து இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

படித்ததை பகிர்வோம் – அசடன்

’’மதமிழின் மிகவும் எளிமையான, இனிமையான, வளமான நடையில் மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியை எம்.ஏ. சுசிலா அவர்கள். ஏற்கனவே குற்றமும் தண்டனையும் நாவலை தமிழில் மொழி பெயர்த்தவர். கனடா இலக்கியத் தோட்டம் விருது, திசை எட்டும் விருது, ஜி.யு. போப் விருது என அசடன் நாவலுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. இலக்கியத்தையும், சமுதாயத்தையும், மனிதத்தையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நாவல் அசடன்.’’
அசடன் நூலை ( நாவலை ) கடந்த ஒரு வருடமாக தூக்கிக் கொண்டு திரிந்த எனக்கு அந்நாவலை முழுமையாக உணர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவல் பல நாட்களாக இருந்து வந்தது. பனி விழுந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் ஜனவரி மாத இறுதியில் அசடன் நவலை படிக்கத் துவங்கினேன்.
அனைவரையும் நேசிக்கவும், தனக்கு துன்பம் தருபவர்களை மன்னிக்கவும், எளிமையான சாந்தமான குணத்தோடும் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட மிஷ்கின் தனது அதீதமான உணர்ச்சிகளின் அலைக்கழிப்பால் சராசரி மனிதனாக வாழ இயலாமல் துன்புறுகிறான். சராசரி மனிதர்களோடு ஒப்பிடுகையில் அவன் முட்டாளாக உள்ளான்.
இளவரசன் மிஷ்கின் பரம்பரையில் வந்த ‘ லேவ் நிகலெயவிச் மிஷ்கின் ’ ஸ்விட்சர்லாந்திலிருந்து பீட்டர்ஸ்பெர்க் நகரத்திற்கு வருகிறான். பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் இருக்கும் ‘ லிசாவெதா ப்ரகோஃபியன்னா ’ வை சந்திக்க வேண்டியும், அவர் தனக்கு ஆறுதல் அளிப்பார் என்ற நம்பிக்கையுடனும் இரயிலில் பயணித்து
வருகிறான்.
இரயில் பயணத்தில் ரோகோஸின்னையும், லெபதேவையும் சந்திக்கிறான். ரோகோஸின் தான் திருமணம் செய்யப் போகும் நஸ்டாஸியா பற்றி நிறையப் பேசுகிறான். பார்க்க மிகவும் பரிதாபமான தோற்றத்தோடு இருக்கும் மிஷ்கினை, தன்னை இளவரசன் எனக் கூறிக் கொண்டிருக்கும் மிஷ்கினை பரிகாசத்தோடு அனைவரும் பார்க்கிறார்கள். அவனை கேலி செய்கிறார்கள். இருப்பினும் மிஷ்கின் அப்பொழுதும்
அவர்களுக்கு தனக்கான பதிலை மிகவும் சாந்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறான்.
பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வந்ததும், தளபதி இவான் ஃபியோதரவிச் இபான் சினை சந்திக்கிறான். தளபதி இபான்சின் இராணுவத்தில் மிக முக்கியமான பதவியில் இருப்பவர். மிஷ்கின் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தான் மிஷ்கின் பரம்பரையில் வந்தவன் எனவும், லிசாவெதா ப்ரகோஃபியன்னாவை சந்திக்க ஆவலோடு இருப்பதாகவும் கூறுகிறான். அவனை சந்தேகத்தோடு முதலில் பார்த்த இபான்சின், மிஷ்கினின் அறிவார்ந்த பேச்சைக் கேட்ட பின்னர், அவனை தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கிறார்.
இபான்சினை சந்திக்கும் பொழுது அங்கே இருந்த கன்யாவையும் சந்திக்கிறான் மிஷ்கின். அவர்கள் நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா வைப் பற்றி பேசுகிறார்கள். அவளது புகைப்படம் அங்கு தொங்கிக் கொண்டிருந்தது. அழகிய முகம், ஆனால் பரிதாபமானவள் என அவளைப் பற்றி மிஷ்கின் கூறுகிறான். உனக்கு எப்படி நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவை தெரியும் என இபான்சினும் , கன்யாவும் கேட்கின்றனர். அதற்கு இரயிலில் வரும்போது ரோகோஸின் மூலம் நஸ்டாஸியா வைப் பற்றி அறிந்து கொண்டதாகக் கூறுகிறான். அவளது அழகிலும், அந்த முகத்தில் மறைந்திருக்கும் ஏக்கத்தையும் பார்த்து அதனால் கவரப்பட்டு அவளைக்
காதலிக்கத் துவங்குகிறான் மிஷ்கின்.இங்கே நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா வைப் பற்றி கொஞ்சம் கூறியாக வேண்டும். நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரம். டாட்ஸ்கி என்ற பெரும் செல்வந்தனின் அலுவலகத்தில் பணிபுரிந்து இறந்து போன அலுவலரின் மகள் நஸ்டாஸியா. அழகி. முதலில் நஸ்டாஸியாவை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட டாட்ஸ்கி, பின் அவளது அழகில் மயங்கி அவளது
வாழ்வை நாசமாக்குகிறார். நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவிற்கு விபரம் தெரிந்த பின் தன் வாழ்க்கை மிகவும் அர்த்தமற்ற ஒன்று எனவும், யாருக்கும் தன்னால் எந்தப் பயனும் இல்லை என எண்ணிக் கொண்டு, தன்னை இந்த நிலைமைக்கு ஆக்கிய டாட்ஸ்கியை துன்பப்படுத்துகிறாள். பின்னால் மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் நடந்து கொண்டு தன்னை மிகவும் நேசிக்கும் மிஷ்கினையும், ரோகோஸின்னையும்
அலைக்கழிக்கிறாள்.
இபான்சின் குடும்பத்தில் மூன்று அழகிய பெண்கள் உள்ளார்கள். மூவரும் இபான்சின் குழந்தைகள். அவர்கள் அலெக்ஸாண்ட்ரா இவானோவா, அடிலெய்டா இவானாவோ, அக்லேயா இவானாவோ. இவர்களில் அக்லேயா மிகவும் அழகியாகவும், குறும்புத்தனம் நிறைந்த பெண்ணாகவும் உள்ளாள். முதலில் மிஷ்கினைப் பார்த்து எப்போதும் கேலி செய்து கொண்டு இருந்தாலும், பின்னாளில் மிஷ்கினை காதலிக்கத் தொடங்குகிறாள். காதல் திருமணம் வரை செல்கிறது. மிஷ்கினின் உடல் நலக் குறைவால் திருமணம் தடைபடுகிறது. இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்கள் நாவலில் நிறைந்துள்ளன.
மலைகளையும், இயற்கையையும் ரசிக்கிறான். மனித மனத்தில் குவிந்து கிடக்கும் அழுக்குகளை சுட்டிக் காட்டுகிறான். செ­னிடரின் மருந்துவமனையில் மன நோயாளியாக இருந்த பொழுது அந்த கிராமத்தில் இருந்த காச நோயால் பாதிக்கப்பட்ட ஏழைப் பெண்ணான மேரியின் கதையை கூறும் பொழுது மனம் நெகிழ்வுறுகிறது.
ஊரே வெறுத்து ஒதுக்கிய அந்த பெண்ணை மிஷ்கின் தன் அன்பின் வழியாக நேசித்து அவளுக்கு உதவி புரிகிறான். மிஷ்கின் வழியாய் தங்கள் தவறினை உணர்ந்த ஊர் மக்கள் பின்னால் மேரிக்கு உதவி செய்கின்றனர். குழந்தைகளை அவளோடு பேச அனுமதிக்கின்றனர். நாவலில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் உள்ளன. நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவின் விருந்தில் ஒரு விளையாட்டு விளையாடப்படுகிறது. அது, வாழ்வில் தான் இதுவரை செய்த மோசமான செயலைப் பற்றி அனைவரின்
முன்பும் எந்த ஒரு ஒளிவுமின்றி சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையோடு. ஒவ்வொருவரும் தன் வாழ்வில் தான் செய்த மோசமான செயல்களை, வருந்தத் தக்க செயல்களை கூறுகின்றனர்.
கதையின் நாயகனான மிஷ்கின் உண்மையின் வடிவமாகவும், மன்னிக்கும் மனப்பான்மையோடும் வாழ்கிறான். தஸ்தயேவ்ஸ்கி இயேசுவை மனதில் நிறுத்திக் கொண்டுதான் மிஷ்கின் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார் என கூறப்படுவதும் உண்டு.நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டு ரோகோஸின்னோடு ஓடிவிட்டாலும் அவளுக்காக வருத்தப்படுகிறான். அவள் நல்ல மனம் படைத்தவள் எனவும் கூறுகிறான். அக்லேயாவுடன் ஆன மிஷ்கினின் திருமண நிச்சயதார்த நிகழ்வைப் படிக்கும் போது மனம் முழுவதும் ஒரு பதட்டம் நிரம்பி விடுகிறது. தன்னை முழுமையான மனதோடு காதலிக்கும் அக்லேயா வை மிஷ்கின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நாவலைப் படிக்கும் வாசகர்கள் மனதில் எண்ணத் தோன்றுகிறது,ஆனால் நாவலில் அவ்வாறு நிகழவில்லை.
நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாவ்லிஷ்ட்டேவ் ( மிஷ்கினை வளர்த்தவர். மிஷ்கினை மருத்துவரின் கண்காணிப்பில் விடும் வரை அவனுக்கு பாதுகாப்பாய் இருந்தவர் ) பற்றிய அவதூறான பேச்சை கேட்க இயலாமல், மிஷ்கின் மனதினுள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை எல்லாம் கொட்டித் தீர்த்தான். மிஷ்கினின் பேச்சு ஆவேசம் மிக்கதாய் இருந்தது. அவன் நடுங்கிக் கொண்டும், வார்த்தைகளை சரியாக உச்சரிக்க இயலாமல் மூச்சு வாங்கிக் கொண்டும் தொடர்ந்து பேசுகிறான். அவனது இந்த திடீர் ஆவேசத்தை தொலை தூரத்தில் இருந்து கொண்டு நடுங்கிக் கொண்டே கேட்டுக் கொண்டிருக்கிறாள் அக்லேயா. விருந்தினர்கள் பார்வையில் அவன் முட்டாளாகத் தெரிந்தாலும், அவனது பேச்சில் உன்னதமான கருத்துக்கள் வந்து கொண்டிருந்தன. பேச்சுத் திறமையை விடவும், நேர்மையாக பேசும் குணம்தானே வேண்டும் எனவும், தலைவர்களாக வேண்டுமென்றால், நாம் வேலைக்காரர்களாக இருப்போம் எனவும் குறிப்பிடுகிறான்.
இவ்வாறு தொடர்ந்து ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கும் போதே தள்ளாடி கீழே விழுகிறான். தஸ்தயேவ்ஸ்கி அந்தக் காட்சியை இவ்வாறு விவரிக்கிறார்.அக்லேயா மிக விரைவாக அவனிடம் ஓடினாள். சரியான சமயத்தில் அவனை தன் கைகளில் தாங்கிக் கொண்டாள். அவள் முகமெல்லாம் பயத்தால் உருக்குழைந்து, சிதைந்து போனபடி நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் துரதிருஷ்டசாலியான அந்த மனிதனின் ஆத்மா வீழ்த்தப்படும் ஓலத்தை கேட்டாள். நாவலின் இறுதியில் மிஷ்கின் மீண்டும் மன நோயாளியாக ய­னிடரிடமே
வந்து சேர்கிறான்.நாவலை முழுமையாகப் படிக்கும் பொழுது பல உணர்வுகள் மனதில் வந்து குடியேறுகின்றன. பரந்து விரிந்த விவரணைகள், ஒவ்வொரு காட்சியையும், மனிதர்களையும் தஸ்தயேவ்ஸ்கி விவரித்திருக்கும் முறைகள் மனதைக் கவர்கினறன. தன்னை ஒரு மகா கலைஞன் என்று நூற்றாண்டுகள் கடந்தும் நிரூபித்துக் கொண்டுள்ளார் தஸ்தயேவ்ஸ்கி. நாவலின் முதல் நூறு பக்கங்களை படித்துக் கடந்துவிட்டால், உலகெங்கும் உள்ள மனிதர்களின் உணர்வுகள் ஒன்று போல்தான் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
தஸ்தயேவ்ஸ்கியை புரிந்து படிப்பதே சிரமமான காரியம். ஏனெனில் மனிதனின் மன ஆழத்தை துளைத்து, அவற்றுள் உள்ள எண்ணங்களை எழுதியவர். அத்தகைய எழுத்துகளை மொழிபெயர்ப்பது எளிமையான செயல் அல்ல. தமிழின் மிகவும் எளிமையான, இனிமையான, வளமான நடையில் மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியை எம்.ஏ. சுசிலா அவர்கள். ஏற்கனவே குற்றமும் தண்டனையும் நாவலை தமிழில் மொழி பெயர்த்தவர். கனடா இலக்கியத் தோட்டம் விருது, திசை எட்டும் விருது, ஜி.யு. போப் விருது என அசடன் நாவலுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. இலக்கியத்தையும், சமுதாயத்தையும், மனிதத்தையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நாவல் அசடன்.
*****
நூல் வெளியீடு : பாரதி புக் ஹவுஸ், E – 59 / 3 -4, மாநகராட்சி வளாகம்
பெரியார் பேருந்து நிலையம், மதுரை ‡ 625 001
அலைபேசி : 97893 36277
*****

தொடர்புள்ள பதிவுகள்;
அசடன் - விருதுகள்
இரண்டு பயணங்கள்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....