துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.1.15

’’யாதுமாகி’’ பற்றி தேவராஜ் விட்டலன்

’’யாதுமாகி’’ பற்றி தேவராஜ் விட்டலன் எழுதிஅனுப்பிய பதிவு
வாழ்க்கையில் பலதரப்பட்ட எண்ணங்களை கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள் . தனிமனிதன் என யாரும் இல்லை, அனைவரும் சமுதாயத்தில் ஏதோ ஒரு வகையில் ஒருவருக்கொருவர் பினைந்துதான் உள்ளோம்.

ஏமாற்றங்கள், பெருந்துயரங்கள் , சந்தோசங்கள் என காலம் மாறி மாறி அனைவரின் வாழ்விலும் இனிப்பையும் கசப்பையும் தந்து கொண்டுதான் உ:ள்ளது. பலர் பிரச்சனைகளை எதிர்கொள்ள இயலாமல் வாழ்வை சுருக்கி கொள்கின்றனர். சிலர் பிரச்சனைகளில் இருந்து மீண்டு புதிய தடத்தை பதிக்கின்றனர்.

யாதுமாகி நாவலில் வரும் தேவி கதாபாத்திரம் (தேவிதான் நாவலின் மையம் தேவியை சுற்றிதான் முழு நாவலும் வளர்கிறது) சந்திக்கும் பிரச்சனைகள் மிகவும் சிக்கலானவை அதுவும் பெண்களுக்கு சமுதாயத்தில் பல கொடுமைகள் நடந்த கால கட்டம், பெண் உரிமைகள் மறுக்கப்பட்ட கால கட்டம் . அத்தகைய சூழலில் பல கட்டுப்பாடுகள் கொண்ட பிராமண சமுதாயத்தில் பிறந்து, நல்ல மனிதர்கள் சிலர் உதவியால் தன் வாழ்க்கையை தனி மனுசியாக நின்று பிரச்சனைகளை எதிர் கொண்டு மாற்றி அமைக்கிறார். நாவல் முன்னும் பின்னும் நகர்ந்து செல்கிறது  சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் உள்ள காலங்களை படம் பிடித்து காட்டுகிறது.

  நைட்குவீன் பூக்களின் வாசம் நாவல் எங்கும் விரைந்து கிடக்கிறது. நாவலில் பல இடங்களில் நம்மை உருகச் செய்துவிடுகிறார் ஆசிரியர். ஏழை மாணவியான செல்லி பள்ளிக்கு வராததால் எதேச்சயாய் பார்க்கும் தேவி அம்மா செல்லியை அழைத்துப் பேசி அவள் குறை கேட்டு , உணவுதான் பிரச்சனை எனக் கண்டறிந்து அதை தீர்த்து வைப்பதும். ( ப. எண் 78,79)

வீடு கட்டும் தறுணத்தில் காண்ட்ராக்டர் சின்னையா பணத்தோடு தலைமறைவானபோது அந்த வேதனையில் கல்யாணிப் பாட்டி புலம்பும் போது “ சரி சரி விடுங்கோ மாமி ஏழெட்டுக் கொழந்தைகள் அவனுக்கு.. பெரிய சம்சாரி .. போய்த் தொலையறான் .. போங்கோ இனிமே நடக்க வேண்டியதைப் பாப்போம் எனக் கூறி பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு , அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறார் தேவி அம்மா.. (ப எண் – 172) தனக்கு துரோகம் செய்தவனையும் மண்ணித்து விடுகிறார் தேவியம்மா.

“முழு நிலவின் ஒளியில் வெள்ளிநுரைகளோடு பளபளக்கும் கடல் கண்ணுக்குத் தெரிகிறது கூடவே அதன் ஆரவாரக் குமுறலும்! இடைவெளியே இல்லாதபடி தொடர்ந்து மறிந்து மகிழும் அந்தக்கடல் அலைகள் எழுப்பும் ஓசை… கம்பீரமான அந்த முழக்கம், பழகிப்போன ஒரு நட்பைப்போல அவளோடு ஒட்டிக் கொண்டு இப்போது இந்த ராணி மேரி கல்லூரி விடுதி வரை வந்திருக்கிறது” என ஆசிரியர் குறிப்பிடுகிறார். கடல் தேவியின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிய ஒன்று. குழந்தை இயற்கைக்கே அந்த பால்ய விவாகம் பிடிக்கவில்லை போல, அதுவும் அறிவுக் குழந்தையாக இருக்கும் தேவிக்கு நடந்ததை கடல் பொறுக்க முடியாமல்தானோ அந்த சிறுவனை தேவியின் வாழ்க்கையில் இருந்து பிரித்துவிடுகிறதோ. கடல் தேவிக்கு வலியை தந்தாலும், தேவி இயற்கையை நேசிக்கிறார்.

 சாருவின் நினைவோடையின் வழியாய் உயிர்க்கும் இந்நாவல் வைகையில் தொடங்கி மலைச்சிகரங்களிலிருந்து சமவெளி நோக்கி ஆறாத காதலுடன் பாய்ந்து வந்து கொண்டிருக்கு ரிஷிகேசத்து கங்கையில், திரும்பியே பார்க்காமல் முன்னோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் கங்கையில் முடிவது சிறப்பான அம்சமாகும். நாவல் முன்னும் பின்னும் பயணித்தாலும் படிக்கும் போது அந்த கால கட்டத்திற்கே கொண்டு செல்கிறார் ஆசிரியர்.

  தாயாகி, தந்தையாகி, குருவாகி, ஏதுமற்ற ஏழைப் பிள்ளைகளையும் படிக்க வழி செய்து நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களையும் மண்ணித்து, தேவி கதாபாத்திரம் , தன் வாழ்வில் ஏற்பட்ட கஷ்ட்ட காலங்களில் மனதுடைந்து வாழ்க்கையை சுருக்கி கொள்ளாமல் தனது சுடர்மிகுந்த அறிவை பயன்படுத்தி எல்லா வேளையிலும் முன்னோக்கி பாயும் கங்கையைப் போலே வாழ்வில் பயணம் செய்கிறார், தேவி அம்மா போல் வாழ்வது  எளிதான காரியம் அல்ல. ஆனால் இந் நாவலை படித்த பிறகு அனைவரின் மனதிலும் தேவியம்மா யாதுமாகி நின்று மனபலம் அளிப்பார் என்பதில் எனக்கு சிறிதளவும் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....