துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.1.15

கருத்துச்சுதந்திரம்- ஒரு வன்மையான கண்டனம்

‘’எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான்’’என்று ஓர் எழுத்தாளனைச் சொல்ல வைத்தது எவரெனினும் -எந்தச்சூழல் எனினும் எந்த நபரோ / அமைப்போ எதுவாயினும் அதன் மீதான /அவர்கள் மீதான 
என் வன்மையான கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.பெருமாள்முருகன் தன் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தியபடி, இதைத் துணிவோடு எதிர்கொண்டு எழுத்துக்களத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே என் ஆவல்;எதிர்பார்ப்பு. 

முகநூலில் வெளியாகியிருக்கும் திரு பெருமாள் முருகனின் அறிக்கை கீழே...

’’எழுத்தாளர் பெருமாள்முருகன் என்பவனுக்காக பெ.முருகன் அறிக்கை
எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.
பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்.
‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:
1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.
2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.
3. பெருமாள்முருகன் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.
4. இனி எந்த இலக்கிய நிகழ்வுக்குப் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.
5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.
அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி.
பெ.முருகன்
பெருமாள்முருகன் என்பவனுக்காக’’

2 கருத்துகள் :

மலரன்பன் சொன்னது…

Have you read the novel?

எம்.ஏ.சுசீலா சொன்னது…

பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ நாவலை ஆழமாகப்படித்து விட்டே அதை எழுதினேன்;அதில் உங்களுக்கு என்ன ஐயம்? மேம்போக்காக நான் எப்போதுமே எந்தக்கருத்தையம் அறிந்து கொள்ளாமல் வெளியிடுவதே இல்லை

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....