துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

20.1.15

தினமலர் இதழில்....
பெண்ணிய சிறுகதைகளால், தமிழ் இலக்கிய வாசகர்களை கவர்ந்தவர் எழுத்தாளர் எம்.ஏ.சுசீலா. புகழ்பெற்ற உலக இலக்கியமாக விளங்கும், தாஸ்தயெவ்ஸ்கியின், 'கிரைம் அண்ட் பனிஷ்மென்ட்' மற்றும் 'இடியட்' ஆகிய இருநாவல்களையும், தமிழில் மொழிபெயர்த்தவர். தன் சுய படைப்பாக 10க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியிருக்கிறார். இவரது படைப்புகள், பல விருதுகளை பெற்றுள்ளன. மதுரை பாத்திமா கல்லுாரியின் தமிழ் பேராசிரியராகவும், துணைமுதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்று, தற்போது கோவையில் வசித்து வருகிறார்.பெண்களின் படைப்பில் தாய்மையும், அன்பும் உச்சமாக வெளிப்பட வேண்டும் என விரும்பும் இவர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

பாரதியின் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். கல்லுாரியில் படிக்கும் காலத்தில், சிறுகதைகள் நாவல் வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. ஜெயகாந்தனின் கதைகளை விரும்பி படித்தேன். இந்த வாசிப்பு பழக்கம் என்னையும் எழுத துாண்டியது.கடந்த, 1979ம் ஆண்டு, 'கல்கி' வார இதழ் நடத்திய சிறுகதை போட்டியில், 'ஒரு உயிர் விலை போகிறது' என்ற என் கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. அறிமுக எழுத்தாளர் என்ற வாசகத்துடன், அதை பிரசுரித்தனர். அதுதான் நான் எழுதிய முதல் கதை.

இந்த உற்சாகத்தில், தொடர்ந்து எழுதினேன். பல பத்திரிகைகளில், என் கதைகள் வெளிவந்தன. பிறகு சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, புத்தகங்களாக வந்தன. என் கதைகளில், பெரும்பாலும் பெண்ணியம், பெண்களின் வாழ்வியல் சிக்கல்கள் மைய கருவாக இடம் பெறும். கல்லுாரி பணியில் இருந்த காலத்தில் அதிகம் எழுத முடியவில்லை. ஓய்வுக்கு பிறகு நேரம் அதிகம் கிடைத்தது. அதனால், மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டேன்.தாஸ்தயெவ்ஸ்கியின், 'குற்றமும் தண்டனையும்' நாவலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்தேன். இந்நாவல் உலக அளவில் பல மொழிகளில் மொழியெர்க்கப்பட்டுள்ளன. இதை தமிழில் வாசித்த எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, சி.மோகன் போன்றவர்கள் என் மொழி பெயர்ப்பை பாராட்டினர். தமிழ் வாசகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது.

தொடர்ந்து, தாஸ்தயெவ்ஸ்கியின், 'இடியட்' நாவலையும் 'அசடன்' என்ற பெயரில் மொழி பெயர்த்தேன். இதில், பிரெஞ்ச் மொழிக்கலப்பு அதிகம் இருந்ததால், மொழி பெயர்க்க சிரமமாக இருந்தது. அதனால், மொழிபெயர்த்து முடிக்க, ஒன்றரை ஆண்டுகள் ஆகின. இந்த நாவலுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது; மூன்று விருதுகளும் கிடைத்துள்ளன. பெண்கள் படைப்பாளர்களின் எழுத்து கலைத்தன்மையுடன், சமூகப்பயன்பாடுடன் இருக்க வேண்டும். கதை என்பது வாழ்க்கையின் தரிசனமாக இருக்கவேண்டும். அதில், தாய்மையும், அன்பும் உச்சமாக வெளிப்படவேண்டும். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் எழுத்துக்களில், அவை வெளிப்பட்டன. இன்றைய பெண் எழுத்தாளர்கள் தங்களின் சுயத்தையும், அக வெளிப்பாடுகளையும் எழுதுகின்றனர். அதில், பாலியல் தன்மையே அதிகம் வெளிப்படுகிறது. அதை தவிர்ப்பது நல்லது.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....