துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.2.18

நிலவறைக்குறிப்புகள்-அகச்சுழிப்புக்களினூடே ஒருபயணம்



''இரண்டும் இரண்டும் நான்கு என்று கணக்குப்போட்டு வாழ்வது ஒரு வாழ்க்கை ஆகாது. இரண்டும் இரண்டும் நான்கு என்பதைப் போன்ற கணிதவிதிக்கும், அட்டவணைகளுக்கும் உட்பட்டதாக ஒரு சுயவிருப்பம் எப்படித்தான் எஞ்சி இருக்க முடியும்? இரண்டும் இரண்டும் நான்கு என்று போடும் கணக்கையெல்லாம் விட – அளவிட முடியாதபடி உயர்வானது தன்னுணர்வு'’

.
 நாற்பது வயதுக்கு மேலும் வாழ்வதென்பது அநாகரிகமானது,அருவருப்பூட்டுவது,அறநெறிகளுக்கே எதிரானது. நாற்பது வயதுக்கு மேல் வாழ்பவர்கள் யார் சொல்லுங்கள் ! நான் சொல்கிறேன், முட்டாள்களும் உருப்படியில்லாத பேர்வழிகளும்தான் அப்படி வாழ்வார்கள்.’’

’’ஒருமனிதன் முழுமையான தன்னுணர்வுடன் இருப்பதும் கூட ஒரு நோய்தான்.. சுற்றியுள்ள மனிதர்கள் எல்லாரையும் விட நான் அறிவாளியாக இருப்பதுதான் என் முதல் குற்றம். என் வாழ்நாள் முழுவதும் பிறரிடமிருந்து என் பார்வையை அகற்றியே வைத்திருப்பவன் நான்; மனிதர்களை முகத்துக்கு முகம் நேரடியாகப் பார்ப்பதென்பது என்னால் ஒருபோதும்முடியாது’’
என்பது போன்ற எதிரும் புதிருமான தர்க்கங்களில் சஞ்சரித்தபடி- தன்னைத்தானே முரணிக்கொண்டும்,பழித்துக்கொண்டும்,சுய பலங்கள்-பலவீனங்கள் சார்ந்த உள்ளுணர்வைத் தட்டி எழுப்பியபடியும் ஓயாமல் உள்ளுலைந்து கொண்டிருக்கும் மனிதமன விசித்திரங்களை ஒரு தனிமனிதமனச்சான்றின் குரலாக்கி வாசகப் பார்வைக்கு அப்பட்டமாக முன்னிறுத்தியிருக்கும் Notes from Underground என்னும் படைப்பை ’நிலவறைக்குறிப்புக்களாக மொழிபெயர்க்கும்போது நான் மேற்கொண்டது... அகச்சுழிப்புக்களினூடேயான மிகக்கடினமான ஒரு பயணம்

2006இல் Crime and Punishment 
குற்றமும் தண்டனையும்’ மொழியாக்கத்தின் வழியாக[வெளியீடு-2007]
 தஸ்தயெவ்ஸ்கியின்படைப்புக்களுக்குள் நெருக்கமாக நுழைந்த என்னை


முதல் பதிப்பு

இரண்டாம் பதிப்பு

 செம்பதிப்பு

அவரது எழுத்துக்கள்வலுவாக ஆட்கொள்ளத் தொடங்கியதன் விளைவே அடுத்தடுத்து நான்மேற்கொண்ட The Idiot அசடன்,



மற்றும் அவரது குறுங்கதைகளின்மொழிபெயர்ப்புக்கள்.

தமிழுக்கு இதுவரை வந்து சேராத அவரது ஆக்கங்களை
இயன்ற வரை கொண்டு வந்து சேர்த்து விட வேண்டும் என்ற தூண்டுதல்
என்னைத் தொடர்ந்து இயக்கி வருவதாலேயே மிக இருண்மையான ஒரு
பிரதி என்பதை அறிந்தும், அவரது Notes From The Underground

 என்ற குறும்புதினத்தை ’நிலவறைக்குறிப்புக்கள்’ என்னும் தலைப்பில் தமிழில் தரத்துணிந்தேன்.
ஆனால்.. குற்றமும் தண்டனையும் , அசடன் ஆகிய மிகப்பிரம்மாண்டமான படைப்புக்களை மொழிபெயர்த்ததை விடக் கடுமையான சவால்களை என் முன் வைத்தது இந்தச்சிறிய ஆக்கம்...
இதன்முதற்பகுதியான ’’எலி வளை’’ - முழுவதுமே அக மன உரையாடல்களால் கட்டமைக்கப்பட்டிருப்பது...
இரண்டாவது பகுதியான ’’ஈரப்பனிப்பொழிவின் பொருட்டு’’., தேர்ந்தெடுத்த ஒரு சில சம்பவங்களை  மட்டுமேகொண்டிருப்பது.

குறுநாவல்[Novella] வகைப்பாட்டைச்சேர்ந்ததென  சொல்லப்படும்இந்தப்படைப்பு
தஸ்தயெவ்ஸ்கியின் பெரிய நாவல்கள் பலவற்றைப்போல எண்ணிக்கையற்ற கதைமாந்தர்களையோ,விறுவிறுப்பான கதைப் பின்னலையோ,மூலக்கதையோடு பிணைந்து வரும் சிறு சிறு கிளைக்கதைகளையோ கொண்டதில்லை என்பதும் அவற்றிலிருந்து
முற்றிலும்  மாறுபட்ட தனித் தன்மை கொண்டது
 என்பதும் அதற்குள் அணுக்கமாகச்சென்று அதனுள் மூழ்க மூழ்கத்தான்.எனக்கு வெளிச்சமாயிற்று.

எதிரும் புதிருமான தர்க்கங்களில் சஞ்சரித்தபடி- தன்னைத்தானே முரணிக்கொண்டும்,பழித்துக்கொண்டும்,சுய பலங்கள்-பல்வீனங்கள் சார்ந்த உள்ளுணர்வைத் தட்டி எழுப்பியபடியும் ஓயாமல் உள்ளுலைந்து கொண்டிருக்கும் மனிதமன விசித்திரங்களை ஒரு தனிமனிதமனச்சான்றின் குரலாக்கி வாசகப் பார்வைக்கு அப்பட்டமாக முன்னிறுத்தியிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.

புனைவுகளின் சாத்தியங்களையெல்லாம் தன் படைப்புக்களில் எட்ட முடிந்த
ஒரு இலக்கிய மேதை இருப்பியல் வாதம் என்னும் இலக்கிய அணுகுமுறைக்கு அளித்திருக்கும் புனைவு வடிவமே நிலவறைக்குறிப்புக்கள்.
கோட்பாட்டளவில் எத்தனைதான் ஆழ்ந்து படித்தாலும் விளங்கிக்கொள்ள
முடியாத இருப்பியல் வாதம் [Existentialism] என்னும் இலக்கணத்தின்
இலக்கியம் இது.
   
உள்ளச் சுழல்களின் கொந்தளிப்பும்,இருட்டும் நிரம்பிய பக்கங்களை
வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயலும் படைப்பாளியின் தடத்தைப்
பிறழ்வின்றிப் பின் தொடர்ந்த வண்ணம் - வெளிப்படையாகச் சொல்லப்படாத
பூடகமான அகச்சுழிப்புக்களோடு கூடிய இந்தப்பிரதிக்குள் பயணம் செய்து
அதை என் மொழியில் வைக்கும்போது இடையில் ஏற்பட்ட மனச்சோர்வுகளும் தளர்ச்சிகளும் ,இந்தப்பணியை இடையில் அரை குறையாக நிறுத்தி விடக்கூடாதே என்ற அச்சமும்  என்னை ஆட்டிப்படைத்தபடியே இருந்தன. கிட்டத்தட்ட 1000 பக்கங்கள் அச்சில் வந்திருக்கும் குற்றமும் தண்டனையும் மொழிபெயர்ப்பை விட 200 பக்கங்களேயான இந்தப்பிரதியை மொழிபெயர்க்க நான் எடுத்துக்கொண்ட கால அவகாசம் மிகவும் கூடுதலானது என்பதே இதன் செறிவையும் அடர்த்தியையும் இருண்மையையும் சொல்லி விடக்கூடும்...

கடுமையான அனுபவம் என்றாலும் சுகமான அனுபவமாகவும் அமைந்த இந்த மொழியாக்கப் பணி முடிவடைந்து நூலும் வெளிவந்திருக்கும் இந்த வேளையில் தமிழ் வாசகர்களுக்கு முற்றிலும் புதிய ஒரு
அனுபவமாக  இது அமையக்கூடும்..என்பதை மட்டும் என்னால் உறுதியாகச்சொல்ல முடிகிறது.

என் மொழியைக்கூர் தீட்டிக்கொள்ளவும்  என் அக
மனத்தைத் துலக்கி அதில் புத்தொளி பாய்ச்சவும் இந்த மொழியாக்கம் துணை வந்திருக்கிறது என்பதையும்  இத்தருணத்தில் நான் சிலிர்ப்போடு நினைவுபடுத்திக்கொள்கிறேன்


இணைப்பு

புத்தகக் காட்சி முன்னோட்டம்: மொழிபெயர்ப்பு நாவல்கள் 2


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....