துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.1.14

தினமணி சென்னைப்பதிப்பில் ...

சென்னையில் நடைபெறும் புத்தகக்கண்காட்சியை ஒட்டி..

18.1.2014 தேதியிட்ட தினமணி சென்னைப்பதிப்பில் வெளியாகி இருக்கும் என்னுடனான .[தொலைபேசி வழி] உரையாடலின் பதிவு..

உணர்வுப்பூர்வமான கலை மொழியாக்கம்

தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா. உலகப் பேரிலக்கியமான ஃபியோதர் தஸ்தயேவஸ்கியின் "குற்றமும் தண்டனையும்', "அசடன்' ஆகிய இரண்டு நாவல்களைத் தமிழாக்கம் செய்தவர். "கீழுலகின் குறிப்புகள்' நாவலையும் தற்போது தமிழாக்கம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்:
நல்ல மொழிபெயர்ப்பின் இலக்கணம் என்ன?
மூலத்தைச் சிதைக்காமல் கொடுப்பதாகும். அது ஒரு மொழிபெயர்ப்பு என்ற உணர்வு படிப்பவருக்கு ஏற்படக்கூடாது. கதாபாத்திரங்களின் பெயர்கள், இடங்களைப் பற்றிய வர்ணனைகள் வேறுபாடாக இருக்கலாம். ஆனால் மனித உணர்வுகளைச் சரியாக தமிழ் மொழிக்குக் கடத்திவிட்டாலே போதும். அது அந்நிய மொழி படைப்பு என்ற உணர்வு தோன்றாது. உலகம் முழுவதும் மனித உணர்வுகள் என்பவை பொதுவானவைதான். எனவே மூலத்தில் உள்ள உயிரோட்டத்தை, உணர்ச்சிக் கொந்தளிப்பை, அதன் தரிசனத்தை அப்படியே தக்க வைப்பதே சரியான மொழிபெயர்ப்பாகும்.
ஒரு படைப்பை மொழியாக்கம் செய்வதன் வழியாக மொழிபெயர்ப்பாளர் அடைவது என்ன?
முதலில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியப் பணியைத் தொடங்கினேன். 80-க்கும் மேற்பட்ட கதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. 2008-ஆம் ஆண்டு தான் "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தேன். அதற்குப் பிறகு "அசடன்' மொழிபெயர்த்தேன். முதல் முயற்சியாக "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தபோது, என்னுடைய சொந்த படைப்புத்திறனை இழந்துவிடுவேனோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் மொழிபெயர்த்து முடித்த பிறகுதான் எனது மொழியைக் கூர்மைப்படுத்த அது உதவியிருக்கிறது என்று புரிந்தது. மொழிபெயர்ப்புக்காக திரும்பத்திரும்ப அந்நாவலைப் படிக்கும்போது, தஸ்தயேவஸ்கி சொல்லும் விஷயத்துக்குப் பக்கத்தில் போக முடிந்தது. அதனால் சொந்தமாக வேறு படைப்பு எழுதும்போது என்னுடைய பார்வை விசாலப்பட்டது. மொழியாக்கத்துக்குப் பொருத்தமாக வேறுவேறு சொல்லைத் தேட வேண்டியிருந்தது. தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. அதனால் ஒரே சொல்லைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு சொற்களை பயன்படுத்தும்போது, என்னுடைய மொழியும் வளப்படுகிறது என்பதை உணர்ந்துகொண்டேன்.
ஒரு படைப்பின் வேர்களை மொழியாக்கத்தின் மூலம் தொட்டுவிட முடியும் என்று கருதுகிறீர்களா?
படைப்பின் வேர்களைத் தொடுவதற்கு முயற்சிகள் செய்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சொந்த படைப்பை எழுதினாலும்கூட, அது ஒரு சில மனங்களையே தொடுகிறது. ஒத்த அலைவரிசை இல்லாத மனங்களைத் தொடுவதே இல்லை. அது எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.
கலாசாரம், பண்பாட்டு ரீதியாக ஒரு படைப்பு வேறுபட்டிருக்கிறது என்பதற்காகவும், நீடித்த விவரணை என்பதற்காகவும் ஒரு மொழிபெயர்ப்பாளன் அந்தப் படைப்பைச் சுருக்கலாமா?
சுருக்கக் கூடாது. முன்பு அப்படிச் செய்துகொண்டிருந்தனர். அசடன், கரம்úஸாவ் சகோதரர்கள்கூட அப்படி தமிழில் வந்துள்ளது. சுருக்குவதால் நிச்சயம் ஜீவன் இல்லாமல் போய்விடும். ஒரு நாவலின் பல்வேறு பரிமாணங்களை தஸ்தயேவஸ்கி விஸ்தீரணம் செய்ய விரும்புகிறார். அந்த விஸ்தீரணத்தைக் குறைப்பதற்கு மொழிபெயர்ப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை. சில பதிப்பகங்கள் கேட்பதாலும், சின்ன புத்தகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்கின்றனர்.
அயல் மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் அளவு, தமிழ்ப் படைப்பாளிகளின் நூல்கள் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப்படாதது, ஏன்?
அதற்கான முயற்சி எடுக்காதது காரணமாக இருக்கலாம். வேறு மொழிக்குப் படைப்பைக் கொண்டு செல்வதற்கான ஆற்றலைப் படைப்பாளிகள் வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக இருக்கலாம். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி நிறைய தமிழ் படைப்புகளை வங்காள மொழிக்குக் கொண்டு சென்றார். இதற்கு பன்மொழி ஆளுமை தேவையாக இருக்கிறது. அதனால் படைப்பாளிகளோ அல்லது மொழிபெயர்ப்பு செய்பவர்களோ அந்த ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேறு மொழி தெரிந்தவர்களுக்கு படைப்பு ஊக்க மனநிலை இருக்க வேண்டும். மொழியாக்கம் செய்வதும் ஒரு படைப்புப் பணிதான். இந்த மனநிலை உள்ளவர்கள் குறைவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
"குற்றமும் தண்டனையும்', "அசடன்' இதில் எதன் மொழியாக்கம் சிரமமாக இருந்தது?
அசடனோடு ஒப்பிடும்போது, குற்றமும் தண்டனையும் சிறியதுதான். இது நேர்ப்போக்கில் போகும் கதை. குற்றம் செய்துவிட்டு, அது தொடர்பாக ஒருவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலைச் சொல்லும் கதை. அதை 8 மாதத்தில் மொழிபெயர்த்துவிட்டேன். ஆனால் அசடன் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் எடுத்தது. அது திருகலான படைப்பு. நிறைய பாத்திரங்கள். மனச்சிக்கல்கள். நிறைய பிரெஞ்சு சொற்றொடர்கள் இருந்தன. அதனால் நிறைய பணியாற்ற வேண்டியது இருந்தது. ஆனால் குற்றமும் தண்டனையுமுக்குத்தான் நிறைய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தேன். வாசகர் மத்தியில் அதற்கு நிறைய வரவேற்பு இருந்தாலும், அசடனே என்னை விருதுகள் பெறும் வரை அழைத்துச் சென்றது.
எம்.ஏ.சுசீலா மொழிபெயர்ப்பாளர்

1 கருத்து :

திருப்புகழ் சொன்னது…

வணக்கம். வாழ்த்துக்கள் திருமதி.எம்.ஏ.சுசீலா அம்மா!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....