இறைச்சி விற்பனைக் கூடங்கள் என்றாலே அவை சுற்றுச் சூழலை நாசப்படுத்துபவைதான் என்பது நம் பொதுப் புத்தியில் வெகு காலமாகப் படிந்து போயிருக்கும் கருத்துருவாக்கம்.
ஆனால் அதற்கு நேர்மாறாக 5/9/10 தேதியிட்ட தினமலரில் வெளியாகியிருக்கும் கீழ்க்காணும் செய்தி மனதை நெகிழ்த்தி விட்டது
.
ஊர்கூடித் தேரிழுத்தால்தான் உண்டு என்று ‘கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்று’வதைத் தவிர (நன்றி; பாரதி)நம்மில் பலரும் -தனிமனித நிலையில் ஆற்றக்கூடிய எளிதான ஆக்க பூர்வமான செயல் திட்டங்களிலும் கூட ஒருபோதும் முனைப்புடன் முயல்வதில்லை.
சுற்றுச் சூழல் காக்கப் பெருமளவில் திட்டம் வகுப்பதிலும் அதற்கான கூட்டங்கள் -மேல்,இடை,கடை நிலைகளில் நடத்துவதிலும்,அது தொடர்பான பொருள் மற்றும் நேர விரயத்திலுமே நிபுணத்துவம் வாய்ந்த மேல்மட்ட உயரதிகார வர்க்கத்தின் பொழுதுகள் வீணே கழிந்து கொண்டிருக்கின்றன.
கறிகாய் வாங்கப் பை எடுத்துச் செல்லக் கூடச் சோம்பியவர்களாய் வெறுங்கையை வீசிக் கொண்டு போய்ப் பாலிதீன் குப்பைகளை மலையாய்க் குவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்.
இவ்வாறான ஒரு சமுதாயத்தில் இச் செய்தி ஒரு நல்ல சமிக்ஞையைச் சுமந்து வந்திருக்கிறது,
சிக்கன் விற்பனை செய்யும் சாமானியமான சிறு வியாபாரி ஒருவர் , சூழல் சீர்கேட்டைத் தடுக்கத் தன்னால் இயன்றதைச் செய்ய முன் வந்திருப்பதையும்,
பிளாஸ்டிக் கவரில் வாங்காமல் பாத்திரத்தோடு வருபவர்களுக்கு 4 முட்டை இலவசம் , கிலோவுக்கு 4 ரூபாய் தள்ளுபடி எனத் தன் பங்கு லாபத்தைக் கூட விட்டுத் தந்து ,பாலிதீன் பயன்பாட்டை முடிந்த அளவு குறைக்கவும் தவிர்க்கவும் முயற்சி எடுத்திருப்பதையும் கண்டு உண்மையிலேயே நெஞ்சு விம்மிதம் கொள்கிறது.
எந்தப் பிரதி பலனையும் எதிர்பாராமல் இயற்கையின் தூய்மை காக்க வேண்டுமென்ற உள்ளார்ந்த தூண்டுதலோடு மட்டுமே இச் செயலைச் செய்து வரும் சிவானந்தம் என்னும் இக் கடைக்காரருக்கு‘சென்ஸ்’ மையத்தின் சுற்றுச் சூழல் விருதும் கிடைத்திருக்கிறது.
ஆனால்...அதைக் காட்டிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் விழிப்புணர்வு ஒன்றே இவருக்குப் பெரும் பரிசாக அமைய முடியும்.
.
’’வெளிச்சத்தைப் பற்றி ஏன் விரிவுரை ஆற்றுகிறாய்
விளக்கை ஏற்று’’
என்ற அப்துல் ரஹ்மானின் கவிதை இவருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
சூழலியல் கோட்பாடுகள் ...திட்ட விவரணைகள் பற்றிய பரந்த அறிவு பெறாதவராகவும் இவர் இருக்கலாம்.
ஆனாலும் இயற்கையின் மீது கொண்ட அளப்பரிய நேசம்...அடுத்த தலைமுறைக்கு அதை மாசில்லாமல் விட்டுச் செல்ல வேண்டுமென்ற தீராத தாகம் இவருள் செயல்பட்டுச் சிறியதொரு அகலைச் சுடர் விடச் செய்திருக்கிறது.
அந்த அக்கினிப் பொறியை அடைகாத்துப் பேணி வரும் திரு சிவானந்தத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி; தினமலர்-சென்னைப் பதிப்பு 5/9/2010.
3 கருத்துகள் :
திரு சிவானந்தத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
கட்டுரையின் கருத்து சரிதான். ஆனால் விலங்குகளை உணவிற்காக கொல்வதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி படிக்க சில லிங்குகள் தருகின்றேன். படித்துப் பார்க்க வேண்டுகின்றேன்.
http://uravukaaran.blogspot.com/2010/09/blog-post_16.html
http://uravukaaran.blogspot.com/2010/09/blog-post_14.html
http://uravukaaran.blogspot.com/2010/09/blog-post_15.html
அன்புள்ள நண்பருக்கு,
நானும் கூடக் கொல்லாமை-புலால் தவிர்த்தல் கொண்ட ஒரு நபர்தான்.இங்கு நான் சொல்ல வந்த செய்தி அவருக்குச் சுற்றுச் சூழலிலுள்ள அக்கறை பற்றி மட்டுமே.
வருகைக்கு நன்றி.
கருத்துரையிடுக