துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.9.10

பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 3

’’சமூகத்திலும், வேலைத் தளத்திலும்,குடும்பத்திலும் நிலவும் பெண் ஒடுக்கு முறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்ணின் உணர்வு நிலைகளும்,இந்நிலையை மாற்ற ஆண்களும் ,பெண்களும் எடுக்கும் உணர்வு பூர்வமான நடவடிக்கைகளுமே பெண்நிலை வாதம்’’
(தென்னாசியப் பெண்கள் பயிலரங்கில் முன்மொழியப்பட்ட கருத்து


காலந்தோறும் , சூழல்தோறும் பல்வேறு பரிமாணங்கள் பெற்றபடி விரிவும் அழுத்தமும் கூடியதாய் வளர்ந்து வருவது பெண்ணியம் என்னும் இக் கருத்தாக்கம் என்பதை நினைவில் கொண்டு அனைத்துத் தளங்களுக்கும் பொருத்தமான - ஏற்புடையதான ஒரு விளக்கத்தைச் சற்று விரிவாகவே அமைத்துக் கொள்ளலாம்.
தாய்வழிச் சமூக அமைப்பு , தந்தைவழிப்பட்டதாய் மாற்றமுற்றபின் குடும்பம்,பொருளாதாரம்,அரசியல்,மதம் என முதன்மையான சமூக நிறுவனங்கள் (social institutions)அனைத்தையும் ஆண்களே கையகப்படுத்திக் கொண்டதோடு அவற்றில் மேல்நிலை பெறவும் தொடங்கினர். 




ஆண்களின் கண்ணோட்டத்தில்...அவர்களால் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் படிப்படியாக வேரூன்றத் தொடங்கிய ஆண் முதன்மை பெற்ற சமூக அமைப்பு , பெண்ணைத் தனிமைப் படுத்தி வீடே அவளது உலகம் என அவளது எல்லைகளைக் குறுக்கியது; அவளுக்கென்று குறிப்பாகச் சில பங்குநிலைகளை,கடமைகளை- மீறக் கூடாத மரபுக் கோடுகளாக வரையறுத்தது.
இதே அடித்தளத்தில் எழுப்பப்பட்ட மதம், சாத்திர சம்பிரதாயங்கள் என்ற பூச்சுக்களுடன் பண்பாட்டு ரீதியான பெண் ஒடுக்குமுறைகளுக்குத் தன் அங்கீகாரத்தை அளித்து ஆசீர்வதித்தது


.
‘வீடு’ , ‘வெளி’ஆகிய இரண்டு களங்களிலும் பெண்கள் இரண்டாம் பாலினமாகக் கருதப்பட்டுத் தன் மதிப்பையும்,சமத்துவத்தையும் இழந்தனர்.
பால் அடையாளமாக மட்டுமே உணரப்பட்டதால் வாரிசை ஈன்று தரும் தாய் என்பதற்காக ஆணின் மதிப்பைப் பெற்றனர்; ஆனால் அதே வேளையில் (- ஒரு முரண் நகை போல -irony  )அந்தக் காரணத்திற்காகவே அவனால் பாலியல் சீண்டல்களுக்கும் , வன்முறைகளுக்கும் இலக்காகி - அவனது உடைமைப் பொருளாகவும் , அவனால் துய்க்கப்பெறும் போகப் பொருளாகவும் தரம் தாழ்ந்தனர்.


உடற்கூற்று அடிப்படையிலான இயற்கையான வேறுபாடுகள(biological discriminations ),சூழலடிப்படையில் திணிக்கப்படும் பாலின வேறுபாடுகள்(gender discriminations) என்ற இரண்டையும் வேறுபடுத்திக் காண இயலாத அளவுக்குச் சமூகம் செய்து வைத்திருக்கும் மூளைச் சலவையால் குழப்பமுற்றுத் தாழ்வு மனப்பான்மையில் அழுந்திப் போயினர்.
தாங்கள் மென்மையானவர்களென்றும் , 
பாதுகாப்புக்கு உட்பட வேண்டியவர்களென்றும் ,
சார்புநிலைக்கு மட்டுமே உரியவர்களென்றும் முத்திரை குத்தப்பட்டு விட்டதால் தங்கள் வாழ்வும் ,தங்கள் உடலும். தங்கள் வாழ்க்கை முடிவுகளும் தங்கள் கைகளில் இல்லாமல் பிறரால் இயக்கப்படும் சூத்திரப் பாவைகளாயினர். 
தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கும் உரிய வடிகால்கள் இன்றித் தாங்களும் மனிதப் பிறவிகள்தான் என்பதையே ஒரு காலகட்டத்தில் மறந்து போயினர்.


மேற்குறித்த நிலைகளிலிருந்து பெண்ணுக்கு மீட்சி விளைய வேண்டுமென்பதும் பால்பேதமற்ற - மனித சமத்துவம் மலினப்படாத சமூகம் அப்போதுதான் உருவாக முடியுமென்பதுமே பெண்ணியத்தின் அடிப்படை இலக்குகள்.


காலங்காலமாய் ஏற்கப்பட்டும் நிலைத்தும் போய்விட்ட பெண் ஒடுக்கு முறைகளை அவற்றின் பின்புலத்தோடு இனம் காண்பதோடு மட்டுமே பெண்ணியத்தின் நோக்கம் நிறைவு கண்டு விடுவதில்லை.
பெண் இழந்திருக்கும் உரிமைகளைச் சமூகப் பின்னணியோடு இனங்காட்டல்-
அவற்றை மீட்டெடுத்துச் சமத்துவம் காணப் போராடல் 
ஆகிய இரண்டுமே பெண்ணியத்தின் மிக அடிப்படையான - முதன்மையான இரு தத்துவங்கள் எனலாம்.


தனிமனித அடிப்படை உரிமைகள் கூடப் பெண்ணுக்கு மறுக்கப்படுவதைக் கடுமையாக எதிர்க்கும் பெண்ணியக் கோட்பாடு ஆணின் நுகர் பொருளாகப் பெண்ணைக் கருதும் மனப்பான்மை மாற வேண்டுமென்பதை வலியுறுத்தும்.
தனக்கென ஒரு தனிமதிப்புக் கொண்டவளாகவும் , சார்பு நிலையிலிருந்து விட்டு விடுதலையான தனித்ததொரு மனித ஜீவியாகவும் அவள் மதிக்கப்பட வேண்டுமென்பதை அழுத்தமாக முன்வைக்கும்.  

2 கருத்துகள் :

suneel krishnan சொன்னது…

அம்மா , சிறப்பான புரிதல் கிட்டியது .
தாய் வழி சமூக அமைப்பில் ஆண்களுக்கு கலவியல் தோல்விகள் ஏற்ப்பட்டிருக்கும் , இதை சரி செய்ய பெண்களை தங்களுடைய உடமையாக ஆக்கி அவர்களை முடக்கி விதிமுறைகள் அமைத்ததின் பின்னால் -ஒரு ஆண் மனதின் பாதுகாப்பின்மையை (insecurity) உணர முடிகிறது.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

இருக்கலாம்.கேரளப் பின் புலம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....