பாரதியின் ‘அர்ஜுன சந்தேகம்’
11/9/12 பாரதியின் நினைவு நாள் என்பதால் அதை ஒட்டி அவனது கதை ஒன்று...
மகாபாரதத்தின் ஒரு சிறிய உரையாடலை மட்டும் எடுத்துக் கொண்டு எந்தச்சூழலுக்கும், காலத்துக்கும் மிகப்பொருத்தமான அற்புதமான ஒரு செய்தியைத் தனது ‘அர்ஜுன சந்தேகம்’என்னும் குறுங்கதையில் பதிவு செய்திருக்கிறான் பாரதி
பழைய புராணங்களையும் இதிகாசங்களையும் எடுத்துக் கொண்டு மீட்டுருவாக்கம் செய்வதும் மறு வாசிப்பு செய்து கதைப்படுத்துவதும் இன்றைய நவீன கதை உலகில் காணலாகும் உத்திகள்.
‘’இது மகாபாரதத்தில் ஒரு உபகதை;சாஸ்திர பிரமாணமுடையது;வெறும் கற்பனையன்று’’ என்று தன் கதை நடுவே அடைப்புக் குறிக்குள் பாரதி குறிப்பிட்டிருந்தாலும்- அந்த உரையாடல் உண்மையானதாகவே இருந்தாலும்- அதன் வழி மகாபாரதத்தின் ஒரு சிறு துணுக்கில் தன் மீள் வாசிப்பைச் செலுத்தி பாரதி இதைச் சிறுகதைப் புனைவாக்கியிருக்கிறான் என்றே படுகிறது.
’’யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது’’
என்ற கருத்தை முன் வைத்துத் தவிர்க்க முடியாத கட்டத்துக்கு மட்டுமே போரை உரியதாக்குவது இராமாயணம். மாறாகப் போரை மேன்மைப்படுத்தும் இதிகாசம் மகாபாரதம்.
சிறுவனாய் இருக்கும் அர்ச்சுனனுக்குப் ‘போர் நல்லதா...சமாதானம் நல்லதா..’ என்று ஓர் ஐயம் எழுகிறது...முதலில் தன் தோழனும் -பகைவனுமான கர்ணனைப்பார்த்து அந்த வினாவை அவன் கேட்கிறான்.கர்ணன் மிகச்சிறந்த வீரன் என்றாலும் இளகிய மனம் கொண்ட அவனது உள்ளம் நாடுவது சமாதானத்தையே. அடுத்து இதே வினாவைத் தன் ஆசிரியர் துரோணரிடம் முன் வைக்கிறான் அவன். அரச குமாரர்களுக்குப் போர்ப்பயிற்சி அளித்து வரும் அவர் இயல்பாகவே போருக்குச் சார்பானவர் என்பதால் அதை ஒட்டியே பேசுகிறார்.போரில் புகழ்,வெற்றி,பொருள் அல்லது வீரமரணம் இவற்றுள் ஒன்று உறுதியாகப் புலப்பட்டு விடுகின்றன.ஆனால் சமாதானமோ அப்படி எதையும் உறுதிப்படுத்துவதில்லை என்கிறார் துரோணர்.
அடுத்து பீஷ்மரை நாடுகிறான் அர்ஜுனன்.அவர் அமைதியையே முன் மொழிய அதை மறுத்து சமாதானத்தில் கர்ணன் கையே மேலோங்கும்,போரில் மட்டுமே தன் திறமை வெளியாகும் என்கிறான் பார்த்தன். ஆனாலும் அன்புவழியே உலகிற்கு உயர்ந்ததென்கிறார் பீஷ்மாச்சாரியார்.
பின்னொரு நாள் வேத வியாசரிடம் இதே கேள்வியை அவன் தொடுக்க...’இரண்டும் நல்லவைதான்...சமயத்துக்குத் தக்கபடி செய்ய வேண்டும்’’என்கிறார் அவர்.
இறுதிக்கட்டம்....போர் கிட்டத்தட்ட இறுதியாகி விட்ட நிலை. அப்போது காட்டில் இருக்கும் அர்ச்சுனன் கௌரவர்களுக்குத் தூது அனுப்பும் முன் கண்ணனிடம் இதே வினாவை வைக்கிறான்...
’இப்போதைக்கு சமாதானமே நல்லது; அது வேண்டியே நான்
அஸ்தினாபுரத்துக்குத் தூது செல்லப்போகிறேன்’என்று சொல்கிறான் கண்ணன் . அதோடு முடிகிறது கதை.
ஐந்து வெவ்வேறு மனிதர்களிடம் கேட்கும் ஒரே கேள்வி...
அதற்கான விடையில் வெளிப்படும் அவரவர்களின் வித்தியாசமான ஆளுமை என மிக நுட்பமான லாகவத்துடன் இந்தக்கதையை அமைத்திருக்கிறான் பாரதி.
பீஷ்மரும் கர்ணனும் பெரும் வீரர்கள்தானென்றாலும் அன்பும் இரக்கமுமான அவர்களின் உள்ளம் அமைதியையே நாடுகிறது.
துரோணர் போரிலேயே -போர்க்களத்திலேயே - ஊறியவர்...அதன் வெற்றியும் பிற பயன்களும் மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரிபவை.
வியாசரும் கண்ணனும் சற்று வேறானவர்கள்...லௌகீகவாதிகள்.
நடப்பியல் வாழ்வின் அப்போதைய போக்குக்கு எது ஏற்றதோ அதை மட்டுமே பரிந்துரைப்பவர்கள்.அதனாலேதான் ‘காண்டீபத்தைக் கை நழுவ விட்டு மனம் கலங்காதே’எனப்போர்க்களத்தில் பார்த்தனுக்குச் சொல்லும் கண்ணன் இந்தக் குறிப்பிட்ட சூழலில் அமைதித் தீர்வை முன் வைக்கிறான்.அது தோற்றால் மட்டுமே போர் என்பது அவன் சித்தாந்தம்.
எதிர்முகாமில் இருக்கும் உறவினரைக் கண்டு போர்முனையில் குழம்பிக் கை வில்லை நழுவ விட்டு என்ன முடிவெடுப்பதென அறியாது தடுமாறிய அர்ச்சுனனின் சலன சித்தம் சிறுவயது முதலே அவனது ஆளுமையின் ஒரு கூறாக இருந்திருப்பதையும் இந்தக் கதை புரிய வைத்து விடுகிறது .
வெளிப்படையாகத் தெரியும் இந்த பாரதக்கதைக்குப் பின்னால் நுட்பமான வேறொரு மறை பொருளும் இருப்பதை ஆழ்ந்து நோக்கினால் விளங்கிக் கொள்ளலாம். இந்திய விடுதலையின் இரு அணுகுமுறைகளாக இருந்தவை மிதவாதமும் தீவிரவாதமும்.பாரதி திலகரின் தீவிரவாதத்தையே ஆதரித்தபோதும் ‘வாழ்க நீ எம்மான்..’என காந்திக்கு வரவேற்புச் சொல்லவும் தவறவில்லை.நாட்டின் விடுதலைக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த இரு வழிகளில் உகந்ததது எது என்னும் பாரதியின் தேடலே- அது பற்றி அவன் கொண்டிருந்த மன உளைச்சலும் குழப்பமுமே அர்ச்சுனனின் கேள்வியாகவும்...பிறரது வேறுபட்ட விடைகளாகவும் இந்தக் கதையில் பதிவாகியிருக்கின்றன என்று கொண்டால் அந்த வாசிப்பு, சமகாலச் சித்தரிப்புக்கு அழுத்தம் சேர்த்துக் கதைக்கு இன்னொரு பரிமாணத்தை அளித்து விடுகிறது.
பாரதியின் பிற குறுங்கதைகளைக் காட்டிலும் மிகவும் கச்சிதமாக, நறுக்குத் தெறித்தாற்போன்ற முன்வைப்புடன்-சிறுகதைக்குரிய வடிவச் செம்மையில் பூரணத்துவம் பெற்றதாக...ஒரே இலக்கை நோக்கி எய்யும் அம்பு போல வாசகர்களைத் தைக்கும் அற்புதமான கதை இந்த அர்ஜுன சந்தேகம்...
சிறுகதையை இணையத்தில் முழுமையாகப்படிக்க..;
http://www.tamilvu.org/slet/lA110/lA110pd1.jsp?bookid=158&pno=315
இணைப்புக்கள்;

2 கருத்துகள் :
//இந்த இரு வழிகளில் உகந்ததது எது என்னும் பாரதியின் தேடலே- அது பற்றி அவன் கொண்டிருந்த மன உளைச்சலும் குழப்பமுமே அர்ச்சுனனின் கேள்வியாகவும்...பிறரது வேறுபட்ட விடைகளாகவும் இந்தக் கதையில் பதிவாகியிருக்கின்றன என்று கொண்டால் //
கதை முழுமை பெறவேண்டும். இரு வழிகளில் எதை பாரதியார் இறுதியாகச் சரியென்றார் தன் கதை மூலம் எனத்தெரியவில்லை. எதையுமே சரியெனவில்லையென்றால் அவரின் மன உளைச்சலும் குழப்பமும் தீரவில்லையென்றுதான் பொருள். நமக்கும்தான். உங்கள் கருத்தென்ன?
அன்புள்ள வழிப்போக்கரே,
கருத்துக்கு நன்றி.சிறுகதை எப்போதுமே முழுமையான வாழ்வைச் சித்தரிப்பதுமில்லை,எதற்கும் ஒரு இறுதியான-வரையறுத்த தீர்வைக் கூறுவதுமில்லை;நாம்தான் நம் தேடல்களாலும்,நம் கண்ணோட்டங்களாலும் அதை முழுமையாக்கிக்கொள்ள வேண்டும்.இரு வழிகளுக்கு இடையிலான தடுமாற்றம் மட்டுமே கதை.தலைப்பும் சந்தேகத்தை மட்டுமே சுட்டுகிறது,விடையை அல்ல.பாரதி கொண்டிருந்த குழப்பத்தை ஓர் உருவகமாக இந்தக்கதை மூலம் சொல்லியிருப்பாரோ என்பது என் அனுமானம் மட்டுமே.
கருத்துரையிடுக