’’வானப்பிரஸ்த நிலை...அதையும் மீறிய சமூகப்பணி எனக் குடும்ப அமைப்பைத் துறந்து பெண் வெளியேறும் முதல் கலகக் குரலாய் -18,19ஆம் நூற்றாண்டின் காலச் சூழலில் ஒலித்திருப்பது சத்தியவதியின் குரல் என்பதால் இதை முதல் சபதமாக்கியிருக்கிறார் ஆஷாபூர்ணாதேவி.’’
இந்தியமொழி நாவல்களில் மராத்தியின் காண்டேகர்,மலையாளத்தின்தகழி,மற்றும் எம்.டி.வாசுதேவன் நாயர்,கன்னடத்தின் சிவராம் காரந்த் ஆகியோரின் படைப்புக்கள் சிறப்பிடம் பெறுவது போலவே வங்க எழுத்தாளர்களின் பலப்பல ஆக்கங்களும் தவற விடாமல் படித்தாக வேண்டிய பட்டியலில் இடம்பெறக்கூடியவை. அதீன் பந்தோபாத்யாயாவின் ’நீலகண்டப்பறவையைத் தேடி...’,மஹாஸ்வேதா தேவியின் ’1084இன் அம்மா’ என்று வளரும் அந்த வரிசையில் ஆஷாபூர்ணாதேவியின் ஞான பீட பரிசு பெற்ற நாவலான ’பிரதமபிரதி சுருதி’என்னும் நாவலுக்கும் தனித்த ஓரிடம் உண்டு. தமிழில் புவனா நடராசனின் மொழியாக்கத்தில் ’முதல் சபதம்’ என்ற பெயருடன் சந்தியா பதிப்பக வெளியீடாகக் கிடைக்கும் இந்த நாவலைக் கட்டாயம் படித்தாக வேண்டும் என்ற என் நெடுநாள் விருப்பத்தை அண்மையில் நிறைவு செய்து கொண்டேன். |
வங்காள கிராமங்களிலுள்ள அந்தணக் கூட்டுக்குடும்ப வாழ்க்கைப் பின்னணியில் அதன் இறுக்கமான ஆசாரங்கள்,விசாலமான உலகப்பார்வையின்மை ஆகியவற்றை சத்தியவதி என்னும் சிறுமியின் நோக்கில் விரிவாக முன் வைக்கும் இந்தப்படைப்பின் காலமும் களமும் பழையவை என்றாலும் அது முன் வைக்கும் கேள்விகள் பலவும் இன்றைக்கும் செல்லுபடியாகக் கூடியவையே....எதிர்க்கேள்வி கேட்காமலே பழகிப்போய் விட்ட அடிமைப்புத்தியின் அறியாமையால் ஆண்களையும் பெண்களையும் பிணைத்திருக்கும் மூடக்கட்டுகளிலிருந்து தான் வெளியேறுவதோடு தான் அன்பு செய்யும் -தன்னைச் சார்ந்த அனைவரையும் வெளியேற்ற சத்தியவதி மேற்கொள்ளும் முயற்சிகளும்,அதில் அவள் எதிர்ப்பட நேரும் தடைகளுமே இந்த 870 பக்க நாவலாக உருப்பெற்றிருக்கின்றன.
பாலியமணமும்,அதன் விளைவான விதவைக்கொடுமைகளும் இன்று நமக்குப் பழங்கதைகளாக இருக்கலாம்.ஆனால் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் அதன் கடுமையான தாக்கங்கள் பெண் வாழ்வைச்சூனியமாக்கி இருட்டறையில் அவளை முடக்கி வைத்திருந்த கொடுமையை ராமகிருஷ்ண பரமஹம்ஸர்,ராஜாராம் மோகன்ராய் ஆகியோர் வாழ்ந்த காலச்சூழலைப் பின்புலமாக்கி விளக்கமான தகவல்களுடன் முன் வைக்கிறது நாவல்.
தன் துறையில் மட்டுமல்லாமல் பரந்த உலகியல் அறிவும் அனுபவமும் பெற்று,ஊர் மக்களின் மதிப்பைப்பெற்றிருக்கும் பண்டிதரும் மருத்துவருமான ராம்காளி சாட்டர்ஜியின் மிகப்பெரிய கூட்டுக்குடும்பம் ; அங்கே திரும்பிய திசைகளிலெல்லாம் அத்தைகளாக பாட்டிகளாக இன்னும் பல உறவுப் பெண்களாக நிறைந்து வழியும் விதவைகள். அவர்களில் மரண வாயிலில் நிற்கும் மூத்த பெண்கள்,தற்கொலைக்கும்,பிற வகை உறவுக்கும் முயலும் பதின்பருவத்துப் பெண்கள், உடல் என்ற பூதத்துக்கு வேலை தரா விட்டால் அது வேறுவகையாகத் திசை திரும்பி விடும் என்பதற்காகவே ‘மாவடு சீஸன்’,’மாம்பழ ஜாம் சீஸன்’,’துர்க்கா பூஜை’க்கான பலவகைப் பலகாரங்கள் செய்யும் சீஸன்,வடகம்,வற்றல் செய்யும் சீஸன் [அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறையை நினைவுபடுத்துவது இது] என்று ‘வருடம் முழுவதும் வெயிலில் காய்ந்து செத்துக் கொண்டிருக்கும் மோக்ஷதா அத்தையைப் போன்ற நடுவயதுப் பெண்கள்...எனப் பல வயதினரும் உண்டு.
விதவையல்லாத பிற பெண்களும் வீடே வாழ்க்கையாய்க் கொண்டு பழகிப்போனவர்கள்.கல்வி பெற வேண்டுமென்ற வேட்கையைத் தூண்டும் சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு மரபின் தடத்தில் மட்டுமே நடை போடப்பழகியவர்கள்;அதற்குச் சற்று மாறான மிக இலேசான எதிர்க்குரலையும் கூடத் தாங்க முடியாதவர்கள்.
ஆனால்...அந்தப்பெண்களின் அவர்களின் உணர்வுகள்,ஆழ்மன விருப்பங்கள் ஆகியவற்றைக் கணக்கிலெடுக்க எவருக்குமே நேரமில்லை;யாருக்கும் அது பற்றித் தோன்றுவதுமில்லை. ஆனால்...வாய்ப்புக் கிடைக்கும் நேரத்திலெல்லாம் மிகப்பெரும் மேதையான தன் தந்தைக்கு-அவரது மனச்சாட்சியைப் போல இதை உணர்த்திக் கொண்டே இருக்கிறாள் எட்டு வயதில் இளமை மணம் செய்விக்கப்பட்ட அவரது ஒரே மகள் சத்தியவதி.
தன் பெயருக்கேற்றபடியே உண்மையைத் தவிர அவளிடம் வேறு ஏதுமில்லை. அங்கு பின்பற்றப்படும் மரபுகள் சார்ந்த ஏராளமான கேள்விகள்,ஐயங்கள் அவளுக்குள் மண்டிக்கிடந்தபோதும் அவற்றோடு கூடவே பெரியவர்களை மதிப்பது,மரபு வழிக் கடமைகளையும் நியமங்களையும் தவறாமல் செய்வது என்று இன்னொரு பக்கம் அவள் இயங்கிக்கொண்டே இருக்கிறாள்.
இருந்தபோதும் தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதைச் செய்ய அவளிடம் தயக்கம் எதுவும் இல்லை;அது பற்றிய எவர் அனுமதியும் அவளுக்குத்தேவைப்படவும் இல்லை. கல்வியின் கடவுளாய்ச் சரஸ்வதியைச் சொல்லி விட்டுக் கையில் ஏட்டைத் தொட்டாலே பாவம் எனச் சொல்லும் முரண்பாட்டை மதிக்காமல் இரகசியமாகத் தானே படித்துக் கொண்டு,பாட்டுக்கள் இட்டுக்கட்டுவதோடு, பிறருக்குப் படிப்பிக்கும் திறனையும் பெறுகிறாள் சத்தியவதி.
தன் புகுந்த வீடு சென்றபின்,மாமனார் மாமியாருக்குச் செய்ய வேண்டிய பணிகளில் மரியாதை காட்டினாலும் மாமனாரின் தவறான சில நடத்தைகளை அறிந்த பின் அவரை வணங்க உறுதியாக மறுத்து விடுகிறது அவள் மனம்.கடுமையான சுரத்தோடு போராடும் கணவனின் உயிரைக் காக்க முடியாமல் நாட்டுப்புற மருத்துவம் தடுமாறும் கட்டத்தில், ஆங்கில மருத்துவரைக் கூட்டி வருவதற்கு அந்தக்கூட்டுக் குடும்பச்சூழலில் யார் அனுமதியும் அவளுக்குத் தேவையாக இருக்கவில்லை.’உட்கார்ந்து சாப்பிடலாம்’என்ற மேட்டிமையான எண்ணத்தைப் போக்கி சுய அறிவு பெற்ற ‘மனிதர்களாக’ஆக்குவதற்காகவே ஓரளவு படித்திருக்கும் தன் கணவனையும்,குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு கல்கத்தாவுக்குக் குடிபெயர்கிறாள் அவள்.அந்தக் காலச் சூழலில்-தனிக்குடித்தனம் என்பதே ஒரு அத்து மீறலென்று கருதப்பட்ட காலகட்டத்தில் தான் செய்வது சரியானதே என்ற திடமான நம்பிக்கை அவளிடம் இருக்கிறது.
கல்கத்தா சென்றதும் அவள் பார்வை குடும்ப எல்லையைத் தாண்டி மேலும் விரிவு பெறுகிறது.தன் ஓய்வு நேரத்தில் அங்குள்ள பெண்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்குகிறாள்.பிரம்ம சமாஜ நடவடிக்கைகளோடு தொடர்பு வைத்துக் கொள்கிறாள்.முதலில்,அவள் கணவன்சற்று எதிர்த்தாலும் அவள் செயல்களிலுள்ள நியாயங்கள் அவற்றுக்கு மறுப்புச் சொல்ல முடியாதபடி செய்து விடுகின்றன.
நாளுக்கு நாள் அவள் மனம் சமூகத்தை நோக்கி விரிவாகிக் கொண்டே வருகிறது.பாலியமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு குழந்தை மாமனார் மாமியாரால் நசுக்கிக் கொல்லப்பட்டது என்ற உண்மையைக் கேள்விப்பட்டதும் அவள் உள்ளம் அந்தக் குழந்தைக்காக மட்டுமன்றி ஊரிலுள்ள அத்தனை பெண் குழந்தைகளுக்காகவும் துடிக்கிறது.அதிர்ச்சியில் உறைந்து போய்க் காய்ச்சலின் பிடியில் சிக்கும் நிலையில் தன் ஒரே பெண் குழந்தையைப் பதினாறு வயது வருவதற்கு முன் திருமணம் செய்து விடக்கூடாது என்ற ஒரே ஒரு சத்தியத்தை மட்டும் உறுதியாகத் தருமாறு கணவனிடம் யாசிக்கிறாள்;அன்றைய சூழலில் அது பிறரின் பரிகாசத்துக்குரியதாகவே இருக்கிறது.அவள் ஏதோ ஜுர வேகத்தில் பிதற்றுவதாக எண்ணி அப்போதைக்கு அரை மனதாக அதற்கு சம்மதமளிக்கிறாண் அவள் கணவன்.
ஆனால்...அந்த எல்லையையும் தாண்டிச் சென்று நசுக்கிக்கொலை செய்யப்பட்ட குழந்தையின் சார்பில் காவல் துறையிடம் புகார் தரும் அளவு அவள் துணிந்து விடுவதில் அவளால் மனிதர்களாக்கப்பட்ட அவளது மகன்களுக்கே ஒப்புதலில்லை; தங்கள் குடும்பம் வீண் வம்பில் சிக்கிக் கொள்ளத் தேவையில்லை என நினைக்கும் அவர்களை-அந்தக் கட்டம் முதல் சத்தியவதி அந்நியர்களாக உணரத் தொடங்குகிறாள்.
தன் கடமைகளையெல்லாம் நிறைவு செய்து விட்டுக் காசியில் போய்த் தங்கியிருக்கும் தந்தையுடன் சில நாட்கள் தங்கி வரும் விருப்பம் அவளுக்கு ஏற்பட்டாலும் மகள் ஸ்வர்ணத்தின் படிப்பு பாதிக்கப்படலாகாது என்று அந்த எண்ணத்தை அவள் விலக்கிக் கொண்டு விடுகிறாள்.
மூத்த மகனின் திருமணம் முடிவாகிறது;அதற்கான ஏற்பாடு செய்ய விடுப்பில் செல்லும் கணவன் கோடை விடுமுறையில் இருக்கும் மகளையும் உடனழைத்துச் செல்கிறான்....
காலமெல்லாம் எந்தக் கொடுமைக்கு எதிரான கொந்தளிப்பு சத்தியவதியிடம் இருந்ததோ....அந்தக் கொடுமை அந்தக் கட்டத்தில் அவள் வீட்டிலேயே நடந்து விடுகிறது. இத்தனை காலமாய்த் தன் சொல் கேட்காமல் தன்னிச்சையாக நடந்து வந்த சத்தியவதியை எந்த வகையிலாவது புண்படுத்தத் துடிக்கும் தன் தாயின் தூண்டுதலுக்கு ஆளாகும் சத்தியவதியின்கணவன், மனைவிக்குக் கொடுத்த வாக்கையும் மீறிக் கொண்டு தன் மகளுக்கு பாலியமணம் செய்து வைத்து விடுகிறான்.சத்தியவதியின் அனுமதியில்லாமல்....அவளுக்குச் செய்தி கூடத் தெரிவிக்காமல் நடந்து முடிந்து விடும் இந்தத் திருமணத்துக்குக் காலம் தாழ்ந்து வரும் சத்தியவதியால் அந்தத் தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.எதிலும் தோற்றுப்போவதில் விருப்பமில்லாத ...எந்த விஷயத்திலும் தோல்வியை ஒப்புக்கொள்ளாத அவளுக்கு இது பலத்த அடியாகிறது.
தன் குடும்பமும் தன்னால் மனிதனாக்கப்பட்ட தன் கணவனுமே இழைத்து விட்ட அநீதியைப் பொறுக்கும் மனநிலை அவளிடம் இல்லை...அந்த வீட்டுக்குள் நுழைந்து கல்யாணக் கோலத்திலிருக்கும் தன் செல்ல மகளுக்கு ஆசிகள் கூட வழங்காமல்- தான் ஊன்றி நின்ற குடும்ப அமைப்பை அந்த நொடியிலேயே துறந்து, தான் வந்த வண்டியிலேயே திரும்பிச் செல்கிறாள் அவள்..பெண்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணி செய்து அந்த வருமானத்தில் தன் காலில் சுயமாக நின்று கொள்வதென்ற இறுதிமுடிவொன்றையும் எடுக்கிறாள்..
செய்த தவறுக்காக கணவன்..மாமியார் என எல்லோரும் அவளிடம் இறைஞ்சியும் அவள் முடிவில்- அவள் செய்திருக்கும் சபதத்தில் எந்த மாற்றமுமில்லை.ஆனாலும்..தன் வேலையைத் தொடங்குவதற்கு முன்னால் தந்தையிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டிய சந்தேகங்கள்..கேள்விகள் அவளிடம் நிறைய எஞ்சியிருக்கின்றன.
ஒரு முறை தந்தையிடம் கேட்டபோது,
‘’வாழ்க்கையைப்பற்றி இந்த நிமிடத்தில் இப்பொழுதே பேசி முடித்து விட முடியுமா சத்தி...வாழ்க்கை என்பது குகையின் அந்தகாரம் போல’’
என்கிறார் அவர்.அவற்றை மீண்டும் சுமந்தபடி முதலில் காசியை நோக்கிப் பயணமாகிறாள் அவள்.
வானப்பிரஸ்த நிலை...அதையும் மீறிய சமூகப்பணி எனக் குடும்ப அமைப்பைத் துறந்து பெண் வெளியேறும் முதல் கலகக் குரலாய் -18,19ஆம் நூற்றாண்டின் காலச் சூழலில் ஒலித்திருப்பது சத்தியவதியின் குரல் என்பதால் இதை முதல் சபதமாக்கியிருக்கிறார் ஆஷாபூர்ணாதேவி. நாவலின் முடிவு ராஜம் கிருஷ்ணனின் ‘வீடு’நாவலை நினைவூட்டினாலும் குறிப்பிட்ட இந்த நாவல் பின்புலத்தின் காலகட்டத்தில் இவ்வாறான ஒரு முடிவு நம்மை பிரமிக்க வைக்கிறது.
இந்த நாவலைத் தொடர்ந்து சத்தியவதியின் மகள் ஸ்வர்ணத்தின் கதை,பின்பு அவள் மகள் பகுளின் கதை என இதைத் தொடர்ந்து 2 நாவல்களும் வந்திருப்பதை அறிய முடிந்தாலும்[பதேர் பாஞ்சாலியின் தொடர்ச்சியாக மேலும் இரு கதைகள் தொடர்ந்தது போல] தமிழில் இப்போதைக்குக் கிடைப்பது இந்த ஒரு நாவல் மட்டுமே...
தொடர்புள்ள இணைப்புகள்;
ரீபில் தீர்ந்து போன பால் பேனா
6 கருத்துகள் :
அன்றைய காலச்சூழ்நிலையில் பெண்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிரான கலகக்குரலாய் எதிரொலிக்கும் இந்த நாவலை வாசிக்க ஆவலாய் உள்ளேன்.
நாவலை அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றி..
தேவராஜ் விட்டலன்
பதிவின் ஆழம், நாவலின் சிறப்பை உணர முடிகிறது...
நல்லதொரு நாவலை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...
அருமையான இடுகை சேச்சி
அன்பில் கமலம்
http://www.kamalagaanam.blogspot.com
அன்பின் சுசீலா - அருமையான நூல் விமர்சனம்.
ஆஷாபூர்ணாதேவியின் ஞான பீட பரிசு பெற்ற நாவலான ’பிரதமபிரதி சுருதி’என்னும் நாவலினைத் தமிழில் புவனா நடராசனின் மொழியாக்கத்தில் ’முதல் சபதம்’ என்ற பெயருடன் சந்தியா பதிப்பக வெளியீடாகக் கிடைக்கும் இந்த நாவலைக் கட்டாயம் படித்தாக வேண்டும் என்ற என் நெடுநாள் விருப்பத்தை அண்மையில் நிறைவு செய்து கொண்டது பற்றி மிக்க மகிழ்ச்சி.
870 பக்க நாவலினைப் பற்றிய பதிவு அருமை.
இந்நாவல் கிடைத்தால் வாங்கிப் படிக்க வேண்டும்.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//நாவல் கிடைத்தால் வாங்கிப் படிக்க வேண்டும்.//இந்த ஆவலை என் பதிவு ஏற்படுத்தியதே அதுவே வெற்றிதான்...மிக்க நன்றி.
பிரமிக்க வைக்கும் நாவல் பகிர்வு ..
கருத்துரையிடுக