துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.10.09

ரீபில் தீர்ந்து போன பால் பேனா

கணவன்,வீடு,குழந்தைகள் என்று எப்போதுமே ஏதாவது ஒரு பொறுப்பில் தன்னைக் கரைத்துக் கொண்டிருந்தாலும் கூடச் சில வேளைகளில்-தவிர்க்க இயலாதபடி பெண்ணுக்குள் ஒரு தனிமையும்,வெறுமையும் நேர்ந்து விடுவதை அண்மையில் ஆனந்த விகடன் இதழின் (23.09.09)‘சிறிது வெளிச்சம்’ பகுதியில் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியிருந்த ‘தனியா இருந்தா என்ன தப்பு’ என்ற கட்டுரை அற்புதமாக முன் வைத்திருந்தது.

‘உலகில் அதிகம் புரிந்துகொள்ளப்படாமலே போவது திருமணமாகிப் பத்து வருடங்களான பிறகு பெண்ணுக்குள் உருவாகும் தனிமையும் ,வெறுமையுமே’,

‘கணவன்
,குழந்தைகளுடன் பயணம் செய்வதைப்போலவே தன்னோடு படித்த தோழிகள் மற்றும் தனக்கு விருப்பமான தோழமையுடன் பயணம் செய்வதற்குப் பெண் உள்ளூர ஆசைப்படுகிறாள்.அது இயல்பானது..ஆனால் இந்த எளிய விருப்பம் ஒருபோதும் நிறைவேறுவதில்லை.
ஐந்து வருடங்களுக்குப்பின் தற்செயலாகச் சந்தித்த கல்லூரி நண்பனுடன் சேர்ந்து குடிக்கச் செல்வதில் ஆண் காட்டும் விருப்பம் அவனது மனைவியோடு பள்ளி முழுவதும் படித்த தோழியைத் தற்செயலாக மனைவி வழியில் சந்திக்கையில் அவளோடு சேர்ந்து ஒரு தேனீர் அருந்தக்கூட அனுமதிக்காதது என்ற நிலைதான் உள்ளது’


ஆகிய கட்டுரை வரிகள் , உலக நடப்பியலுக்கு நிதரிசனமான சான்றுகள்.
திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் சென்றபின் எந்தப் பெரிய பிணக்குக் காரணமாகவும் இல்லாமல் தனியே செல்லவேண்டும் என்பதற்காகவே இரண்டு நாட்கள் எவரிடமும் எதுவும் சொல்லாமல் கன்னியாகுமரி சென்று வந்த ஒரு பெண்ணைப் பற்றியும் அந்தச் செயல் குடும்பத்தில் ஏற்படுத்திய அதிர்வுகளைப் பற்றியும் கூடத் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் திரு ராமகிருஷ்ணன்.

ஞான பீட பரிசு பெற்றவரும்,வங்கத்தின் மிகச் சிறந்த எழுத்தாளருமாகிய ஆஷா பூர்ணாதேவியின்


‘ரீபில் தீர்ந்து போன பால் பேனா ‘என்ற அற்புதமான சிறுகதை ஒன்றை நினைவுபடுத்துவதாகவும், அதைத் திரும்ப வாசித்துப் பார்க்கும் ஆசையைத் தூண்டுவதாகவும் அக் கட்டுரை அமைந்து விட்டது.

ஆஷா பூர்ணாதேவியின் அந்தக் கதை....

தன் இரண்டு மகன்,மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் லீலாவதி என்ற மூதாட்டி,ஒரு நாள் விடிகாலையில் எங்கோ போய் விடுகிறாள்.அவள் குளித்துவிட்டு வந்ததை மட்டுமே பார்த்திருந்த வேலைக்காரச் சிறுமிக்கு அவள் எங்கே போனாள் என்பது தெரியவில்லை.குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் மும்முரத்தில் இருந்த மருமகள்களும் மாமியாரைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை.தாங்கள் அலுவலகத்துக்குக் கிளம்பும் நேரத்தில் மட்டுமே ஒப்புக்குத் தாயிடம் சொல்லிக்கொண்டு போகும் மகன்களுக்குச் சுத்தமாகத் தாயைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.காவல் துறைக்குத் தாயின் அங்க அடையாளங்களைத் தெரிவிக்கக் கூடத் தங்கள் மனைவிமார்களின் துணையை நாடுபவர்களாய்..அந்த அளவுக்குத் தங்கள் தாயிடமிருந்து அன்னியப்பட்டுப் போயிருக்கிறார்கள் அவர்கள்.

வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் அவள் சார்ந்த குற்ற உணர்வு-அவளைத் தாங்கள் சரியாகப் பொருட்படுத்தியிராதது போன்ற ஓர் உணர்வு இருக்கிறது.ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் குற்றத்தை அடுத்தவர் மீது சுமத்தி ஒருவரை ஒருவர் பழித்துக் கொள்கிறார்கள்;வசை பாடிக் கொள்கிறார்கள்.
அவள் அடிக்கடி செல்லும் அவள் வயதொத்த தோழிகளின் வீடுகளுக்கும்,உறவினர் வீடுகளுக்கும் ஆளனுப்பிப் பார்க்கிறார்கள்.
அவள் உடனிருந்தபோது அவளுக்காகச் சிறிது நேரம் கூட ஒதுக்காத அவளது மகன் ,அலுவலகத்துக்கு அரை நாள் விடுப்புப் போட்டுவிட்டு அவளைப் பற்றி விசாரிக்கும் பணியில் முனைகிறார்.
செய்தி தெரிந்து நட்புக்களும் உறவுகளும் அடுத்தடுத்து விசாரிக்க வந்துவிடும் நிலையில் அவளது தலைமறைவை விடவும் குடும்ப கௌரவமே அந்தக் குடும்பத்தைப் பெரிதும் பாதிக்கிறது.

இறுதியாகப் பள்ளியிலிருந்து திரும்பி வரும் பேரனால் புதிரின் ஒரு முடிச்சு மெள்ள அவிழ்கிறது.காலையில் அவனிடம் ஒரு பென்சில் (பால்பேனா) கேட்டு வாங்கிக் கடை சாமான் வந்த ஒரு பழுப்பு நிற உறையில் அவள் எதையோ கிறுக்கித் தர முயன்றிருக்கிறாள்.
பாதி எழுதும்போது பேனாவின் ரீபில் தீர்ந்து விட, அவள் எழுத வந்தது அரைகுறையாகவே முடிந்துவிட்டிருக்கிறது.
’’பாட்டி நிச்சயம் ஆத்திலே விழுந்து முழுகிப் போயிருப்பா’’ என்ற முன்னுரையுடன் தனது கால்சட்டைப் பையிலிருந்து சாக்லெட் பிசுபிசுப்பேறிய ஒரு கசங்கிய துண்டுக் காகிதத்தை எடுத்துக் கொடுக்கிறான் பேரன்.
‘’ நான் வெளியே போறேன்.திரும்பவில்லைன்னா என்னைத் தேட வேண்டாம். தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.நான்....’’
என்பதைத் தவிர அந்தச் சீட்டில் எதுவுமில்லை.

அவளது அந்தச் செயலுக்காக மீண்டும் குடும்பத்தார் ஒருவரை ஒருவர்குறை கூறிப் பழித்துக் கொண்டிருக்கும் தருணத்தில்,லீலாவதியே ஒரு ரிக்‌ஷாவில் வந்து இறங்கி விடுகிறாள்.
பிற வீடுகளிலுள்ள வயதான பெண்கள் ,பிறர் தயவின்றித் தானே எல்லாக் கோயில்களுக்கும் சென்று வருவதைப் பார்த்த அவளுக்குத் தானும் அப்படி ஒரு தடவை ஏன் தனியாகத் ‘தக்ஷிணேஸ்வரம்’சென்று வரக் கூடாது என்று தோன்றி விடவே தானும் அதைச் செயல்படுத்தி விட்டதாகக் கூறுகிறாள் அவள்.

மருமகள்களுக்கு என்னவோ அதில்நம்பிக்கையில்லை.
‘’இதெல்லாம் வெறும் சாக்கு! உண்மையிலேயே பிள்ளை மருமகள்களுக்கு அதிர்ச்சி கொடுக்க ஒருசூழ்ச்சி’’என நினைக்கிறார்கள் அவர்கள்.
அம்மா ஏதோ ஒரு திட்டத்துடன் போய்க் கடைசியாகப் பயந்து மனம் மாறியிருப்பாளோ என்பது மகன்களின் எண்ணம்.

ரீபில் தீர்ந்து போன பால்பேனாவைப் போலவே அவள் எழுத நினைத்ததும்....செயலாக்கத் திட்டமிட்டதும் அரைகுறையாகவே நின்று போயிருக்குமோ என்ற கேள்வியை எழுப்பியபடி முடியும் இந்தக் கதைக்கு
‘’லீலாவதி போன்றவர்களின் கதை பெரும்பாலும் ரீபில் தீர்ந்து போன பால்பாயிண்ட் பேனாவல்தானே எழுதப்படுகிறது’’
என்றுமுத்தாய்ப்பு வைத்து அவளது மனஓட்டம் என்னவாக இருக்கக் கூடும் என்பதை வாசக ஊகத்துக்கே விட்டு விடுகிறார் ஆஷா பூர்ணா தேவி.

முதுமையின் வெறுமை...பெண்ணின் தனிமை...முதிய பெண்ணின் வெறுமையும்,தனிமையும் என மூன்று அம்சங்களையும் முன் வைக்கும் அற்புதமான ஆக்கம் இது.

அம்பையின் ‘வெளிப்பாடு’ என்ற சிறுகதையும் கூட விருப்பப்படி வெளி இடங்களுக்குச் செல்ல வழியில்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் அதிக படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்களின் அக மன விருப்பத்தைப்பதிவு செய்திருக்கிறது.
ஒரு பெண்ணின் கனவுக்குள் அடிக்கடி சமுத்திரத்தின் தோற்றம் விரிந்து அவளை ஆசையோடு அழைக்கிறது.இயல்பான அந்த மன விருப்பம் ஒரு நோயாகப் பெரிதுபடுத்தப்பட்டு அவளது இயக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.
‘’திருச்செந்தூர் கோயில் விளால நான் பாத்திருக்கேன் சமுத்திரம்.ஒரு வாட்டி சொரம் வந்து ‘சமுத்திரம் சமுத்திர’முன்னு பெனாத்தினேன்.’பயித்தியக்காரி பயித்தியக்காரி’ன்னு இவுக ஒரே கோபம். அதென்னமோ வியாதிங்க. சமுத்திர சாபம்.சமுத்திரம் பார்க்கணுமே பார்க்கணுமேன்னுட்டுபறப்பேன். இவுக ஒரு அறை வைப்பாக அடங்கிடுவேன்..’’
என்கிறாள் அவள்.

அந்தச் சிறுகதையில் வரும் மற்றொரு பெண் தன் ஆசைகளை அப்பாவித் தனமாக இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகிறாள்.
‘தெருல நடக்கணும் தெனம்
ஓட்டல்ல பலகாரம் சாப்பிடணும்
கடைக்குப்போய் நானே பொடவை எடுக்கணும்
சினிமா போகணும்
நெறைய ஊர் பாக்கணும்’’

இந்த ஆசைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்களுக்கு இவையெல்லாம் மிக மிக அற்பமாகக் கூடத் தோன்றலாம்.

ஆனாலும் இப்படிப்பட்ட இயல்பான...எளிமையான விருப்பங்களைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத பெண்கள் இந்த நவீன..பின் நவீன யுகத்திலும் கூட நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் அதைக் கண்டுகொள்ளாமல் நம் வசதிக்காகக் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறோம்.

மேலும் வாசிக்க...
ஆஷா பூர்ணாதேவி
-கருப்பு சூரியன்(சிறுகதைத்தொகுப்பு),சிந்து பப்ளிகேஷன்ஸ்,சென்னை
(தமிழாக்கம்:சு.கிருஷ்ணமூர்த்தி-புவனாநடராஜன்)
அம்பை - வீட்டின் மூலையில் ஒரு சமையலறை(சிறுகதைத்தொகுப்பு),க்ரியா,சென்னை

இணைப்பு பார்க்க:அம்பையின் ''அடவி’’

2 கருத்துகள் :

nerkuppai thumbi சொன்னது…

பழைய இடுகை. இப்போது தான் பார்க்க நேர்ந்தது.
இரண்டு இடங்கள் என்னைத்தொட்டன :முதுமையின் வெறுமை...பெண்ணின் தனிமை...முதிய பெண்ணின் வெறுமையும்,தனிமையும் இதை இவ்வாறு எழுத மிக ஆழ்ந்த நோக்கு வேண்டும்.
இன்னொன்று; இடுகையிட்டது நேரம் 1:31 am. தமிழ்ப் பற்று, சமூகப பார்வை : நள்ளிரவு தாண்டிய போழ்திலும் இடுகை

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வணக்கம்.
உங்கள் கருத்துரை கிடைத்தது.
மிகச் செறிவான நடையில் அழகாகக் கருத்துரைத்திருக்கிறீர்கள்.உங்களைப் போன்ற நல்ல வாசகர்களை நோக்கிய எழுத்துநகர்வுக்கு
உங்கள் கருத்து வழி அங்கீகாரம் கிட்டியிருப்பதில் மகிழ்கிறேன்.
அந்த வங்கச் சிறுகதையை மொழியாக்கம் செய்தவர்,தங்கள் கொல்கத்தாவில்தான் வசிக்கிறார்.
அவரது சுயசரிதம் பற்றிய என் பதிவையும் படித்துப் பாருங்கள்.
உழைப்பின் தன்வரலாறு

உங்கள் வலைக்கும் வந்தேன்.நல்ல நடையும் கருத்து வளமும் கொண்ட தாங்கள் நிறைய தரமான பதிவுகளை உருவாக்க வேண்டுமென்பதே என் விழைவு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....